Saturday, March 19, 2011

"சுப்பர் மூன்'

கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடவையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மையில் இன்று சனிக்கிழமை நெருங்கி வருகிறது.

"சுப்பர் மூன்' எனப்படும் இந்த அபூர்வ நிகழ்வு இன்று சர்வதேச நேரப்படி 19: 10 மணிக்கு இடம்பெறுகிறது.சூரியன் மறைந்ததையடுத்து கிழக்கு பகுதியில் தோன்றும் இந்த சந்திரன் வழமையான சந்திரனை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் பிரகாசமானதாகவும் தோன்றும்.சந்திரன் தனது நீள் வட்டப் பாதையில் பயணிக்கையில் பூமியிலிருந்து வெவ்வேறு தூரங்களில் அதன் ஸ்தானம் அமைவதால் அது வேறுபட்ட அளவுகளில் பூமியிலுள்ளவர்களுக்கு தோன்றி வருகின்றது.

சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் சந்திரன் நிலைபெறும் இடம் பூமிக்கு மிகவும் அண்மையில் அமையும் நிலையே "சுப்பர் மூன்' நிகழ்வைத் தோற்றுவிக்கிறது.ஒவ்வொரு மாதமும் சந்திரன் பூமியிலிருந்து சுமார் 35,4000 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து 410,000 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்திரன் பூமியிலிருந்து 356,548 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைபெறவுள்ளது. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் என்பவற்றுக்கு "சுப்பர் மூன்' சந்திரனே காரணமென அஞ்சப்படுகின்ற நிலையில் அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்கக் கடற்படை அவதான நிலையம் இந்த நிகழ்வால் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிராந்தியத்தில் கடல் அலைகள் மேலதிகமாக 15 சென்றி மீற்றர் உயரத்துக்கே உயர்வடையும் என அந்த நிலையத்தைச் சேர்ந்த ஜியோப் செஸ்டர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கா தவிர்ந்த பிற நாடுகளுக்கு சுப்பர் மூனால் ஏற்பட்க கூடிய விளைவுகள் தொடர்பில் எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் இடம்பெறவுள்ள இந்த "சுப்பர் மூன்' நிகழ்வால் ஏதும் பாரிய இயற்கை அனர்த்தம் இடம்பெறலாம் என்ற அச்சம் அனைவரது மனதிலும் உள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற "சுப்பர் மூன்' நிகழ்வுக்கு இருவாரங்களுக்கு முன்பு 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஆசிய பிராந்தியத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திய பூமியதிர்ச்சியும் சுனாமிப் பேரலையும் இடம்பெற்றது.அதே சமயம் தற்போது இடம்பெறும் "சுப்பர் மூன்' நிகழ்வுக்கு ஒரு கிழமைக்கு முன்பே ஜப்பானிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற "சுப்பர் மூன்' நிகழ்வு பூமிக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF