Thursday, March 24, 2011

இன்றைய செய்திகள்.

கதிர்வீச்சுப் பாதிப்புகள் குறித்த அச்சம் வேண்டாம்! அரசு அறிவிப்பு
இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் சகல உணவுப் பொருள்களும் இறக்குமதி நுழைவாயில்களில் கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ஜப்பானிலிருந்து அதிகளவு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் அதன் அண்டை நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சகல பொருள்களும் துறைமுகத்தில் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றின் மாதிரிகள் தேசிய அணு சக்தி அதிகார சபைக்கும் மேலதிக சோதனைகளுக்காக அனுப்பப்படுகின்றன.

அணு சக்தி அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் கிடைத்த பின்பே உணவுப் பொருள்கள் வெளியில் அனுப்பப்படுகின்றன. சுகாதார அமைச்சின் உணவுப் பரிசோதகர்கள் இந்த நடைமுறையை அமுல் செய்து வருகின்றனர். இது வரை கதிர் வீச்சுத் தாக்கம் கொண்ட எந்த உணவுப் பொருள்களும் கண்டு பிடிக்கப்படவில்லை. 

ஜப்பானில் இருந்து திரும்பி வருகின்றவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒருவர் கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு ஆளானால் அவரால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவே தற்போதைய நிலைமைகள் குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ரணில் தொடர்ந்தும் தலைவர் பதவியில்! சஜித் பிரதித் தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக இருந்த போட்டி நிலைமை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் இன்று மாலை தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று மாலை கட்சியின் தலைவராக ரணில் விக்கிரம சிங்கவே கடமையாற்றுவார் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்து, அறிவித்துள்ளது.முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரம சிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இடையே போட்டி நிலை காணப்பட்டது. 


இருந்த போதும் இன்று மாலை சஜித் பிரேமதாஸ கட்சியின் பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதனை அடுத்து இத் தலைவர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளது. இதனால் ரணில் விக்கிரம சிங்கவின் தலைவர் பதவி தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டுள்ளது.


சிறிகொத்தாவில் இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
MICROSOFT and INTEL. நிறுவனத்திலும் ராஜ் ராஜரட்னம் ஆட்களை வைத்திருந்தார்: பரபரப்பு !
ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் பங்கு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் தனது நிறுவனத்தின் இரகசியத் தகவல்களை வழங்கியதாக இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ராஜிவ் கோயல் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கோடீசுவரரான ராஜரத்தினம் உட்தகவல் வணிக மோசடியில் ஈடுபட்டு 45 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியப் பெற்றார் என அவர் மீது குற்றம் சாடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற பங்குச் சந்தை மோசடிகளில் இதுவே மிகப்பெரும் மோசடி எனக் கூறப்படுகிறது.

புகழ் பெற்ற கலக நிறுவனத்தின் உரிமையாளரான ராஜரத்தினம் (53) 2009 அக்டோபர் 16 ஆம் நாள் அமெரிக்கப் புலனாய்வுத்துறையால் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவரின் மீது உள்தகவல் வணிகம் செய்தாக 34பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் பின்னர் 100 மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க பங்குச் சந்தையில் முன்கூட்டியே தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் பெரிய அளவில் மற்ரும் சற்று வீழ்ச்சியுறும் நிறுவனங்களின் பங்கை கொள்வனவு செய்து, பின்னர் அதனை விற்பதில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்ததாகவே இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இலங்கையில் பிறந்தவரான ராஜ் ராஜரத்தினம், நியூயோர்க்கில் கலக குழுமத்தை ஆரம்பித்து, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களைப் பெற்று, அதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பங்குகளை, அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் உலகில் முன்னணியில் இருக்கும் பல நுறுவனங்களில் வேலைசெய்யும் உயர் அதிகாரிகள் இவர் கையில் வீழ்ந்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் ரகசியத் தகவல்களை அடுத்தே இவர் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறந்ததாகக் கூறப்படுகிறது.

மைக்ரோ சாப்ட்டின் இன்டல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய, ராஜரத்தினத்தின் மிக நெருங்கிய நண்பரான ராஜிவ் கோயல் தனது நிறுவனத்தின் இரகசியங்களை வெளியுலகிற்குத் தெரிய வர சில நாட்களுக்கு முன்னர் அவருக்குக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். 2008, மார்ச் 24 ஆம் நாள் உள்தகவல்களை அடிப்படையாக வைத்து 125,800 கிளியர்வயர் பங்குகளை ராஜரத்தினம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு நாட்களின் பின்னர் கிளியர்வயர் மற்றும் ஸ்பிரிண்ட் நெக்ஸ்டெல் நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து கிளியர்வயரின் பங்குகள் பல மடங்கு உயர்ந்தது.

இத்திட்டத்திற்கு இண்டெல் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக மே 7 ஆம் நாள் அறிவித்தது. "இண்டெல் நிறுவனத்துக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேன்" என கோயல் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இவ்வழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் வணிக நிறுவனங்களான ஐ.பி.எம் மற்றும் இண்டெல் ஆகியவற்றின் ஊழியர்கள் உட்பட பலர் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர். இவர்களில் 19 பேர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் சில உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களும் ராஜரட்னத்தோடு தொடர்புகளைப் பேணிவந்தது எனவும், ஆனால் தம்மிடம் அதற்காக ஆதாரங்கள் இல்லை என்றும் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களை புலன் விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை.
இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களைப் புலன்விசாரணைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன் முதற்கட்டமாக இலங்கையின் சமாதான சபை எனப்படும் சாம மண்டலய எனும் அரச சார்பற்ற நிறுவனம் இரகசியப் பொலி்சாரின் தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்படும் சந்தேகத்துக்கிடமான முறையில்  நடவடிக்கைகளைக் கொண்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்காலத்தில் அவ்வாறான பரிசோதனைக்குட்படுத்தப்படும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்காக இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட இடையூறு விதிக்கப்படுவதாக அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடாபியின் 150 தொன் தங்க கட்டிகள் லிபிய மத்திய வங்கியில் வைப்பு : ச.நா.நி. தகவல்
லிபிய மத்திய வங்கியில் கடாபி சுமார் 4 பில்லியன் பவுண்கள் பெறுமதி வாய்ந்த 150 தொன் தங்க கட்டிகளை வைத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இத்தங்கக் கையிருப்பானது கடாபியின் நேரடிக் கட்டுப்பாட்டின் பேரிலேயே உள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய 25 தங்கக் கையிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு சுமார் ஒரு வருடத்திற்குப் பணம் வழங்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.மற்றைய நாடுகளின் மத்திய வங்கிகளைப்போல் அல்லாது கடாபி லிபியாவின் தங்க கையிருப்பினை திரிபோலியிலேயே வைத்திருக்க விரும்பியதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் லிபியாவின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கியுள்ளன. எனினும் தற்போது கடாபி தனது தங்க இருப்புக்களை நைஜர் மற்றும் சாட் நாட்டு எல்லைகளுக்குப் பணமாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டு சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
போரில் நாங்கள் பங்கேற்கவில்லை: பிரான்ஸ்
லிபியாவில் கடாபி ராணுவத் தாக்குதலை நிறுத்துவதற்கு சர்வதேசக் கூட்டுப்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன.இந்த கூட்டுப்படைத் தாக்குதல் துவங்கி 3 நாட்கள் ஆன நிலையில் போரில் நாங்கள் இல்லை என பிரான்ஸ் பிரதமர் பிரான்காய்ஸ் பிலான் கூறினார்.கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது பேசிய பிரதமர் லிபிய மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தவே பிரான்ஸ் அங்கு சென்றுள்ளது. நாங்கள் லிபியாவுடன் போர் நடத்தவில்லை. அங்கு ஆக்கிரமிப்பு நடத்தும் நோக்கமும் இல்லை என்றார்.
லிபிய போராட்டக்காரர்களை முதலில் அங்கீகரித்த நாடு பிரான்ஸ் ஆகும். போராட்டக்காரர்களின் தேசிய மாற்றக் கவுன்சிலை பிரான்ஸ் அங்கீகரித்துள்ளது. லிபியாவின் போர் விமான தாக்குதலை தடுக்க களம் இறங்கியுள்ள கூட்டுப்படையில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தொடர்ந்து கூட்டுப்படை தாக்குதல் நடைபெற்று வருகிறது. பிரான்சின் நடவடிக்கையால் உள்நாட்டில் விளைவுகள் ஏற்படலாம் என பிரதமர் பிலான் ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் பிலான் அருகாமையில் உள்ள துனிஷியா, எகிப்து நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை குறிப்பிட்டார். மத்திய தரைக்கடல் பகுதியில் புதிய சரித்திரம் படைக்கப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
கதிர்வீச்சு அபாயம்: ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்காவில் தடை
இதனால் ஜப்பானில் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது.இவற்றை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களையும் கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கதிர்வீச்சு பாதித்த பொருட்களை அழித்து வருகின்றனர்.
ஜப்பானில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஜப்பானில் இருந்து வரும் உணவு பொருட்களை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஜப்பானில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்காதான் முதல் முறையாக தடை விதித்து உள்ளது.
சிங்கப்பூர், ஜப்பானில் இருந்து பால் உணவு மற்றும் இறைச்சிகளை இறக்குமதி செய்து வந்தது. அணு கதிர்வீச்சு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்து உள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் சுட்டுக்கொலை.
எகிப்து, துனிசியா, லிபியாவை தொடர்ந்து சிரியா நாட்டிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து உள்ளன.
சிரியா நாட்டில் 1967-ம் ஆண்டில் இருந்து அவசர நிலை பிரகடனம் அமலில் உள்ளது. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.அங்கு 30 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த ஹபீஸ் அல்சயீத் மரணம் அடைந்ததை அடுத்து 2000-ம் ஆண்டு அவரது மகன் பஷர் அல் சயீத் அதிபர் ஆனார். அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து போராட்டம் தீவிரமாகி உள்ளது. நேற்று டேரா நகரில் போராட்டகாரர்கள் நகரின் மையப் பகுதியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் பிணத்தை அடக்கம் செய்வதற்காக போராட்டகாரர்கள் தூக்கி சென்றனர்.
அப்போது அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 37 பேர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகி இருக்கிறது.
பல இடங்களிலும் மக்கள் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. டேரா நகரில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தை ஒடுக்க டேரா நகரத்தில் இருந்து தலைநகரம் டமாஸ்க்ஸ் செல்லும் சாலையில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்: உலக வங்கி தகவல்
சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் நொறுங்கிப் போன ஜப்பான் மீண்டும் புத்துயிர்பெற 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.ஜப்பானில் சென்டாய், புகுஷிமா ஆகிய மாகாணங்களில் கடந்த 11 ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியது. நான்குக்கும் மேற்பட்ட அணு உலைகள் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த உலக வங்கி ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் 0.5 அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டங்கள், சாலைகள் மற்றும் அணு உலைகள் சேதமடைந்துள்ளதால் இவற்றின் மதிப்பு 235 பில்லியன் டொலர்கள் ஆகும்.
இவற்றினை சீரமைத்து உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள 5 ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே 33 மில்லியன் டொலர் அளவுக்கு தனியார் அமைப்பு வாயிலாகவும், ஜப்பானின் பட்ஜெட்டில் 12 மில்லியன் டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பால் மின்சாதன மற்றம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தான் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.இவற்‌றை மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக உலகப்‌ போரின் போது ஏற்பட்ட பாதிப்பை இந்த சுனாமி தாக்கியுள்ளதாக பிரதமர் நெட்டோ கான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
யப்பானிய அணு உலைகளை வழமைக்கு கொண்டுவர தீவிர முயற்சி.
ஜப்பானின் அணு நெருக்கடியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அணு உலைகளின் தொழிநுட்ப பிரிவினர் நேற்று தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.இந்தப் பிரதேசங்களில் கதிர் வீச்சு மட்டம் குறைந்து வருகின்ற நிலையில் அணு உலைகளுக்கான மின்சாரத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் இங்கு சுமார் ஆயிரம் பேர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நேற்றும் இங்கு 6 றிச்டர் அளவில் பூமி அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஆனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்று முதல் தேசிய மின்சார இணைப்போடு இந்த அணு உலைகளை இணைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 தினங்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 23 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று நம்பப்படுகின்றது. 14717 கட்டிடங்கள் முற்றாக நாசமாகியுள்ளன. இன்னமும் 268510 பேர் நிவாரண நிலையங்களில் தங்கியுள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்றும் ஆறு ரிச்டர் அளவு கொண்ட மூன்று நில அதிர்வுகள் இடம்பெற்றுள்ளன.
கடாபி பேச்சின் எதிரொலி: லிபியாவின் ஆறு நகரங்களில் குண்டுவீச்சு.
லிபியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களை அதிபர் கடாபியின் ராணுவம் கொன்று குவித்ததை அடுத்து லிபியா மீது கூட்டுப் படைகள் போர் தொடுத்தன.தலைநகரம் திரிபோலி மற்றும் பல்வேறு இடங்களில் கூட்டுப் படைகள் விமானம் மூலம் குண்டு வீசின. ஏவுகணைகளும் வீசப்பட்டன. திரிபோலில் உள்ள கடாபி மாளிகை மீது குண்டு வீசப்பட்டது.
இதில் மாளிகையின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கடாபி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவை போரில் தோற்கடிப்போம் என்று சவால் விடுத்தார்.இதையடுத்து அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. நேற்று இரவு போர் விமானங்கள் பறந்து வந்து பல தடவை குண்டு வீசின. ஏவுகணைகளும் வீசப்பட்டன.
தலைநகரம் திரிபோலி, மிசர்தா, சின்தன், அனுபியா, ஜாமர், பென்காசி ஆகிய 6 நகரங்களை குறி வைத்து குண்டுகளை வீசினார்கள். இந்த 6 நகரங்களில் லிபியா படை முகாம்கள் இருந்தன. பெரும்பாலும் அவற்றை குறி வைத்தே தாக்குதல் நடந்தது.
இதில் ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 தடவை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல் நடந்ததும் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது கடாபி படை கண்மூடித் தனமாக தாக்கியது.இதனால் அந்த படைகளை குறிவைத்து குண்டுகளை வீசினார்கள். மிசர்தா நகரில் கடாபி படை தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. லிபியா வான வீதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனடிய விமானங்கள் லிபியாவில் தாக்குதலை துவக்கின.
லிபியாவின் மூன்றாவது பெரிய நகரத்தில் இருந்து சர்வாதிகாரி கர்னல் கடாபியின் ராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள கனடிய போர் விமானங்கள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டன.
லிபியாவின் இரு பெரும் மையங்களில் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. கனடிய போர் விமானங்களுக்கு பக்கத்தில் இரு எரிபொருள் விமானங்கள் உடன் வந்தன. லிபிய தலைநகர் திரிபோலிக்கு கிழக்கே உள்ள மிஸ்ரட்டா நகரில் முதல் தாக்கதல் நடந்தது.மத்திய தரைக்கடல் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் கடாபி படையினருக்கும் இடையே கடும் தாக்குதல் நடந்தது. இந்த நகரில் கடந்த வாரம் போராட்டக்காரர்கள் தாக்குதலைத் தொடர்ந்த போது 5 லட்சம் அப்பாவி மக்கள் மீது சர்வாதிகாரி துருப்புகள் சுட்டன.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக கடாபி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை அகற்ற கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியன்று போராட்டம் துவங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதாக லிபிய ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவித்தது.
அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த தடையைத் தொடர்ந்து கூட்டுப்படைகள் லிபியா ராணுவம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.இதில் பிரிட்டன்,பிரான்ஸ், அமெரிக்கா,கனடா படைகள் உள்ளன. கடாபி நாட்டிற்குள் ஆயுங்களை கடத்திக் கொண்டவர முயற்சிப்பதாக உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றது.
மின் தாக்கத்தால் சிதைந்த முகம் சீரான விந்தை!
மின்சாரம் தாக்கியதால் முகத்தின் உறுப்புக்கள் அனைத்தினையும் பறிகொடுத்த அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவருக்கான முழு முகமாற்று சத்திரசிகிச்சை கடந்தவாரம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

பிரிகம் பெண்கள் வைத்தியசாலையில் நடைபெற்ற இது, உலகின் 2 ஆவது முழு முகமாற்று சத்திரசிகிச்சையாகும். டலஸ் வெய்ன்ஸ் என்ற 25 வயதான கட்டிடத் தொழிலாளிக்கே இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்விபத்தில் இவரது முகம் முற்றிலுமாக உருத்தெரியாமல் சிதைந்து போனது. எனினும் மனந்தளராத வெய்ன் கடந்த வாரம் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்துள்ளார்.

இவரது முகத்தின் தோல், மூக்கு, உதடுகள், மற்றும் நரம்புகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 15 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சத்திரசிகிச்சையில் 30 வைத்தியர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் முதலாவது பகுதியளவிலான முகமாற்று சத்திர சிகிச்சை 2005 ஆண்டு பிரான்சில் மேற்கொள்ளப்பட்டதுடன் முதலாவது முழு அளவிலான முகமாற்று சத்திர சிகிச்சை ஸ்பானிய வைத்தியர்களால் விவசாயி ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது.
விபத்துக்கு முன்னரான வெய்னின் முகத்தோற்றம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF