நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கடுமையான பிரதிபலிப்பை வெளிக்காட்ட வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க.
ஒசாமாவுக்கு பின் அய்மன் அல் ஜவாஹிரி அல்கய்தா அமைப்பின் தலைவராக வாய்ப்பு.
உலகை மிரட்டிக் கொண்டிருந்த அல்கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.அல்கய்தா அமைப்பில், இவரது மறைவுக்குப் பின், "நம்பர் ஒன்" பொறுப்பை எகிப்தில் பிறந்த அறுவை சிகிச்சை டொக்டர் அய்மன் அல் ஜவாஹிரி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லாடனுக்கு சதித் திட்டங்களில் மூளையாக செயல்பட்டவர் அய்மன் அல் ஜவாஹிரி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கடுமையான பிரதிபலிப்பை வெளிக்காட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் விசேட உரையொன்றை நிகழ்த்திய ரணில் விக்கிரமசிங்க, அதன் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
கட்சி நலனை மட்டும் முன்னிறுத்திய அரசியல் எனக்குப்பழக்கப்பட்டதல்ல. அதன் காரணமாக நான் பாரிய இழப்புகளையும் நட்டங்களையும் சந்திக்க நோ்ந்தாலும் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஷ
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சவாலாக அமையக்கூடிய விடயங்களின் போது நாம் அதனை ஒற்றுமையுடனும், நாட்டுப் பெருமையுடனும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். அதன் காரணமாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் அதன் சிபாரிசுகளை அமுல்படுத்த முனைகின்ற செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் எதிராக இலங்கை கடுமையான பிரதிபலிப்புகளை வெளிக்காட்ட வேண்டும்.
சர்வதேசத்தின் முன் நாட்டு மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கான முதலாவது நிபந்தனை தேசிய ஒற்றுமைதான் என்றும் அவர் தனது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான புலன் விசாரணைக்கு ஹசான் திலக்கரத்தினவுக்கு அழைப்பு.
இலங்கை கிரிக்கட் அணி ஆட்ட நிர்ணய சதிகளில் ஈடுபட்டிருப்பதாக ஹசான் திலக்கரத்தின தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக இன்று அவர் இரகசியப் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.அவரது குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று மாலை நான்கு மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு பொலிஸ் தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கும் ஆட்ட நிர்ணய சதி நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பு 1992ம் ஆண்டு தொடக்கம் இருந்துவருவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.அத்துடன் ஆட்ட நிர்ணய சதிகளில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை உரிய நேரத்தில் தான் பகிரங்கப்படுத்துவதாகவும் இன்றைய மேல்மாகாண சபை அமர்வின் போது அவர் குறிப்பிட்டிருந்ததுடன், அது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும் விநியோகித்திருந்தார்.
நிபுணர் குழு அறிக்கை ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது: ரஷ்யத் தூதர்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதர் தெரிவிக்கின்றார்.இலங்கையின் நிலைப்பாடு குறித்து பொருட்படுத்தாத நிலையிலும், ஐ.நா. வின் நிரந்தர மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை ஆலோசிக்காமலுமே நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான ரஷ்யத் தூதர் விளாடிமிர் மிகோளொப் குற்றம் சாட்டுகின்றார்.
அத்துடன் இலங்கையில் வாழும் மக்களை இலங்கையர் என்று விளிக்காமல் தமிழர், சிங்களவர் என்று வகைப்படுத்தி குறிப்பிட்டிருப்பது மற்றும் விடுதலைப் புலிகளை கட்டுப்பாடான இராணுவமாக குறிப்பிடப்பட்டிருப்பது ஆகிய விடயங்கள் குறித்து நிபுணர் குழு அறிக்கைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவிக்கின்றார்.
எந்தவொரு நாட்டு மக்களையும் அவர்களின் இனத்தால் அன்றி நாட்டின் பெயரால் குறிப்பிடுவதே சர்வதேச மரபாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிபுணர் குழு அறிக்கை காரணமாக பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பேஸ்புக் ஊடான சமூகவிரோதச் செயல்களில் இளம் பரம்பரையினர்! கொழும்பில் இருநூறு போ் கைது.
பேஸ்புக் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்ட இருநூறு இளம்பராயத்தினர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பின் பிரபலமான கடற்கரையோரம் ஒன்றில் பார்ட்டி டான்ஸ் என்ற பெயரில் இளம் வாலிபர்கள், யுவதிகளைத் தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று நுழைவுக்கட்டணமாக ஆயிரம் ரூபாவை வசூலித்துள்ளது.
அதன் பின் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான உயர்தர மதுபானங்கள் மற்றும் வேறு போதைப் பொருட்களுடன் பிரஸ்தாப பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்போது கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து கடற்கரையோர கிளப் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்த இளம் ஜோடிகள் இருநூறு பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும்17 தொடக்கம் 22 வரையான வயதுப் பருவத்தினராகும்.அவர்களுக்கான பார்ட்டியை ஏற்பாடு செய்த நான்கு சந்தேக நபர்களும் பொலிசாரால் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒசாமாவின் நிலை தான் கடாபிக்கும் ஏற்பட வேண்டும்: லிபிய போராட்டக்காரர்கள்.
அல் கொய்தா தலைவர் பின்லேடனுக்கு நேர்ந்த கதி தான் கடாபிக்கும் ஏற்பட வேண்டும் என லிபியா போராட்டக்குழு விருப்பம் தெரிவித்துள்ளது. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றது. இச்செய்தி லிபியாவில் உள்ள போராட்டக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த போராட்டக்குழு செய்தி தொடர்பாளர் அகமது பானி கூறியதாவது: பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். பின்லேடனை சுட்டுக் கொன்றது போல் அதிபர் கடாபியையும் அமெரிக்க படை சுட்டுக் கொன்றால் அது எங்களுக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும்.
அமெரிக்காவின் உளவு பார்க்கும் எந்திரம் தான் பேஸ்புக்: அசாஞ்சே
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.பேஸ்புக் என்பது பாரிய தனிநபர் தரவுகளின் தொகுப்பெனவும், இது அதன் பாவனையாளர்களால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் அமெரிக்க உளவுச் சேவைக்கு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ரஷ்ய நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்தி ஒன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.இதன் போது மேலும் அவர் கூறியதாவது: பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யாஹூ உட்பட மற்றைய பெரிய அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுகின்றன.
பாவனையாளர்கள் புதிய நண்பர் ஒருவரை பேஸ்புக்கில் இணைக்கும் போது அவர்கள் தாமாகவே அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுவதுடன் அவர்களுக்கான தரவுத்தளத்தினையும் பெருக்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் ஊடகங்களையும் கடுமையாக சாடினார்.
உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்.
உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று தான் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.நாளைய உலகத் தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு இடம் என்ற பெருமைக்குரிய அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற வருடாந்த நிகழ்வொன்றின் போது எடுக்கப்பட்டப் படங்கள் அவர்களின் கீழ்த்தரமான செயற்பாடுகளை அம்பலமாக்கியுள்ளது.
சிஸேரியன் சண்டே என்று இந்த நிகழ்வு அழைக்கப்படுகின்றது. கோடை காலத்தின் வருகையை பொது மைதானம் ஒன்றில் கூடி ஆடிப்பாடி கூடிக்குலவி வரவேற்பது தான் இந்த நிகழ்வு.இங்கு இம்முறை இந்த நிகழ்வுக்காகத் திரண்டிருந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் எந்தளவு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்ள முடியுமோ அந்தளவுக்கு நடந்து கொண்டார்கள்.
ஜீஸஸ் கிரீன் என்ற இந்த பொதுப் பூங்காவுக்கு தமது பிள்ளைகளோடு அன்றைய தினம் வருகை தந்திருந்த பலர் இதைப் பார்த்து முகம் சுளித்தவர்களாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.எதிர்காலத் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் மோசமாக சண்டையிட்டுக் கொண்டமை, திட்டித் தீர்த்தமை, வாந்தி எடுத்தமை, பலர் பார்த்திருக்க பொது இடத்தில் உடைகளைக் களைந்து வீசியமை என எந்த அநாகரிகத்துக்கும் இங்கு பஞ்சமே இருக்கவில்லை.
இங்கு ஜீஸஸ் கல்லூரியின் மாணவர்களும் வந்திருந்தனர். அவர்களும் ஒரு வருடாந்த நிகழ்வுக்காகத் தான் வந்திருந்தனர். அது அவர்களின் வருடாந்த மது அருந்தும் விழா. இந்த மாணவ குழுவுக்கும், சிஸேரியன் சண்டே மாணவ குழுவுக்கும் இடையில் தான் கடும் சண்டை மூண்டது.வன்முறையில் ஈடுபட்ட இவர்களை பொலிஸார் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி செய்தனர். பலமாணவர்களுக்கு இரத்தக் காயங்களும் ஏற்பட்டன.
கடாபி இளைய மகனது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு .
லிபியாவில் நேட்டோ படைகளின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கடாபியின் இளையமகனான சயிப் அல் அராபின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.இந்த ஊர்வலத்தில் கடாபி கலந்து கொள்ளாத போதிலும் அவரது மற்றைய மகன்களான சயிப் அல் இஸ்லாம் மற்றும் ஹனிபல் ஆகியோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபியின் ஆதரவாளர்கள் 2000 பேர் வரை இதில் பங்கு பற்றி இருந்ததாகவும் பலர் தமது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேட்டோ படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை கடாபியின் மகன் உட்பட அவரது மூன்று பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒசாமாவுக்கு பின் அய்மன் அல் ஜவாஹிரி அல்கய்தா அமைப்பின் தலைவராக வாய்ப்பு.
உலகை மிரட்டிக் கொண்டிருந்த அல்கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.அல்கய்தா அமைப்பில், இவரது மறைவுக்குப் பின், "நம்பர் ஒன்" பொறுப்பை எகிப்தில் பிறந்த அறுவை சிகிச்சை டொக்டர் அய்மன் அல் ஜவாஹிரி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லாடனுக்கு சதித் திட்டங்களில் மூளையாக செயல்பட்டவர் அய்மன் அல் ஜவாஹிரி.
எகிப்து தலைநகர் கெய்ரோவில்லுக்கு அருகில், உயர் மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர் அய்மன். இவரது குடும்பத்தில் பலரும் டொக்டர்கள் மற்றும் உயர் கல்வி பெற்றவர்கள். அல்கய்தா பயங்கரவாத அமைப்பில் ஒசாமாவுக்கு அடுத்து அமெரிக்காவின் கூட்டு புலனாய்வு அமைப்பால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதியும் கூட. பயங்கரவாதி ஒசாமாவை போலவே ஆப்கன், பாகிஸ்தான் எல்லையில் அய்மன் மறைந்திருப்பதாக முன்பு கூறப்பட்டது.
கடந்த 2003 ம் ஆண்டு செப்டம்பர் 10 ம் திகதி ஒசாமாவும், அய்மனும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை, "அல்ஜசீரா" வெளியிட்டது. அந்த வீடியோவில் இருவரும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இருவரும் பாராட்டி பேசி இருந்தனர். அல்கய்தா அமைப்பின் செயல்பாடுகளில் ஒசாமாவுக்கு மூளையாக செயல்பட்டவர் அய்மன் என்று, அய்மனுக்கு ஒரு காலத்தில் பிரதிநிதியாக செயல்பட்ட கெய்ரோவைச் சேர்ந்த மான்டசர் அல் ஜயத் கூறியுள்ளார்.
கடந்த 1974 ல், "எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு" துவங்கப்பட்டது. அதில் அய்மன் உறுப்பினர். இதன் உறுப்பினர்கள், படை வீரர்கள் போன்ற தோற்றத்தில் 1981 ல் அமைப்பு தலைவர் அன்வர் சதாத்தை கொலை செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 301 பேரில் அய்மனும் ஒருவர். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். எகிப்தில் முஸ்லிம்கள் மட்டும் கொண்ட நாட்டை உருவாக்க 1990 ம் ஆண்டுகளுக்குப் பின்னர் பிரசாரத்தில் அய்மன் ஈடுபட்டார்.
1993 ம் ஆண்டில் எகிப்து ஜிகாதி அமைப்புக்கு தலைவராக செயல்பட்டதும் உண்டு. கடந்த 2001 ம் ஆண்டு ஆப்கனின், காந்தகார் நகரின் மீது அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் அய்மனின் மனைவி அஸ்சா மற்றும் இவர்களது மூன்று மகள்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஒசாமாவுக்குப் பின் அய்மன் உருவெடுக்கலாம் என்ற கருத்து பேசப்படுகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரியை விரைவில் கொல்வோம்: தலிபான்கள் ஆவேசம்
பின்லேடன் திடீரென கொல்லப்பட்ட சம்பவம் அல்கய்தா, தலிபான்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பின்லேடன் கொல்லப்பட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் முன்பு கூறி இருந்தனர். ஆனால் அத்தகைய தாக்குதல் எதையும் தலிபான்கள் நடத்தவில்லை. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதால் தலிபான்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசனுல்லா அசன் நேற்று பாகிஸ்தான் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினார். அவர் மேலும் கூறியதாவது, பின்லேடன் மரணத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்.
பாகிஸ்தான் இனி எங்களின் முதல் எதிரி நாடாகும். அமெரிக்கா இரண்டாவது எதிரி நாடாகும். இரு நாடுகளுக்கும் பாடம் புகட்டுவோம். பாகிஸ்தான் தலைவர்களும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் எங்கள் கொலைப்பட்டியலில் உள்ளனர். அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி முதல் இடத்தில் உள்ளார். விரைவில் அவரை கொல்வோம்.
2007 ம் ஆண்டு பெனசிர் பூட்டோவை கொல்ல திட்டமிட்டோம். தற்கொலை படையை அனுப்பி மூன்றே மாதத்தில் அவரை கொலை செய்தோம். ஆனால் அமெரிக்காவால் 10 ஆண்டுகள் போராடிய பிறகு தான் எங்கள் தலைவரை கொல்ல முடிந்தது. எனவே இதை கொண்டாட கூடாது என்று அவர் தெரிவித்தார்.
அணு உலையை சுற்றி தடுப்பு சுவர்: ஜப்பான் அரசு முடிவு.
ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து புகுஷிமா அணு உலை வெடித்தது.அதில் இருந்து அணு கதிர் வெளியாகி வருகிறது. அதை தடுக்கும் முயற்சியில் டொக்கியோ அணுசக்தி மையம் ஈடுபட்டுள்ளது.
சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் அந்த பணியில் உள்ளனர். இவர்கள் தவிர அவசர கால ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணுகதிர் வீச்சை கட்டுப்படுத்தும் முயற்சியில் கடந்த 8 வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வெடித்து சிதறிய அணு உலையை சுற்றி சுனாமி தடுப்பு சுவர் கட்ட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
6 அடி உயரத்தில் 500 மீற்றர் நீளத்துக்கு பாறைகளாலும், கான்கிரீட்டாலும் கட்டப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 மீற்றர் உயரத்தில் இச்சுவர் அமைய உள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டால் அணு உலையை மீண்டும் பாதிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பாகிஸ்தான் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் பலி.
பாகிஸ்தானில் பெஷாவர் அருகே சபர்சத்தா நகரம் உள்ளது. அங்குள்ள மசூதி அருகே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.இதனால் மசூதி முழுவதும் இடிந்தது. இதன் அருகே பொலிஸ் நிலையமும் உள்ளது. அங்கு மதில் சுவர் இடிந்து தரைமட்டமானது. பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது.
இச்சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 2 பொலிசார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.பொலிஸ் நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்து இருந்ததாக பொலிஸ் அதிகாரி நிசார்கான் மாவாட் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமும் பீதியும் நிலவுகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்.
5 வயது சிறுவன் தனக்கு ஏற்பட்ட கொடிய நோயான புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட துவங்கி உள்ளான்.பயங்கர உருவங்களை படம் வரைந்து அவற்றை விற்று நிதி திரட்டி உள்ளான். இதுவரை அந்தச் சிறுவன் 3 ஆயிரம் ஓவியங்களை விற்றுள்ளான்.அமெரிக்காவின் கனாஸ் சிட்டியைச் சேர்ந்த சிறுவன் அய்டன் ரீட். இந்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி லிம்போ பிளாஸ்டிக் லுக்கோமியா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோயின் காரணமாக உடலில் அளவுக்கு அதிகமாக வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகும். இந்த அபரீத உற்பத்தியால் வழக்கமான ரத்த செல்களின் உற்பத்தி தடைபடும். இந்த தீவிர புற்றுநோய் சிகிச்சைக்கு கூடுதல் செலவினம் ஆகும்.இந்த தொகையை தானே திரட்ட 5 வயது சிறுவன் அய்டன் ரீட் தான் விரும்பிய பயங்கர உருவங்களின் படங்களை வரைந்து அதனை விற்று மருத்துவ சிகிச்சை நிதி சேர்த்தான். சிறுவனுக்கு புற்றுநோய்க்கான கீமோதெரபி தொற்று ஏற்படாமல் தடுக்க இதர வலி தரும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சிறுவனுக்கு புற்றுநோய் இருப்பதைக் கேள்விப்பட்ட அவனது பெற்றோர் காதே மற்றும் விலே கவலை அடைந்தனர். மருத்துவக் கட்டணம் அவனது குடும்பத்தினரை சோகமடையச் செய்துள்ளது.சிறுவன் விற்ற படங்கள் மூலம் 30 ஆயிரம் டொலர் கிடைத்துள்ளது. இந்த சிறுவனின் செய்கையால் குடும்பத்தினர் வீட்டை விற்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் தவிர்க்க முடியாத சக்தி என்று சீனா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.ஜப்பானின் புகுஷிமா தீவில் உள்ள அணு மின் நிலையத்தில் சுனாமியால் ஏற்பட்ட விபத்தையடுத்து சீனா தனது அணு மின் கொள்கையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனாவின் பெட்ரோலியம் எண்டர்பிரைசஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பெங் யுவான்ஸங் கூறியது: அணு மின் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய நிலை சீனாவுக்கு இப்போதைக்கு ஏற்படவில்லை. ஏற்கெனவே இத்தகைய தொழில்நுட்பத்தில் சீனா முன்னோடியாக விளங்குகிறது.இருப்பினும் ஜப்பானில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் நிலை குறித்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அணு மின் கொள்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
இதற்காக அரசின் தேசிய மின் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுவதாகவும், எதிர்காலத்தில் அணு மின் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தேசிய எரிசக்தி கொள்கையின் இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதன்படி 2011 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் 40 அணு மின் நிலையங்களை புதிதாக அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய மின்னாற்றல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சூழல் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் அதிக அளவில் நீர் மின் நிலையங்களும் உள்ளன.இனி நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில் மாற்று வழியாக அணு மின்சாரத்தை சீனா பெரிதும் நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை: ஜார்ஜ் புஷ்.
ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக கடந்த 2001ல் ஜார்ஜ் புஷ் இருந்த போது நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது ஒசாமா பின்லேடனை கொன்று அல்லது உயிருடன் பிடிக்க வேண்டும் என புஷ் கூறிவந்தார். இந்நிலையில் ஒசாமா கொல்லப்பட்டது தொடர்பாக புஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும். ஒசாமா சுட்டு கொல்லப்பட்டது மூலம் உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்தி அனுப்பியுள்ளது.
எவ்வளவு நாட்கள் இது தொடரும் என தெரியவில்லை. நீதி நிலை நாட்டப்படும். ஒசாமா சுட்டு கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க செனட்டர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூறுகையில்,"ஒசாமா கொல்லப்பட்டாலும் அல் கொய்தா அமைப்பும், அதனுடன் தொடர்பு உடையவர்களும் உயிரோட்டத்துடன் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு கமிட்டி செனட் உறுப்பினர் ஜான்கெரி கூறியதாவது: உலகில் அப்பாவி மக்களை கொன்று வந்த ஒசாமாவுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமா கொல்லப்பட்டதால் மட்டும் அல் கொய்தா அமைப்பின் மிரட்டல் முடிவுக்கு வரும் என்று கருதக் கூடாது. தொடர்ந்து கண்காணிப்புடன் இருந்து உலகை பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.அமெரிக்க புலனாய்வுக்கு ராணுவத்துத்திற்கும், அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. புலனாய்வுக்கான நிரந்தர தேர்வு கமிட்டி தலைவர் மைக் ரோஜர்ஸ் கூறுகையில்,"ஒசாமாவை கொன்றது மூலம் அவரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளது" என்றார்.