Monday, March 7, 2011

இன்றைய செய்திகள்.


கிளர்ச்சியாளர்களிடமிருந்து நான்கு நகரங்கள் மீட்பு!

லிபியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து நான்கு நகரங்களை மீட்டுள்ளதாக, கடாபி ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன. டுனீசியா, எகிப்தை தொடர்ந்து, ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் லிபியாவில் அதிகரித்துள்ளது. 

லிபிய தலைவர் கடாபியை பதவி விலகும்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தியுள்ளன. கடாபிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடாபி பதவி விலக மறுப்பதால், உலக நாடுகள் லிபியா மீது பொருளாதார மற்றும் ஆயுத தடையை அமல்படுத்தியுள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் கடாபியின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. 

போராட்டக்காரர்கள் மீது கடாபி ஆதரவு படையினர் விமானம் மூலம் குண்டு வீசுவதால், பலர் உயிரிழந்துள்ளனர். சொந்த நாட்டு மக்களை குண்டு வீசி கொல்லும் கடாபி, ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தவும் மேற்கத்திய நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா இரண்டாயிரம் வீரர்களுடன் கூடிய போர் கப்பலை லிபியா அருகே அனுப்பி வைத்துள்ளது. "தங்கள் நாடு மீது வெளிநாடுகள் போர் தொடுத்தால் ரத்த ஆறு ஓடும்' என, கடாபி கர்ஜித்துள்ளார். இந்நிலையில், போராட்டக்காரர்கள் முன்னாள் உள்துறை அமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய லிபியன் கவுன்சில் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஜாவியா, ராஸ் லுனுப், மிஸ்ரடா, டுபுருக் ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கடாபி ஆதரவு படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், டுபுருக் நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கடாபி எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் திரிபோலியில் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. 

விழாக் காலங்களில் வெடிக்கக்கூடிய வெடி காரணமாக இந்த சத்தம் கேட்பதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திரிபோலியில் நடக்கும் துப்பாக்கி சண்டையினால் தான் இந்த சத்தம் கேட்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சிர்டி என்ற நகரத்தருகே உள்ள நவ்பாலியா நகரை நெருங்கி விட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 3 பள்ளிகள் குண்டு வீசி தகர்ப்பு.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கைபர் மாகாணத்தின் பெரும் பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்கு அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கைபர் மாகாணத்தில் உள்ள ஷலோபாரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினர்.இதில் பள்ளி கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதே போன்று அப்பகுதியில் உள்ள கோஹாட், ஸ்வாபி ஆகிய 2 இடங்களில் உள்ள அரசு பள்ளிகளையும் குண்டு வீசி தகர்த்தனர்.
இந்த தாக்குதல்களிலும் கட்டிடங்கள் இடிந்தன. நேற்று மட்டும் 3 பள்ளிகளை தீவிரவாதிகள் தகர்த்தினர்.இச்சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தகவலை கைபர் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏமனுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கா.
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதால் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
துனிசியா, எகிப்து, லிபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் அதிபர்களுக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. ஏமனில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இப்போராட்டத்தை ஒடுக்க அங்கு அரசு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் தற்போது சூழ்நிலை சரியில்லாததால் அமெரிக்கர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம். ஏமனில் தங்கியுள்ள அமெரிக்கர்களும் கூடிய விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏமனில் ஊழலும், வேலை வாய்ப்பின்மையும் பெருகி விட்டதை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இதனால் சனா நகரில் பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.ஏமன் நாட்டில் அல்-குவைதா அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதால் அந்நாட்டில் வாழும் அமெரிக்கர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஹோஸ்னி முபாரக்.
எகிப்தில் 30 ஆண்டுகளாக ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தார். அவர் பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
17 நாட்கள் நடை பெற்ற போராட்டத்துக்குப் பிறகு அவர் பதவி விலகினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் பதவியில் இருந்த போது ஊழல் மற்றும் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்ததாக தகவல் வெளியாகின. தற்போது அவருக்கு ரூ.3.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவை மறைமுகமாக வங்கி கணக்குகள், ஆடம்பர பங்களாக்கள், ஓட்டல்களாக உள்ளன. இந்த தகவலை லண்டனில் இருந்து வெளி வரும் “கார்டியன்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
முபாரக்கிற்கு அமெரிக்காவின் மங்காட்டன், பிவர்லிகில்ஸ் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்துள்ளார். இவை தவிர பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ளார்.
வெளிநாட்டு கம்பெனிகளில் பணம் முதலீடு செய்துள்ளார். இதையெல்லாம் கணக்கீட்டால் அவருக்கு ரூ.3 கோடியை ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கலாம் என இங்கிலாந்தின் துர்காம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் தெரிவத்துள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்த பிரபல வர்த்தகரின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடியாகும். எனவே இவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் என அழைக்கப்பட்டார். அவருக்கு அடுத்தப் படியாக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் 2 வது இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி. ஆனால் இவர்களையெல்லாம் முபாரக் மிஞ்சி விட்டார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி என்பதால் தற்போது இவரே உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்கிறார்.
காஷ்மீர் நிலைதான் 'லிபியாவிலும்': இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி.
லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.
லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கிய நகரங்களைப் பிடிக்கும் முயற்சியை வெளிநாடுகளின் துணையுடன் தொடர்கிறார்கள். ஐநா சபை, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.
இவர்களை அடக்க போர்விமானங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகிறார் அதிபர் கடாபி. அமெரிக்கா அல்லது ஐ.நா தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார்.
இதுவரை நடந்த கலவரத்தில் 6000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க மீடியா செய்தி பரப்பு வருகிறது. எனவே கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளியாக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் அமெரிக்காவும். அவர் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு ஆதரவு தேடும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கடாபி. கடந்த கிழமை நடந்த லிபிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது 5 மணிநேரம் பேசினார் கடாபி. தனது பேச்சின் போது, "காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும்.
எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும்", என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் கடந்த பிப்ரவரி 26-ம் திகதி லிபியாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் தங்களது எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் அனைத்தையும் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே தரப்போவதாகவும் அவர் கூறினார்.
என்னை மின்சாரக் கதிரையில் இருத்தி மரண தண்டனை அளித்தாலும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: ஜனாதிபதி மஹிந்த.

என்னை மின்சாரக் கதிரையில் உட்கார வைத்து மரண தண்டனை வழங்கினாலும், கடைசி மூச்சு வரையிலும் தான் நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்துகின்றார்.
மனித உரிமைகள்  தொடர்பான ஜெனீவா அமர்வுக்கு தான் நடந்து போக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டும் விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் பென்ஸ் வண்டிகளிலேயே அங்கு வந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற ஆளுங்கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் மீறல் தொடர்பில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வாங்கிக் கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். நான் அதற்கெல்லாம் பயந்து பின் வாங்கப் போவதில்லை.
அரசியலுக்கு வந்த ஆரம்பம் முதலே தான் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக அக்கறையுடன் செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மனித  உரிமைகள் பற்றி தனக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
கடாபி படைகள் பெரும் முன்னேற்றம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் குண்டுகள் முழங்கின.
கர்னல் மோமர் கடாபியின் படைகள் போராட்டக்காரர்களை ஒடுக்கி பெருமளவு முன்னேறி உள்ளதாக லிபியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஜவயா ராஸ் லனப் மற்றும் மிஸ்ரட்டா டோப்ருக் நகரங்களில் போராட்டக்காரர்களை ஒடுக்கியதாக லிபிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் திரிபோலியாவில் அதிகாலை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. இந்த துப்பாக்கிச் சூடு மோதல் அல்ல. வெற்றிக் கொண்டாட்டம் என அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறினார்.
தலைநகர் திரிபோலி 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் மக்கள் வாண வெடிகளை வெடித்து மகிழும் சத்தமாகும். மக்கள் வீதியில் ஆடிபாடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் நகரில் வசிக்கும் நபர்கள் மீண்டும் மோதல் வெடித்துள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.
நேற்று திரிபோலிக்கு மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள ஜவயா நகரில் கடாபியின் துருப்புகள் மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் ராஸ்லனப்பில் உள்ள எண்ணெய் முனைய துறைமுகத்தை கைப்பற்றிய பின்னர் பின் ஜவாத் நகரில் நுழைந்தனர்.
லிபியா மீது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கடந்த வாரம் தடைவிதித்தது மட்டுமல்லாமல் சொத்துகளையும் முடக்கியது. கடாபி மற்றும் அவரது உறவினர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்தது.
பிரெஞ்ச் நாளிதழ் ஒன்றிற்கு கடாபி அளித்த நேர்காணலில் லிபிய வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஆப்பிரிக்க ஒன்றியம் விசாரணையை துவக்கலாம் என அவர் தெரிவித்தார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF