Wednesday, March 23, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையின் மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.


பாராளுமன்றத்தின்  ஒப்புதல் இன்றி இலங்கையின் மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளிக்கும் போதே மேற்குறித்த விடயம் வெளியாகியுள்ளது.
கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கும் பிரஸ்தாப தீவுகள் மூன்றையும் மாலைதீவு,  இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக விற்பனை செய்துள்ளார்.ஆயினும் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இதுவரை அறிவுறுத்தப்படவில்லை என்பதுடன் முறையான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
வருடமொன்றுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான குத்தகைக்கு வெள்ளை மற்றும் ஈச்சத்தீவு உள்ளிட்ட மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், முப்பது வருடங்கள் வரை அவற்றைத் திரும்பப் பெற முடியாத வகையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கையின் பொதுச்சொத்துக்களை ராஜபக்ஷ குடும்பம் தங்கள் சொத்துக்களாக கருதி விற்பனை செய்து வருவதற்கு இச்சம்பவம் இன்னோர் உதாரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராபஜக்ஷவுக்கு ஐநூறு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. முன்னர் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்தவராவார். 2007ம் ஆண்டில் தான் வகித்த அரச வங்கிகள் அபிவிருத்தி  அமைச்சா் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அவர் எதிர்க்கட்சி வரிசையில் சென்றமர்ந்தார்.அவர் எதிர்க்கட்சிக்குத் தாவியதைக் கிண்டலடிக்கும் வகையில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின வாராந்த சிங்களப் பத்திரிகை "விஜேதாசவின் பிரதம நீதியரசர் கனவு கலைந்தது" என்ற தலைப்பில் கேலிச் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
அதற்கு எதிராக அவர் மேல்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட போதே விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஐநூறு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் மாணவர் விஸாவிற்கு புதிய விதிமுறை ஏப்ரலில் அமுல் - உயர்ஸ்தானிகரகம்
பிரிட்டனுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் மார்ச் மாதமளவில் நடைமுறைக்கு வருகின்ற புதிய விஸா விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகத்தின் பேச்சாளர் நடீஷா எப்பசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறைகளால் ஏற்கனவே மாணவர் விஸா பெற்றுக்கொண்டவர்களுக்கு ஒருபாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புதிய நடைமுறைகளின்படி மாணவர்களின் கல்வித்திட்ட நிலைக்கமைய அவர்கள் பகுதிநேர வேலைசெய்யும் நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு குறைந்தகால படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தம்மில் சார்ந்துள்ளவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்செல்ல முடியாது.அத்துடன் பல்கலைக்கழக பட்டம் அல்லது அடிப்படை நிலைக்கு கீழான படிப்பைப் படிக்கச் செல்பவர்கள் பிரிட்டனில் பகுதிநேர வேலையை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மிகுந்த நம்பிக்கையான ஆதரவாளர் திட்டத்தையே பிரிட்டன் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள எப்பசிங்க, இவ்வாறான ஆதரவாளர்கள் மட்டுமே கல்வித்திட்டங்களை வழங்கவும் பல்கலைக்கழகத்துக்கு குறைந்தமட்ட பாடங்களின் அடிப்படையில் பணிவாய்ப்புகளை வழங்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆங்கில அறிவையும் திருப்திகரமானதாக இருக்கவேண்டும் என இப்புதிய நடைமுறையில் எதிர்பார்க்கப்படுகிறது.இப்புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
சஜித்துக்கு பிரதி தலைவர் பதவி! தவறும் பட்சத்தில் வாக்கெடுப்பு! - திஸ்ஸ அத்தநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு பிரதி தலைவர் பதவியை வழங்குவதென்று செயற்குழு தீர்மானித்தாகவும்,  தவறும் பட்சத்தில் இன்று செயற்குழு அமர்வின் போது தலைமைத்துவம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் இடம்பெற்றது.இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு முன்னெடுத்த தீர்மானங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள்; கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பொது செயலாளர் இரண்டு பிரதித் தலைவர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை கட்சியின் செயற்குழு மேற்கொண்டதாகவும், அதில் ஒரு பிரதித் தலைவர் பதவியை நாடாளுமன்;ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு வழங்குவதென்றும் தீர்மானித்தாக தெரிவித்துள்ளார்.பிரதித்தலைவர் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்;ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதித்தலைவர் பதவியை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தவறும் பட்சத்தில் இன்றைய தினம் கூடவுள்ள கட்சி செயற்குழு அமர்வின் போது தலைமைத்துவம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடாபிக்கு எதிரான தாக்குதல்: ஒபாமாவுக்கு எதிர்ப்பு.
அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது.இந்நிலையில் கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் லிபியா மீதான போர் விமானங்கள் பறக்க தடை தீர்மானத்தை அமல்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள் லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன.
தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா" என்ற கடாபியின் ராணுவ வளாகத்தின் மீது நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரிபோலியின் புசட்டா கடற்படை தளம் நேற்று நடந்த ஏவுகணை தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
டிரிபோலியில் கூட்டுப் படை விமானங்கள் மீது கடாபி ராணுவம் பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியது. ஜூவாரா, சிர்ட், பெசா, ஜின்டான் மற்றும் அஜ்தாபியா ஆகிய நகரங்கள் மீதும் அமெரிக்கக் கூட்டுப் படை போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின.
அமெரிக்காவின் எப் 15 ரக போர் விமானம் ஒன்று நேற்று லிபியாவில் விபத்துக்குள்ளானது. எந்தப் பகுதியில் விமானம் விழுந்தது என்பது தெரியவில்லை. இவ்விபத்து விமான கோளாறால் ஏற்பட்டது என்று கூறிய அதிகாரிகள் விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மிஸ்ரட்டா நகருக்குள் நேற்று புகுந்த கடாபி ராணுவம் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது. இதில் ஒரு காருக்குள் பதுங்கியிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 49 அப்பாவிகள் பலியாகினர். கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் அங்கு கடும் மோதல் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் ஆப்பிரிக்க படைப் பிரிவு தளபதி ஜெனரல் கார்ட்டர் எப். ஹாம் கூறியதாவது: கடாபியின் ராணுவ மைய கட்டுப்பாட்டை குலைத்து மக்களைக் காப்பது தான் எங்கள் நோக்கம். எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதோ, கடாபியை ஆட்சியை விட்டு நீக்குவதோ நோக்கம் அல்ல. எங்கள் தாக்குதல் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இவ்வாறு ஹாம் தெரிவித்தார்.
லிபியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஆப்ரிக்க யூனியன் என பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பு வெளிப்பட்டு வரும் நிலையில் தற்போது அமெரிக்காவிலேயே ஒபாமாவின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒபாமாவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி க்கள் பலர், பார்லிமென்டை கலந்தாலோசிக்காமல் லிபியா மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா கலந்து கொள்ளும் என்று ஒபாமா எடுத்த முடிவு அவரது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்று விமர்சித்துள்ளனர். 
மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரிட்டன் முடிவு.
இங்கிலாந்து நாட்டில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைய கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையான விசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன.
இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர்.இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மாணவர்களில் ஏழு பேரில் ஒருவர் போலியான கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாட்டில் இருந்து செல்லும் மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவாக இருப்பதால் இங்கிலாந்து மாணவர்களுடன் ஒன்று சேர முடியாமல் அவர்களுடன் பழக முடியாமல் தனித்து விடப்படுகின்றனர்.
இதனால் இன வெறி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக விசா வழங்கும் படிவத்தில் ஆங்கில அறிவு கட்டாயம் என்ற விதியை சேர்க்கும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின.
லிபியா மீது கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. லிபிய மக்கள் மீது கர்னல் கடாபி ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பொது மக்களை காப்பாற்றவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை செயல்படுத்தும் விதமான லிபியா போர் விமானங்களை வீழ்த்தவும், தரைப்படைகளை ஒடுக்கவும் கூட்டுப்படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க படைகள் உள்ளன. இந்தக் கூட்டுப்படையில் கனடிய போர் விமானங்களும் உள்ளன. செவ்வாக்கிழமை காலை இரு கனடிய சி எப் 18 போர் விமானங்கள் இலக்கை தாக்காமல் திரும்பின.
குண்டு வீச்சில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததால் அந்த விமானங்கள் குண்டு வீசாமல் திரும்பின. லிபியா போர் விமானங்களை வீழ்த்த கனடிய போர் விமானங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது என ஒட்டாவாவில் மேஜர் ஜெனரல் பாம் லாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லிபியாவில் குறிப்பிட்ட இலக்கில் கனடிய போர் விமானம் தாக்குதல் நடத்தாமல் திரும்பியது குறித்து அவர் கூறுகையில்,"பொதுமக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என குண்டு வீச்சை தவிர்த்தோம்" என்றார். கனடிய போர் விமானத்திற்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார்.
கதிர்வீச்சு பிரான்ஸ் வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு பிரான்ஸ் வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தக் கதிர்வீச்சு மனித உயிருக்கு அபாயம் இல்லாதது என பிரெஞ்சு அணு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இருப்பினும் இந்தக் கருத்தை அனைவரும் ஏற்கவில்லை.
ஜப்பானில் கடந்த 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் வடக்குப் பகுதியில் உள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டது.இந்தக் கதிர் வீச்சு நேற்று யு.எஸ் மற்றும் கரீபியன் பகுதிகளை கடந்தது. இந்த கதிர்வீச்சு மேகம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்தது. இன்னும் இரு தினங்களில் மேற்கு ஜரோப்பிய பகுதிகளை இவை தாக்கக்கூடும்.
இந்தக் கதிர்வீச்சால் மனித உயிர்களுக்கு எவ்வித கேடும் ஏற்படாது என பிரெஞ்சு தேசிய பாதுகாப்பு ஆணையத் தலைவர் ஆண்ட்ரி கிளாடே தெரிவித்தார். செர்னோபில் அணு மின் நிலையத்தில் கசிந்த கதிர் வீச்சு அளவை விட ஆயிரம் முதல் பத்து ஆயிரம் மடங்கு குறைவானதாக இந்தக் கதிர்வீச்சு உள்ளது என ஆண்ட்ரி கூறினார்.
கதிர்வீச்சு நீண்ட தூரத்தில் உள்ளது. அது பாரிசை நெருங்கும் போது மேலும் வலுவிழந்து விடும் என யானிக்ரவ்சலட் கூறினார்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF