Sunday, March 20, 2011

இன்றைய செய்திகள்.


ஜப்பான் வாகனமா? கொள்வனவு செய்யலாம்! அச்சப்படத் தேவையில்லையாம்!!

ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களைத் தொடர்ந்து ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்யும் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஜப்பானின் குறிப்பிட்ட ஒரு பிரதேசம் மாத்திரமே சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களுக்கும் பாதிப்புக்குள்ளாகவில்லையெனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.கடல்கோளின் தாக்கத்திற்குள்ளான வாகனங்கள் காப்புறுதி செய்யும் போது நிராகரிக்கப்படும் அதேவேளை வாகன இறக்குமதியின் போது அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார். 

தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜப்பானிய வாகனங்களை கடற்கோளினால் பாதிக்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடு முடங்கிவிடுமெனச் சுட்டிக்காட்டினார்.ஆகவே, இத்தகைய காரணங்களினால் கடல்கோள் தாக்கத்துக்குள்ளான வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு எந்த வகையில் சந்தர்ப்பம் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் பணிப் பெண் மரணங்கள்! லெபனானில் சம்பவம்.

லெபனானில் பாபடட் எனும் நகரில் வீடொன்றில் பணிப்புரிந்த இலங்கைப் பெண் சடலமான மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


உயர் மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து குறித்த இலங்கைப் பணிப்பெண் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் பெண் தான் பணிபுரிந்த வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் இவ்வாறு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார்? ரணிலா? சஜித்தா? - நாளை தெரியவரும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அவரி;ன் அவரின் போட்டியாளரான சஜித் பிரேமதாஸ ஆகியோர் மத்தியில் யார் தலைவர் என்ற விடயம், நாளை கூடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தாமே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் இதுவரை காலமும், தாமே தலைவராக வேண்டும் எனக் கூறி வந்த சஜித் பிரேமதாஸ, தற்போது இந்த விடயத்தில் இணக்கம் ஏற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.இணக்கம் ஒன்றின் மூலமே, கட்சியின் தலைமை பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை கூடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், இணக்கமான முறையில் தலைவர் ஒருவர் தெரிவுசெய்வதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும் அதில் இணக்கம் ஏற்படாவிட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன.

லிபியாவுக்கு எதிராக எந்த நேரத்திலும் போர்!

லிபிய படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேட்டோ படைகளை பயன்படுத்தவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னும் சிலமணிநேரத்தில் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் இன்று அறிவித்துள்ளன. 

அமெரிக்கா வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன், பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரோன், பிரான்ஸ் அதிபர் நிக்கொலஸ் சாகோசி, உட்பட அரபு நாட்டு தலைவர்கள் சிலரும் இன்று பிரான்ஸில் சந்தித்து நடத்திய ஆலோசனையில் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனானும் சமூகமளித்திருந்தார். ‘நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, எந்த நேரத்திலும் நடவடிக்கை தொடங்கலாம்’ என்று பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் இன்று காலை பரிஸ் நகரில் உள்ள ரொயிட்டஸ் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார். 

இராணுவம் முகாமுக்கு திரும்பவேண்டும்- பான் கீ மூன் கடாபி பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட லிபியா நாட்டு இராணுவம், தங்களுடைய முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் இதற்கான உத்தரவை லிபிய அதிபர் கடாபி தமது படைகளுக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். 

பென்காசி நகரை கைப்பற்றச் செல்லும் தனது படைகளை கடாபி நிறுத்த வேண்டும் என்றும் அஜ்டாபியா, மிஸ்ராட்டா, ஜாவையா ஆகிய நகரங்களில் இருந்து படைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் அந்த நகரங்களுக்கு குடி நீர், மின்சாரம், எரிவாயு ஆகியன தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று பான் கி மூன் கூறியுள்ளார். 

எப்படிப்பட்ட நேரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசில், அந்நாட்டு அதிபர் சர்கோசி தலைமையில் கூடிய தலைவர்கள் உடனடியாக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதென தீர்மானித்திருக்கிறார்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

லிபியா வான் வெளியை விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா.பாதுகாப்புப் பேரவை, இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று கூறியது. அதனையடுத்து லிபிய அதிபர் கடாபி உள்நாட்டுப் போர் நிறுத்தத்திற்கு அறிவித்த போதிலும் முக்கிய நகரங்களில் குண்டுச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக ரொயிட்டஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கனடாவின் யுத்தவிமானங்கள் லிபிய யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கனேடிய சி.எஃப்-18 ரக ஜெற் யுத்த விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கனேடிய யுத்தக்கப்பல் ஒன்று ஏற்கனவே லிபிய கடற்பரப்புக்கு அப்பால் தயார் நிலையில் உள்ளது. கடாபிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், விமான சூனியப் பிரதேசமொன்றை ஏற்படுத்த உதவும் வகையிலும் அந்தக் கப்பல் அனுப்பப்பட்டதாகப் கனேடிய தலைமையமைச்சர் ஸ்ரீபன் ஹாப்பர் நேற்று தெரிவித்தார். 

இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலின் பெறுபேறாக லிபிய அரசாங்கம் யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவந்தமை உற்சாகமளிப்பதாகவுத் ஹாப்பர் கூறினார். ஆனால் கடாபி மீது அதீத நம்பிக்கைகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தாலி ஆதரவு இதேவேளை லிபியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இத்தாலிய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. 

தீவிர நடவடிக்கைகளின்பொருட்டு 7 விமான நிலையங்களை அது ஒதுக்கியுள்ளது. வெளிநாட்டமைச்சர் பிறாங்கோ பிறட்னி நேற்று முன்தினம்வரை இராணுவ நடவடிக்கையினை ஏற்கவில்லை என்ற போதிலும் லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தவல்ல பாதுகாப்புச்சபையின் தீர்மானத்துக்கு றோம் பூரண ஆதரவு வழங்குவதாக நேற்று செனற் ஆணையகக் கூட்டத்தில் தெளிவுபடக் கூறினார். 

முதல் நடவடிக்கையாக றிப்போலியிலுள்ள இத்தாலிய தூதரகம் மூடப்படும் என்றும் பிறாங்கோ பிறட்னி கூறினார். தயார் நிலையில் படைகள்…… லிபியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் அலைன் யுப்பே ரொயிட்டஸ் செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார். 

தமது படைகள் உத்தரவுக்காக காத்திருக்கின்றன என நேட்டோ தலைவர்கள் சந்திப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் தெரிவித்தார்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும்: தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  வெளியிடப்பட்ட தோ்தல் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் தி.மு.க. கட்சியின் தோ்தல் பிரகடனம் இன்று (20)  வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ்நாட்டில் ஏழைகளின் நல்வாழ்விற்கான ஏராளம் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மொத்தம் 64 பக்கங்களில் அதன் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
லிபியாவில் பிரான்ஸ் விமானம் தாக்குதல்.
சர்வாதிகார் ஆட்சி நடைபெறும் லிபியா மீது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் படைகள் தாக்குதலைத் துவங்கின.
லிபியா வான் எல்லை மீது விமானம் பறக்க ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்ததைத் தொடர்ந்து, கூட்டுப் படைகள், லிபியத் தலைவர் கர்னல் கடாபி படைகள் மீது தாக்குதலைத் துவங்கின.அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் படைகளின் ஏவுகனைகள் லிபியாவின் 20 விமான பாதுகாப்பு இலக்குகளை தாக்கின. யு.எஸ்.சும், யு.கே.யும் 110 ஏவுகணைகளுக்கு மேல் வீசியதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர் போராட்டக்காரர்களின் மையப்பகுதியாக உள்ள பெங்காசியில், லிபியா வீரர்கள் தாக்கினர்.
அவர்களை ஒடுக்குவதற்க்கு பிரெஞ்சு விமானம் தாக்குதலைத் தொடர்ந்தது. கூட்டுப்படைகளுக்கு எதிராக கடாபி சவால் விடுத்தால் லிபியாவை காப்பாற்ற ஆயுதக்கிடங்குகளை பொதுமக்களுக்காக திறந்து விடப்போவதாகவும் அவர் முழக்கமிட்டார்.லிபிய வான்பரப்பில் பறந்து இராணுவ வாகனமொன்றின்மீது பிரெஞ்சு போர் விமானமொன்று இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கான தடைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கிய பிறகு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாகும்.
இதனை பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தியரி புர்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி.எம்.ரி.நேரப்படி 16.45 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10 மணி) இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் 20 பிரன்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கூறினார்.இராணுவ வாகனமொன்றே இலக்கு வைக்கப்பட்டதாக புர்கார்ட் கூறினார். எனினும் எந்த வகையான வாகனம் என அவர் கூறவில்லை. விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் லிபிய வான் பரப்பில் சுமார் 20 யுத்த விமானங்கள் பறந்துவருவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பென்காசி நகரில் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சியாளர்கள் மீது கேணல் கடாபி தாக்குதல்கள் நடத்துவதை தடுக்கவும் பிரான்ஸ் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிபர் நிக்கலா சர்கோசி தெரிவித்திருந்தார்.

லிபியா மீது போர் தொடுத்தது: அமெரிக்க விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு; பொதுமக்கள் 48 பேர் பலி.
ஆப்பிரிக்க நாடான துனிசியா, எகிப்தில் மக்கள் புரட்சி மூலம் அந்த நாட்டு அதிபர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதே புரட்சி பக்கத்து நாடான லிபியாவிலும் ஏற்பட்டது. 41 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் புரட்சிக்கு அடிபணியாத கடாபி அவர்கள் மீது அடக்கு முறைகளை கையாண்டார்.

போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புரட்சி படையினர் 4 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அந்த நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசி 3 நகரங்களை ராணுவம் மீட்டது. இன்னொரு முக்கிய நகரமான பென்காசி நகரத்தை பிடிக்கவும் விமான தாக்குதல் நடந்து வந்தது.

ராணுவ தாக்குதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை அதிபர் கடாபியை கேட்டுக் கொண்டது. அதே போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கடாபிக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கடாபி இதை ஏற்கவில்லை.

தொடர்ந்து ராணுவ தாக்குதலை நடத்தி வந்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தியது. அப்போது லிபியா பொதுமக்களை காப்பாற்ற ராணுவ நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, லிபியா மீது தாக்குதல் நடத்த தயாரானது.

இது தொடர்பாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, போன்ற நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தியது. நிலைமை மோசமானதை தொடர்ந்து கடாபி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார். ஆனாலும் பென்காசி நகரை மீட்க தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடந்து வந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, லிபியா மீது திடீர் போர் தொடுத்தது. லிபியா அருகே அமெரிக்கா விமானந்தாங்கி போர் கப்பல்களை தயாராக நிறுத்தி வைத்திருந்தது. அதில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கி லாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின.

தலைநகரம் திரிபோலி, மற்றும் பென்காசி, சிர்ட், பிசரதா, சுவாரா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இவை தவிர லிபியா படைகள் முகாமிட்டுள்ள பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடந்தன. மொத்தம் 20 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.லிபியாவை சுற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா நாடுகளில் 25 போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து 110 ஏவுகணைகள் லிபியா மீது ஏவப்பட்டன.

லிபியா மீது முதல் முதலில் பிரான்சு விமானம் தான் குண்டு வீசியது. அதை தொடர்ந்து மற்ற நாட்டு விமானங்கள் குண்டு வீசின. குண்டு வீச்சில் லிபியாவின் ஏராளமான ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூட்டுப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை லிபியா மறுத்து உள்ளது.

அமெரிக்க கூட்டு படைகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 48 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என்று லிபியா அறிவித்து உள்ளது. அமெரிக்கா போர் தொடுத்ததும் அதிபர் கடாபி வானொலியில் செய்தி ஒன்று வெளியிட்டார். அவர் கூறும் போது மேற்கத்திய நாடுகள் நமது நாட்டில் தங்கள் காலனியாக அடிமைப்படுத்த போர் தொடங்கி உள்ளன.

இதை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றார். அமெரிக்கா கூட்டு படைகள் தாக்குதல் தொடர்வதை வரவேற்கும் வகையில் புரட்சி படையினர் தெருக்களில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் தாக்கியதற்கு இந்தியா, சீனா, மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஸ்பாம் இ-மெயில் வலை அமைப்பை மைக்ரோசாப்ட் வீழ்த்தியது.
தேவையற்ற தகவல்களை திணிக்கும் ஸ்பாம் இ-மெயில் பாட்னெட் வலையமைப்பை மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் வீழ்த்தியது.அமெரிக்க அரசு நிர்வாகத்தின் கூட்டு நடவடிக்கை மூலம் ஸ்பாம் பிரச்சனைக்கு உலகின் பெரும் மென்பொருள் நிறுவனம் முடிவு கண்டது.
ருஸ்டாக் பாட்னெட் அல்லது கம்ப்;யூட்டர் நிகழ்வு பாதிப்பு வலை அமைப்பு ஸ்பாம் இ-மெயில் அனுப்பி கம்பம்யூட்டர் பயன்பாட்டாளிகளின் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.வியாழக்கிழமையன்று இந்த வலையமைப்பை மைக்ரோசாப்ட முடக்கியது. இதனைத் தொடர்ந்து ருஸ்டாக் வலையமைப்பில் இருந்து ஸ்பாம் இ-மெயில்கள் வருவது குறைந்தது.
இந்த ஸ்பாம் மெயில்கள் வருவது 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனை முற்றிலும் தடுப்பதற்கு இன்னும் நீண்ட கால நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.பாட்னெட் ஆபரேட்டர்கள் மீது மைக்ரோசாப்;ட் நிறுவனம் சியாட்டில் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் நீதிமன்றம் அளித்த முடிவைத் தொடர்ந்து யு.எஸ். மார்ஷல்ஸ் சேவையுடன் மைக்ரோசாப்ட் இணைந்து டென்வர், டல்லாஸ், சிகாகோ, சியாட்டிஸ், கொலம்பஸ் உள்ளிட்ட 7 நகரங்களும் பாட்னெட் வலையமைப்பில் நடவடிக்கை எடுத்தது. பாட்னெட்டை கட்டுப்படுத்தும் ஐ.பி. முகவரிகளை மைக்ரோசாப்ட் வெட்டியதுடன், தகவல்களையும் நிறுத்தியது.

அணு உலைக் கதிர் வீச்சைக் கட்டுப்படும் பகீரதப் பிரயத்தனத்தில் ஜப்பான்! 

அணு உலைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் பொறியியலாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அணு உலைக்கு வெளியே கேபிளைப் பொருத்துவதற்கான முயற்சியில் நேற்று சனிக்கிழமை அந்நாட்டு பொறியியலாளர்கள் ஈடுபட்டிருந்த போதும் நீர்ப்பம்பிகளை இயக்குவிப்பதில் வெற்றி காணவில்லை. 

கதிர் வீச்சு பரவாமல் தடுப்பதற்காக கடுமையாக சூடாகியிருக்கும் எரிபொருள் குழாய்களைக் குளிரவைக்க அவர்கள் தீவிரமான முயற்சியை மேற்கொண்டிருந்தனர். பியூகுசிமாவிலுள்ள ஆறாவது அணு உலையில் எரிபொருள் குழாய்களை குளிர்மைப்படுத்தத் தேவையான நீர்ப்பம்பிகளை மீள  இயக்குவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இரண்டாவது அணு உலையிலிருந்து சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியுமென அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 

அதன் பின்னர் அந்த நீர்ப்பம்பியை பரிசீலிக்க முடியுமெனவும் முறைமைகளை சீர்படுத்த ஆரம்பிக்க முடியுமெனவும் அவர்கள் கருதுகின்றனர். சுமார் 300 பொறியியலாளர்கள் ஆறாவது அணு உலையில் பணியாற்றிக்கொண்டிருப்பதாக அணு பாதுகாப்பு முகவரமைப்பு தெரிவித்தது. சுமார் 1.5 கிலோ மீற்றர் நீளமான கேபிள் புதைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இரண்டாவது அணு உலையையும் அதைத் தொடர்ந்து முதலாவது, மூன்றாவது, நாலாவது அணு உலையையும் இந்த வார இறுதியில் குளிர்மைப்படுத்தி இயக்குவிக்க முடியுமெனவும் டெப்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் 40 வருட கால பழைமை வாய்ந்த இந்த ஆலையை மணல் கொங்கிறீட்டினால் மூடியே கதிர்வீச்சைத் தடுக்க முடியுமென அவர்கள் கருதுகின்றனர். வெள்ளி இரவு முழுவதும் தீயணைக்கும் வாகனங்கள் நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன. ஆயினும் இது மிகவும் கடினமான முயற்சியாகவே காணப்படுகிறது. மூன்றாவது அணு உலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.


இந் நிலையில் சுமார் 4 இலட்சம் மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் உணவு, நீர், மருந்துப் பொருட்கள் சூடாக்கும் எரிபொருள் என்பன தட்டுப்பாடாக உள்ள நிலையில் அவர்கள் அவதியுறுகின்றனர். இந்நிலையில் எட்டு நாட்களின் பின் இடிபாடுகளுக்கிடையில் இளைஞன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நல்லதொரு செய்தி கிடைத்திருக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF