Friday, October 7, 2011

இன்றைய செய்திகள்.

நாட்டில் மிகவும் பயங்கரவமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது : ரணில் விக்கிரமசிங்க.

நாட்டில் மிகவும பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.விரும்பியவாறு அரசியலில் ஈடுபடும் அரசாங்கம் சட்ட மீறல்களை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுடன், இது அபாயகரமானதும், ஆபத்தானதுமான நிலைமையாகும்.சந்தேக நபர்கள் காவல் நிலையத்திலேயே கொல்லப்படுகின்றனர், இதனால் ஆத்திரமடையும் மக்கள் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.சட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனால் மக்கள் சட்டத்தை கையிலெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக 17ம் திருத்தச் சட்ட மூலத்தை இல்லாதொழித்துள்ளது என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ள இரு கொரிய யுத்தக் கப்பல்கள்.
இரண்டு கொரிய யுத்தக் கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல்களில் சுமார் 600 கொரிய கடற்படையினர் வருகைத் தந்துள்ளனர்.
இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 3 நாட்களுக்கு இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்.தென்கொரிய படையினர் இலங்கை வருகின்ற 5வது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த இந்த கொரிய யுத்தக் கப்பல்கள் வேறும் பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கொரிய யுத்தக் கப்பல் போர் பயிற்சிகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இனவாதத்தை விதைக்க கோத்தாபய முயற்சி.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் இனவாதத்தை விதைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பெரும்பாலும் அரசாங்கக்கட்சி தோற்பது உறுதியென்ற அடிப்படையில் இன்று காலை புலனாய்வுப்பிரிவின் அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னரே கோத்தாபய இனவாதத்தைத் தூண்டி விடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதற்காக அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடும் நவசிஹல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திரவை ஆளுங்கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.அவ்வாறு கட்சி தாவியவுடன் ஐ..தே.க. சார்பில் கொழும்பில் மேயர் வேட்பாளராக முஸ்லிம் ஒருவர் முன்னிறுத்தப்பட்டதை விமர்சித்து பத்திரிகையாளர் மகாநாடொன்றை நடத்துமாறும் மனமேந்திரவுக்கு கோத்தாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.ஆயினும் சரத் மனமேந்திர இது தொடர்பில் இதுவரை தெளிவான பதில்கள் எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அமைச்சர் டளஸ் அலஹப்பெருமவும் இனவாதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதன் பின் ஆளுங்கட்சி முஸ்லிம் முக்கியஸ்தர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அவர் தன் கருத்துக்களை அடக்கி வாசிக்க நேர்ந்தது.அவ்வாறான நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அவ்வாறான இனத்துவேச முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் கோத்தாபய பிரதமர்?
கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் கோத்தாபய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே ஒருங்கிணைத்து வந்திருந்தார்.
அதன் காரணமாக கொழும்பு மாநகராட்சியை ஆளுங்கட்சி கைப்பற்றுமாக இருந்தால், அந்த வெற்றியின் கதாநாயகனான கோத்தாபய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி, பிரதமர் பதவியில் அமர்த்துவது ஜனாதிபதியின் நோக்கமாக இருப்பதாக அறியப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு மிகவும் நெருக்கமானவரும், தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமுமான லக்ஷ்மண் ஹுலுகல்லை மூலமாகவே இந்தத் தகவல்கள் கசிந்துள்ளன.அவ்வாறு கோத்தாபய ராஜபக்ஷவை பாராளுமன்றம் கொண்டுவருவதாயின் தற்போதுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளுராட்சித் தேர்தல்களில் ஐ.தே.க.வுக்கு செல்வாக்கு அதிகரிப்பு.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஐ.தே.க. வின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.இன்று காலை எஸ்.ஐ.எஸ் எனப்படும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கியுள்ள இரகசிய அறிக்கையின் பிரகாரம் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாநகராட்சிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து, ஐ.தே.க.வின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.
அதன் பிரகாரம் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை ஐ.தே.க. சற்று அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்;க்கப்படு;கின்றது.
ஆயினும் கொழும்பில் மட்டும் ஆளுங்கட்சிக்கு சற்று வாக்குகள் அதிகரித்துள்ள போதிலும், மாநகராட்சியை ஐ.தே.க.வே கைப்பற்றும் என்றும் புலனாய்வு அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளே கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சற்று அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமையவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் சென்றே பணிகளை முன்னெடுக்கும் நிலை!- சபையில் ரணில் குற்றச்சாட்டு.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பின் பிரகாரம் தனது பாதுகாப்பு வாகனங்களை செலுத்துவதற்கான சாரதிகளை விலக்கியுள்ளதாக நேற்று சபையில் பிரதி சபாநாயகரிடம் முறையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முச்சக்கரவண்டியில் சென்று தனது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தினால் எனது வாகனத்தை செலுத்துவதற்கென சாரதி ஒருவர் வழங்கப்பட்டுள்ளார். வேறு சாரதிகள் எவரும் என்னிடத்தில் இல்லை.
இந்நிலையில் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் அறிவித்தலின் பிரகாரம் பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களை பொலிஸார் செலுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.எனது பாகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பொலிஸ் சாரதிகளே செலுத்துகின்றனர். இந்நிலையில் என்றுமில்லாதவாறு அமைச்சு பாதுகாப்புப் பிரிவு இவ்வாறு அறிவித்திருக்கிறது.
மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக இருப்பின் அது குறித்து அறிவித்து பின்னர் தீர்மானிக்கவேண்டும். இவ்வாறில்லாது செயற்பட்டிருப்பதால் எனது பணிகளை மேற்கொள்வதற்கு நான் முச்சக்கரவண்டியைப் பாவிக்க வேண்டிய நிலைமையே தோன்றியிருக்கின்றது.அப்படியெனின் அரசாங்கமே உத்தியோகபூர்வமாக முச்சக்கரவண்டியொன்றை எனக்குத் தருமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.இதேவேளை எனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட வாகனங்கள் அதிகமாக வாகன திருத்த நிலையங்களிலேயே நிற்கின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறுகையில்,எதிர்க்கட்சித் தலைவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கேற்ற வகையில் அரசு செயற்படவேண்டும் என்பதுடன் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்திய நாட்டுடன் நட்பாக இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது: ஒபாமா எச்சரிக்கை.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக ‌அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.இது தொட்பாக வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எல்லா தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் அதனை பாகிஸ்தான் புறக்கணிக்கிறது. மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி குழுவினருடன் அந்நாட்டு உளவு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.சமீபத்தில் நடந்த சம்பவங்களே இதற்கு சாட்சி. மேலும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும் ஒரு வகையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் காரணமாக உள்ளது என்றார்.இது சர்வதேச அளவில் பிரச்னையை உண்டாக்கும். அமெரிக்காவின் நலனை புறக்கணித்தால் விளைவுகள் ஏற்படும். மேலும் இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நலம் என எச்சரித்தார்.
லண்டன் மேயர் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக லண்டன் மேயர் மைக்கேல் பீர் வரும் 10ம் திகதி இந்தியா வர உள்ளார்.இந்தியாவில் அவர் கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல உள்ளார்.
சுற்றுப்பயணத்தின் போது மேற்கண்ட நகரங்களில் அவர் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது தான் மேயரின் சுற்றுப்பயணத்தின் நோக்கம் ‌எனவும், கொல்கத்தா, மும்பை நகரங்களில் நடைபெற உள்ள கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேச உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 பேர் பலி.
தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஹெல்மாண்ட் பகுதியில் புதன்கிழமை வந்த ஒரு பேருந்தை நிறுத்துமாறு தலிபான்கள் கூறியுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த தலிபான்கள் பேருந்தை நோக்கிச் சுட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தல் போன்ற பல்வேறு தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றனர். ஆப்கன் போரில் கடந்த ஜூன் வரை 1,462 பேர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை கொலை செய்ய சதி.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தானின் உளவுத் துறை ஐஎஸ்ஐ நேரடியாக உதவி வருகிறது என்று அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு கூறி வருகிறது.இதற்கிடையில் ஆப்கனில் அமைதிக்காக பாடுபட்டு வந்த முன்னாள் அதிபர் ரபானியை தலிபான் தீவிரவாதிகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க சர்வதேச அளவில் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் உதவி கேட்டு வருகிறார்.இந்நிலையில் அதிபர் கர்சாயை கொலை செய்ய திட்டமிட்ட மருத்துவ பேராசிரியர், மாணவர்கள் 4 பேரை கைது செய்துள்ளதாக ஆப்கன் உளவுத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஹக்கானி தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் மருத்துவ பேராசிரியர், மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் மூலம் கர்சாயின் பாதுகாவலர்களை ஒருவரை தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர்.
அவர் மூலம் கர்சாயை கொல்ல சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாவலரும் மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.5 லட்சம் அமெரிக்க டொலரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது என்று தெரிவித்தனர்.ஆப்கன் அதிபராக 2002ல் பதவியேற்ற பின்னர் ஹமித் கர்சாயை கொல்ல 3 முறை முயற்சி நடந்தது. கடந்த 2008ல் ராணுவ அணிவகுப்பில் கர்சாய் பங்கேற்ற போது ராக்கெட் வீசி கொல்ல முயற்சி நடந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்.
தென் அமெரிக்க நாடான ஆர்ஜெண்டினாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஜுஜூய் மற்றும் சால்டா பகுதிகளில் காலை 8 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்போ, அதிகளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை உணரப்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்த நிலநடுக்கந்தான் அதிக அதிர்வை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நிலநடுக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து மக்களும், பள்ளிகளிலிருந்து மாணவர்களும் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரச் செய்யப்பட்டனர்.
ஆப்கனை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர புதிய யுக்திகளை கையாளும் தலிபான்கள்.
ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறவுள்ளன. இந்நிலையில் ஆப்கனை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர புதிய உத்தியை கையாள தலிபான் திட்டமிட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் படைகளை எதிர்த்து தலிபான்கள் போராடி வருகின்றனர்.இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக புதிய உத்தியை கையாள தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். தாங்கள் நடத்தும் தாக்குதலில் அதிகளவில் பொதுமக்கள் இறக்கக் கூடாது, அதே சமயம் குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஆப்கன் முன்னாள் அதிபரும், அமைதிக் குழு தலைவருமான பர்ஹநுதீன் ரப்பானியை கொன்றது குறிப்பிடத்தக்கது.தற்போது அமெரிக்கப் படைகளுடனான பெரிய அளவிலான மோதலை தலிபான் மற்றும் அதன் தோழமை அமைப்பான ஹக்கானி உள்ளிட்டவை தவிர்த்து வருகின்றன. அதேசமயம் ஆப்கன் அதிபர் ஹமீது ஹர்சாயுடன் அமைதி குறித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.தங்களது இந்தத் தந்திரம் அமெரிக்கப் படைகளை ஆப்கன் மண்ணைவிட்டு விரைவில் வெளியேற்றும் என தலிபான் அமைப்பினர் நம்புகின்றனர்.
அதே சமயம் கடந்த செப்டம்பர் 13ம் திகதி காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நகர்ப் பகுதியில் குறிப்பிட்ட சில இலக்குகளைத் தாக்கும் உத்தியை தலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்குப் பதிலடியாக வான்வழித் தாக்குதலை நடத்தினால், ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்க நேரும் என்பதால் நேட்டோ படைகள் செய்வதறியாது தவிக்கின்றன.
சமீபத்தில் வான்வழித் தொலைத் தொடர்பையும் சில மணி நேரம் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.தாங்கள் ஆட்சியிலிருந்த போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் தடை விதித்திருந்தனர். தற்போது அக்கொள்கையிலும் மாற்றம் செய்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ரப்பானியை கொன்றதன் மூலம் தங்களுக்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை என்பதை தலிபான்கள் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். மேலும் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், எதிர்காலத்தில் ஆப்கனில் ஆட்சி அமைக்கப்போவது தாங்கள்தான் என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளனர்.தங்களின் முந்தைய கல்வி மற்றும் வியாபார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் சிறிது மாற்றம் செய்து உள்ளூர் பயங்கரவாதக் குழுக்கள் மூலம் மக்களிடையே தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கன் அரசின் செயல்பாடற்ற தன்மை குறித்து பிரசாரம் செய்வதன் மூலம் மக்களை தங்கள் பக்கம் திருப்ப தலிபான்கள் முயற்சிக்கின்றனர். 1990களில் ஆப்கானிஸ்தானில் தாங்கள் நடத்திய ஆட்சியின்போது இருந்த கெடுபிடியை மாற்றி, உலக நாடுகளின் கருத்துகளை கேட்கத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
2014-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவுள்ளன. அதன் பின் பாதுகாப்பை ஆப்கன் அரசுப் படைகளே மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அரசுப் படைகளால் தங்களை தலிபான்களிடமிருந்து பாதுகாக்க முடியாது என அந்நாட்டைச் சேர்ந்த குடிமக்களில் பலர் கருதுகின்றனர். இதையடுத்து தலிபான்களை வரவேற்க பலர் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுவீடன் நாட்டு எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இலக்கியப் பரிசு சுவீடன் நாட்டின் மனோதத்துவ நிபுணரும், கவிஞருமான டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமருக்கு(80) அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் எழுதிய "மிஸ்டிக்கல் வெர்சடைல் அண்ட் சேட்” என்ற கவிதைத் தொகுப்பு 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 90ம் ஆண்டு இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் இவரால் சரிவரப் பேச முடியவில்லை. தனக்குக் கிடைத்த நோபல் பரிசு குறித்த கருத்து கூட இவரால் கூற முடியவில்லை.மனித மனத்தின் அற்புதங்கள் குறித்து இவர் அளித்துள்ள இலக்கியப் படைப்புக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகடமி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலக்கியத்துக்கான விருது பெறும் டோமசுக்கு 1.5 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
பால் மூலம் ஆடைகளை தயாரித்து ஜேர்மன் விஞ்ஞானி சாதனை.
பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை தயாரித்து ஜேர்மன் விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.இவ்விஞ்ஞானி ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கிறார். என்க் டோமஸ்(28) என்ற யுவதியே இத்தகைய ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.பால் மட்டுமல்லாது பல திரவியங்களையும் பயன்படுத்தி இத்தகைய துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துணிவகைகளை பயன்படுத்தி பல அலங்கார ஆடைகளையும் தயாரித்துள்ளார். இந்த ஆடையானது தோலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய ஆடையில் புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது.இத்தகைய ஆடை வகைகள் எதிர்காலத்தில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தென்பசிபிக் தீவில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதி.
தென்பசிபிக் சமூகத்தின் இரண்டாவது தீவு தற்போது வறட்சி காரணமாக மோசமான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றது.நியூசிலாந்தில் உள்ள 3 தீவுகளில் ஒன்றான இந்தத் தீவு திங்கட்கிழமையன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருந்தது.
இதுபோலவே அண்மையிலுள்ள அதன் இன்னொரு தீவான Tuvalu தீவும் அவசரகாலப் பிரகடனம் செய்ததோடு அங்கு நீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் வழங்கப்பட்டு வருகின்றது.இது போன்றே நியூசிலாந்தின் வெளியுறவுத் துறையமைச்சர் தென்பசுபிக்கிலுள்ள ஏனைய தீவுகளிலும் இந்நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாகக் கூறினார்.Tokelau தீவில் 1400 இற்கும் குறைந்த மக்களே வாழ்கின்றனர். இவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கான நீரே அங்கு காணப்படுகின்றது.
இதற்குக் காரணம் லா நினா எனும் மழையற்ற காலநிலையே எனக் கூறப்படுகின்றது. இங்குள்ள மக்களின் இயற்கையான நன்நீர் இல்லாமற் போய்விட்டதென்றும் இவர்கள் தற்போது போத்தலில் அடைக்கப்பட்ட நீரிலேயே தங்கியுள்ளனரென்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சாமோ தீவுகளின் சில பகுதிகளிலும் நீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்து இவற்றிற்கான உதவி நடவடிக்கையை மேற்கொள்ள விருகின்றதெனவும் இவர் குறிப்பிட்டார்.இத்தட்டுப்பாட்டினால் பயிர்களுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுத்தட்டுப்பாடும் விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.நியூசிலாந்தின் வான்படையின் விமானங்களில் நீர்த்தாங்கிகள் இத்தீவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தீவுகள் மூன்றும் அவுஸ்திரேலியாவிற்கும் ஹவாய்த் தீவுகளுக்குமிடையில் காணப்படுபவையாகும்.
பாலஸ்தீனத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.
ஐ.நா சபையில் உறுப்பு நாடாக இடம்பெற வேண்டும் என பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஐ.நா.வின் யுனெஸ்கோ செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக 40 நாடுகள் ஓட்டளித்தன.4 நாடுகள் எதிராக ஓட்டளித்தன. 14 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. இந்த முடிவுகள் இம்மாத இறுதியில் ஐ.நா பொது சபையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், யுனெஸ்கோவின் முடிவு தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், பாலஸ்தீன கோரிக்கை ஐ.நா பொது சபையில் ஓட்டெடுப்புக்கு வரும் போது எதிர்த்து ஓட்டளிக்கும்படி பிற நாடுகளை கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சர்கோசியை தோற்கடிக்க திட்டம்.
அடுத்த ஆண்டு இடம்பெற போகும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோசியை அவரது ரகசிய நண்பர்கள் தோற்கடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளன.கடந்த புதன்கிழமை பொலிசாரினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது என்றும், செய்தியை வெளியிட்ட எல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆயினும் அதன் செய்தி ஆசிரியர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் பிரான்சின் உள்துறை அமைச்சர் கிளாடு அறிவித்தார்.
இந்த செய்தியின் படி அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள ஊடகவியலாளர் வால்ரி தற்போதைய ஜனாதிபதியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளார் எனவும், அதன் காரணமாக பிரான்ஸ் நகர பொலிசார் இவர் தொடர்பான தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தி அவர் பற்றிய முழுமையான தகவல்களை திரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் புயல் மழை: 237 பேர் பலி.
தாய்லாந்தில் புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பாங்காக்கில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை.
வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 237 பேர் பலியானார்கள்.தொடர்ந்து தாழ்வு நிலை நீடிப்பதால் மழை மேலும் சில நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF