Friday, March 25, 2011

இன்றைய செய்திகள்.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் � சிறீலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் பலி? 

இதில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு:

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா

“ரோமியோ” கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா

“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்

ஆகியோரோ கொல்லப்பட்ட உயர்அதிகாரிகள்.அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள சங்கிலியன் படையணி இத்தகைய தாக்குதல் வருங்காலத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளதாகவும் எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக விபரங்கள் விரைவில்....

ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
Sri Lankan President Mahinda Rajapaksa greets victims of recent floods in Anuradhapura district, 206km (128 miles) north of Colombo February 9, 2011. Heavy rain has triggered flooding in Sri Lanka that killed at least fourteen people and is threatening up to 90 percent of the island...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனியாக வீதியில் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், குறித்த வீதியில் சுமார் 3000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி அமைச்சர்கள் வாகனத் தொடரணியில் சென்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்திய போதிலும், அவரது உறவினர்களும் நண்பர்களுமே அதிகளவில் இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சகலரும் ஒன்றிணைந்து ஒழுக்கத்துடன் செயற்பட்டால் விரைவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்கள் ஆட்சி ஒன்றை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அரசாங்க ஆதரவு ஊடகங்கள் சில ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுக்கிரகம் காரணமாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் விரைவில் வாபஸ் பெறப்படவுள்ளன.பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் வருமானத்தை மீறிச் சொத்துச் சோ்த்த வழக்கில் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது வங்கிப் பெட்டகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நானூறு கோடி பெறுமதியான பிணைமுறிகள் குறித்தும், அவ்வளவு பெருந்தொகைப் பணத்தை உழைத்த வழிமுறைகள் குறித்தும் அந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
பிரஸ்தாப வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட போது அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாட்சிகளை விசாரிக்காமல் வழக்கைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதனை சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞரும் எதிர்க்காத காரணத்தால் நீதிமன்றம் வழக்கை இடைநிறுத்தியுள்ளது. பெரும்பாலும் அடுத்த வழக்குத் தவணையின் போது சட்டமா அதிபரின் சிபாரிசின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்படலாம் என்று அறிய முடிகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் அண்மைக்காலமாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் நிலையில் இந்த வழக்கும் அந்த வரிசையில் மிக விரைவில் சோ்ந்து கொள்ளும்.ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ரத்வத்தையின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான லொகான் ரத்வத்தை ஆகியோர் அரசியலில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்.
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சக்திகளின் கைப்பொம்மையாகவும், கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாகவும் தற்போது செயற்படுகின்றது.  ஐக்கிய நாடுகள் சபை மீது எமக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் உறுப்பினரும் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தருமான கும்புறுகமுவே வஜிர தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
லிபியா மீது சர்வதேச நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதனை கண்டிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது.உலக சமாதானம், அமைதி, நீதி, நேர்மை என்பதை காப்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனமான ஐக்கிய நாடுகள் தற்போது லிபியா மீது தாக்குதல் நடத்தி கொலைகளை செய்வதற்கு மேற்கத்தைய நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக தற்போது ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மீது எமக்கிருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போய்விட்டது.உலக சமாதானத்தை காப்பாற்ற வேண்டிய முக்கியமான நாடுகள் பல ஒன்றிணைந்து லிபியாவில் மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன.தமது சூழ்ச்சியாளர்களை குறித்த நாடுகளுக்கு அனுப்பி அங்கு உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதே சர்வதேச சக்திகளின் நடவடிக்கையாகும்.
ஈராக்கிற்கும் இதனையே செய்தனர் என்பதை நாம் கடந்த காலத்தில் கண்டோம். சதாம் ஹுசைனை எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தனர்.லிபிய அதிபர் கேர்ணல் கடாபி மேற்கு நாடுகளுக்கோ, சர்வதேச சக்திகளுக்கோ அடிபணிந்தவர் அல்லர்.கடாபியை மண்டியிடச் செய்ய வேண்டும் என மேற்கு நாடுகள் பல தடவைகள் முயற்சி செய்தபோதிலும் அதனை செய்ய முடியாமல் தடுமாறியதை நாம் கண்டுள்ளோம்.
லிபியாவின் உள்விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றார்.கடந்த 2009 ல் வன்னியில் இலங்கை படையினரால் பெருமளவான தமிழர்கள் படுகொலை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இந்த சர்வமத கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தாய்லாந்தில் நிலநடுக்கம். 6.8 ரிச்டர் பதிவாகியுள்ளது.
Thailand Map
தாய்லாந்தில் சில மணி நேரங்களின் முன் (தாய்லாந்து நேரம்10.05pm)  6.8  ரிச்டர் புள்ளி வேகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நில நடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம். என அந்நாடு முழுவதும் உணர முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் பீதியில் தமது வீடுகளில் இல்லாது வெளி இடங்களில் தங்கியுள்ளனர் என தெரியவருகிறது.
மியன்மாரின் வடகிழக்கு பகுதியில் 7.2ரிச்டர் அளவில் பதிவாகி இதுவரை 25 பேர் இறந்ததாக சீன இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன் இந்நிலநடுக்கத்தின் தாக்கத்தினை தாய்லாந்திலும் 6.8 ரிச்டர் அளவிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி.
ஐக்கிய தேசிய கட்சியின் உட்பூசல்கள் தணிக்கப்பட்டமை காரணமாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிருப்தியுடன் இருப்பதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர், அரசாங்க ஊடகங்களை, ஐக்கிய தேசிய கடசியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தி ஒன்றை பிரசுரிக்க தயாராக இருக்குமாறு கடந்த புதன்கிழமை காலையே கோரியிருந்தார்.
எனினும் சஜித் பிரேமதாஸ பின்னர் பிரதி தலைவராக பொறுப்பேற்று கட்சியின் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவர்களும் மனச்சோர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், மறுநாளை காலையில் கரு ஜெயசூரியவுக்கும், ரணிலுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகங்களில் செய்தியை வெளியிடுமாறு, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தலைவர் கோரியிருந்தார் என்றும் லங்கா வெப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மறுநாள் காலை வியாழக்கிழமை, அரச ஊடகங்களில் ரணிலுக்கும் கரு ஜெயசூரியவுக்கும் இடையில் பிளவு என்ற அடிப்படையில் செய்தி வெளியானது. எனினும் அது பாரியளவில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சர்வதேச கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் ஜூன் முதல் ஆரம்பம்!

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்திலிருந்து சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும் என துறைமுக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இவ்வருட இறுதியில் கொழும்பு துறைமுகத்துக்கு ஈடாக சர்வதேச கப்பற் போக்குவரத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளும் ஹம்பாந்தோட்டை துறைமுத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கப்பல்கள் வருவதில்லை என்று கூறினார்கள். அங்கு மணல் மட்டும் தான் அகழப்படுகிறது. துறைமுகத்தினுள் கப்பல்கள் வரமுடியாமல் பாரிய கற்கல் இருப்பதாக கூறினார்கள். 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் உலகத்தினுள் உள்ள பாரிய வர்த்தக கப்பல்களும் வரக்கூடிய வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. பாறைக்கற்கள் அங்கு இல்லை என பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இத்துறைமுகத்தின் நிர்மாண பணிகளுக்கு 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது. இதேவேளை இத்துறைமுகத்தில் தொழிற்சாலைகளை அமைக்கவென 975 மில்லியன் டொலர்கள் 27 முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

இதன்பின் இத் தொழிற்சாலைகளின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது இத்துறைமுகத்தினூடாகவே ஏற்றுமதி இறக்குமதிகளும் நடைபெறும் என பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

காலிமுகத்திடல் தொடக்கம் வெள்ளவத்தை வரையான கரையோர நிலவிஸ்தரிப்பு.

காலிமுகத்திடல் தொடக்கம் வெள்ளவத்தை வரையான கரையோர நிலப்பரப்பு 300 தொடக்கம் 400 ஏக்கர் வரை விஸ்தரிப்பதற்கான செயல்திட்டம் ஒன்று நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளர். துறைமுக அபிவிருத்தி பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இச்செயல்திட்டம் ஐந்நூறு மீற்றர் வரையான கடலை உள்வாங்கும் விதத்தில் விஸ்தரிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் இதனைப் பூர்த்தி செய்ய 3 தொடக்கம் 5 ஆண்டுகள் வரையான காலம் செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பிலான வள ஆய்வுகளை தற்போது துறைமுக அதிகார சபை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு என்பன இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனையிறவு, கல்லாறு கடல் நீரேரிகளில் இறால் பிடிப்பதற்கு இன்று முதல் அனுமதி!

முற்பது வருடங்களின் பின்னர் ஆனையிறவு, கல்லாறு கடல் நீரேரிகளில் இறால் பிடிப்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை முதல்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கே இவ்வனுமதி கிடைத்துள்ளது. வடபகுதியில் பிடிக்கப்படும் இறால்களில் ஆனையிறவு கடல் நீரேரி. கல்லாறு கலப்புக் கடலில் பிடிபடும் இறால் சுவை நிறைந்தது. வட பகுதியில் பிடிக்கப்படும் இறாலுக்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கியும்  உள்ளது. 


பிடிக்கப்படும் இறால்களை மொத்தமாக கொள்வனவு செய்ய தென்னிலங்கை வர்த்தர்கள் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். சங்கத்தில் பதிவு செய்யாதோர் இறால்களை கொள்வனவு செய்ய முடியாதென சங்கம் அறிவித்துள்ளது.
வேகமாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் ஜப்பான்!
பூமி அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி தாக்கத்தால் உருக்குலைந்து போன ஜப்பானிய நகரங்கள் மீண்டும் உருப்பெற்று வருகின்றன.மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு வீதி ஆறு தினங்களுக்குள் பழைய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 
பிரிட்டனில் பல வீதிகள் குன்றும் குழியுமாக இன்னமும் காணப்பட்டு வரும் நிலையில் ஜப்பானில் துண்டு துண்டாகப் பிளவுண்ட இவ்வீதி ஒருவாரத்துக்கும் குறைவான காலப்பகுதியில் செப்பனிடப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டோக்கியோவுக்கு வடக்காக 80 மைல் தூரத்திலுள்ள இந்த ஜோபான் அதிவேக நெடுஞ்சாலை பூமி அதிர்வால் பல இடங்களில் பிளவுபட்டது. சில இடங்களில் 5 அடி அகலமான பாரிய வெடிப்புக்கள் காணப்பட்டன. 
இந்த வீதியை இப்போது பார்க்கின்றபோது இப்படி ஒரு அனர்த்தம் இங்கு நடந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. மிக மோசமாகப் பாதிக்கப்பட் சண்டாய் நகரில் விமான நிலையமும் பாதிக்கப்பட்டது.
சுனாமி பேரலைகள் வீதிகளில் நிறுத்தியிருந்த வாகனங்களை விமான நிலையத்துக்குள் கொண்டு வந்து போட்டன. விமான நிலையத்தில் இருந்த விமானங்கள் கட்டிடக் கூரைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டன.

தொன் கணக்கில் குப்பைகள் விமான நிலையம் முழுவதும் குவிந்து கிடந்தன. அடுத்த நாளே இங்கு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்த விமான நிலையமும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் சுனாமி தாக்கிய அடுத்த நாளே தத்தமது கடமைகளுக்குத் திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல வர்த்தக நிலையங்களும் இங்கு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் 50 பேர் பலியானார்கள்.இந்த நிலநடுக்கத்தில் 100 கட்டிடங்கள் சேதமடைந்தன. 40 பேர் காயமடைந்தனர். மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வடக்கு தாய்லாந்திலும் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஓரளவு சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தில் மியான்மரின் தாச்லெக் நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு ஓடிவந்தனர். சாலைகளில் விரிசல் காணப்பட்டன.கடந்த 15 ஆண்டுகளில் வடக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்துப் பகுதிகளில் 5 ரிக்டர் முதல் 7 ரிக்டர் வரை பல நிலநடுக்கங்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு மற்றும் சேதம் வெகு குறைவாகவே இருந்துள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கம் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டததாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது வரை 10 ஆண்கள், ஒரு சிறுவன், 13 பெண்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீட்பு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மியான்மர் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் மக்கள் போராட்டம்: 100 பேர் பலி
சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான் அல் அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 18 ம் திகதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது.
இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அதிபர் பஷீர் ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு 240 கி.மீ தெற்கில் உள்ள டோக்கியோவில் குடிநீர்க் குழாய்களில் வரும் நீரில் கலந்துள்ளது.இதையடுத்து குழந்தைகள் அந்தக் குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று டோக்கியோ நகர அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும் தற்போது மின் இணைப்புக் கொடுக்கப்பட்டு அதன் மூலம் நீரை உட்செலுத்தி குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.
நேற்று மூன்றாம் உலையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இந்நிலையில் அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு 240 கி.மீ தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது.டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்ட போது குழந்தைகளுக்கான அளவை விட அதிகளவில் கதிர்வீச்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அருகில் உள்ள ஐந்து நகரங்களில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் மற்றவர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்றும் நகர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புகுஷிமாவில் விளையும் கீரை உள்ளிட்ட காய்கறிகளிலும் அதிகளவில் கதிர்வீச்சு கலந்திருப்பதால் மக்கள் அதை உண்ண வேண்டாம் என்று பிரதமர் நவோட்டோ கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த இருவாரங்களில் உணவுப் பொருட்கள் குறித்து அரசு எச்சரிக்கை விடுப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் உணவுப் பொருட்களில் கதிர்வீச்சு அதிகரித்திருப்பதை அடுத்து புக்குஷிமா, இபாராக்கி, டோச்சிகி மற்றும் குன்மா ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த பால், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய அந்நாட்டு உணவு மற்றும் மருத்து நிர்வாகம் தடை விதித்துள்ளது.நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதாரச் சேதம் ஒட்டு மொத்தமாக 309 பில்லியன் அமெரிக்க டொலர் இருக்கும் என்று அந்நாட்டு மத்திய அமைச்சரவை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.
எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி
திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் கூட்டுப் படைகள் இரவிலும் தாக்குதல் நடத்தின. இதில் கடாபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் நாட்டில் சுமார் ஆயிரம் கிலோமீற்றர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன் ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.
தலைநகர் திரிபோலிக்கு அருகே கடாபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம் மற்றும் அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தாக்கப்பட்டன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல் அஸீஸா முதன்மை வளாகம் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கிறது.
திரிபோலிக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள புசேட்டா கடற்படைத் தளமும் சேதமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அல் ஜஸீரா தொலைக்காட்சியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் லிபியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று அந்நாட்டு அதிபர் கடாபி கூறியுள்ளார். பொதுமக்களிடையே கடாபி உரையாற்றுவதை லிபியாவின் அரசுத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது. அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மேற்கத்திய நாடுகளின் செயல் நியாயமற்றதாகும். எங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம். லிபியாவுக்காக நான் வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று கடாபி கூறியுள்ளார்.லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிய பின்னர் முதன் முதலாக அவர் மக்களிடையே நேரில் தோன்றி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF