Friday, March 4, 2011

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது ஐ பேட் 2: சாதனை படைக்குமா?


இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் சாதனமான அப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 டெப்லட் கணனி நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்காகஅப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ பேட் & ஐ பேட் 2 

அப்பிளின் முதல் ஐ பேட்கள் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் விற்பனையாகியதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் புதிய சில மாற்றங்களுடன் ஐபேட் 2 வெளியாகியுள்ளது. முன்னையதினை போல இதுவும் விற்பனையில் சாதனை படைக்குமென்பதே அப்பிளின் எதிர்ப்பார்ப்பு.

டெப்லட் கணனிகளின் சந்தை தற்போதைய சந்தை நிலைவரத்தின் படி டெப்லட் கணனிகளானது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. முன்னர் இல்லாதவாறு இவற்றிற்கான கேள்விகள் தற்போது பெரிதும் அதிகரித்துள்ளன.

சாதாரண கணனிகள் மற்றும் மடிக்கணனிகளின் விற்பனையும் டெப்லட் கணனிகளின் வருகையினால் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலும் இவை அப்பிள் நிறுவனத்தினுடையதும், கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டியங்குபவையுமாகும்.


அப்பிள் vs அண்ட்ரோயிட்

அப்பிள் போலவே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்ட டெப்லட்கள் கணனிகளும் வேகமாக பிரபலம் பெற்று வருகின்றன. அண்ட்ரோயிடானது திறந்த மூல மென்பொருள் ( open source) ஆகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகள் இதனைக் கொண்டே இயங்குகின்றன. இது அப்பிள் நிறுவனத்திற்கு பாரிய சவாலாகும். இதனைக் கருத்தில் கொண்டே அப்பிள் தனது சந்தைப்பங்கினை தக்கவைப்பதற்கு பல புதிய நவீன சாதனங்களை தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் மோட்டோரொலா நிறுவனம் அதன் எக்ஸூம் டெப்லட் கணனியை அறிமுகப்படுத்தியது. இது அண்ட்ரோயிட் 'அணிகோம்' இயக்குதளத்தினை இது கொண்டிருப்பதானது இதன் பெரும் பலமாகும். அண்ட்ரோய்டின் நவீன 3.0 பதிப்பான 'அணிகோம்' இயக்குதளத்தினை கொண்ட முதல் சாதனம் இதுவாகும். இவற்றைத்தவிர பல முக்கிய நிறுவங்களும் தங்களது டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியவாறே உள்ளன. அவற்றில் எச்.பி மற்றும் பிளக்பெரி ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

அப்பிள் vs மோட்டோரொல்லா vs எச்.பி vs பிளக்பெரி
சந்தையில் இவ்வாறு பல போட்டியாளர்கள் நுழையும் போது விலையிடல் போட்டித்தன்மையுடையதாகும். இது தனியுரிமையை நிலையையும், தன்னிச்சையான விலையிடலையும் தடுக்கும். இதன் மூலம் பொருட்களின் தரம் அதிகரிப்பதுடன், உற்பத்திப்பொருட்கள் தனித்துவம் பெறும் இதனால் வாடிக்கையாளர் நன்மையடைவர் என்பதே உண்மை.


தரம் மற்றும் தொழிநுட்பங்களில் தனித்துவம் மிக்க அப்பிளின் ஐ பேட் இப் பலமுனைப் போட்டியில் ஜெயிக்குமா என்பதினை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF