Tuesday, March 29, 2011

இன்றைய செய்திகள்.


கேகாலையில் வெட்டித்துண்டாக்கப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

கேகாலை உதுவன்கந்த பிரதேசத்தில் பையொன்றில் வெட்டித் துண்டாக்கபட்ட நிலையில் உள்ள உடம்பின் கீழ் பகுதியும் மற்றும் இரு கால்களும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். பையினுள் உடம்பின் மேல்பகுதி காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை நீதிவான் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
63,000 கள்ள கிரடிட் காட்டோடு இலங்கையர் கைது!
அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் சுமார் 56 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை அணுகி, பெரும் பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடனட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை இலக்கங்களை அவர்கள் பெற்றுகொண்டுள்ளனர்.

மறைத்துவைக்கப்படும் சிறிய கமராக்கள் மூலமாக வாடிக்கையாளர் கடன் அட்டையின் இரகசியக் குறியீட்டு எண்களையும் இவர்கள் பெற்று, பின்னர் அதேபோல போலியான கடன் அட்டைகளை இவர்கள் தயாரித்து, அதனைக் கொண்டு காசைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் 25.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்கள் சம்பாதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பும் இடங்களில் வேலைசெய்யும் சில இலங்கையருக்கு அவர்கள் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்துள்ளதாகவும், பிடிபட்ட கும்பலிடம் சுமார் 63,000 கள்ளக் கடனட்டைகள் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளர்.

இப் பிரச்சனை ஒருபக்கம் இருக்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் இதனை அவுஸ்திரேலிய பொலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இக் குற்றச்செயல்களில் இலங்கையர் ஈடுபட்டுள்ளதால், அவுஸ்திரேலிய அரசு தமிழர்களுக்கு புகலிடம்கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை தூதரம் மேலும் தெரிவித்துள்ளதாக மனிதன் இணையம் அறிகிறது. உலகில் எந்தக் குற்றச் செயல்களில் இலங்கைத் தமிழர்கள் அகப்பட்டாலும், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் தெரிவித்துவருகிறது.

கடாபியின் சொந்த ஊரில் மோதல்! கடைசி நிமிடங்கள்.

லிபியத் தலைவர் மும்மர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால், கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லிபியாவில், எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களை எல்லாம், கடாபி கைப்பற்றினார். தற்போது "நேட்டோ' உதவியுடன், அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள். அந்த வரிசையில், தற்போது இருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர், அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாக தெரிவித்தார். 

ஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள், அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர். எனினும் சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதை அடுத்து, பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும், இருதரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் டிரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள், கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.,- 35 ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும், பிரிட்டன் போர் விமானங்கள், மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள், அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐ.நா., தீர்மானத்தின்படி, லிபியா மீதான ராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும், நேற்று முன்தினம் முதல் "நேட்டோ' ஏற்றுக் கொண்டது. 

அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழுவேகத்துடன் தலைநகர் டிரிபோலியை நோக்கி புயலாக வீசத் துவங்கியிருக்கின்றன. சிர்ட் நகரம் கடாபி கையை விட்டு போய்விட்டால், எதிர்ப்புப் படைகள் தடையின்றி டிரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே, கடாபியின் இறுதிக் கட்டப்போராக ஆகி விடும் என்பதால், சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்று கவனித்து வருகிறது.
ஜப்பானிய கதிர்வீச்சு காரணமாக அமெரிக்காவில் பெய்த கதிர்வீச்சு மழை.
விபத்துக்குள்ளான ஜப்பானிய அணு உலைகளின் கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட மேகங்கள் அமெரிக்கா நோக்கி நகர்ந்துள்ள நிலையில் நேற்று அங்கு சில பகுதிகளில் கதிர்வீச்சு மழை பெய்துள்ளது.கதிர்வீச்சு மழை குறித்த செய்தி கிடைத்த உடன் அமெரிக்க வானிலை நிலையம் பிரஸ்தாப பகுதிகளில் உடனடியாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. ஆயினும் மழையுடன் கலந்திருந்தது உண்மை என்ற போதிலும் அதன் காரணமாக மனித ஆரோக்கியம் பாதிக்கப்படாது என்ற விடயம் தெரிய வந்துள்ளது.
ஒஹியா, மசாசூசெட்ஸ் மற்றும் பென்சில்வேனியா பிராந்தியங்களிலேயே நேற்றைய தினம் கதிரியக்க தாக்கம் கொண்ட மழை பெய்திருந்தது.அதன் காரணமாக தற்போது அமெரிக்காவில் பெய்யும் மழைநீர், குடிநீர் மற்றும் கதிரியக்கத் தாக்கமுறக் கூடிய பொருட்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறிவியலில் அமெரிக்காவை மிஞ்சிய சீனா.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா சாதனையை சீனா இன்னும் 2 ஆண்டுகளில் மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.2013 ம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த சாதனை நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டன் தேசிய அறிவியல் அகாடமியின் ராயல் சொசைட்டி மேற்கொண்ட புதிய ஆய்வில் இது தெரியவந்தது.
சீனா காந்தப்புல திசைக்காட்டி கருவி, வெடிமருந்து பேப்பர், அச்சுப் பொருட்களை கண்டுபிடித்து உலக நாடுகளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது. பல்வேறு புதியக் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதையும் ராயல் சொசைட்டி ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.புதிய ஆய்வுகள், குறிப்பிடத் துறையில் அறிவார்ந்த திறன், தொடர்புகள், வடிவமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஜப்பான் சாதனைகளுக்கு சவால் எழுப்பக்கூடிய வகையில் சீனா அபரிதமாக வளர்ந்து வருகிறது.
இந்த அபரித வளர்ச்சியால் சீனா இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்க அறிவியல் கண்டுபிடிப்புகளை மிஞ்சி முதன்மை இடத்தைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.1996 ம் ஆண்டு ஆய்வின் போது அமெரிக்க 292 ஆயிரத்து 515 ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது. அப்போது சீனா 25 ஆயிரத்து 474 ஆய்வு அறிக்கைகளை சமர்பித்தது. சீனாவை விட 10 மடங்கு அதிகமான ஆய்வு அறிக்கைகளை அமெரிக்கா சமர்ப்பித்து இருந்தது.
2008 ம் ஆண்டு அமெரிக்கா சமர்பித்ததை விட  ஏழு மடங்கு அதிகமாக சீனா சமர்பித்தது. முந்தய கணிப்பின்படி 2020 ம் ஆண்டில் அமெரிக்க அறிவியல் கண்டுபிடிப்பை சீனா மிஞ்சும் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய ஆய்வில் சீனா 2013 ம் ஆண்டிலேயே அந்த சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றல்: சீனா முதலிடம்
உலகநாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் 23 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஈரானில் 252 பேரும், வடகொரியாவில் 60 பேரும், ஏமனில் 53 பேரும், அமெரிக்காவில் 46 பேரும் இத்தண்டனை மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால், சீனாவில் தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகளவில் மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் உலக நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது.
2050 ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் கார்களுக்கு தடை.
உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன. இதற்கு முதன்மை காரணம் பசுமை வாயுக்களே.கார்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களில் இருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடினால் வானில் உள்ள ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எனவே கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை தடுக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் 2050 ம் ஆண்டில் கார்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் அடுத்த 40 ஆண்டுகளில் 60 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு வெளியாவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையை கழிக்க 50 சதவீதம் பயணத்தை விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் இருந்து சீன மாணவர்கள் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றனர்.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சீன மாணவர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடி தமது நாட்டுக்கு அனுப்புதவாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தொழில்நுட்பத் துறையின் முன்னணி வடிவமைப்பாளராக விளங்கும் சோ் ஜேம்ஸ் டைசனே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எங்களது பல்கலைக்கழகங்களிலிருந்து தொழில்நுட்ப அறிவுடன் நாடு திரும்பும் சீன மாணவர்கள் பின்னர் எங்களுடன் போட்டி போட முற்படுகின்றனர்.அது மிகவும் பைத்தியக்காரத்தனமான செயல். அது மட்டுமன்றி பிரிட்டனை விட்டுச் சென்ற பின்பும் கூட சீன மாணவர்கள் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடும் செயற்பாட்டைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் டைசன் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அதற்கான ஆதாரங்களாக அவர் சமர்ப்பித்திருக்கும் விடயங்கள் குறித்து கவனமாக ஆராயப்படும் என பிரிட்டனின் பல்கலைக்கழக விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் வில்லெட்ஸ் தெரிவித்துள்ளார்.டைசனின் குற்றச்சாட்டு குறித்து தாம் மிகவும் விழிப்பாக இருப்பதுடன், அது தொடர்பில் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும் பிரிட்டன் பல்கலைக்கழக நிறைவேற்றுக்கழக தலைவர் டான்பிரிட் தெரிவித்துள்ளார்.
மின்னியல், பொறியியல், கணணி மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இருந்தே சீன மாணவர்கள் தொழில்நுட்பத் தகவல்களைத் திருடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸின் உதவியை நாடும் ஜப்பான்.
ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு கசிவுப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் அணுமின் நிலையம் சரி செய்யும் பணிக்கு பிரான்ஸ் உதவி கேட்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இந்த மாதம் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டு ஜப்பானின் வடக்குப் பகுதியை உருகுலைத்தது. இந்த இயற்கைப் பேரிடரில் ஏறக்குறைய 15 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது புகுஷிமாவில் உள்ள ஜப்பானின் முதன்மை அணுமின் நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அணு உலைகளில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டு புகுஷிமாவையும் தலைநகர் டோக்கியோவையும் பாதித்தது.இந்தக் கதிர்வீச்சை சரி செய்யும் பணியில் டோக்யோ எலக்ட்ரிக் பவர் டெப்கோ நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும் இதற்கு உரியத் தீர்வு கிடைக்காததால் பிரான்ஸ் உதவி கேட்கப்பட்டுள்ளது. இதனை பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் எரிக் பெசன் தெரிவித்தார்.
ஜப்பான் அணு மின் நிலையம் சரி செய்யும் பணியில் 3 பெரும் நிறுவனங்களான பிரெஞ்சு அணு சக்தி நிறுவனம் இ.டி.எப், அணு குழுமம் அரேவா மற்றும் அணு சக்திக் கழகம் ஆகியவை உதவி செய்கின்றன என்று பெசன் தெரிவித்தார்.இ.டி.எப் நிறுவனம் பிரான்சில் 58 அணு உலைகளை நிர்வகிக்கிறது. இந்த 3 நிறுவனங்களின் கருவிகள் உள்பட 130 டன் விசேடக் கருவிகளை ஜப்பான் அணுமின் நிலையத்திற்கு அனுப்புவதாக இந்த மாதம் 18 ம் திகதி அறிவிக்கப்பட்டது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF