மனிதனை தான் நினைத்தபடியெல்லாம் ஆட்டுவிப்பது மூளை. உழைப்பு, தூக்கம், களைப்பு உள்ளிட்ட எல்லா செயல்களையும் நிர்ணயிப்பது மூளை தான்.
அந்த மூளையின் செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆய்விலும் ஒரு புதுமையான தகவல் கிடைக்கத் தான் செய்கிறது. பய உணர்வு அதிகரிப்பதற்கு மூளையின் செயல்பாடே காரணம் என்பது சமீபத்திய ஆய்வுத் தகவல்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட மூளை ஆய்வில் பல விவரங்கள் தெரியவந்துள்ளன. தூக்கம், களைப்பு, பசியின்மை, பயம் உள்ளிட்ட தொடர் பாதிப்புகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை. உலகில் நான்கில் ஒருவர் என்ற வீதத்தில் பய உணர்வு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்கிறது ஒரு ஆய்வு.
ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் பெரிய பாதிப்புகளில் இருந்து உடனடியாக பாதுகாத்துக் கொள்ள முடியுமாம். கவனிக்காமல் விடும்போது உயிரிழப்பு போன்ற அபாயமும் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
பய உணர்வுக்கு முக்கிய காரணம் மூளை செயல்பாடுதான். பய உணர்வு, எந்த ஒரு விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக நிகழ்வுகள் அமைந்தால் ஏமாற்றத்தின் விளைவாக பய உணர்வு மெதுவாக தலைதூக்க தொடங்கும். இதற்கு உடனடி சிகிச்சை மற்றும் கவனிப்பு தேவை.
இத்தகைய உணர்வு தொடர்ந்து அதிகரித்தால் மன உளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, ஒரு கட்டத்தில் மூளையை முடக்கி போட்டு விடும். இத்தகைய உணர்வுக்கு காரணமான மூளை செயல்பாட்டை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.