Thursday, March 10, 2011

இன்றைய செய்திகள்.


உலகக்கிண்ண போட்டிகளுக்கு அல்கைதா, லஷ்கர் இ-தொய்பா அமைப்புக்கள் தாக்குதல் நடாத்த திட்டம்!

அல்-கைதா மற்றும் லஷ்கர் இ-தொய்பா ஆகிய அமைப்புக்களால் இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளுக்கு தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியாவின் உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என இந்தியாவின் உளவுப் பிரிவின் பணிப்பாளர் கரையோர மாவட்ட தலைமைச் செயலாளர்களுக்கும் பாதுகாப்பு ஆணையாளர்களுக்கும் கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் மும்பையில் இடம்பெற்ற தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்ச் 2 ஆம் திகதியிடப்பட்ட உளவுப் பிரிவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லஷ்கர் இ-தொய்பா அமைப்பினர் சில வராங்களுக்குள் இந்தியாவில் பதுங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சய்புடீன் அன்சாரி தலைமையிலான வலையமைப்பினர் பூனேயில் உள்ள ஜேர்மன் பேக்கரி மீது நடாத்திய தாக்குதல் போன்று உலகக்கிண்ண போட்டிகளிலும் அவ்வாறானதொரு தாக்குதலுக்கு திட்டமிடுகின்றனர் என இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹில்டன் ஹோட்டல் அரசின் வசமானது!

கொழும்பின் பிரபலமான ஹில்டன் ஹோட்டலை கடந்த மாதம் அரசாங்கம் கையேற்றுள்ளது ஹில்டன் ஹோட்டல் உரிமையாளர் 2 மாத குத்தகை பணத்தையே இதுவரை அரசுக்கு வழங்கியுள்ளார். 

உரிய முறையில் குத்தகை பணத்தை செலுத்தாமை மற்றும் குத்தகைக்கான காலம் முடிவடைந்துள்ளமை ஆகியன காரணமாக அரசாங்கம் ஹில்டன் ஹோட்டலை கைப்பற்றியுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார். திருக்குமார் நடேசன் என்பவரே தற்போது ஹில்டன் ஹோட்டலின் தலைவராக செயற்படுகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1984 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தின் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் ஹில்டன் ஹோட்டல் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. Cornel & Company Ltd என்ற நிறுவனத்திற்கு 136 மில்லியன் ரூபாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.ஆனால் 27 மில்லியன் ரூபா மாத்திரமே நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு குத்தகை செலுத்தியுள்ளனர் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபிவிருத்தி நடவடிக்கையிலும் வெற்றி! ஜனாதிபதி மகிந்த

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கை போன்று அபிவிருத்தி நடவடிக்கையிலும் வெற்றி பெறுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நடப்பு அரசாங்கம், தேசிய விவசாய உற்பத்தி தொடர்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அபிவிருத்திகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுடன் அரசு நல்லுறவுடன் இல்லை! கரு ஜயசூரிய

முன்னர் நாம் ஆட்சியிலிருந்த போது எமது நாட்டிற்காக வெளிநாடுகள் பல உதவிகளை செய்தன. இன்றைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் சிறந்த நல்லுறவை பேணவில்லை. இதனால் எமது நாடு பின்தள்ளப்பட்ட நிலையிலுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டமாவடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

”அதிகமான மக்கள் மூன்று வேளை உணவைக் கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவதுடன், பிள்ளைகளின் மந்தப் போசாக்கு வீதம் 28ஆக அதிகரித்துள்ளது. பிள்ளைகளை அனாதை இல்லத்தில் கொண்டு போய் விடுவதற்காக தாய்மார்கள் நீதிமன்ற அனுமதியைப் பெறச்செல்கின்றனர். இதுவே இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியாகும். இன்று எதிர்க்கட்சிகளினால் ஒரு எதிர்ப்பு ஊர்வலத்தைக் கூட நடத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறு நடத்தினாலும் இரும்புக் கம்பிகளினால் தாக்குதல் நடத்தப்படுகின்றது. 

இதனைப் போக்குவதற்கு சிறந்த அரசியல் மாற்றமொன்றை உருவாக்குவதற்கு நடைபெறப்போகும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஒற்றுமைப்பட வேண்டும். எங்களது ஆட்சியில் இப்பிரதேசத்திற்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த காலங்களில் பெற்றுத்தந்துள்ளோம். இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியானது எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் ஈடுபடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

கோதபாயாவை கொலை செய்ய முயற்சி – கைதி தகவல்?

சிறைச்சாலைக்குள் வைத்து கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட திட்டம் பற்றி விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அரசாங்கத்தை கவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி திட்டம் பற்றியும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய மற்றும் ஜனாதிபி மகிந்த ராசபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட திட்டம் பற்றியும் தகவலை வெளியிட்ட சிறைக்கைதி ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனையடுத்தே இச்சதி திட்டம் பற்றியும் கைதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் பற்றியும் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இக்கைதி அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டம் பற்றி தெரிவித்ததாகவும் அதன் பின்னர் அவரை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார். வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இந்திக டி சில்வா எனும் நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு உணவு கொடுக்கவேண்டாம்! ஆளுனர் உத்தரவு.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவித்துள்ளார்.வட மாகாணத்தில் இயங்கும் ஆதார வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள் கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள், பிரசவ வைத்தியசாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்படும் உணவு வழங்கும் திட்டம் ஆளுநரின் உத்தரவையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வடமாகாண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இலங்கை முழுவதும் உள்ள மாகாண சபைகளுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் வடமாகாண வைத்தியசாலைகளில் மட்டும் உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தியிருப்பது  நோயாளர்களை தண்டிக்கும் ஒரு நடவடிக்கை என உள்ளுர் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போரினால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களின் மத்தியில் வாழும் வன்னிப்பிரதேச மக்கள் தங்களது உறவினர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது மூன்று வேளையும் வைத்தியசாலைக்கு சென்று உணவு வழங்க முடியாதவர்களாகவே உள்ளனர்.

உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் வடபகுதியில் தூர இடங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்பிணி பெண்கள் உட்பட சில நோயாளர்களுக்கு சத்துணவுகளை வழங்க வேண்டியது அவசியமாகும். ஆளுநரின் இந்நடவடிக்கை திட்டமிட்டு தமிழர்களை பழிவாங்கும் ஒரு செயல் என வடமாகாணத்தில் உள்ள உள்ளுர் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வல்வை கொத்தியாலி​ல் 17 அடி நீளமான சுறா..
வல்வெட்டித்துறை கொத்தியால் பிரதேச ஆள்கடல் மீனவர்களின் வலையில் 17 அடி நீளமுள்ள சுறா மீன் பிடிபட்டது.

இன்று மதியம் 2.00 வலையுடன் கொத்தியால் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. மீன உயிருடன் இருப்பதால் விலை பெசப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் அதிக விலைக்கு கேட்க்கும் வியாபாரிகளுக்கே தாம் விற்ப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தாம் மீனை உயிடுடன் வான் பிரதேசத்தில் வைத்திருப்பதகவும் வேறு பிரதேசங்களில் இருந்து வியாபாரிகள் வர்வதாகவும் தெரிவித்தனர்.அந்த பிரதேசம் திருவிழா போல் காட்ச்சியலிக்கின்றது.

17 வயது 22 அங்குல உயரம்! 

இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார். ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.

தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது. நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டாலும் கூட தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடைகின்றார் இவர். 

இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள். பிலிப்பைன்ஸின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இவர் வசித்து வருகின்றார்.

13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர். தற்போது உலகின் குள்ளமான மனிதராக இருப்பவர் நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகா இவரின் உயரம் 26.4 அங்குலம்.

அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் வரும்.
வாஷிங்டன் : "வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வரும் 2025ம் ஆண்டில், உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கலாம். அதாவது கிடைக்கும் தண்ணீரின் அளவு, தேவையை விட குறைவாக இருக்கும். குறிப்பாக ஆசிய நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும்.
அதுவும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். திபெத்திய பீடபூமியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால், ஆசியாவில் 150 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட ஒன்பது நதிகளுக்கு இதன் மூலம் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமான நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் பயன்படுத்தி பலனடைகின்றனர்.

பனிக்கட்டிகள் சிறியவையாகும் போது, கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைந்து விடும். குறிப்பாக இதர நீர் ஆதாயங்கள் குறைவாக கிடைக்கும் வறட்சியான காலக்கட்டத்தில், நதிகளில் நீரோட்டம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். காலநிலை மாற்றங்களாலும், பனிக்கட்டிகள் விரைவில் உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.

லிபியா கடாபி மீதான நடவடிக்கை : அமெரிக்கா தயக்கம்?
லிபியா மீது போர் விமானங்கள் பறக்க தடை கொண்டு வருவது குறித்து அமெரிக்காவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. "தடை விதிக்கப்பட்டால், லிபிய மக்கள் ஆயுதமேந்தி மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போராடுவர்' என்று, கடாபி எச்சரித்துள்ளார்.
கடாபி எதிர்ப்பாளர்கள் மீது அவரது ராணுவம் தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்கள் வசமிருந்த ஜாவியா நகரின் முக்கிய சதுக்கத்தை நேற்று கடாபி ராணுவம் கைப்பற்றியது. இதன் மூலம், மேற்குப் பகுதியில் எதிர்ப்பாளர்களின் ஆதிக்கத்தை குறைப்பதில் கடாபி தரப்பு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.


டிரிபோலியின் உயர்ந்த கட்டடங்களில் நின்று கொண்டு கடாபி ராணுவம், மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளி வருவதாகவும், டிரிபோலிக்கு வெளியே உள்ள பல இடங்களிலும் இதேபோல் நடப்பதாகவும் அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாவியா, ராஸ் லுனுப், பின் ஜாவத் மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் இருதரப்பு மோதல் உக்கிரமாக நடந்து வருகிறது.

எதிர்ப்பாளர்கள் கெடு நேற்று முன்தினம் இரவு, இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் வெளியிட்ட அறிக்கையில், "இன்னும் 72 மணி நேரத்தில் குண்டுவீச்சை நிறுத்தி விட்டு, லிபியாவை விட்டு கடாபி வெளியேறி விட்டால், நடந்த சம்பவங்களுக்காக அவர் மீது எதிர்காலத்தில் வழக்கு தொடர மாட்டோம்' என்று, தெரிவித்திருந்தார்.
அன்றுதான், நாட்டை விட்டு பத்திரமாக வெளியேற விரும்பி, எதிர்தரப்புக்கு கடாபி தூது அனுப்பினார் என்று தகவல்கள் வெளியாயின.


ஒபாமா நிர்வாகத்தில் பிளவு : சொந்த மக்களைக் கொன்று குவித்து வரும் கடாபி ராணுவத்தைத் தடுப்பதற்காக, லிபிய வான்வெளி கண்காணிப்பு, மனிதாபிமான உதவிகள், ஆயுதப் பரிமாற்றத் தடை, எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் அளிப்பது, போர் விமானங்கள் பறக்கத் தடை, அமெரிக்க ராணுவத்தின் நேரடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு சாத்தியங்களை அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

ஆனால், போர் விமானங்கள் பறக்க தடை மற்றும் நேரடி ராணுவ நடவடிக்கை ஆகியவற்றில் அமெரிக்க அரசில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், இரண்டையும் அமெரிக்காவே முன்னின்று செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இருவரும் அதை மறுத்து விட்டனர். இரண்டு நடவடிக்கையும் சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.,வின் அங்கீகாரத்தோடு மட்டுமே நடக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்தியா கருத்து : "போர் விமானங்கள் பறக்க தடை விதிப்பதாகக் கூறப்படுவதில், தெளிவில்லை. அதன் முக்கிய நோக்கம் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்று, ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க்கு அலையும் அமெரிக்கா : லிபியா மீதான போர் விமானங்கள் பறக்க தடையை உடனடியாக விதிக்கும்படி, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் அப்துல் ஜலீல், உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். இடைக்கால அரசை அங்கீகரிப்பதற்காக, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் கூடியுள்ள ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய ஜலீல் அரசின் பிரதிநிதி முகமது ஜெப்ரீல், வெளிநாட்டுப் படைகளின் ஊடுருவலை தாங்கள் விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், நேற்று லிபிய அரசு "டிவி'யில் கடாபி பேசியதாவது: மேற்கத்திய நாடுகள் போர் விமானங்கள் பறக்க தடை விதித்தால், அவர்களை எதிர்த்து லிபிய மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவர். லிபியாவின் எண்ணெய் வளத்தை துரோகிகளின் துணையோடு கைப்பற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், எகிப்து, அல்ஜீரியாவில் இருந்து சிலர் லிபியாவுக்குள் புகுந்து இந்நாட்டு மக்களை மயக்கி போராட தூண்டுகின்றனர். லிபியாவை, அல் குவைதா கைப்பற்றி விட்டால், பின், இஸ்ரேல் வரை அதன் ஆதிக்கம் வளர்ந்து விடும். லிபியாவையும், ஆப்ரிக்காவையும் பின்லேடன் கைப்பற்ற முயல்கிறார் என்பதை சர்வதே சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கடாபி தெரிவித்தார்.

பறந்து விட்டாரா கடாபி? : நேற்று லிபியத் தலைநகர் டிரிபோலியில் இருந்து புறப்பட்ட கடாபிக்குச் சொந்தமான மூன்று விமானங்கள், மூன்று திசைகளில் பறந்து சென்றன. அவற்றில் ஒன்று கிரீஸ் வான்வெளி வழியாக எகிப்துக்கும், மற்றொன்று, ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவுக்கும், மூன்றாவது, கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கும் சென்றன. அவற்றில் இருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
நாளைக்குள் மீட்புப் பணி முடியும் : லிபியாவில் தற்போது மீதம் உள்ள இந்தியர்களும், நாளைக்குள் மீட்கப்படுவர் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு "ட்விட்டரில்' இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு : தலாய் லாமா அறிவிப்பு
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, தற்போது மேற்கொண்டு வரும் அரசியல் பொறுப்புக்களில் இருந்து ஓய்வு‌பெறப் போவதாக அறிவித்துள்ளார். 1960ம் ஆண்டு முதல் தான் திபெத்திய பார்லிமெண்ட் அலுவல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இனி அதிலிருந்து விடுபட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திபெப் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றதன் 52வது ஆண்டுவிழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Bolero காரில் பவனி வரும் ஆடம்பர பிச்சைக்காரர்கள்!
அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள் ஆடம்பரமான கார்களில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.

ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் குழு, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, "பொலீரோ' காரில் வந்து பிச்சையெடுத்து அப்பகுதி கிராமத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். 
அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரி அருகே நந்தலபாடு கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் சிலர் மூன்று நாட்களாக ஆடம்பரமான, "பொலீரோ' காரில் வந்து, இதே மாவட்டத்தில், புட்லூரு மண்டலப் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு, இப்பகுதியில் உள்ள டவுன் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று, வீடு வீடாக பிச்சையெடுத்து பண வசூலில் ஈடுபடுகின்றனர். 


மாலை நேரமானதும், அனைவரும் பொலீரோ காரில் நந்தலபாடுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
தினமும் காரில் வந்து இறங்கும் இவர்கள், எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணித்த புட்லூர் பகுதி பொதுமக்கள், அவர்களை பின் தொடர்ந்ததில், அனைவரும் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று பிச்சையெடுத்து பணம் சம்பாதிப்பதை கண்டு, மூக்கின் மீது விரலை வைத்தனர்.

காதலால் வந்த மோதல் : வன்முறைக்கு பலி 10
எகிப்தில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் உள்ள ஹெல்வான் மாவட்டத்தின் சோல் பகுதியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ இளைஞரும், முஸ்லிம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு, இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதி சர்ச்சை முஸ்லிம்கள் தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கேயே தொழுகையும் நடத்தினர். தீ வைப்பில் இரண்டு பேர் பலியாயினர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில், சர்ச் தீக்கிரையானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர், மொகாட்டம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்றும் அந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்த போது அவ்வழியாக வந்த முஸ்லிம்கள், போக்குவரத்து தொந்தரவு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது, இரு தரப்பு மோதலாக உருவெடுத்தது. இரு தரப்பினரும், பரஸ்பரம் கற்கள் மற்றும் பாட்டில் வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர்.
இதில் ஆறு கிறிஸ்தவர்கள் உட்பட 10 பேர் பலியாயினர்; 110 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவம், நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. தீக்கிரையான சர்ச்சை, ராணுவம் விரைவில் கட்டிக் கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் மொத்த மக்கள் தொகையான எட்டு கோடியில், 10 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.



ஜப்பானில் தொடர் நிலநடுக்கம்.


ஜப்பானில் இன்று அதிகாலை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி இருந்தது. இதனால் லேசான சுனாமி அலைகள் உருவானது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் சுனாமி அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.



இலங்கை கோடீஸ்வரர் ராஜரத்தினம் வழக்கு தீவிரம்.


அமெரிக்க பங்குச் சந்தையில் முன்கூட்டியே தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் பெரிய அளவில் சற்று வீழ்ச்சியுறும் கம்பெனிகளின் பங்கை வாங்கி பின், விற்பதில் பல ஆயிரம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினம். இவர் மீதான விசாரணை துவங்கியுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என தெரிகிறது.
இலங்கையில் பிறந்த அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினம், நியுயார்க்கில் கல்லியன் குழுமத்தை துவங்கி, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். சர்வதேச கம்பெனிகளின் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களை பெற்று, அதன் மூலம் பிரபல கம்பெனிகளின் பங்குகளை, "இன்சைடர் டிரேடிங்' மூலம் அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தார். இதற்கான நடைமுறைக்கு, "ஹெட்ஜ் பண்ட்' என்பது அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், அதில் மோசடி செய்தது தான் பிரச்னையானது.





கோல்டுமென் சாக்ஸ் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் அந்த நிறுவன பங்குகளை விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததாக, ராஜரத்தினம் மீது அமெரிக்க போலீசார் குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ராஜரத்தினம் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கும், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ரஜத் குப்தாவிற்கும் இடையே நடந்த உரையாடலின் ஒலிப்பதிவை, இந்த வழக்கிற்கு சாட்சியமாக அமெரிக்க போலீசார் வைத்துள்ளனர்.

ராஜ் ராஜரத்தினம் மீதான வழக்கு விசாரணையை மேற்கொள்ள சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவை தேர்வு செய்ய, நேற்று முன்தினம் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில், பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்த இவ்வழக்கை விசாரிப்பதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டுள்ளனர். விசாரணை குழுவில் இடம் பெறுவதற்காக 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாற்றாக ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவிலிருந்து நீதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார்.

இவ்வழக்கு விசாரணை, இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர். இதில், கோல்டுமென் சாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாயிட் பிளாக்பீனும் ஒருவர். ராஜ் ராஜரத்தினம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த வழக்கில், இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ராஜீவ் கோயல், மிக்கின்சே கம்பெனியின் முன்னாள் இயக்குனர் அனில் குமார் உட்பட பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் விசாரணைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு.
லிபியாவில் நிலவி வரும் பதற்ற நிலை மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வருவதன் காரணமாக ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூயார்க்கின் ஏப்ரல் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் விலை 44 சதவீதம் அதிகரித்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 104.82 டாலர்களாக உள்ளது. இந்த கலவரங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வருவதால் எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச யூனுசுக்கு அமெரிக்கா ஆதரவு.
நோபல் பரிசு பெற்றவரும், கிராமின் வங்கி நிறுவனருமான முகமது யூனுஸ்(70), அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, நேற்று வங்கதேச சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா, யூனுசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் புகழ்பெற்ற கிராமின் வங்கியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முகமது யூனுஸ். அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றதில் இருந்து, யூனுசும் அவரது வங்கியும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாயினர்.

கடந்த 2007, பிப்ரவரியில் யூனுஸ் தான் ஓர் அரசியல் கட்சி துவக்க இருப்பதாகத் தெரிவித்தார். அந்நாட்டு ஏழைகள் மத்தியில் அவருக்கு அபரிமிதமான செல்வாக்கு உண்டு என்பதால் அவரது இந்த அறிவிப்பு வங்கதேச அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. எனினும் அந்தாண்டு மே மாதம் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம், அவர் மீதான நிதிமோசடிக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திய நார்வே நாட்டு ஆவணங்களின் வெளியீட்டுக்குப் பின் பிரதமர் ஹசீனா, யூனுஸ் பிற சிறு கடன் நிறுவனங்களை விட கிராமின் வங்கி அதிகளவில் வட்டி வாங்கி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதாகச் சாடினார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக யூனுஸ் தெரிவித்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த வாரம், வங்கதேச மத்திய வங்கி, "கிராமின் வங்கி நிர்வாக விதிகளின்படி, 60 வயது வரை மட்டுமே ஒருவர் அதன் நிர்வாக இயக்குனராக இருக்க முடியும்; ஆனால் யூனுஸ் அந்த வயதைக் கடந்த பின்னும் இயக்குனராகத் தொடர்ந்தது சட்டவிரோதம்' என்று கூறி அவரைப் பதவி நீக்கம் செய்தது. யூனுசுக்கு ஆதரவாக, தலைநகர் தாகாவில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது.

அதை எதிர்த்து ஐகோர்ட்டில் யூனுஸ் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த ஐகோர்ட் நீதிபதிகள் இருவரும், "மத்திய வங்கியின் முடிவு சட்டப்படி சரியானதே. அதனால் அவர் இயக்குனர் பதவியில் இருந்து விலக வேண்டும். எனினும் சட்டரீதியான எந்தப் பதவியிலும் அவர் தொடராமல் தனது பணியை அந்த வங்கிக்கு அளிக்கலாம்' என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து யூனுஸ், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு வரும் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்கா ஆதரவு: நேற்று முன்தினம் யூனுசிடம் தொலைபேசி மூலம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அவருக்கு அமெரிக்க அரசின் ஆதரவை தெரிவித்தார். அதோடு, யூனுசை நீக்க வங்கதேச அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். யூனுஸ் நீக்கப்பட வேண்டும் என்ற வங்கதேச அரசின் இம்முடிவு, அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்ன பிரச்னை? : 1983ல் கிராமின் வங்கியை நிறுவினார் முகமது யூனுஸ்.
எவ்விதப் பிணையத் தொகையும் அளிக்காமல் ஏழைகள் இவ்வங்கியில் கடன் பெற்றதால் மிகவும் பிரபலமானது.
1999ல் வங்கதேச மத்திய வங்கியின் ஆலோசனைப்படி, கிராமின் வங்கி நிர்வாகக் குழு, கால நிர்ணயம் எதுவும் செய்யாமல், யூனுசையே நிர்வாக இயக்குனராக மீண்டும் நியமித்தது.
2006ல் வங்கியும் யூனுசும் தங்கள் பணிக்காக நோபல் பரிசு பெற்றனர்.
2010, நவம்பரில், நார்வே நாட்டு ஆவணங்கள் சில, யூனுஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டின. ஆனால் நார்வே அரசு அதை மறுத்தது.
2011, ஜனவரியில், வங்கி நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
2011, மார்ச்சில், மத்திய வங்கி நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து யூனுசை நீக்கியது.

தற்கொலைப்படைத் தாக்குதல் : 34 பேர் உடல் சிதறி பலி
பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில்,34 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், பெஷாவர் நகருக்கு அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் அடிசாய் என்ற கிராமத்தில், "தலிபான் இயக்கங்களுக்கு எதிரான அமைதிக்குழு'வின் தலைவர் ஹக்கீம் கான் வசித்து வந்தார். இவரது மனைவி அண்மையில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த பயங்கர சம்பவத்தில், 34 பேர் உடல் சிதறி பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவும், தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த இந்த குழுவினர், அண்மைக்காலமாக, தங்களது முயற்சிக்கு உரிய ஆதரவை அளிக்க, அரசு மறுத்து வருவதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தெரிக் - இ தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF