Friday, March 4, 2011

இன்றைய செய்திகள்.


இணையப் பாவனைக்கு சிறுவர்களுக்கு தடை!

சிறுவர்கள் கபேகளில் இணையத் தளத்தை பயன்படுத்த குருணாகல் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கபேகளில் இணையத் தளத்தை பயன்படுத்த முடியாது என்று குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன அறிவித்து உள்ளார். 

இத்தடை தொடர்பான அறிவுறுத்தல்கள் கபே உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. பாடசாலைச் சிறுவர்கள் எவரேனும் கல்வித் தேவைக்காக கபேகளில் இணையத்தளத்தை பார்வையிட வரக் கூடும், அதிபரின் கடிதத்துடன் வருகின்றபோது மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு தற்போது தரம் 13 இல் கல்வி கற்பவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த வருடங்களில் உயர்தரப் பரீட்சைக்கு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றியவர்கள் பாடசாலை பரீட்சார்த்தியாக புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்ற முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை கண்டிப்பான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நேரம் பிற்பகல் 3 மணிவரை நீடிக்கப்படுமாம்!

பாடசாலை இயங்கும் நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிக்க கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார். இதற்கு முன்னர் பாடசாலை நேரம் 2 மணி வரை இடம்பெற்றதுடன் அது பின்னர் 1.30 மணியாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கல்வியமைச்சின் “சிறந்த பாடசாலைகள் ஆயிரம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகளில் கல்வி நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கால வேளைக்குக்குள் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படும். அரசாங்க ஊழியர்கள் பிற்பகல் 4.30 வரையும் பொலிஸார் 24 மணித்தியாலங்களும் கடமை புரிகின்றனர். 

ஆனால் அரசாங்க ஊழியர்களான ஆசிரியர்கள் மாத்திரம் 1.30 மணிக்கு வீடு செல்கின்றனர் என கல்வியமைச்சர் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள பாடசாலைகள் பிற்பகல் 4 மணி வரை இடம்பெறுகின்றமையால்தான் அங்குள்ளவர் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் 2012 இல் பூர்த்தி!

Airbus A380
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் 209 மில்லியன் அமெரிக்க டொலர் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அம்பாந்தோட்டை மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். 

இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் 75 மீற்றர் அகலமும், 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளமும் கொண்டதாக அமையவுள்ளது. 

மத்தல விமானப் பணிகளுக்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமான ரகமான ஏ-380 விமானத்தை புதிய விமான நிலையத்தில் தரையிறக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF