இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆட்டநிர்ணய சதி தொடர்பான விபரங்களை ஹசான் திலக்கரத்ன நாளை வெளியிடவுள்ளார்.
இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆட்டநிர்ணய சதிகள் தொடர்பான விபரங்களை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ஹசான் திலக்கரத்தின அறிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் பலருக்கும் பணத்துக்காக கிரிக்கட் போட்டிகளின் முடிவுகளை மாற்றியமைக்கும் ஆட்ட நிர்ணய சதி நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருப்பதாக முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் ஹசான் திலக்கரத்தின அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அது தொடர்பான மேலதிக விபரங்களை நாளை அவர் பகிரங்கப்படுத்தவுள்ளதாக இலங்கைக் கிரிக்கட் சபைக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு மேல் மாகாண சபை அங்கத்தவராக இருக்கும் ஹசான் திலக்கரத்தின நாளைய மேல் மாகாண சபை அமர்வின் போதே அந்த விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் ஹசான் திலக்கரத்தினவின் குற்றச்சாட்டினை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆட்டநிர்ணய சதி தொடர்பான விடயங்கள் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐ.சி.சி. மேற்கொண்டுள்ளது.
இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு.
இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட முயன்ற பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை இந்தியா மறுத்துள்ளது.தற்போது அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இன்று அங்கிருந்து திரும்பி வரும் வழியில் இந்தியாவுக்கும் சென்றுவரத் தீர்மானித்திருந்தார்.
இந்தியாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வது அவரது நோக்கமாக இருந்துள்ளது. அதற்காக அவர் முறைப்படி இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
ஆயினும் இந்திய அரசாங்கம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்திய இராஜதந்திரிகளையோ, சிரேஷ்ட அதிகாரிகளையோ இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று இந்தியா தெளிவாக அறிவித்துள்ளது.அதன் காரணமாக மூக்குடைபட்ட பாதுகாப்புச் செயலாளர் இந்தியா செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கே நேரடியாகத் திரும்பி வரவுள்ளார்.
என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி.
வன்னியில் இடம்பெற்ற போரின்போது விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததைச் சிலர் போர்க்குற்றம் என்கின்றனர். சிலர் மனித உரிமை மீறல் என்கின்றனர். ஒரு இனத்தை அழிவிலிருந்து மீட்டது மனித உரிமை மீறலா? என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பினால் கொழும்பு நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
இலங்கையில் மனிதவுரிமை மீறல் நடந்துள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த அறிக்கையை யார் தயாரித்தார்கள் என நான் கேட்கப் போவதில்லை. என்னை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லப் போகின்றனராம். நாங்கள் பிரபாகரனின் தந்தைக்கே ஓய்வூதியம் கொடுக்க அறிவித்திருந்தவர்கள். அது மட்டுமன்றி தற்கொலைத் தாக்குதல் நடத்தவந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அமைதியை நாடிச் சென்றவர்கள்.
நாட்டில் மனிதவுரிமைகள் இடம்பெற்றதாக பொய்க்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த எவரும் முனைய வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சுமார் 3 இலட்சம் மக்களை மீட்கும் நடவடிக்கையை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அரசாங்கம் மனிதாபிமான ரீதியாகவும் கவனமாகவும் மேற் கொண்டது. அதிக எண்ணிக்கையான மீட்பு நடவடிக் கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஒரே நாடாக இலங்கை விளங்குகிறது. வரலாற்றில் எந்தவொரு நாடும் இவ்வளவு பாரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
நாட்டின் சட்டபூர்வமான படைகளுக்கு எதிராகப் போராடிய பெரும் எண்ணிக்கையான போராளிகளைக் காப்பாற்றி, அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, பல்கலைக்கழக மட்டம் வரையிலான கல்வியும் வாழ்க்கைத்திறன் பயிற்சிகளையும் அளித்து ஏன் திருமணம் கூட செய்து வைத்து அவர்களைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிரஜைகளாக சமூகத்திற்கு அனுப்பி வைத்ததாக வேறு எந்த இராணுவமும் கூறமுடியாது.
இது இலங்கை கொண்டுள்ள தனிச்சிறப்புக்குரிய சாதனையாகும். இதைத்தான் சில குழுக்களும் அமைப்புகளும் போர்க்குற்றம் எனவும் மனித வுரிமை மீறல்கள் எனவும் கூறுகிறார்கள்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக 3 இலட்சம் பேருக்கு போதுமான உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக உணவுத்திட்டம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது. ஆனால் அரசாங்கம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு போதுமான உணவை அனுப்பியது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிய பின் அங்கு மேலதிகமாகவிருந்த உணவுப் பொருட்களை அரசாங்கம் திருப்பி எடுத்துக்கொண்டு வரவேண்டியிருந்தது.
சில ஆயிரம் டொலர்களுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என சில அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஏனைய அமைப்புகளையும் கோருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை.
யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் திகதியிடப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு இந்தியாதான் மிகுந்த தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய மனித உரிமை கழகம் வலியுறுத்தியுள்ளதையும் தி.மு.க போன்ற கட்சிகளின் ஆதரவை இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பதையும் குறித்துள்ள மேற்படி அறிக்கை இவ் விவகாரத்தில் இந்தியா எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கவனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளது.
வன்னிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என உறுதிப்படுத்தியுள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் விசேட நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், யூகோஸ்லாவியா, லைபீரியா போன்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது போன்று இந்த நீதிமன்றம் அமையலாம் என்றும் இவ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையயழுத்திடாத போதிலும் கொழும்பு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வகை செய்யும் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட குறைந்தது நான்கு முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையொப்பம் இட்டுள்ளதாகவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை ஆரம்பித்தால் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாக எதிர்க்காதெனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாதுகாப்புப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நடந்து கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கை தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார். என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் தற்பொழுது அமெரிக்க அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லேடனில் உயிரிழப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது தொடர்பாக சற்று முன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.சவுதியில் பிறந்த மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவராவார்.
ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக இரகசியமாக நடத்தி வந்தார். இவரது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல்களை சிறப்பாக நடாத்துவார்கள். அமெரிக்காவே எங்கள் எதிரி அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறியிருந்தார்.
கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் மோதி அழித்தார். இதனால் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக ஒசாமா அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவராவார்.
இவரை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்களான புஷ், ஒபாமா தெரிவித்திருந்தனர்.ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பார் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த பகுதிகள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் அமெரிக்க படையினர் ஒசாமாவின் வீடியோ காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பு செய்து வந்தனர். பல முறை ஒசாமா கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்திருந்தும் அதனை அல்குவைதா மறுத்திருக்கின்றது. ஆனால் இன்று இச்செய்தி வெளிவந்த பின் இதுவரை அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.இந்த முறை ஒசாமா மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்காக பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்! ரஷ்ய தூதுவர்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள அறிக்கை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் எந்தவொரு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும்.இலங்கைக்கு தண்டனை வழங்கவோ அதை அவமானப்படுத்தவோ சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ரஸ்யா எதிர்த்து நிற்கும்.
ஐ.நா சில விடயங்களை பலவந்தமாக திணிக்க முற்பட்டால் அதனை ரஸ்யா எதிர்க்கும். கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்புச்சபை கூட்டத்தில் அறிக்கையை ஐ.நா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சமர்ப்பித்திருந்தால் நாம் அதனை எதிர்த்திருப்போம்.
அது ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கை அல்ல என்ற சரத்தின் அடிப்படையில் அதனை நாம் நிராகரிக்க முடியும். அதனை வெளியிடவேண்டாம் எனவும் நாம் கேட்டிருந்தோம். ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டாலும் அதனை நாம் எதிர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் எந்தவொரு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும்.இலங்கைக்கு தண்டனை வழங்கவோ அதை அவமானப்படுத்தவோ சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ரஸ்யா எதிர்த்து நிற்கும்.
ஐ.நா சில விடயங்களை பலவந்தமாக திணிக்க முற்பட்டால் அதனை ரஸ்யா எதிர்க்கும். கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்புச்சபை கூட்டத்தில் அறிக்கையை ஐ.நா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சமர்ப்பித்திருந்தால் நாம் அதனை எதிர்த்திருப்போம்.
அது ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கை அல்ல என்ற சரத்தின் அடிப்படையில் அதனை நாம் நிராகரிக்க முடியும். அதனை வெளியிடவேண்டாம் எனவும் நாம் கேட்டிருந்தோம். ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டாலும் அதனை நாம் எதிர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடாபி மகன் மரணம்: பழிவாங்க போவதாக ஆதரவாளர்கள் சபதம்.
நேட்டோ படைகளின் வான்வழித் தாக்குதலில் லிபிய அதிபர் கடாபியின் மகனும், 3 பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.சர்வதேச படை தாக்குதலில் லிபியத் தலைவரின் இளைய மகன் செய்ப் அல் அராப் கொல்லப்பட்ட விடயம் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என அவர்கள் சூளுரைத்தனர். மோமர் கடாபி குடும்பத்தினரை நாங்கள் குறி வைக்கவில்லை என நேட்டோ ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"நேட்டோ வான் தாக்குதலிலேயே கடாபி குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்" என தெரிவித்தார். இந்த தாக்குதலில் கடாபி உயிர் பிழைத்தார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
லிபியத் துருப்புகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த பெப்பிரவரி 15ம் திகதி முதல் கடந்த 3 மாதமாக போர் நடந்து வருகிறது. இதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் லிபிய துருப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
பொது மக்களை காப்பாற்றும் விதமாக மேற்கத்திய படைகள் லிபியாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியத் தலைநகர் திரிபோலியில் ராணுவ முகாம்கள் உள்ள இடங்களை நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.மக்களுக்கு எதிரான கடாபியின் திட்டத்தை ஒடுக்குவதே எங்கள் நோக்கம் என லிபியாவில் உள்ள நேட்டோ படைத் தளபதி ஜெனரல் சார்லஸ் போச்சர்டு கூறினார்.
தூதரக கட்டிடம் தாக்கப்பட்டதன் எதிரொலி: லிபிய தூதர் வெளியேற்றம்.
லிபிய தலைநகர் திரிபோலியில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து லிபியத் தூதரை பிரிட்டன் வெளியேற்றியது. லிபியத் தலைநகரில் அயல் நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. இந்த தூதரகங்கள் மீது ஒரு சில கும்பல் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.
லிபிய அதிபர் கர்னல் கடாபி ராணுவத்திற்கு எதிராக நேட்டோ படைகள் களம் இறங்கியதை விரும்பாத நபர்கள் அயல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேட்டோ படையின் வான் வழித் தாக்குதலில் கடாபியின் மகன் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் திரிபோலியில் உள்ள பிரிட்டன் தூதரகம் தாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் முற்றிலும் எரிந்தது. கடாபி அரசு தனது கடமையைச் செய்ய தவறியுள்ளது. எனவே பிரிட்டனில் உள்ள லிபியத் தூதர் ஓமர் ஜெல்பான் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என பிரிட்டன் உத்தரவிட்டது.
இதற்கிடையே திரிபோலியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். ஆத்திரம் அடைந்த கும்பல் சர்வதேச அலுவலகங்களை தொடர்ந்து தாக்கியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹாக் தெரிவித்தார்.
பின்லேடனின் உடல் ஆப்கன் கொண்டு செல்லப்படுகிறது.
அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதி பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கொண்டாட்டம்: பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அமெரிக்கா முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.
வெள்ளை மாளிகை உள்பட முக்கிய நகரங்களில் திரண்ட அமெரிக்க மக்கள் உற்சாகத்துடன் "யு.எஸ்.ஏ, யு.எஸ்.ஏ" என்று கோஷ மிட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் அமெரிக்கர்கள் விழாக்கோலமாக உள்ளனர்.
பாகிஸ்தானில் அதிர்ச்சி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேடன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்ததாக ஜவாஹரி: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து எகிப்தில் பிறந்த டொக்டரான அய்மன் அல் ஜவாஹரி அந்த அமைப்புக்கு பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்லேடன் மற்றும் அவரது அல் கொய்தா இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்டவர் ஜவாஹரி. அல் கொய்தாவின் வீடியோ செய்திகளில் அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி.
கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு முஸ்லீம்களை அவர் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.டி.இ புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கண்காணிப்பில் இது தெரியவந்தது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்திய போது பின்லேடனும், ஜவாஹரியும் தந்திரமாக தப்பினர்.
தற்போது அமெரிக்கப் படைகளுடனான தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டு அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் ஜவாஹரியைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பின்லேடனைப் போலவே ஜவாஹரியும் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மறைந்திருப்பார் எனக் கருதப்பட்டு வந்தது. ஜவாஹரியும், பின்லேடனும் ஒன்றாக இருந்த வீடியோ கடைசியாக செப்டம்பர் 10 2003ல் அல் ஜஸீராவால் வெளியிடப்பட்டது. அதில் மலைப்பகுதிகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.ஜவாஹரியை அல் கொய்தாவின் தலைமை அமைப்பாளர் என்றும் பின் லேடனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கனடிய தலைவர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் வெளியீடு.
உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது.குறிப்பாக அமெரிக்க தூதரகத்தின் அனைத்து நாடுகள் நிலைப்பாடு குறித்த ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் தலைவர் ஜீலியன் அசாங்கோ அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளார்.
கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தருணத்தில் கனடா தலைவர்கள் பற்றிய அமெரிக்க கருத்துகளை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. 2010ம் ஆண்டு துவக்க கால கட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு முந்தைய பரபரப்பான தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நிர்வாக முறை குறித்து கனடிய தலைநகர் ஒட்டாவில் உள்ள யு.எஸ் தூதரகம் 10 பக்கத்தில் விளக்கம் அளித்த புத்தகம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்டீபன் ஹார்ப்பர் சிறந்த அரசியல் நிலைப்பாடு நிபுணர் என அமெரிக்கத் தூதரகம் பாராட்டி உள்ளது. இருப்பினும் 2008ம் ஆண்டில் அவர் பொது நிதியை அரசியல் கட்சிகளுக்கு அளிப்பதை ரத்து செய்ய முயற்சித்ததால் அவரது புகழ் குறைந்தது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.நிதி அறிக்கை சார்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியை தழுவாமல் இருக்க நாடாளுமன்றத்தில் ஹார்ப்பர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் இந்த தகவலை அனுப்பி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட போது கனேடிய மக்கள் குறிப்பாக பழமைவாத கட்சியினர் ஹார்ப்பரை பெரிதும் போற்றுகின்றனர். லிபரல் தலைவர் மைக்கேல் இக்னடிப், நியூ டெ மாக்ரேட் தலைவர் ஜாக்லேடன் ஆகியோரைப் பற்றியும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்திய இருவர் கைது.
மலேசியாவுக்கு போதைப் மருந்துப் பொருள் கடத்திய 2 ஈரானியர்களை பொலிசார் கைது செய்தனர்.மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்துக்கு கடந்த புதன்கிழமை 2 ஈரானியர்கள் பெரிய பைகளுடன் வந்து இறங்கினார்கள். பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவர்கள் பையை சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த பையின் ரகசிய அறையில் 4.5 கிலோ மீத்தம் "பெண்டமைன்" என்ற போதைப் பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்தத் தகவலை தெற்கு ஜோகர் மாநில தலைமை பொலிஸ் அதிகாரி முகமது மொகத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தி வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
2009ம் ஆண்டு மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்திய 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 138 பேர் கைது செய்யப்பட்டார்கள்.கடந்த மாதம் போதைப் பொருள் கடத்திய 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 70 கிலோ மீத்தம் பெண்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருளை கடத்த மலேசியா தளமாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.இது பற்றி மலேசியாவுக்கான ஈரான் தூதரக அதிகாரி கூறுகையில்,"சர்வதேச போதை கடத்தல் கும்பல் ஈரானியர்களை கடத்தலுக்குப் பயன்படுத்துகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.
மாலத்தீவில் அதிபருக்கு எதிராக தொடரும் மக்கள் கிளர்ச்சி.
சார்க் உறுப்பு நாடுகளில் சுற்றுலாத்துறையில் சிறந்த நாடான மாலத்தீவில் அதிபர் முகமது நஷீத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் கலவரம் நடந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
மாலத்தீவுகளில் அதிபராக முகமது நஷீதின் பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது நிர்வாகத் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து கூறிய காவல் துறை செய்தித் தொடர்பாளர் அகமது ஷியாம் கூறுகையில்,"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசார் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் அவர்கள் முயன்றனர். இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
எதிர்க்கட்சியான திவேஹி ரெய்துங்கா கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஷெரீப் கூறியதாவது: மாலத்தீவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் எங்களது கட்சி எம்.பி. ஒருவர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக சரிவரத் தெரியவில்லை.
ஏமனில் தொடரும் நெருக்கடி: ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிபர் மறுப்பு.
ஏமனில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பரிந்துரைத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிபர் சலே திடீரென மறுத்து விட்டார்.இதனால் ஜி.சி.சியின் சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஏமன் அதிபர் சலே பதவி விலகுவது குறித்து ஜி.சி.சி சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி 30 நாட்களில் சலே பதவி விலக வேண்டும்.
ஆளும்கட்சி 50 சதவீதம், எதிர்க்கட்சி 40 சதவீதம், பிறகட்சிகள் 10 சதவீதம் கொண்ட ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும். அதிலிருந்து 60 நாட்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
முதலில் இப்பரிந்துரைகளை அதிபர் சலேயும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்ட காலத்தில் மக்களைக் கொன்று குவித்தது. நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக சலே விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் நிலையை இத்திட்டம் தந்திரமாக நிராகரித்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஜி.சி.சி பொதுச் செயலர் அப்துல் லத்தீப் அல் ஜய்யானி ஏமன் தலைநகர் சனாவுக்கு வந்து அதிபரை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பேசினார்.
இதுகுறித்து நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை சலேயுடன் அவர் நடத்தினார். ஆனால் ஒவ்வொரு சுற்றின் போதும் சலே புதிய புதிய நிபந்தனைகளைப் போட்டதால் தன் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ஜய்யானி தெரிவித்தார்.இதனால் நேற்று முன்தினம் அவர் மீண்டும் ரியாத்துக்கு வெறும் கையுடன் திரும்பிச் சென்றார். இதனால் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏமன் அரசியல் நெருக்கடி மேலும் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.