Friday, March 18, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையில் போட்டி!
இலங்கையின் விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. 

சீனா, இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் போட்டி நிலவுகின்றது. எனினும் அரசாங்கம் விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்போவதில்லை என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்துள்ளார். 

பொருத்தமான நிறுவனத்திடமே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளுக்கு ஒப்படைப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய நிறுவனங்களிடம் அரசாங்கம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. 

ஹம்பாந்தோட்டையில் மத்தல பிரதேசத்தில் சீன நிறுவனமே விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமான நிலையங்களை நிர்வகிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதால் யாருக்கு வழங்குவது என்பது குறித்து அரசு நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த பொலிஸாருக்கு தடை விதிப்பாம்! சொல்கிறார் பொலிஸ் மா அதிபர்

கனரக ஆயுதங்களை பொலிஸார் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். மக்களுடனான நெருங்கிய உறவை ஏற்படுத்தும் முகமாக கனரக ஆயுதப் பயன்பாட்டை தடை செய்யப்போவதாகவும், இனிவரும்காலங்களில் வழமையான கடமைகளின்போது காவல்துறையினருக்கு கனரக ஆயுதங்கள் வழங்கப்படமாட்டாது என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். 


புதிய நடைமுறையின்படி T-56 ரக துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தமாட்டர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் தற்போது குறைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
ஜ.ம.சு.கூ நாடளாவிய ரீதியில் அமோக வெற்றி!
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3051371 வாக்குகளைப் பெற்று 1701 உறுப்பினர்களுடன் முதல் நிலையில் உள்ளது. இது மொத்த வாக்கெடுப்பில் 59.99 வீதமாகும். 

இதேவேளை எதிர்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி 1872638 வாக்குகளைப் பெற்று 830 உறுப்பினர்களுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. இது மொத்த வாக்கெடுப்பில் 33.75 வீதமாகும்.165057 வாக்குகளைப் பெற்று மக்கள் விடுதலை முன்னணி 51 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது மொத்த வாக்கெடுப்பில் 2.97 ஆகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு.
எண்ணெய் வள நாடுகளில் இடம்பெறும் அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் ஜப்பானில் எற்பட்ட சுனாமி என்பவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதரா ரீதியாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது பாரிய பாதிப்பாக இல்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

"எகிப்தின் அரசியல் குழப்பங்களால் இலங்கைக்கு அதிக பாதிப்பில்லை. வட ஆபிரிக்க நாடுகளுக்கு கென்யாவே பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும் நாம் ஆரம்ப பின்னடைவையே சந்தித்துள்ளோம்" என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இதனால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் சுனாமி அழிவுகளாலும் இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு உதவி ஜப்பானில் இருந்தே கிடைக்கிறது.

2009 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான உதவி வழங்குனராக ஜப்பானே இருந்து வந்தது. கடந்த ஆண்டு அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. ஆனாலும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அழிவுகள் இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
உலகில் முதன் முதலாக பறக்கும் தட்டை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.
உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கி உள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு சோஹல் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆளில்லாமல் இயங்கக்கூடிய இப்பறக்கும் தட்டானது உளவு பார்த்தல் போன்ற பல தேவைகளுக்காக உபயோகிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.இப் பறக்கும் தட்டானது உருவத்தில் சிறியது எனவும், குறைந்த சத்தத்தையே எழுப்பக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலகுவாக பயணிக்கக்கூடியது போன்றவை இதன் நன்மைகள் எனவும் ஈரானிய செய்திகள் குறிப்பிடுகின்றது. மேற்படி தகவலானது இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.எனினும் பல உலக நாடுகள் அணுச் செறிவாக்கல் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. எனினும் ஈரான் தனது தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக முன்னேறி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க தூதரக அதிகாரி விடுதலையை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு.
இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் ரோமாண்ட் டேவிஸை லாகூர் கோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீ்ம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27 ம் திகதியன்று இரு பாகிஸ்தானியர்கள் பைக்கில் வந்து ரோமாண்ட் டேவிஸை வழி மறித்தனர். இதில் இரு பாகிஸ்தானியர்களை கொள்ளையர்கள் என நினைத்து டேவிஸ் சுட்டுக்கொன்றார்.இந்நிகழ்வானது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டேவிஸ் கைது‌ செய்யப்பட்டு வழக்கு லாகூர் கோர்டில் நடந்தது. இந்நிலையில் பொதுமன்னிப்பால் ‌டேவிஸ் விடுதலை செய்யப்பட்டார்.
இவரின் விடுதலையை எதிர்த்து ரேய் முகமது நவாஸ் என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து நவாஸ் குறிப்பிடுகையில் அப்பாவி இருவரை சுட்டுக்கொன்றவரை கோர்ட் விடுவித்தது அரசியல் சட்டத்திற்கு விர‌ோதமானது.இதனை ‌எதிர்‌த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. முடிந்தால் இந்த பிரச்னையை பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானிய கதிர்வீச்சு கலிபோர்னியாவுக்கு பரவும் வாய்ப்பு.
ஜப்பானின் புகுஷிமா அணு உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கதிர்வீச்சின் ஒரு பகுதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது சிறிய அளவிலேயே இருக்கும் என்பதால் மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புகுஷிமாவின் சேதமடைந்து போன அணு உலைகள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதையோ, அதிலிருந்து எவ்வளவு கதிர்வீச்சு வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றோ ஜப்பான் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
இதனால் கலிபோர்னியாவை எந்த அளவுக்கு கதிர்வீச்சு அளவு எட்டும் என்பதை உறுதியாக கூர முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் புகுஷிமாவின் 3 வது அணு உலையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் புளுட்டோனியம், யுரேனியம் இருப்பதால் அது உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகும்.

ஆபத்தான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் யானைகள்! விஞ்ஞானிகள் வியப்பு.

யானைகளுக்கு நீண்டநாட்களுக்கான ஞாபக சக்தி உள்ளது. அதிலும் ஆபத்தொன்று வருகின்றபோது அவற்றுக்கு இந்த ஞாபக சக்தி துணை நிற்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். வயது முதிர்ந்த யானைகள் இக்கட்டான கட்டங்களில் சிறந்த முடிவுகளை எடுக்கின்றன. முன்னைய அனுபவங்களைக் கொண்டே அவை இந்த முடிவுகளை எடுக்கின்றன. ஆபிரிக்க யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. 


கூட்டமாக வாழும் யானைகளுள் மிகவும் வயதான யானையே இக்கட்டான கட்டங்களில் மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கின்றது. தன்னுடைய ஞாபகத்தில் உள்ள முன்னைய அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப் படுகின்றன. கூட்டமாக வாழும் யானைகள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு வயது மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதன் நீண்ட ஆயுள் அதற்கேற்ற மூளை வளர்ச்சி என்பன இங்கு பிரதான இடம் பிடிக்கின்றன. 


யானைக் கூட்டமொன்று பொதுவாக 12 யானைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. உணவு தேடல், ஓய்வெடுத்தல் என இவை கூட்டமாகவே செயற்படுகின்றன. இதில் ஒன்று இன்னொன்றுக்குப் பாதுகாப்பாகச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். சிங்கங்களுள் நன்கு வளர்ந்த சிங்கங்கள் யானைகளை வேட்டையாடி இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடியவை. 


இந்த சிங்கங்களின் கர்ச்சனை சத்தம் கேட்டவுடன் அதைக் கூர்ந்து அவதானித்து கூட்டத்தின் தலைமை யானை தனது முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் செயற்பட்டு சிறந்த முடிவுகளை எடுத்து பதுங்குவதற்கு வழிகாட்டி தனது கூட்டத்தைக் காப்பாற்றுகின்றது. கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் யானைகளின் செயற்பாடுகளை இரண்டு வருடங்களுக்கு மேல் நன்கு அவதானித்துள்ள சஸெக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொக்டர். மெக்கொம்ப் தலைமையிலான குழுவினர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானுக்கு 2 நாளில் மேலும் ஒரு பாரிய ஆபத்து: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை.
ஜப்பானில் வெடித்து சிதறிய அணு உலைகளால் அடுத்த 2 நாட்களில் மற்றொரு செர்னோபில் ஆபத்து ஏற்படக்கூடும் என்று பிரான்சை சேர்ந்த அணு சக்தி நிபுணர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் 1986 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் திகதி திடீரென ஏற்பட்ட மின்தடையால் அணு உலை பயங்கரமாக வெடித்தது. அதனால் வெளியான கதிர்வீச்சில் உக்ரைன் மட்டுமின்றி அண்டை நாடுகளை சேர்ந்த 57 பேர் உடனடியாக பலியாகினர். அணுக்கதிர்வீச்சால் ஏற்பட்ட புற்றுநோய்க்கு 4000 பேர் இறந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜப்பானில் பூகம்பத்தால் பியூகுஷிமா டைச்சி அணுமின் நிலையத்தின் 4 அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. அவற்றில் இருந்து கதிர்வீச்சு பரவி வருவதாக அஞ்சப்படுகிறது.இது பற்றி பிரான்சின் கதிரியக்க பாதுகாப்பு மற்றும் அணுசக்தி மையத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெய்ரி சார்லஸ் கூறியதாவது: ஜப்பான் அணு உலைகள் வெடிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மிக ஆபத்தானது. அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது. நெருக்கடியானது.
சூழ்நீலை மிகவும் அவநம்பிக்கை அளிக்கிறது. கடந்த சில நாட்களாக அணு உலைகளை குளிர்விக்கும் எல்லா நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. எனவே மற்றொரு செர்னோபில் துயரம் ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வாறு தெய்ரி சார்லஸ் தெரிவித்தார்.
லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்.
சொந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்தும் லிபிய அதிபர் கடாபி ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் ஆதரவு தெரிவித்தது.
வான் வழியாக லிபிய ராணுவம் குண்டுகளை வீசுவதைத் தடுக்கவும், அந்த வான் பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கவும் முடிவு செய்தது.லிபியா வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதிக்கும் முடிவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்களில் 10 உறுப்பினர் ஆதரவு தெரிவித்தனர். 5 உறுப்பினர் நாடுகள் வாக்களிக்கவில்லை.
லிபியா ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சியாளர் போராட்டம் கடுமையாக இருந்த போதும் கடாபியின் படைகள் போராட்டக்காரர்களிடம் பல நகரங்களை தற்போது கைப்பற்றி உள்ளன. ஐ.நா வின் முடிவை கேட்ட பெங்காசியில் உள்ள போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.ஆனால் லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் ஐ.நா வின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். போராட்டக்காரர்களின் ஆதிக்க இடமாக உள்ள பெங்காசி லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
லிபியா மீது விமானம் பறக்க தடை விதிப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடந்த பின்னர் யு.எஸ் ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த கட்ட நடவடிக்கையை ஆலோசிக்க பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்களை அழைத்தார். ஐ.நா வின் தீர்மானத்திற்கு லிபியா உடனடியாக கட்டுப்பட வேண்டும் என அவர்கள் கூறினர்.
லிபியா மீது அமெரிக்கா உடனடியாக தாக்குதல் நடத்தும் நிலையில் இல்லை. ஆனால் அரபு கூட்டாளிகள் உதவியுடன் பிரான்ஸ், பிரிட்டன் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் கிரக வளையத்திற்கு வந்தது.
இந்த கிரகத்தை சுற்றும் உலக நாடுகளின் முதல் விண்கலம் என்ற பெருமை நாசா விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. மெசஞ்சர் என்ற இந்த விண்கலம் அமெரிக்க உள்நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு புதன் கிரக வளையத்திற்கு வந்தது. மெசஞ்சர் விண்கலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பயணத்தை துவக்கியது.
மெசஞ்சரின் சாதனை குறித்து நாசா கூறுகையில்,"சூரியக் குடும்பத்தில் உள்பகுதியில் உள்ள புதன் கிரகத்திற்கு தங்களது விண்கலம் நுழைந்துள்ளது. இது பொறியியல் மற்றும் அறிவியல் சாதனை நிகழ்வாகும்.அடுத்த சில வாரங்களுக்கு கடுமையாக வெப்பம் கொண்ட புதன் கிரக சூழலை விண்கலம் எதிர்கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்ச் 23 ம் திகதி விண்கல கருவிகள் சோதனை செய்யப்பட்டு முடுக்கி விடப்படுகிறது. ஏப்ரல் 4 ம் திகதியன்று மெசஞ்சர் விண்கலம் தனது பயணத்தின் அறிவியல் நிலையை துவக்கும்.
மெசஞ்சர் விண்கலம் சூரியனில் இருந்து 280 லட்சம் மைல் தொலைவிலும், பூமியல் இருந்து 960 லட்சம் மைல் தொலைவிலும் உள்ளது. இந்த விண்கலம் புதன் கிரகத்தை ஆய்வு செய்ய 7 அறிவியல் உபகரணங்களை கொண்டுள்ளது.மெசஞ்சர் விண்கலம் 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை துவக்கி 490 கோடி மைல் தூரத்தை கடந்துள்ளது. பல்வேறு கடுமையான சூழல்களை எதிர் கொண்டு புதன் கிரக வளையத்திற்குள் இந்த விண்கலம் நுழைந்துள்ளது என நாசா அறிவித்தது..

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF