மத்தியகிழக்கு நாடுகளில் ஆரம்பித்துள்ள அமைதியின்மை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நாம் உலகளவில் ஓர் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம் என நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
ஐநாவின் ஆதரவுடன் லிபியா மீது ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், பஹிரையினுக்குள் பிரவேசித்திருக்கும் சவுதி அரேபியாவின் இராணுவ வாகனங்கள், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், செயற்பாடிழந்து போன அணுஉலைகள் என்பன எண்ணையின் விலையை அதிகரிக்க செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உலகில் எண்ணை ஏற்றுமதியில் 12 வது இடத்தை லிபியா வகிக்கிறது.லிபிய மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் நடாத்தப்படும் யுத்தத்தின் முதல் கட்டமான விமானம் பறக்காத வான் பரப்பை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டோம் என அமெரிக்க தலைப்பீடம் கூறுவது போல இலகுவாக முடிந்து விடும் பிரச்சனையல்ல என்பதும், இது நீண்ட காலம் நீடிக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை இப்போதே தோன்ற ஆரம்பித்து விட்டன.
மேலைத்தேயக் கூட்டுடன் இணைந்த அரபிக் லீக், ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், பொதுமக்களின் உயிரிழப்பும் தாம் எடுத்த முடிவு சரிதான என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அமைப்பாக்கப்படாத எதிரணி, அரசியல் திட்டங்கள் எதுவுமின்றி அயல்நாட்டு இராணுவ நடவடிக்கைகள் மட்டும் மக்களுக்கு நிரந்தர தீர்வுகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் பல நாடுகளின் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான யுத்ததில் ஈடுபட்டிருக்கும் ஐநா அந்த நாட்டிற்கு அரசியல் தீர்வு எதையும் முன்வைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதல்ல. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் அந்த நாட்டில் காணப்படும் உட்கட்டமைப்புக்களையும், கட்டிடங்களையும் இடித்து தகர்த்துக் கொண்டிருக்கின்றன நவீன இரக போர் இயந்திரங்கள்.
இது இவ்வாறிருக்க பஹிரைனில் நடைபெறும் நிகழ்வுகள் பெரிதும் வெளியே தெரியாமல் இருக்கின்றன. அமெரிக்காவின் நட்புக்கு பாத்திரமான சவுதி அரேபியா தனது பாரிய எண்ணை படுக்கைகளுக்கு அருகில் இருக்கும் பஹிரைனுக்குள் இராணுவாகனங்களை அனுப்பி வைத்துள்ளது. இங்குள்ள சுணி பிரிவினரின் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செயற்பாடு அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி நடாத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பஹிரைனிலுள்ள சிறுபான்மையின ஷியா மதப்பிரிவினருக்கு ஈரான் தனது ஆதரவைத் தெரிவிக்க முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்பிராந்தியத்தில் இவ்விரு மதப்பிரிவினரிடையேயும் முரண்பாடுகள் வலுவடையும் பட்சத்தில் அது நீண்ட காலம் நீடிக்கும் பிரகாரம், எரிபொருளின் விலையேற்றம் தவிர்க்க இயலாததாகிறது.
சுணி மற்றும் ஷியா மதப்பிரிவினரிடையே முரண்பாடுகள் நீடிக்கும் பட்சத்தில் இந்த இருபிரிவினையும் ஆதரிக்கும் நாடுகளான சவுதி அரேபியாவும் ஈரானும் பலப்பரீட்சையில் இறங்கினால் இவற்றுக்கு மத்தியில் அகப்படும் பஹிரைனின் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக அமையலாம். மத்திய கிழக்கு நாடுகளை வளங்கொழிக்கும் நாடாக்குவதில் முக்கிய பங்கினை வகித்த எண்ணை வளம் அந்த நாடுகளின் பின்னடைவுக்கு மட்டுமல்லாது உலகளவிலான பின்னடைவுக்கும் காரணமாக அமையலாம்.
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அலை சவுதி அரேபியாவைத் தாக்கினால், லிபியாவிலிருந்து கிடைக்கப்பெறும் எண்ணையின் அளவை விட அதிகளவு எண்ணையை இழக்க நேரிடலாம். ஜப்பானில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு காணாத அழிவு, மின் அணு உலைகளின் பயனற்ற நிலைமை என்பனவும் பங்குச்சந்தையில் எண்ணை விலையில் தாக்கத்தை ஏற்பட்டுத்தும் என நாம் நம்பலாம்.
மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது கருக் கொண்டிருக்கும் யுத்தமேகங்களும் அமைதியற்ற நிலையும் உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பல வருடகாலமாக La Niña காலநிலையினால்(La Niña என்பது பசுபிக் சமுத்திரத்தினை குளிரச்செய்யும் காலநிலைமாற்றத்தைக் குறிக்கும் பதம், இது வரட்சியை வேறு பிரதேசங்களில் ஏற்படுத்தும், சூறவளிகள், மற்றும் உயர் தாழ் அமுக்கங்களுக்கும் காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது).
வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் பயிர்ச்செய்கை மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதேவேளை ஜப்பானில் அணு உலைக்கசிவினால் அங்குள்ள உணவுப்பொருட்கள் மற்றும் கடலுணவு போன்றவற்றை மக்கள் உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் ஜப்பான் தனது உணவுத் தேவையில் தன்னிறைவு பெறுவதற்கு கணிசமானளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
எண்ணை விலை உயர்வும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் உலகின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பின்னடைவை ஏற்படுத்தும் போலத்தெரிகிறது இன்று. இப்போது சொல்லுங்கள் உலகம் முன்னேறிச் செல்கின்றதா.. என்று..?