மனிதர் படைத்த கடல்வழிக் கணவாய்! மலைமேல் கட்டிய அணைநீர்க் கால்வாய்! கடல்களை இணைக்கும்! கண்டத்தைப் பிரிக்கும்! கப்பலைத் தொட்டி நீரில் ஏற்றி இறக்கும், ஒப்பிலா விந்தை, பனாமா கால்வாய்!
இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப்
பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்காவிலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்காவின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூயார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial
Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22%
பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள்
குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார்
வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது. சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, புதுக் கண்டங்களான வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! இறுதியில் 1914 ஆம் ஆண்டில் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாய் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. ஆனால் பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர்
மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக்
கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்.
சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி
லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா
கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார். பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்கள் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்பதைப் பற்றி விளக்கிறது.