Saturday, March 12, 2011

ஆபத்தான நிலையில் ஜப்பான் அணு உலைகள்..நெருக்கடி நிலை பிரகடனம்!!

டோக்கியோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளில் இரண்டு உலைகளில் குளிரூட்டும் கருவிகள் செயல்படாமல் போனதால் வெப்பம் மிகவும் அதிகரித்து கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.இவற்றில் ஏதாவது ஒரு அணு உலை வெடித்தாலும், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்த போது ஏற்பட்டதைவிட பல மடங்கு அதிக சேதத்தை ஜப்பானும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால், மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஃபுகுஷிமா பகுதியில் உள்ள பெரிய அணு உலையில் வெப்ப நிலை மிக பயங்கரமாக அதிகரித்தது. இதனால் உலையின் உள்ளே அழுத்தமும் கதிர்வீச்சும் 1000 மடங்கு அதிகரித்து அது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. டோக்கியோவிலிருந்கு 170 கிமீ தொலைவில் உள்ளது இந்த அணு உலை. ஆனால், கடும் முயற்சிகளுக்குப் பிறகு அதன் அழுத்த நிலை இன்று காலை குறைக்கப்பட்டதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதனால் இந்த அணு உலை வெடிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பூகம்பம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், இந்த அணு உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்குத் தேவையான தண்ணீர் ஏற்றப்படவில்லை என்றும்,
இருப்பினும் அப்பகுதியில் இருந்த 3000க்கும் அதிகமான மக்கள் அலறியடித்துக் கொண்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதனை ஜப்பானிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணு மின் நிலையத்தின் வெளிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் 3 அணு உலைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள மேலும் 6 அணு உலைகள் மூடப்பட்டன. அங்கெல்லாம் அணு உலைகள் குளிர்ந்த நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பானில் தொடரும் நிலநடுக்கம்-மீண்டும் சுனாமி பீதி:
இந் நிலையில் இன்று அதிகாலை மத்திய ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. ஜப்பானில் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் மீட்பு பணிக்கு உதவ 45 நாடுகள் முன்வந்துள்ளன. நிவாரண உதவிகள் வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.




ஜப்பானை சிதைத்த பூகம்பம்-கடலோரங்களை 'விழுங்கிய' சுனாமி: ஏராளமானோர் பலி!

டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.


சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்துக்கு அருகே பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.

கடலுக்குள் போன லட்சக்கணக்கான வீடுகள்-வாகனங்கள் 

தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றன.தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கின. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.

முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. பாலங்கள் இடிந்து விழுந்தன. பல வீடுகளிலும் எரிவாயு குழாய்கள் வெடித்து தீ விபத்துகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின.

மேலும் அலைகள் ஊர்களுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல பகுதிகளில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

விமான நிலையம் அழிந்தது

சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 1500பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அணு மின் நிலையத்தில் தீ

இந்த நிலநடுக்கத்தால் கொயோடோவில் உள்ள தொஹோகு ஒனகாவா அணு மின் நிலையத்திலும், பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.

ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 மிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன.டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜப்பான் இருளில் மூழ்கியுள்ளது.

ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1300பேர் பலி

பூகம்பம் மற்றும் சுனாமிக்கு இதுவரை 1300பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் உயிர்ப் பலி மிக மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதவிர மேலும் பலரைக் காணவில்லை.

தைவானையும் சுனாமி தாக்கியது:

ஜப்பானை உலுக்கியெடுத்த சுனாமி அலைகள் இன்று மாலையில் தைவானையும் தாக்கியது. இருப்பினும் இவை மிகச் சிறிய அளவிலான அலைகளாகவே இருந்ததாகவும், சேதம் ஏதும் இல்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானின் கிழக்கு மற்றும் வட கிழக்குக் கடலோரங்களை இந்த மினி சுனாமி அலைகள் தாக்கின. அப்போது அலைகள் 4 இன்ச் உயரத்திற்கு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய அலைகள் வர வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொண்ட பிறகே தாங்களும் எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொள்ளவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

இந்த மினி சுனாமி தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை தைவான் அரசு அப்புறப்படுத்தி விட்டது. முழு தயார் நிலையில் மீட்புப் படையினர் வைக்கப்பட்டனர்.

இந்தோனஷியாவை எட்டிய அலைகள்-எரிமலை சீற்றம்:

இதற்கிடையே இன்று மாலை இந்த அலைகள் இந்தோனேஷியாவை எட்டிப் பிடித்தன. ஆனால், அலைகளின் உயரம் குறைவாக இருந்ததால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இந் நிலையில் இந்தோனேஷியாவின் மெளன்ட் கரேங்கேடாங் மலைப் பகுதியில் உள்ள எரிமலை இன்று சீறி வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய புகையால் சுலவேசி தீவுப் பகுதியில் பெரும் தூசி மண்டலம் பரவியுள்ளது.எரிமலைக் குழம்பு மலைப் பகுதியில் பரவி வருவதால் அப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அணுஉலையை குளிர்விக்க அமெரிக்கா உதவி.
டோக்கியோ : ஜப்பான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அணு உலைகளை குளிர்விக்க உதவி‌ செய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.









பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF