Monday, March 28, 2011

இன்றைய செய்திகள்.


ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை.

ஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானில் கடந்த 11-ந் தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணுஉலைகள் வெடித்து சிதறின. 

எனவே, அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது. பால், குடிநிர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இடிபாடுகள் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷீ நகரில் பூமி குலுங்கியது. 

இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது என அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷீ கடலில் வழக்கத்தைவிட சுமார் 1.6 அடி அதாவது 1/2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பியது. இதை தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது.இதற்கிடையே 6.5 ரிக்டர் ஸ்கேல் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது. புமிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் பூகம்பத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.
புகுஷிமாவை அண்டிய கடல்பகுதியில் கதிர்வீச்சு உயர்மட்டத்தில் காணப்படுகின்றது.
புகுஷிமாவை அண்டிய கடல் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கடலில் கதிரியக்க தாக்கம் அதிகளவில் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 11 ம் திகதி ஏற்பட்ட சுனாமியால் சென்டாய் உள்ளிட்ட நகரங்கள் அழிந்துவிட்டன. புகுஷிமா, டாய்ச்சி பகுதியில் உள்ள ஆறு மின் நிலையங்களில் நான்கு மின் நிலையங்களின் அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்தன. இந்த அணுமின் நிலையங்களிலிருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது.2 மற்றும் 3 ம் அணு மின் நிலையங்களில் கதிர்வீச்சு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதால் அருகே உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 ம் அணு மின் நிலையத்தில் 10 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு பரவியதால் மூன்று ஊழியர்கள் கடந்த வாரம் காயமடைந்தனர்.
இந்நிலையில் 2 ம் மின் நிலைய உலையில் வெளியாகும் தண்ணீரில் சாதாரண அளவை விட கதிர்வீச்சின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளதால் அணு உலையை குளுமைபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவசர கால ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில் 1850 மடங்கு அளவுக்கு கதிரியக்க தாக்கம் அதிகரித்துள்ளதாக டெப்கொ(ஜப்பானிய கதிரியக்க தாக்க ஆராய்ச்சி மையம்) அறிவித்துள்ளது. அதன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்துக்குள்ளாகியிருப்பதுடன்,கடல் மாசடைதலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதற்கான காரணம் 5 மற்றும் 6 ம் அணு உலைகளில் இருந்து வெளியிடப்படும் அதிகரித்த அணுக்கதிர் வீச்சு என்று கூறப்படுகின்றது.தற்போதைக்கு ஆறாம் இலக்க அணு உலையின் குளிராக்கும் கருவி மீள் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் அதன் கதிரியக்க தாக்கத்தை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமலுள்ளது.
கடலில் மூழ்கிய பிரான்ஸ் விமானத்தை தேடும் பணி மீண்டும் துவக்கம்.
கடந்த 2009 ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போது விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் யு.எஸ் குழு மீண்டும் ஈடுபட்டுள்ளது.
ஏர் பிரான்ஸ் விமானம் 2009 ம் ஆண்டு ஜீன் மாதம் 228 பேருடன் ரியோடி ஜெனிராவில் இருந்து பாரிஸ் நகருக்கு வந்து கொண்டிருந்த போது அட்லாண்டாடிக் பகுதியில் விபத்துக்குள்ளானது.வடகிழக்கு பிரேசிலுக்கு நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் கடல் பகுதியில் விமானம் மூழ்கியது. விபத்தில் நொறுங்கிய விமானத்தையும், அதில் இருந்த பதிவுக் கருவியையும் கண்டுபிடிக்க இதற்கு முன்னர் மூன்று முறை தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்த தேடுதலில் உரிய பலன் கிடைக்கவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பிரெஞ்சு நீதிபதி ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் மீதும் விமானத்தை தயாரித்தவர் மீதும் மனிதக் கொலை குற்றச்சாற்றை பதிவு செய்தார்.இதனைத் தொடர்ந்து விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய மீண்டும் தேடுதல் துவங்கியுள்ளது. செவ்வாய்கிழமை அன்று பால்மவுத்தின்வுட்ஸ் ஹோல் கடற் அறிவியல் நிறுவன நிபுணர்கள் பிரெஞ்சு நிர்வாகத்தினருடன் சேர்ந்து 3900 சதுர மைல்பகுதியில் தேடத் துவங்கினர்.
ஜீலை மாதம் வரை தேடுதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் நிபுணர்கள் தண்ணீருக்கு அடியில் 3 தேடுதல் கருவிகளுடன் பயணிக்கின்றனர். இந்தக் கருவியின் மூலம் தண்ணீருக்கு அடியே 24 மணி நேரம் இருக்க முடியும்.
சிரியாவில் போராட்டம் தீவிரம்: மோதலில் 15 பேர் பலி
சிரியாவில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் பாத் கட்சியனரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 47 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு சிரியா பாதுகாப்புப் படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிரியா துருப்பினர் போராட்டம் தீவிரமாகியுள்ள லடாக்கியா நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு துருப்பினர் நடத்திய தாக்குதலில் கடந்த 2 நாட்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் காயம் அடைந்தனர். தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு 350 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லடாக்கியா துறைமுக நகரமாகும். இங்கு மத நம்பிக்கை மிகத் தீவிரமாகும்.சிரியாவில் ஏற்பட்ட போராட்டத்தால் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் தந்தை ஹபிஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து அசாத் ஜனாதிபதியானார். அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது.
லடாக்கியா நகரில் 4.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். புதன் கிழமை மட்டும் 126 பேர் கொல்லப்பட்டதாக ஆட்சிக் எதிரான போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்த மோதலால் லடாக்கியா நகரில் உள்ள வர்த்தக கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.கட்டிடங்களில் குண்டு தாக்குதல் பள்ளங்கள் இருந்தன. போராட்டக்காரர்களுக்கும், துருப்பினருக்கும் இடையே நடைபெற்ற தீவிரமான மோதலால் மக்கள் பீதியில் உறைந்து வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கடாபியின் சொந்த நகரமான சிர்தேவில் கூட்டுப்படையின் வான்வழி தாக்குதல்.
லிபிய சர்வாதிகாரி மோமர் கடாபியின் சொந்த நகரமான சிர்தேவில் கூட்டுப்படை இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் லிபிய அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மேற்கு நோக்கி முன்னேறத் துவங்கியுள்ளனர். லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக மோமர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை அகற்றுவதற்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் திகதியன்று லிபியாவில் எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் லிபியா வான் எல்லையில் விமானம் பறக்கத் தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை நிறைவேற்ற பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பிரட்டன் ஆகிய மேற்கத்திய நாடுகள் வான் வழியில் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேட்டோ கூட்டுப்படைகள் கடாபியின் சொந்த நகரமான சிர்தேவிலும் வான்வழித் தாக்குதலை இன்று நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து லிபிய செய்தித் தொடரபாளர் மௌசா இப்ராகிம் கூறுகையில்,"நகரின் மீன் பிடி துறைமுகப்பகுதியில் நடைபெற்ற கூட்டுப்படை தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். நேற்று தலைநகர் திரிபோலியிலும் கடுமையான குண்டுவெடிப்புச்சத்தம் கேட்டது" என்றார்.போராட்டக்காரர்களின் மையப்பகுதியான பெங்காசியில் போராட்டக்குழுவினரின் செய்தித்தொடர்பாளர் மர்ஜெய், சிர்தே தற்போது தங்கள் கட்டுப்பட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு அமெரிக்கா, சீனாவே காரணம்: பில் கிளிண்டன்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதிலும், உலகளாவிய வெப்ப அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுமான பசுமை வாயுவை அமெரிக்காவும், சீனாவுமே அதிகளவில் வெளிவிடுகின்றன என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் கலந்துரையாடல் முடிவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய அமைப்பின் தலைமைப் பதவியில் இருக்கும் பிரேசில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கொண்டிருக்கும் வர்த்தகத் தொடர்பை அதற்குத் தடையாகக் கருதக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.அத்துடன் ஒரு காலத்தில் பசுமை வாயுவை வெளியிடுவதில் முன்னணியில் இருந்த பிரேசில் இன்று அதனை 75 சதவீதம் வரை குறைத்துக் கொண்டிருப்பதை முன் உதாரணமாகக் கொண்டு செயல்பட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த நவம்பரில் கெங்குன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட உலக வெப்ப அதிகரிப்பிற்கு எதிரான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும், சீனாவும் பெருந்தடைக்கல்லாக இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானின் நலனுக்காக நான் நாடு திரும்புவேன்: பர்வேஸ் முஷாரப்
பாகிஸ்தான் பயங்கரமான நாடு தான். அணு ஆயுதங்களை வைத்திருப்பது குறித்துப் பாகிஸ்தான் பெருமைப்படுகிறது.இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பதால் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாகப் பதவியை விட்டு விலகி இப்போது லண்டனில் தலைமைறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் முஷாரப் டைம் பத்திரிகைக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.பேட்டியின் சுருக்கம் வருமாறு: பாகிஸ்தான் மிகவும் பயங்கரமான நாடுதான் என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் உலகிலேயே மிகவும் பயங்கரமான நாடு ஆப்கானிஸ்தான் தான்.
பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது மதவாதிகள் மூலமான பயங்கரவாதமா, இந்தியாவா என்று கேட்டால் இப்போதைக்கு மதவாதிகள் மூலமான பயங்கரவாதம் தான் என்று சொல்வேன். ஆனால் இந்த இரண்டையும் ஒப்பிட முடியாது. இந்தியாவால் பாகிஸ்தானுக்கு உள்ள நிரந்தர அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடவே முடியாது.
இந்தியாவில் உள்ள ராணுவத்தின் 90 சதவீத பேருக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு என்பது தான் முதல் பாடமாகக் கற்றுத்தரப்படுகிறது. இந்தியாவைப் புறக்கணிக்கவோ மறக்கவோ முடியாது. பாகிஸ்தானுக்கு இந்தியாவால் எப்போதுமே ஆபத்து தான்.மக்களுடைய கிளர்ச்சியால்தான் எகிப்திலும், துனிசியாவிலும் ஆட்சியாளர்கள் பதவி விலக நேர்ந்தது. அவ்விரு நாடுகளுக்கும் முன்னால் இது பாகிஸ்தானில் தான் தொடங்கியது என்றெல்லாம் கூறக்கூடாது. இந்த ஒப்பீட்டை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். பாகிஸ்தானில் நானாகவேதான் பதவியிலிருந்து இறங்கினேன். என்னை எகிப்து, துனிசிய அதிபர்களோடு ஒப்பிடாதீர்கள்.
லிபியாவில் இப்போது கடாபியை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகிறார்கள். இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. லிபிய மக்களின் விருப்பம் எதுவோ அதை ஆட்சியாளர்கள் கேட்டு நடக்க வேண்டும். லிபிய பிரச்னைக்கு அரசியல்ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும்.
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் மீண்டும் நாடு திரும்புவேன். பாகிஸ்தானைக் காப்பாற்றுவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுவேன். அந்த நாட்டை 9 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தேன். பாகிஸ்தானின் பிரச்னைகள் என்னென்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது பாகிஸ்தான் திணறிக்கொண்டிருக்கிறது.
எனக்காக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானின் நலனுக்காகவாவது நான் பாகிஸ்தானுக்குத் திரும்பியாக வேண்டும். நாடு இனி மதத் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதற்காகவே நான் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன்.பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அது குறித்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும் பெருமைப்படுகின்றனர். நாங்கள் ஏன் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம். ஏன் என்றால் இந்தியாவிடம் அணு ஆயதங்கள் இருக்கின்றன என்றார் முஷாரப்.
கடாபியின் ஆட்சிக்கு முடிவுகட்ட 35 நாடுகள் பங்கேற்கும் மாநாடு நாளை துவக்கம்.
லிபியாவில் அதிபர் கடாபியை ஒடுக்க வியூகம் மேற்கொள்வது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு நாளை லண்டனில் துவங்குகிறது.இதில் கூட்டு ராணுவப்படைகள் மூலமே கடாபியை ஒழித்துக் கட்ட முடியும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் ‌கருத்து தெரிவித்துள்ளது. லிபியாவில் அதிபர் கடாபி‌ பதவி விலக்கோரி அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஒருபிரிவாக செயல்பட்டு போராட்டக்காரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்வேசத அளவில் பிரச்னையை கிளப்பி உள்ளது.இந்த விவகாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸிலும் எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அதிபர் ஒபாமா ‌வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைகழகத்தில் இன்று லிபியா விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார் ஒபாமா. இந்த பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தலைமையில் லண்டனில் நாளை 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு நடக்கிறது.இதில் பன்னாட்டு கூட்டு ராணுவப்படைகளை லிபியாவில் குவித்து அதிபர் கடாபியை பணிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF