Wednesday, March 30, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையர்களுக்கான வீசா விதிகளை தென்கொரியா தளர்த்தியுள்ளது.


இலங்கையர் உள்ளிட்ட தெற்காசிய வலய நாட்டவர்களுக்கான வீசா விதிகளை தென்கொரியா தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.அதன் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு வீசா பெற குறைந்தபட்ச ஆவணங்களையே சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் குறைவான நிதி வளத்தை மட்டும் காண்பித்தாலும் போதுமாக இருக்கும்.
கடந்த காலங்களில்' இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தென்கொரியா தனது வீசா நடைமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தியிருந்ததாக தற்போது அறிவித்துள்ளது.தளர்த்தப்பட்டுள்ள வீசா நடைமுறைகளின் மூலம் இலங்கையர்கள் தென்கொரியாவின் சுற்றுலாத்துறைக்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
ஈராக்கில் குண்டுத்தாக்குதல்: 58 போ் பலி, 97 போ் காயம்
ஈராக்கில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றின் காரணமாக 58 போ் கொல்லப்பட்டுள்ளனர்.டிக்ரிட் நகரில் உள்ள உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் அருகே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக 97 போ் அளவில் கடுமையான காயம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஈராக்கிய இராணுவத்தின் சீருடையை ஒத்த உடையுடன் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்காக ஆறு தீவிரவாதிகள் வருகை தந்ததாகவும், தற்போதைக்கு அவர்களின் சடலங்கள் இனம் காணப்பட்டிருப்பதாகவும் ஈராக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தற்போதைக்கு டிக்ரிட் நகரம் முற்று முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் முபாரக்குக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை: ராணுவ ஆட்சி வழங்குகிறது
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்த அவருக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் உள்ளது. இதற்கிடையே பதவி விலகிய முபாரக்கையும், அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற ராணுவ ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை.இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுகபோகமாக மன்னர் போன்று வாழ்ந்த முபாரக் தற்போது சாதாரண குடிமகனாக அங்கு வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு அவர் அதிபராக பணிபுரிந்ததற்காக ஓய்வூதியமாக இத்தொகை ராணுவ அரசு வழங்கி வருகிறது.ஆனால் இதை அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதை அங்கிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜப்பான் கதிர்வீச்சு!

ஜப்பானில் புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சுக் கசிவுகளை பிரிட்டனில் காணக் கூடியதாக உள்ளது.

இன்று கதிர்வீச்சுக் கசிவு அயடின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரண்டு பிரிட்டிஷ் ஆய்வு கூடங்கள் அறிவித்துள்ளன. மார்ச் 11ல் இடம்பெற்ற பூமிஅதிர்ச்சி மற்றும் சுனாமிப் பேரலைகள் என்பனவற்றால் உருகிப் போகும் நிலையை அடைந்த ஜப்பானின் புகுஷிமா அணு உலைகள் பிரிட்டனில் இருந்து சுமார் 6000 மைல் தூரத்தில் அமைந்துள்ளன.

 ஒக்ஸ்போர்ட்ஷயர் மற்றும் கிளஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஆய்வு கூடங்களிலேயே இந்த கதிர்வீச்சிக் கசிவு அயடின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இங்குள்ள கண்கானிப்பு நிலையங்களில் மிகக் குறைந்த மட்டத்திலான கதிர்வீச்சு மட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜப்பானோடு தொடர்புடையது என்றும் டொக்டர். மைக்கல் கிளார்க் கூறினார். 
இத்தகையப் படிவுகள் சில்டன், ஒக்ஸ்போர்ட்ஷயர், கிளஸ்கோ, ஸ்கொட்லாந்து, மற்றும் ஐரோப்பாவின் சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் இத்தகைய தாக்கங்கள் உணரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இவை மிகவும் குறைவான தாக்கங்களையே கொண்டுள்ளன.
அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு தீவிரம்: ஜப்பானில் உச்சகட்ட உஷார் நிலை.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் மீது கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால் உச்சக் கட்ட உஷார் நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.புகுஷிமா, டாய் இச்சி அணு மின் நிலையத்தில் உள்ள நான்கு உலைகளிலும் எரிபொருள் உருகியிருப்பதாக சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கில் 3 ம் உலையில் யுரேனியத்தோடு புளுட்டோனியமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து அணு உலைகளில் நடந்த விபத்தும் யுரேனியம் மற்றும் புளுட்டோனிய கம்பிகள் உருகியிருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பின. இந்நிலையில் நேற்று முன்தினம் 3 ம் உலையின் வெளிப்புற மண்ணில் புளுட்டோனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.இது குறித்து அறிக்கை வெளியிட்ட அணு மின் நிலைய இயக்க நிறுவனம் டெப்கோ கேடு விளைவிக்காத வகையில் மிகக் குறைந்த அளவிலேயே புளுட்டோனியம் கசிந்திருப்பதாக சமாதானம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று ஜப்பான் பார்லிமென்ட்டில் உரையாற்றிய பிரதமர் நவோட்டோ கான் கூறியதாவது: இந்த நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணு உலை விபத்துக்கள் ஆகியவை கடந்த சில பத்தாண்டுகளில் ஜப்பான் எதிர்பாராத மிகப் பெரும் சவால்களாக உள்ளன.
அணு உலைகளில் சிக்கல் சரியாக கணிக்க முடியாதபடி தொடர்கிறது. இந்தப் பிரச்னையை உச்ச கட்ட உஷார் நிலையில் ஜப்பான் அரசு எதிர்கொள்ளும். டாய் இச்சியின் ஆறு அணு உலைகளும் விரைவில் இழுத்து மூடப்படும். இவ்வாறு நவோட்டோ கான் தெரிவித்தார்.நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் தண்ணீர், உணவு, பேட்டரி மற்றும் கழிவறை பேப்பர் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகக் கிடக்கின்றன.
ஆப்கான் சிவிலியன்களைப் படுகொலை செய்து அமெரிக்கப் படைவீரர்கள் அட்டகாசம்.
ஆப்கானில் சிவிலியன்களைப் படுகொலை செய்த அமெரிக்கப்படையினர் அவர்களின் உடல் அவயவங்களை ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டிருப்பதாக ரோலிங் ஸ்டோன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.அத்துடன் அவர்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிவிலியன்களின் உடல் அவயவங்களைக் கொண்டு விளையாட்டுகளில் ஈடுபடவும் செய்துள்ளார்கள்.
மேலும் ஆப்கான் சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் அவனது விரலை வெட்டியெடுத்துக் கொள்ளும் காட்சியும் தற்போது உலகளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரின் கொலைப்படையணி(Death squad) எனப்படும் பிரிவின் படைவீரர்களே அவ்வாறான அநாகரீமான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோலிங் ஸ்டோன் சஞ்சிகையில் இச்செய்தி வெளியானவுடன் ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படைவீரர்களின் மடிக்கணணிகள் சோதனையிடப்பட்டு அதில் இருந்த போர்க்குற்றங்கள் மற்றும் கொடூர சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்கள், ஒளிப்பதிவுக் காட்சிகள் என்பன அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ள படையினர் குறித்து இராணுவ நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.ஆயினும் அது குறித்து ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனாதிபதி ஒபாமா இருவரில் ஒருவர் கூட இதுவரை எதுவித கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடாபியின் ஆட்சியை ஒடுக்க போராட்டக்காரர்களை சந்திக்க செல்லும் பிரான்ஸ் தூதர்.
கடாபி ஆட்சிக்கு எதிராக புரட்சி போராட்டம் நடத்தும் மக்களின் ஆதிக்கப் பகுதியான பெங்காசி நகருக்கு பிரான்சின் சிறப்புத் தூதர் செல்கிறார்.கடாபியை பதவியில் இருந்து நீக்கவிட்டு லிபியாவில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக சீரமைப்பு தேசியக் கவுன்சிலுடன் பேச பிரான்ஸ் தூதர் அங்கு செல்கிறார்.
ஆப்பிரிக்க தேசமான லிபியாவில் கடாபி கடந்த 41 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். அவரது சர்வாதிகார ஆட்சியை அகற்ற கடந்த பெப்ரவரி மாதம் 15 ம் திகதி புரட்சிப் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் வான் வழித் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் அங்கு நோட்டோ கூட்டுப்படைகள் முகாமிட்டுள்ளன.
லிபியாவில் சீரமைப்பு தேசியக் கவுன்சிலை போராட்டக்காரர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தக் கவுன்சிலை பிரான்ஸ் அங்கீகரித்தது. உலக நாடுகளில் போராட்டக்காரர்களின் தேசியக் கவுன்சிலை அங்கீகரித்த முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.போராட்டக்காரர்கள் உள்ள பெங்காசிக்கு பிரான்ஸ் தனது தூதரை அனுப்புகிறது. 53 வயது அன்டோனி சிவன் பிரான்ஸ் சிறப்புத் தூதராக பெங்காசி செல்கிறார். லண்டனில் நடைபெறும் சர்வதேச மாநாட்டிற்கு இடையில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
லண்டன் மாநாட்டில் 7 அரபு நாடுகள் உள்பட 35 நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ் தூதராக செல்லும் சிவன் அரபு மொழி பேசக்கூடிய அதிகாரி. எகிப்து வழியாக அவர் லிபியாவுக்கு பயணம் ஆவதாக பிரான்ஸ் அதிகாரி தெரிவித்தார்.மேலும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சின் மூலமாக லிபியப் போராட்டக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றோம் என்று பிரதமர் காமரூன் அறிவித்துள்ளார். இதற்கு பிரான்ஸ் அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் போராட்டத்தின் எதிரொலி: சிரிய பிரதமர் பதவி விலகினார்.
சிரிய மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் முகம்மது நாஜி ஓட்ரி நேற்று பதவியை விட்டு விலகினார்.அவரது  பதவி விலகலை அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், புதிய அரசு அமையும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாள்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்து வரும் அஸ்ஸாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 மாதங்களாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை மறுத்துள்ள சிரிய அரசு 30 பேர் மட்டுமே இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.நாட்டில் இப்போது நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் இன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது உரையின் போது ஆட்சி மாற்றம் குறித்தும், சட்டத் திட்டங்கள் குறித்தும் மற்றும் அவசரநிலை பிரகடன ரத்து குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடாபிக்கு எதிரான அரசு: பிரிட்டன், பிரான்ஸ் ஏற்பு
லிபியா மீதான ராணுவ நடவடிக்கையின் முழு பொறுப்பையும் இன்று முதல் நேட்டோ அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடாபி எதிர்ப்பாளர்கள் பெங்காசியில் அமைத்துள்ள இடைக்கால அரசை உலகில் முதன் முறையாக பிரிட்டனும், பிரான்சும் அங்கீகரித்துள்ளன. லிபியா மீதான ராணுவ நடவடிக்கை அமெரிக்கா தலைமையில் செயல்பட்டு வருகிறது.அமெரிக்க பார்லிமென்ட்டில் இது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் தனது பொறுப்பை நேட்டோவிடம் ஒப்படைக்கப் போவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. ராணுவ நடவடிக்கை துவங்கி 10 நாட்கள் ஆன நிலையில் லிபியா விவகாரம் குறித்து நேற்று நாட்டு மக்களுக்கு அவர் செய்தி விடுத்தார்.
அந்த செய்தியில் அதிபர் ஒபாமா கூறியதாவது: லிபியாவில் கடாபி ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி விட்டோம். லிபியா மீது தகுந்த தருணத்தில் இந்நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் அதற்காக மிகப் பெரிய விலையை அமெரிக்கா கொடுக்க நேரிட்டிருக்கும். இன்று முதல் லிபியா மீதான ராணுவ நடவடிக்கையின் முழுப் பொறுப்பையும் நேட்டோ ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் லிபியாவின் எதிர்காலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள், ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன், ஈராக், ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், மொராக்கோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் என 40 நாடுகளின் பிரதிநிதிகள், 35 உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் இல்ல செய்தித் தொடர்பாளர், நேற்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இருவரின் கூட்டறிக்கையை வெளியிட்டார்.
அதில் லிபியாவில் தற்போது கடாபி எதிர்ப்பாளர்களால் பெங்காசியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இடைக்கால கவுன்சில் தலைமையிலான அரசை இருநாடுகளும் அங்கீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பெங்காசியில் இன்னமும் குண்டு முழக்கம் ஓயவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF