Sunday, May 1, 2011

இன்றைய செய்திகள்.

நிபுணர்குழு அறிக்கையின்படி ஜனாதிபதியைக் கைது செய்ய முடியும்: விஜேதாச ராஜபக்ஷ பா.உ



நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதியைக் கைது செய்ய முடியும் என்று ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமன்றி, இலங்கையின் முக்கிய அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் கூட நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பீ.பீ.சி. சந்தேசய சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை தோன்றலாம்.
நிபுணர் குழு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளில் செயற்படும் மனித உரிமை அமைப்புகள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்கள் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக பிடியாணை பெற்றுக் கொள்ள முடியும். அதனை வைத்துக் கொண்டு ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சமயத்தில் அவர்களைக் கைது செய்விக்க முடியும்.
அதன் மூலம் அவர்கள் இனிவரும் காலங்களில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது பாரிய சவாலான விடயமாக மாறிவிடலாம்.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு சட்டரீதியாக அதிகாரங்கள் அற்றவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை மிகப்  பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப
சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்தப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய வேண்டுமென லங்காதீப குறிப்பிட்டுள்ளது.
போர் ஆரம்பமான காலம் முதல் இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமையை மறுக்க முடியாது.இவ்வாறு இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் தோண்டித் தோண்டி விசாரணை நடத்துவதில் எவருக்கும் நன்மை கிட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கே அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் முனைப்பு காட்ட வேண்டுமே தவிர, தமிழ் சிங்கள சமூகங்களுக்கு இடையில் மீளவும் பிளவினை ஏற்படுத்தக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிபுணர் குழு அறிக்கை தொடர்பான சர்ச்சையின் போது அரசாங்கம் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் உணர்ச்சிவசப்படுவதனை விடவும் நிதானமாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த இராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் சிக்கல் நிலைமையிலிருந்து மீள வாய்ப்பிருப்பதாக லங்காதீப ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்
ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்து அப்பாவி ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஓய்வூதியத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு சதத்தையேனும் செலவழிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தனியார்துறை ஊழியர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட கூடாது என அவர் வலிறுத்தியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஜே.வி.பி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஜே.வி.பி. இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இவ்வாறான விவாதங்கள் அவசியமற்றது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.எவ்வாறெனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்
சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை.ஐ.நாவின் அறிக்கைக்கான ஆதரவுகளை திரட்டுவதற்கே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றினீஸ் பல நாடுகளினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை அழைத்து இரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் வாரம் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரும்போது, மகிந்தவை வெளியேற்றும் மேற்குலகத்தின் நடவடிக்கைகள் ( “Operation Exit Rajapakse”) ஆரம்பிக்கப்பட்டு விடும்.அமைதி நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்பேரலைக் கட்டமைப்புக்கள் மூலம் மேற்குலகம் சிறீலங்காவில் கால்பதிக்க முனைந்திருந்தது. ஆனால் அவை நிறைவேறவில்லை.
விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களை அமைதி முயற்சிகளின் ஊடக தக்கவைக்கவே மேற்குலகம் விரும்பியிருந்தது. அதற்காகவே நோர்வேயில் இருந்து எரிக் சொல்ஹெய்மையும் அனுப்பியிருந்தது.சிறீலங்காவில் உள்ள இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தவும் மேற்குலகம் முயன்றிருந்தது. தமது சொற்படி சிறீலங்கா நடக்கவேண்டும் என மேற்குலகம் விரும்புகின்றது.
ஆனால் மகிந்த முரண்டு பிடிப்பதால், சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலகம் முனைந்துள்ளது. அரச தலைவர் தேர்தலில் மேற்குலகம் பொன்சேகாவை ஆதரித்ததே, மகிந்தவுக்கான செல்வாக்கை சிங்களவர்களிடம் அதிகரித்திருந்தது.
மேற்குலகத்தின் தலையீட்டை சிங்களவர்கள் விரும்பவில்லை. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நாவின் அறிக்கை என்பது மகிந்தவின் தலைக்கு மேல் தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டாகும். வரும்காலத்தில் அவரினதும், அவரின் சகோதரர்களினதும் தலைகளை நோக்கியும் வேட்டுக்கள் தீர்க்கப்படும்.
ஈராக்கில் இடம்பெற்ற போர் வரையிலும் கடந்த 110 வருடங்களில் 14 நாடுகளின் அரசுகளை அமெரிக்கா தூக்கி வீசியுள்ளது. அதற்கு அவர்கள் பல காரணிகளை முன்வைத்திருந்தனர். ஹவாய் பகுதியில் 1893 ஆம் ஆண்டு முதலாவது ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா மேற்கொண்டது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான், குவாட்டமாலா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தலைவர்களை கூடஇராணுவப் புரட்சிகளை ஏற்படுத்தி அமெரிக்கா கவிழ்த்திருந்தது.தனது அதிகாரத்தை தக்கவைக்கவும், வளங்களை கைப்பற்றவுமே அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்.எனவே மேற்குலகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்பது பொருளாதாரத் தடைகளே என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிவரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுமார் முப்பத்தி ஐயாயிரம்  பேருக்கு மேல் தற்போதைக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நிலையில் அண்மைக்காலமாக அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை வழங்கும் செயற்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.
மேலும் 1987ம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை அந்தஸ்தை பாதுகாப்பு அமைச்சு  தனக்கு நினைத்த நேரத்தில் இரத்துச் செய்ய முடியும் என்ற விதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இதுவரை அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்காலத்தில் தமது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்தை இழக்கும் நிலையேற்படவும் கூடும் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும்போது அவர்களின் கடந்த கால செயற்பாடுகளில்  இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குபற்றியிருக்காமை முக்கிய நிபந்தனையாக கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்கிப் போகும், வெளிநாடுகளில் இருந்தவண்ணம் தாய்நாட்டின் பிரசாரங்களுக்கு உதவியளிக்கும் நபர்களுக்கு மட்டுமே இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி.
ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்காத இலங்கை அரசு, அந்த அறிக்கைக்கு எதிரான  தனது நிலைப்பாட்டை விளக்கி ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் வீற்றோ அதிகாரம் கொண்ட 5 நாடுகளுக்கும், நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத 10 நாடுகளுக்கும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைகள் அற்றது,  தவறான உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது என்று கூறி அதனை அடியோடு நிராகரித்துள்ளது அரசு. எனினும், இந்த அறிக்கையால் உலக அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அது அஞ்சுகிறது.
எனவே, அதனைச் சமாளிப்பதற்குத் தேவையான இராஜதந்திரப் போரை அது முன்னெடுத்து வருகின்றது. அதேசமயத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் முயற்சித்து வருகின்றன.எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை வரவுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அறிக்கை தொடர்பில் அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை இலங்கைத் தலைவர்களுக்கு விளக்க உள்ளார்.
அறிக்கை வெளியாவதற்கு முன்னரே பிளேக்கின் பயணம் திட்டமிடப்பட்டு விட்டது என்றாலும், இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது நிச்சயம் அவர் அறிக்கை விடயத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வார் என்று நியூயோர்க்கில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதற்கு முன்னோடியாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டினன், கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையில் நிலைத்து நிற்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நிபுணர் குழுவின் அறிக்கை எந்த வகையில் உதவும் அல்லது உதவ முடியும் என்பது தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.அதேவேளையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றும் சீனா ஆகியன, அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. 


எனினும், அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயோ மனித உரிமைகள் சபையிலேயோ சமர்ப்பிக்கப்படலாம் என்ற அச்சம் கொழும்பில் அரசியல் தலைமையிடம் நிலவுகிறது. அவ்வாறான ஒரு சூழலில் இலங்கையைப் பாதுகாக்கக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகளில் கொழும்பு தீவிரம் காட்டி வருகின்றது.அதற்காகவே அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்துடன் இணைப்பு ஆவணம் ஒன்றும் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அநேகமாக அது, இறுதிப் போர் தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் அடுத்த கட்டமாக பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் சென்று அரசின் நிலைப்பாட்டை விளக்க உள்ளார்.
போர் முடிவடைந்துள்ள சூழலில் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் உலக நாடுகள் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதே இலங்கை அரசின் வாதமாக முன்வைக்கப்பட உள்ளது என்று இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதில் அதற்கு வெளியே பிரச்சினையைக் கையாண்டு சிக்கலைத் தவிர்க்கப் பார்க்கிறது இலங்கை என்று புதுடில்லியைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

குண்டு வைத்து தகர்க்கப்பட்ட கடாபியின் வீடு!

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி அதிபர் கடாபிகொன்று குவித்தார். இதைத் தொடர்ந்த லிபியா மீது அமெரிக்க தலைமையிலான இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கூட்டுப்படை (நேட்டோ) குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயும் சண்டை நடக்கிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.


இதனால் கடாபி சமாதானத்துக்கு இறங்கி வந்துள்ளார். நேற்று அவர் டி.வி.யில் பேசிய போது போர் நிறுத்தம் செய்ய தயார் என்றும், அதிகாரத்தை விட்டு தர மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதிபர் கடாபி டி.வி. சேனலில் பேசிக் கொண்டிருந்த போது அதற்கு அருகேயுள்ள அரசு கட்டிடத்தின் மீது அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியது. 

அப்போது குண்டுகள் வீசப்பட்டத்தில் கட்டிடம் இடிந்து சேதம் அடைந்தது. சிறிது நேரத்தில் லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது மாளிகையிலும் அமெரிக்க கூட்டுப்படைகள் குண்டு வீசி தாக்கின. அந்த மாளிகையின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது. குண்டு வீச்சில் கடாபியின் மகன் சயீப் அல்-அராப் (29) கொல்லப்பட்டார். இவர் கடாபியின் இளைய மகன் ஆவார். இவர் இளைய மகன் ஜெர்மனியில் படித்து கொண்டிருந்தார். சமீபத்தில்தான் லிபியாவுக்கு திரும்பினார். 

கடாபியின் 3 பேரன்களும் குண்டு வீச்சில் பலியானார்கள். இந்த தாக்குதலின் போது கடாபியும் அவரது மனைவியும் மாளிகையில்தான் இருந்தார்கள் ஆனால் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய இந்த குண்டு வீச்சு சம்பவத்துக்கு லிபியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டு கடாபி டி.வி.யில் பேசி கொண்டிருந்த போது திட்டமிட்டு குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அவரது மாளிகை மற்றும், அலுவலகங்கள் மீதும் அடிக்கடி குண்டு வீச்சு நடத்தப்பட்டு வருகிறது. அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இது போன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 

பொது மக்களை கொல்வதற்காக லிபியா ராணுவத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. இச்சம்பவத்தை அமெரிக்க கூட்டு படைகள் உறுதிப்படுத்தவில்லை. கடாபியின் மாளிகை மீது குண்டு வீசியதை மறுக்கவும் இல்லை. உறுதி செய்யவும் இல்லை. லிபியா ராணுவ தளத்தை குறிவைத்து தான் குண்டு வீசப்படுகிறதே தவிர கடாபியையும், அவரது குடும்பத்தினரையும் குறி வைத்து தாக்கவில்லை என்று கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் லெப்டி னென்ட் ஜெனரல் சார்லஸ் புசர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ தேவாலயத்தை தீ வைத்து கொளுத்த முயற்சி.
கிழக்கு பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலாக குர்ஆனை சிலர் எரித்ததாக வதந்தி பரவியது.இதை தொடர்ந்து லாகூர் அருகேயுள்ள குஜ்ரன் வாலா நகரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.கையில் ஆயுதங்கள் மற்றும் தடியுடன் அங்குள்ள கிறிஸ்தவ தேவா லயம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் அந்த தேவாலயத்தை தீ வைத்து கொளுத்த முயன்றனர்.
தகவல் அறிந்ததும் பொலிசார் அங்கு விரைந்து சென்று தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் மூலம் தீ வைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.
பொலிசார் விரட்டியடித்ததால் ஆத்திரம் அடைந்த போராட்டத்தினர் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். டயர்களை கொளுத்தி கோஷமிட்டனர்.இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
மக்களின் உரிமைகளை மன்னர் மதிக்க வேண்டும்: பராக் ஒபாமா
மக்கள் உரிமைகளை பக்ரைன் மன்னர் மதிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.பக்ரைனில் 2 பொலிசார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஷியா ஆதரவு ஜனநாயக போராட்டக்காரர்கள் பலருக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் பக்ரைன் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பக்ரைன் மன்னர் ஹமாத்திடம் ஒபாமா தொலைபேசியில் பேசினார்.
அப்போது பக்ரைன் மக்களின் உரிமைகளை மதிப்பதிலேயே பக்ரைனின் ஸ்திரத்தன்மை இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார். பக்ரைனில் அர்த்தமுள்ள சீரமைப்பு ஏற்பட வேண்டும் என்றும், பக்ரைனின் விருப்ப நபர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டார்.அரபு பிராந்தியத்தில் யு.எஸ் கடற்படையின் தலைமையகமாக பக்ரைன் உள்ளது. இந்த பக்ரைனில் பெப்பிரவரி மாதம் மத்தியில் இருந்து மார்ச் மாதம் காலம் வரை கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.
இந்தப் போராட்டம் தொடர்பாக பக்ரைன் ராணுவ நீதிமன்றம் வியாழக்கிழமை 4 ஷியா போராட்டக்காரர்களுக்கு மரணத் தண்டனை விதித்தது. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.எதிர்ப்பு போராட்டத்தின் போது இரண்டு பொலிசார் கொல்லப்பட்டது தொடர்பாக ஷியா பிரிவினருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பக்ரைனை கடுமையாக விமர்சித்து உள்ளன.
இளவரசர் திருமணத்தில் கருப்பு இனத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்: நடிகை பேட்டி
பிரிட்டிஷ் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக பிரபல நடிகை ஷெரிஷெபர்ட் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.தொலைக்காட்சிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போதே அவர் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் எங்கே என்ற கேள்வியை எழுப்பினார்.
வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தில் ஒரு பகுதியில் கறுப்பு இன முக்கியஸ்தர்கள் பலர் அமர்ந்து இருக்கின்றமை அவருக்குக் காட்டப்பட்டது.ஆனால் அவர் அதில் திருப்தி அடையவில்லை. அதைப் பார்த்துவிட்டும் மீண்டும் எங்கே கறுப்பு இனத்தவர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.44 வயதான இந்த நடிகை மகாராணி எலிசபெத் திருமணத்தன்று அணிந்திருந்த ஆடையையும் விமர்சித்தார்.
உலோக குண்டுகள் மூலம் ஜேர்மனியை தாக்க அல் கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம்.
அல் கொய்தா தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை ஜேர்மனி பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்த நபர்கள் பயங்கர வெடிகுண்டுகளில் வெடித்துச் சிதறும் உலோகங்களை வைத்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த சோதனை நடத்தி உள்ளனர்.
இது குறித்து ஜேர்மனி பெடரல் துணை விசாரணையாளர் ரைனர் கிரிஸ்பம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் பயங்கர குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்டு உள்ளனர்.ஆனால் அவர்கள் எந்த இடத்தில் வெடிக்கச் செய்வது என்ற முடிவுக்கு வரவில்லை. இந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது தொடர்பாக சோதனை நடத்தி வந்துள்ளனர் என்றார்.
கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான அப்தல் திம் கே என்பவர் ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவதற்கு அல் கொய்தாவின் முக்கிய நபரிடம் இருந்து கடந்த ஆண்டு உத்தரவு பெற்றுள்ளார் என்றும் கிரிஸ்பம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 29 வயது மொராக்கோ நபர் அப்தும் திம் அல்கொய்தா முக்கிய நபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த அல் கொய்தா நபர் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பிராந்தியத்தில் உள்ளார் என்றும் கிரிஸ்பம் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட இதர இரு அல் கொய்தா தீவிரவாதிகள் ஜேர்மன் மொராக்கோ நபர் ஜமீல்(31), ஜேர்மன் ஈரானியன் அமித்சி(19) ஆகியோர் ஆவார்கள். குற்ற விசாரணைக்கான பெடரல் ஓபிஸ் தலைவர் ஜோர்க் சிர்கே கூறுகையில்,"தீவிரவாத தாக்குதல் தலைவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முறைகேடாக ஜேர்மனியில் தங்கி ஆலோசனை செய்துள்ளார்" என்றார்.
பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆளில்லா விமானத் தாக்குதலை இனிமேல் ஆப்கானிஸ்தானில் இருந்து நடத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.எங்கள் மண்ணில் இருந்து எங்கள் மண்ணில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியதையடுத்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. இதை அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்காவின் ராணுவ அதிகாரி மைக் முல்லன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் தனி ராஜ்யம் நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அப்பகுதியில் நாங்கள் நடத்தி வரும் விமானத் தாக்குதலின் வேகத்தைக் குறைக்க மாட்டோம் என்றார்.
அமெரிக்க ராணுவ அதிகாரி இப்படி எச்சரிக்கை விடுத்த மறு வாரமே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ஆப்கானிஸ்தானில் இருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் இருந்து 350 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஷாம்சி விமானத் தளத்தில் இருந்து அமெரிக்காவின் ராணுவ வீரர்களை வாபஸ் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய உளவுத் துறை தலைவராக டேவிட் ஹெச் பேட்ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தால் பாகிஸ்தான் அச்சம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில் பேட்ரியாஸ் தங்களுக்கு எதிராகவே செயல்பட்டதாகக் கருதும் பாகிஸ்தான் வரும் காலத்தில் தங்களுக்கு எதிரான அவரின் எதிர்ப்பு வலுக்கும் என்று கருதுகிறது. இதனால் இனிமேலும் தங்களது நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலை அனுமதிப்பது நல்லதல்ல என்று நினைக்கிறது.
எனினும் ஒரே அடியாகத் தாக்குதலை முற்றிலும் நிறுத்துமாறு உத்தரவிட்டால் அமெரிக்கா கொதித்தெழுந்துவிடும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் படிப்படியாக அந்நாட்டுக்கு நெருக்குதல் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.அதன் ஒருபகுதியாகத்தான் தமது நாட்டில் உள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தை மூடுமாறு பாகிஸ்தான் நெருக்குதல் அளித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா ஏற்குமா என்பது தெரியவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.
இதனிடையே பாகிஸ்தானின் நெருக்குதலால் அமெரிக்கா சீற்றம் அடைந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகவும் தெரியவருகிறது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் வஜிரிஸ்தான் பகுதி பயங்கரவாதிகளின் கோட்டையாகவும் திகழ்கிறது. இப்பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. 2004ல் இருந்து ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்துகிறது.
இத்தாக்குதலின் போது அப்பாவி மக்களும் கொல்லப்படுவதாகப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது. தவி பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்த அனுமதிப்பதன் மூலம் தங்களது நாட்டு ராணுவத்தை தாங்களே குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது என்று அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.இதுவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நெருக்குதல் அளிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இனவெறி குற்றச்சாட்டு காரணமாக பிரெஞ்சு நிர்வாகி பதவி நீக்கம்.
பிரான்ஸ் கால்பந்து சங்கம் தனது தொழில்நுட்ப இயக்குனர் பிரான்கோய்ஸ் பிளாகுவார்ட்டை திடீரென சஸ்பெண்ட் செய்தது.இந்த அதிகாரி இனவெறி நடவடிக்கையாக கறுப்பினத்தவர் மற்றும் அரபு வம்சாவழி வீரர்களை இளைஞர் அகாடமியில் சேர்க்க மறுத்து வருவதாக பெரும் குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியாகின.
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக பிரான்ஸ் கால்பந்து அமைப்பு மீண்டும் பிரச்சனையில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் தேசிய கால்பந்து பெடரேஷனின் தொழில்நுட்ப இயக்குனர் பிரான்காய்ஸ் பிளாகுவார்ட் சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க போட்டி துயரமாக உலக கோப்பை போட்டியில் தோல்வியை தழுவிய பிரான்ஸ் அணியின் பயற்சியாளர் ரேமண்ட் டொமன்ச் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பொறுப்பை ஏற்ற லாரண்ட் பிளான்கும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஜோனோ வெளியிட்ட அறிக்கையில்,"தேசிய கால்பந்து சங்கமும், இளைஞர் மற்றும் விளையாட்டு பொது ஆய்வும் விசாரணை நடத்தி 8 நாளில் அறிக்கை தயார் செய்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.
சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர் என்று சீன மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.சீனாவில் உள்ள சுப்ரீம் பீப்பிள்ஸ் புரோகியூரேடோரேட் என்றழைக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி சின்குவா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் செய்தி தொடர்பாளர் பாய்குவனாமின் கூறியதாவது: சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 10 ஆயிரத்து 535 அரசு அதிகாரத்தை தவறாக உபயோகித்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து வந்த புகார்கள் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 632 முன்னாள் அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.இவர்கள் மீது மொத்தம் 5 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவாகியுள்ளது. 923 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் ஊடுருவும் அயல்நாட்டவர்கள்.
அமெரிக்காவில் இருந்து கனடாவில் முறைகேடாக அயல்நாட்டு நபர்கள் ஊடுருவுகிறார்கள் என விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க அரசியல்வாதிகள் நீண்டகாலமாக கொண்டுள்ள கருத்தின்படி கனடாவில் இருந்து தான் முறைகேடான குடியேற்றம் நடக்கிறது என கூறப்பட்டது.ஆனால் முறைகேடான குடியேற்றம் அமெரிக்காவில் இருந்து கனடாவில் நிகழ்கிறது என வான்கூவரில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.
வான்கூவரில் உள்ள யு.எஸ் பிலிப் சிகோலோ வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள் கனடாவில் ஊடுருவி தங்குவதற்கு சட்ட உரிமைக் கோருகிறார்கள் என தெரிவித்துள்ளது.இத்தகவலானது 2010 ம் ஆண்டு பெப்பிரவரி 23ம் திகதி வான்கூவர் தூதரக அதிகாரி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இக்கடிதத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் நிர்வாகத்தினர் நீண்டகாலம் எல்லைப் பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லை என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைகழகத்தின் குடியேற்ற விவகாரம் மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியராக உள்ள டான் டெவோர்ட்ஸ் கூறுகையில்,"முறைகேடாக கனடாவுக்குள் ஊடுருவ திட்டமிடும் நபர்கள் அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள்" என தெரிவித்தார்.
8 வயது மாணவன் பள்ளியில் துப்பாக்கி விற்றதால் பரபரப்பு.
அமெரிக்காவில் நியூயார்க் நகர பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன் சக மாணவனுக்கு துப்பாக்கியை விற்பனை செய்துள்ளான்.அமெரிக்காவின் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் இக்னாஸி யோ கால்வன். இவரது மிகன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவனின் தந்தை தன்னுடைய பாதுகாப்பிற்காக 9 எம்.எம் பிஸ்டல் வகையை சேர்ந்த துப்பாக்கியை வைத்திருந்தார். சம்பவத்தன்று மாணவன் தன்னுடைய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து சென்று சக மாணவனிடம் 3.50 டொலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளான்.
துப்பாக்கியை வாங்கிய மாவணவனின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் பொலிசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நகர பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார்.குயின்ஸ் நகர குடும்ப நீதிமன்றத்தில் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் துப்பாக்கியை விற்பனை செய்த மாணவன் மற்றும் வாங்கிய மாணவனை பள்ளியிலிருந்து நீக்கம் செய்துள்ளது.
நேட்டோ படைத் தாக்குதலில் கடாபி மகன் மரணம் .
லிபிய நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. நேட்டோ படைகளும் தொடர்ந்து விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் அதிபர் கடாபியின் இளையமகனான செயிப் அல் அராப் கடாபி மற்றும் அதிபரின் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டதாக அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடாபியின் இளையமகன் கொல்லப்பட்டது குறித்து நேட்டோ படைகள் உறுதியான தகவல்கள் தெரிவிக்கவில்லை.திரிபோலி நகரில் வசித்து வந்த கடாபியின் இளையமகனின் வீட்டை நேட்டோ படைகள் தாக்கியது குறித்து பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஜப்பானில் அணு சக்தி ஆலோசகர் பதவி ராஜினாமா.

ஜப்பானில் பிரதமர் நேட்டோ கானின் அணுசக்தி ஆலோசகர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா, டச்சி அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு தாக்குதல் நடந்தது.இந்நிலையில் கதிர்வீச்சு தொடர்பாக தடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து கடந்த மார்ச் 16ம் திகதி பிரதமர் நேட்டோ கான் தனது அணுசக்தி ஆலேசாகராக டோஸ்ஹிஸோ கோசாகா என்ற விஞ்ஞானியை நியமனம் செய்தார்.
இவர் டோக்கியோ பல்கலைகழக பேராசிரியர் ஆவார். இவர் தற்போது பிரதமருடன் ‌ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து டோஸ்ஹிஸோ கேசாகா கூறியதாவது: அணு உலை விபத்து குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டதிட்டங்கள், முன்‌னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக எனது ஆலோசனையை ஜப்பான் பிரதமர் கவனத்தில் கொள்ளவில்லை.
இனிமேலும் எனது ஆலோசனைகள் பிரதமர் அலுவலகத்தில் தேவையில்லை என நினைக்கிறேன். ஜப்பானின் அணுசக்தி கமிஷனும் கதிர்வீச்சு தாக்குதல் தடுப்பது குறித்த அணு சட்டதிட்டங்களை சரிவர கடைபிடிக்கவில்லை. அதற்கு மாறாக தாமதப்படுத்துகிறது. இவ்வாறு கேசாகா கூறினார். எனினும் இவரின் ராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
தொழில்நுட்ப கோளாறு: எண்டீவர் விண்கலத்தை செலுத்துவதில் தாமதம்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக எண்டீவர் விண்‌கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் வரும் திங்கள்கிழமை விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் 6 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எண்டீவர் விண்கலத்துடன் நேற்று ‌செல்ல தயார் நிலையில் இருந்தன.
இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கெனவரல் விண்வெளி மையத்தில் எண்டீவர் விண்கலம் தயார்நிலையில் இருந்தன. புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு எரிபொருள் டாங்கில் திடீரென தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் திங்களன்று செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. இது குறித்து எண்டீவர் விண்கலத்தின் இயக்குனர் மைக்லெனின்பீச் கூறுகையில்,"விண்கலத்தின் சிறு மின்சப்ளையில் ஏற்பட்ட கோளாறால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்".
தைவானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மத்திய தைப்பி மாகாணத்தில் கட்டடங்கள் குலுங்கின.இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ‌தென்கிழக்கே உள்ள டைட்டாங் தீவுக்கடலில் 178 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், தலைநகர் தைப்பியில் சில இடங்களில் இது உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவவானதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 24 ஆயிரம் பேர் பலியாயினர்.அப்போது 7.6 என ரிக்டர் அளவுகோலில் நிகழ்ந்தது. தற்போது 6.2 என பதிவாகியுள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சிறுமிகளிடம் அதிகரிக்கும் குடிப்பழக்கம்.
இங்கிலாந்து சிறுமிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பெரும்பாலான சிறுமிகள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.அங்குள்ள 15 வயது சிறுமிகள் மாதத்துக்கு 2 முறையாவது மது குடித்து வருகின்றனர். மூன்றில் 2 பங்கு டீன்ஏஜ் பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
11 சதவீதம் பேர் உறவின் போதும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இன்னும் சிலர் வாரத்தின் இறுதி நாட்களில் சந்தோஷத்துக்காக மது குடித்து மகிழ்கின்றனர்.
மேலும் சிலர் உடல்நலக் கோளாறு மற்றும் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மனஅழுத்தத்தை குறைப்பதற்கு மது குடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.மொத்தத்தில் இங்கிலாந்தில் சிறுவர்களை விட சிறுமிகள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் இடிபாடுகளை அகற்றிய ஜப்பான் மக்கள்.
ஜப்பானில் கோல்டன் வீக் விடுமுறை வாரம் நேற்று தொடங்கியது. வழக்கமாக இந்த விடுமுறை நாட்களில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக அவர்களின் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வர்.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 26 ஆயிரம் பேர் இறந்தனர். மீட்பு குழுவினரால் இடிபாடுகளை இன்னும் முழுமையாக அகற்ற முடியவில்லை.
இதனால் ஜப்பான் மக்கள் தங்கள் விடுமுறை நாளில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கினர். நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட இசினோமகி நகரில் உள்ள சென்சு பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தயாராக ஜம்ப்சூட், ரப்பர் பூட்ஸ் மற்றும் தொப்பியுடன் வந்துள்ளனர். இசினோமகி நகரில் உள்ள பிரபல புத்த கோயில் மற்றும் நினைவிடத்தில் மக்கள் துப்புரவு பணியை நேற்று மேற்கொண்டனர். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத குறுகலான இடங்களை மக்கள் சுத்தம் செய்தனர்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கப்பல் கண்டுபிடிப்பு.
ரோமானிய பேரரச காலத்திற்குரிய சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழைமையான கப்பலொன்று ரோமின் புராதன ஒஸ்டியா துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீதிப்புணரமைப்பு நடவடிக்கைகளின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலானது சுமார் 11 மீற்றர் நீளமானதாகும். மேலும் இதுவரை குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கப்பல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படுகின்றது.
இதன் முன்பகுதியும், பின்பகுதியும் சிதைவடைந்து விட்டதாக இதனைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இக்கண்டுபிடிப்பானது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒஸ்டியா எண்டிகா என்றழைக்கப்படும் இத்துறைமுக நகரமானது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும்.
பத்தில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் தாக்குதல்: பிரிட்டன் ஆய்வில் தகவல்.
பிரிட்டனில் பத்தில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்களால் அல்லது மாணவர்களின் பாதுகாவலர்களால் தாக்கப்படுகின்றனர் என என்.ஏ.எச்டி பள்ளி யூனியன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வேல்ஸ் வடக்கு அயர்லாந்தில் பள்ளி பொறுப்பு ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 1362 பேர் பெற்றோரால் தாக்கப்பட்ட விவரத்தை பதிவு செய்தனர். ஆசிரியர்கள் மீது பெற்றோர் தாக்குதல் நடத்துவது ஏற்க முடியாத ஒன்று என அரசு தெரிவித்தது.
தேசிய தலைமை ஆசிரியர்கள் சங்கத்தில் உள்ள 28 ஆயிரம் உறுப்பினர்களில் 1300 பேர் ஆய்வில் பங்கேற்றனர். ஒரு பெற்றோர் கொடூரமானத் தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பல நாட்கள் நடக்க முடியாத அவதி ஏற்பட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 75 சதவீதத்தினர் கூறியதாவது: குழந்தைகளின் பெற்றோர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசுவதையும் குறிப்பிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் பெற்றோர் தீவிரவமாக ஆசிரியர்களை அச்சுறுத்தி மிரட்டியதையும் குறிப்பிட்டனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF