பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக இளம்வயதினருக்கு மனஅழுத்தம் போன்ற வியாதிகள் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
சமூக இணையத்தளங்களுடன் கூடுதலான நேரத்தைச் செலவிடும் இளவயதினருக்கே அவ்வாறான மன அழுத்தம் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.அத்துடன் அவ்வாறான வலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் மூலமாக சிறுவயதினர் மத்தியில் தங்களைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை வளரவும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமைப்படும் இளவயதினர் பிற நபர்களின் தொடர்புகளிலிருந்து ஒதுங்கியிருக்க முற்படுவதன் மூலம் அவர்கள் மனதளவில் சமூகத்தை வெறுக்கும் மனோநிலைக்கு படிப்படியாக மாறி வருவதுடன், சமூக உறவுகளின் பெறுமதியும் படிப்படியாக குறைந்து வருவதற்கு காரணமாக அமைந்து விடுவதாகவும் ஆய்வுக்குழு குறிப்பிடுகின்றது.
அதன் காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதுடன், சமூக உறவுகளின் பெறுமதி குறித்து இளவயதினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருப்பதாகவும் ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வலியுறுத்துகின்றது.