ஹேக் சர்விஸ் என்னும் பிரகடனத்தின் அடிப்படையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் நீதி அமைச்சு, அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த பதிலை வழங்கியுள்ளது.விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதனால் அமெரிக்காவில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கும் நடவடிக்கை நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சீனாவின் பிரசன்னம் தெற்காசியாவுக்கு அச்சுறுத்தல்: இந்திய விமானப்படைத் தளபதி.
இந்தியாவுக்கு அயலில் உள்ள, இலங்கையிலும்; பாகிஸ்தான் வசம் உள்ள காஸ்மீரிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான், இலங்கை அல்லது தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவின் தலையீடுகள், இந்தியாவை அவதானமாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் எவ்வித தடையுமின்றி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் : என்.கே. இளங்கக்கோன்.
காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களை விநியோகம் செய்வதில் எவ்வித தடையும் கிடையாது.
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள், பிரதிக் காவல்துறை மா அதிபர்கள், காவல் நிலையப் பொறுப்திகாரிகள், மாவட்ட காவல்துறை அத்தியட்சகர்கள், தலைமைப் பரிசோதகர்கள் ஆகியோர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க முடியும்.இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களுக்கு மூன்று நாட்கள் இருக்கும் தருணத்தில் இவ்வாறான ஒர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிங்கள இணைய ஊடகமொன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.காவல்துறையினர் விரும்பியவாறு ஆயுதங்களை பயன்படுத்த முடியும் என திடீரென காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்தமை சந்தேகம் ஏறப்டுத்தவதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உயரதிகாரிகள் ஓய்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானம்.
ஓய்வு பெற்றுக் கொள்வது குறித்து பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள், காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் அறிவித்துள்ளனர்.
அனுபவமுடைய பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்களே இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.நீச்சல், கலாச்சாரம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றுக் கொண்ட புதியவர்களுக்கு பொலிஸ் அத்தியட்சகர் பதவி வழங்கப்படும் அதேவேளை, நீண்ட அனுபவமுடைய தமக்கு எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த பட்டத்தாரி அதிகாரிகளுக்கு வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவோ அல்லது குற்ற விசாரணைகளை நடத்தவோ தெரியாது என பாதிக்கப்பட்ட அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.பொலிஸ் பரிசோதகர்களாக பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு இதுவரையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தின் சகல அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை : லக்ஸ்மன் யாபா.
பிராந்தியத்தின் முக்கியமான நாடுகளான சீனா மற்றும் இந்தியாவுடன் நல்ல உறவு பேணப்படுகின்றது.சர்வதேச அழுத்தங்களின் போது குறித்த நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக்கட்சி தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்பட்ட நல்லெண்ணம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு இடமில்லை.ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையின்றி செயற்பட்டு வருகின்றது, இனவாதமாகவும் அதற்கு எதிராகவும் கட்சி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கப்பலின் கட்டணம் குறையவுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனத்தின் பயணிகள் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் சித்ரா ஜயசிங்க குறிப்பிடுகிறார்.
இதற்கமைய பயணக் கட்டணம் இரண்டாயிரத்து 750 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையேயான போக்குவரத்தில் சாதாரண வகுப்பிற்கு ஒரு வழி பயணத்திற்கு ஆறாயிரத்து 150 ரூபாவும், இருவழி பயணத்திற்கு 12 ஆயிரத்து 210 ரூபாவும் அறவிடப்படப்படும்.கொழும்பிலிருந்து வாராந்தம் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு கப்பல் பயணிக்குமென தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தூத்துக்குடியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளி்ல் மாலை 6 மணிக்கு கொழும்பிற்கான கப்பல், பயணத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.போக்குவரத்தின் போது பயணிகள் 100, 150 மற்றும் 200கிலோகிராம் எடை வரையில் பொதிகளை கொண்டுச் செல்ல முடியுமென தெரியவருகிறது. அத்துடன் பயணிகளுக்கு காலை மற்றும் இரவு நேர உணவுகள் இலவசமாக வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் தேசிய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மை வெற்றி.
கனடாவின் மனிரோபா மாகாணத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க வெற்றியினை தேசிய ஜனநாயகக் கட்சியின் கிரெக் செலிங்கர் பெற்றுள்ளார்.தேசிய ஜனநாயகக் கட்சியானது மாகாணத்தின் 57 ஆசனங்களில் 37 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.அமெரிக்காவிற்கான கனேடியத் தூதுவராக முன்னாள் தலைவர் பதவியேற்றதால் 2009 இல் அவருக்குப் பதிலாக அம்மாகாணத்தில் இக்கட்சியின் தலைவராகப் பதவியேற்ற திரு. செலிங்கரின் முதலாவது வெற்றி இதுவாகும்.
1999 இலிருந்தே தேசிய ஜனநாயகக் கட்சிதான் இம்மாகாணத்தினை ஆட்சிசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.எனினும் இவரது வெற்றி நகரிற்கும் கிராமத்திற்குமிடையே ஒரு பிரிவு உள்ளதென்பதைக் காட்டியுள்ளது.நகரங்களில் தேசிய ஜனநாயக் கட்சியும் கிராமங்களில் கொன்சவேற்றிவ் கட்சியும் முன்னணியில் இருந்தன.
கடந்த தேர்தலில் தே.ஜ.க. பெற்றிருந்ததைவிடவும் தற்போது 46 வீதத்திற்கு அதிகமா வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.கொன்சவேற்றிவ் கட்சியினர் 44 வீதத்தைப் பெற்றுள்ளனர். பெரும்பாலான மனிரோபா மாகாணத்தினர் ஒரு ஆட்சி மாற்றத்தினை விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.இந்தத் தேர்தல் வெற்றியே கனடாவின் ஏனைய மாகாணங்களிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ள உதவக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்: உலக தலைவர்கள் இரங்கல்.
புற்றுநோயால் அவதியுற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்(56) கலிபோர்னியாவில் நேற்று காலமானார்.அவருக்கு சர்வதேச தலைவர்கள் மற்றும் முன்னணி கணணி தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஒபாமா: அமெரிக்காவில் புதிய படைப்புகளை உருவாக்கி உலகில் சாதனை படைத்தவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸூம் ஒருவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்மை விட்டு பிரிந்து விட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை படைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்.
ஜூலியா கிலார்ட்: தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவரது படைப்புகள் உலகில் சிறந்த சேவை ஆகும்.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்நத இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சாரா பாலின்.
எதிர்வரும் 2012ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்பட்டது.பாலின் கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது.
இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். இந்த நிலையில் 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அலாஸ்கா முன்னாள் கவர்னர் சாரா பாலின் தெரிவித்துள்ளார். நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் கமாண்டர் பலி.
காபூலில் நடந்த விமான தாக்குதலில் தலிபான் கமாண்டர் பலியானார். ஆப்கனில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் விமான தாக்குதல் நடத்தின. இதில் தலிபான் மற்றும் அதன் துணை அமைப்பான ஹக்கானியின் மூத்த கமாண்டர் திலாவார் பலியானார்.கடந்த வாரம் நேட்டோ படையிடம் தலிபான் கமாண்டர் ஹாஜி மாலிகான் பிடிபட்டார். அவருக்கு பதில் திலாவார் கமாண்டராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் பலியானது தலிபான் இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.தலாவர் அமெரிக்க ராணுவத்தின் நடமாட்டம் பற்றி நோட்டமிட்டு தங்கள் அமைப்புக்கு தகவல் சொல்லி வந்தான்.இந்த ஆண்டில் இதுவரை 1400 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். 20 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க கூட்டுப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்ல நண்பனை இழந்துவிட்டேன்: பில்கேட்ஸ் இரங்கல்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் அவதியுற்ற ஸ்டீவ் ஜாப்ஸ்(56) இறந்தார். கணணி உலகில் புதிய சாதனை படைத்தவர். ஐபோன், ஐபேடு என நவீன கணணி தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில்கேட்ஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். நவீன கணணி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதன்முதலாக சந்தி்த்தேன். அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன்” என்றார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கணணி உலகில் புரட்சியை ஏற்படுத்தி உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கணணி உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.
அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார். கணணி உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவிட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் விஞ்ஞானிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.
2011ம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசை இஸ்ரேல் விஞ்ஞானி டேணியல் ஷெட்மேன் பெற்றுள்ளார்.குவாஸிகிறிஸ்டலை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் ஹைபா நகரி்ல உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஷெட்மேன். கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக குவாஸிகிறிஸ்டல்கள் குறித்த கண்டுபிடிப்பை வெளியிட்டார் ஷெட்மேன்.அதன் பிறகு தான் குவாஸிகிறிஸ்டல்கள் குறித்த ஆய்வு அதிகரித்தது. இப்போது அதற்கான பரிசாக நோபல் பரிசைப் பெறுகிறார் ஷெட்மேன்.
வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்த ரஷ்யா, சீனா.
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் தங்கள் மறுப்பாணை(வீட்டோ) அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தன.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த ஏழு மாதங்களாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசு வன்முறையை ராணுவம் மூலம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஐ.நா.வின் சிரியா மீது கண்டனத் தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் மக்கள் மீதான தாக்குதல்களை நிறைவேற்றாவிடில் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கும் தீர்மானத்தை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, போர்ச்சுகல் இணைந்து தயாரித்தன.
இத்தீர்மானம் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டால் தனது மறுப்பாணையைப் பயன்படுத்தப் போவதாக ரஷ்யா ஏற்கெனவே தெரிவித்திருந்தது. சீனாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.மேலும் தங்கள் ஆதரவு வேண்டுமானால் தீர்மானத்தில் உள்ள சில கடுமையான வார்த்தைகளை நீக்க வேண்டும் என இரு நாடுகளும் கூறியிருந்தன. அதை ஏற்று தீர்மானத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன.
ஓட்டெடுப்பு: நேற்று முன்தினம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இத்தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அதேநேரம் நிரந்தர உறுப்பு நாடுகள் தங்கள் மறுப்பாணையை(வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.சிரியா மீதான தீர்மானத்தில் 9 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால் சீனாவும், ரஷ்யாவும் தங்கள் மறுப்பாணையைப் பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தன.
அமெரிக்கா விரக்தி: வாக்களிப்புக்குப் பின் பேசிய அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ்,"சிரியாவில் வெளிநாடுகளின் ராணுவத் தலையீடு வந்து விடும் என சில நாடுகள் கூறுவது போலி நடிப்பு. இந்த நாடுகள் சிரிய மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்” எனத் தெரிவித்து விட்டு வெளிநடப்பு செய்தார்.
லிபியாவில் ஐ.நா தீர்மானத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை அந்நாட்டின் மீதான வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பாக மாறிவிட்ட நிலையில் அதேபோன்ற சூழலை சிரியாவில் ஏற்படுத்த விரும்பவில்லை என ரஷ்யாவும், சீனாவும் தெரிவித்துள்ளன.ஆனால் சிரியாவுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆயுத விநியோகம் செய்து வருவதால் இந்த நிலையை அந்நாடு மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.சீனத் தூதர் லி பாவோடாங் கூறுகையில்,"சிரியாவில் நடக்கும் வன்முறைகள் குறித்து சீனா கவலை கொண்டிருக்கிறது. அதேநேரம் இத்தீர்மானம் அங்கு சிக்கலை மேலும் அதிகமாக்கும்” என்றார்.
மெக்சிகோவில் துண்டிக்கப்பட்ட இரு தலைகள் கண்டுபிடிப்பு.
மெக்சிகோவின் தலைநகரிலுள்ள பிரதான இராணுவத்தளத்திற்கு அருகில் இரு துண்டிக்கப்பட்ட தலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அத்தலைகளுக்கு அருகே “த ஹான்ட் வித் ஐஸ்” என்றழைக்கப்படும் குற்றவியல் குழுவால் விட்டுச் செல்லப்பட்ட துண்டுக் குறிப்பொன்று கைவிட்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமது தலைவர் கைது செய்யப்பட்டதையடுத்து மெக்சிகோ நகரில் தமது குழுவுக்கான புதிய தலைமைத்துவமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த துண்டுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பல்களுக்கிடையில் நடைபெறும் மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன் கண்களை தோண்டியெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஆசாமி.
தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்க நேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர்.
அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார்.அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உலகின் சிறந்த 100 வணிக நிறுவனங்களின் பட்டியல்: கோகோ கோலா முதலிடம்.
உலகின் சிறந்த 100 வணிக நிறுவனங்களில் கோகோ கோலா முதலிடத்தில் உள்ளது.முன்னணி மொபைல் போன் ஹாண்ட்செட் தயாரிப்பு நிறுவனமான நோக்கியோ 8வது இடத்திலிருந்து 14வது இடத்திற்கு தள்ளப்பட்டு 8வது இடத்தினை ஆப்பிள் கைப்பற்றியது.
நியூயார்க் சர்வதேச சந்தையில் சிறந்த 100 நிறுவனங்கள் குறி்த்த வருடாந்திர பட்டியல் வெளியிடபட்டது. இதில் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனமும், மைக்ரோசாப்ட் 3வது இடத்திலும், கூகுள் தேடுதல் இணையதளம் 4வது இடத்திலும் உள்ளன.கடந்த ஆண்டு 8வது இடத்திலிருந்த நோக்கியோ நிறுவனம் இந்தாண்டு 14வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த இடத்தினை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 13 பேர் பலி.
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் பலியாயினர்.பலுசிஸ்தான் மாகாணத்தின் அக்தர்பாத் பகுதியில் காய்கறி மார்க்கெட் வேலைக்காக பேருந்து ஒன்றில் 30 பேர் சென்றனர்.
அப்போது துப்பாக்கி ஏந்திய 3 தீவிரவாதிகள் பஸ்சை மறித்தனர். பின்னர் 2 பேர் பேருந்துக்குள் புகுந்த பயணிகளை நோக்கி பாரபட்சமின்றி சுட்டனர். அதில் 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியாயினர்.அண்மைக் காலமாக ஷியா பிரிவினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடப்பதால் குவாட்டா பகுதிகளில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 13 பேர் இறந்ததற்கும், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க தவறிய அப்பகுதி பொலிஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை கண்டித்து ஷியா பிரிவினர் கண்டன போராட்டம் செய்கின்றனர்.
அமெரிக்காவில் தொடரும் வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம்.
அமெரிக்காவில் “வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பாலத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 700 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆர்ப்பாட்டத்தை மேலும் தூண்டி விட்டுள்ளது.
நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. லாஸ் ஏஞ்சல்சின் சிட்டி ஹால் கட்டடம் முன்பு இன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.
நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர்.
இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் பொருளாதாரப் பத்திரிகை எழுத்தாளர் ஜெப் மேட்ரிக் ஆகியோர் அமெரிக்காவில் தற்போதைய நிதி நெருக்கடி எவ்வாறு ஏற்பட்டது, அதனால் உருவாகும் விளைவுகள் ஆகியவை பற்றி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கடந்த வார இறுதியில் உரையாற்றினர்.நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இது அமெரிக்காவின் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை.இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் இவை:
1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டொலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.
4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.
5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.
7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.
8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.
10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.
11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
இரண்டாவது முறை அதிபராவது சந்தேகம் தான்: ஒபாமா.
இரண்டாவது முறையாக அதிபராவது சந்தேகம் தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அண்மையில் நடத்திய ஆய்வு முடிவும் இதையே பிரதிபலிக்கிறது.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையும் கிடைத்தது. 4 ஆண்டுகளைக் கொண்ட இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது.
இதையடுத்து அடுத்த அதிபர் தேர்தல் 2012 நவம்பரில் நடைபெறுகிறது. இதில் மீண்டும் போட்டியிட ஒபாமா விரும்புகிறார். இதுதொடர்பாக முன்னணி நாளிதழ்கள் ஒரு ஆய்வு நடத்தின. அதில் ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 37 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அதிபராவார் என 55 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதுகுறித்து ஒபாமாவிடம் கேட்டபோது,“சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக வேலையின்மை 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். எனவே 2வது முறை தாம் அதிபராவது சந்தேகம்தான்” என ஒப்புக் கொண்டார்.