சொக்லேட் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களைக் கூட மயக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலரும் குறிப்பாக பெண்கள் ஆசைப்பட்டாலும் சொக்லெட் சாப்பிடுவதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வர்.ஆனால் அதற்கு அவசியமே இல்லை. சொக்லேட் சாப்பிட்டால் இருதயத்துக்கு நல்லதாம். அதனால் உடல் எடையும் அதிகரிக்காதாம். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் லில்லி ஸ்டோஜன்ஸ்கோவா மற்றும் டொக்டர் ஜான் அஸ்தோன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் சொக்லேட் உணவு எந்த அளவுக்கு உடலுக்கு நன்மை விளைவிக்கிறது என்று கூறியுள்ளனர்.மிகவும் தரமான "டார்க் பிரவுன்" சொக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந்து கரைத்து விடுகின்றன. அத்துடன் விரைவாக பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது.
கருஞ்சிவப்பு திராட்சை ரசத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும் இரு மடங்கு சக்தி சொக்லேட்டில் உள்ளன. பிரதான மூலக்கூறான சொக்லேட்டில் உள்ள கோகோவில் உள்ள அல்கலாயிட் எனப்படும் ஒபுரோமின் எனும் பொருள் தசைகளை ஊக்குவித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது.ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கிறது. அத்துடன் உடலில் சேரும் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அது சார்ந்த பக்க வாதம் ஏற்படுவது குறைகிறது.
மேலும் கோகோவில் உள்ள இயற்கை மூலப்பொருள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ரசாயனம் சுரக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. சொக்லேட் சாப்பிடுவது நல்லது என்பதற்காக குடும்பத்தினர் சாப்பிடும் அளவுக்கு பேமிலி சொக்லேட்டை வாங்கி சாப்பிடக்கூடாது.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் போல அளவோடு சாப்பிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். பொதுவாக அனைத்து சொக்லேட்டுகளிலும் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை கோகோ கலந்திருக்கும்.
இத்தகைய பிரவுன் சொக்லேட் சற்று கசப்பு சுவை இருந்தாலும் அது மிகவும் நல்லது. இது அல்லாமல் பால் சொக்லேட் இந்த அளவுக்கு பலனளிக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களது ஆய்வின் பலனை அனுபவ ரீதியில் உணர்வதற்காக ஒரு தம்பதியை தேர்வு செய்து அவர்களுக்கு தினசரி சொக்லேட்டும், சொக்லேட் பானங்களும் அளித்து சோதித்துள்ளனர். அவர்களது செயல்பாடு ஆராய்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இருந்துள்ளது.