Thursday, March 17, 2011

இன்றைய செய்திகள்.


234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று!

நாடளாவிய ரீதியில் 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் இன்று 7 ஆயிரத்து 396 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

234 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 3ஆயிரத்து 36 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 ஆயிரத்து 108 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள 64 சபைகள் மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றப்படாத பகுதியில் இருக்கும் இரண்டு சபைகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட 34 சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று இடம்பெறுகின்றது. 

இம்முறை வாக்களிப்பு 2009ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றமையால் வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்காளர் இடாப்பில் தங்களுடைய பெயர் இருந்தால் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். 

இறுதி பெறுபேற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்வகையில் தேர்தல் மோசடிகள் இடம்பெறுமாயின் அவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணுவது பிற்போடப்படும். முதல் பெறுபேறுகளை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேர்வின் சில்வாவுக்கு விதி விலக்கு! வாக்களிப்பதை படம் பிடிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி.

வாக்களிப்பு நிலையங்களில் ஊடகங்களை அனுமதிக்கக்கூடாது என நேற்று தேர்தல் செயலகம் கடுமையாக எச்சரித்தபோதும் இன்று களனி பிரதேச வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா வாக்களிப்பதை ஊடகங்கள் படம் பிடித்துள்ளது. 

அமைச்சர் மேர்வின் சில்வா தனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சகிதம் வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து வாக்களிப்பதை தனியார் மற்றும் அரச ஊடகங்கள் படம் பிடித்துள்ளன. அதேவேளை களனி பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகள் இருக்கும் இடத்திற்கு ஊடகவியலாளர்கள் நுழைவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சில நிமிடங்களில் பொலிஸாரால் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

எதுஎவ்வாறிருப்பினும் அமைச்சர் மேர்வின் சில்வா வாக்களிப்பு மத்திய நிலையத்திற்குள் வாக்களிப்பதையும் அதன்பின் தேர்தல் தொடர்பாக அவரது கருத்தையும் ஊடகவியலாளர்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் வாக்களிக்கச் செல்வதை மாத்திரமே படம் பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் முடியும் என நேற்று தேர்தல் செயலகம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் இன்றுகாலை முதலாவது தேர்தல் வன்முறை ஆரம்பம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் அரலகன்வில தேர்தல் மத்திய நிலையத்தில் இன்று காலை வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னர் கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. அரலகன்வில தேர்தல் மத்திய நிலையத்தின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டநிலையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்தனர். 

அரலகன்விலயில் உள்ளுராட்சி தேர்தல் மத்திய நிலையமான பாடசாலை மீதே கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை.
ஜப்பானின் அணுக் கசிவு தொடர்பில் போலியான செய்தியுடன் குறுந்தகவலொன்று பரவி வருவதாகவும் இது ஜப்பான் மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி. ஊடக சேவையின் பெயரில் இக் குறுந்தகவல் செய்தி வெளியாகியுள்ளது.

அத் தகவல் வருமாறு :

BBC Flash news : Japan Government confirms radiation leak at Fukushima nuclear plants. Asian countries should take necessary precautions. If rain comes, remain indoors first 24 hours. Close doors and windows. Swab neck skin with betadine where thyroid area is, radiation hits thyroid first. Take extra precautions. Radiation may hit Philippine at around 4 pm today. If it rains today or in the next few days in Hong Kong. Do not go under the rain. If you get caught out, use an umbrella or raincoat, even if it is only a drizzle. Radioactive particles, which may cause burns, alopecia or even cancer, may be in the rain.

இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்:

ஜப்பானில் அணுக் கசிவானது அந்நாட்டு அரசினால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும். மழை பெய்தால் முதல் 24 மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்.கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில் தாக்குவதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச் செய்தி தொடர்கின்றது.

எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லையெனவும் பி.பி.சி தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இக் குறுந்தகவல் போலியாதென அறிவித்துள்ளது. அத்துடன் விஷமிகள் இது போன்ற குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இணையத்தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு ஓட்டம்.
ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது. நான்கு உலைகளின் உண்மையான நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், கதிர்வீச்சு அபாயத்தால் ஜப்பானில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். புக்குஷிமா டாய் இச்சியில் ஆறு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் நான்கு உலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டது. உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அவற்றின் உண்மை நிலை என்ன என்பது பற்றி சரிவரத் தெரிவிக்கவில்லை. அணுமின் நிலையங்களில் தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருப்பது மட்டும் தெளிவாகிறது.
என்ன சேதம்? : நேற்று முன்தினம், 2 மற்றும் 4ம் உலைகளில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, கதிர்வீச்சு அபாயம் கருதி, நிலையப் பணியாளர்கள் 750 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீதி 50 பேர் மட்டும், ஆறு உலைகளின் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெடிவிபத்துக்களில், 1, 3 மற்றும் 4ம் உலைகளில் இரண்டாம் நிலைச் சுற்றுச் சுவர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. 2ம் உலையில், உலைக்கு அடிப்புறம் வைக்கப்பட்டிருக்கும் நீர் கொள்கலனில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு வகையான சேதங்களாலும், உலைகளில் வெப்பம் அதிகரித்துள்ளது.
கதிர்வீச்சு அதிகரிப்பு: வெடிவிபத்துக்குப் பின் உலைகளில் இருந்த நீர் வற்றிப் போய்விட்டதால், தொடர்ந்து கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது. இப்பணியில் ஆறு உலைகளிலும் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மின்சாரம் இல்லாததால், தற்காலிக தீயணைப்பு குழாய்கள் மூலம் கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது. ஆனால், தண்ணீர் செலுத்தப்படும் வேகத்தை விட, வெப்பம் பல மடங்கு அதிகரித்தது. ஒருகட்டத்தில் யாரும் உலைக் கட்டடத்திற்கு வெளியில் நிற்க முடியாத நிலை உருவானது. அதேநேரம், காற்றில் கதிர்வீச்சின் அளவும் அதிகரித்தது. நேற்று காலையில் காற்றில் இயல்பை விட 200ல் இருந்து 400 மடங்கு கதிர்வீச்சின் அளவு உயர்ந்தது. சிறிது நேரத்தில் அதுவே 1,000 மடங்காக அதிகரித்தது. இதனால், உலைகளுக்கு கடல் நீர் செலுத்தும் வேலை கைவிடப்பட்டு பணியாளர் 50 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி: ஒவ்வொரு உலையிலும், உலைக்கு மேற்புறம், பயன்படுத்தப்பட்ட யுரேனியம் கம்பிகள், தனியாக ஒரு நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருக்கும். உலைகளுக்குள் கடல் நீர் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்ட உடன், இந்த கம்பிகளில் இருக்கும் பகுதிகளில் வெப்பம் அதிகரித்தது. தொடர்ந்து 3 மற்றும் 4ம் உலைகளில் இருந்து புகை மூட்டம் எழுந்தது. அதேநேரம், காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உலைகளின் மீது தண்ணீர் ஊற்றும் முயற்சி நடந்தது. ஆனால், அதிக வெப்பம் மற்றும் கதிர்வீச்சு அபாயத்தால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, "தண்ணீர் ஊற்றுவதால் மட்டுமே இந்தப் பிரச்னை தீர்ந்து பயன்படுத்தப்பட்ட கம்பிகளின் நிலை என்ன, உலையில் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது, கதிர்வீச்சு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறதா என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு, ஜப்பான் அரசோ, டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியோ இன்னும் சரியான தெளிவான விடையளிக்கவில்லை. இதனால், உலைகளின் உண்மை நிலை என்ன என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. இதுகுறித்து ஆராய, அமெரிக்காவின் உதவியை ஜப்பான் நாடியுள்ளது.
வெளிநாட்டவர் பீதி: கதிர்வீச்சு அபாயத்தினால், ஜப்பானில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் தங்கள் அதிகாரிகளை உடனடியாக ஜப்பானை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன.
சீனா, கொரியா பீதி
* ஜப்பானில் அணு உலைகளுக்கு ஏற்பட்ட கதியை அடுத்து, புதிய அணு உலைகளை நிறுவுவதாக போட்டிருந்த திட்டத்தை சீனா ரத்து செய்து விட்டது.
* 20 அணுமின் உலைகள் கொண்ட தென்கொரியா, தனது அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
* ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நேற்று மீண்டும் 6 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
* "ஒருவேளை ஜப்பானில் இருந்து அமெரிக்கா நோக்கி கதிர்வீச்சு கசிவு வந்தாலும், ஹவாய் தீவை அது அடையும் முன்பே வலுவிழந்து விடும். அதனால், அமெரிக்கா கதிர்வீச்சால் பாதிக்கப்படாது' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரு அணு உலைகள் உள்ளன. அதனால், அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களின் சந்தேகத்தைப் போக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கொரிய தீபகற்பம், கிழக்கு நோக்கி 5 செ.மீ., அளவில் நகர்ந்துள்ளதாக அந்நாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
* ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 3,676 ஐயும், காணாமல் போனோர் எண்ணிக்கை 7,843 ஐயும் தொட்டுள்ளது.
* ஜப்பானில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர், அந்தந்த உள்ளூர் அரசு அலுவலகங்களில் தங்களது கைரேகைகள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* அவோமோரி, ஐவேட், மியாகி மற்றும் புக்குஷிமா மாகாணங்களில் தங்கியிருந்து தற்போது நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டவர் பற்றிய விவரங்களைத் தர, அந்நாட்டு குடியேற்றத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
* ஜப்பானில் இருந்து வரும் சரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் கதிர்வீச்சுப் பரிசோதனை செய்யப்படும் என்று ஷாங்காய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* "ஜப்பானில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு உலகளவில் பரவவில்லை. அதனால், தயவு செய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்?
சர்வதேச அணுசக்தி முகமை 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை குறிப்பு அனுப்பியதாகவும், அதில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் புகுஷிமாவில் இருக்கும் அணுமின்நிலையத்திற்கு பாதிப்பும், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் அணுமின் நிலையம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்திருந்தது. இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர்நெட் ஒரு உளவாளி இயந்திரம் விக்கிலீக்ஸ் அசாஞ்ச் புகழாரம்.
 "உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது' என, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது: இன்டர்நெட் குறிப்பாக, பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள், ரகசியங்களை திரட்ட, அரசுகளுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, கெய்ரோவில் பேஸ்புக் புரட்சி வெடித்து இருக்க வேண்டும். முக்கிய பங்கேற்பாளர்களை திரட்ட, பேஸ்புக் உதவியாக இருந்தது. இதன் பின்னர் இவர்கள் அடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை தெரிவிக்கும் திறன், இன்டர்நெட்டுக்கு உள்ளது. உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு, இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. கொடுங்கோல் ஆட்சிகளை அழிக்க தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கோ அல்லது மனித உரிமைக்கோ தொழில்நுட்பம் ஆதரவானது இல்லை. அரசாங்கங்களை உளவு பார்க்க உதவக் கூடியது. அரபு நாடுகளில் எழுந்துள்ள புரட்சிக்கு என்னுடைய இணையதளம் உதவியாக இருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் வெளியானது மூலம் டுனீசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அசாஞ்ச் பேசினார்.
டில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் இருந்து பரிமாறப்பட்ட தகவலில், "கேரளா மாபியா' பிரதமர் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,"நாங்கள் கேரளா மாபியாக்கள் அல்ல. அமெரிக்கர்கள் கூறுவதை நாங்கள் கேட்க வேண்டியது இல்லை' என்று, சபரிமலை சென்றிருந்த போது, கேரள "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF