அதிகம் பேசுபவர்களை விட்டு விடுங்கள். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள். ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விடயமே.
நண்பர்களோ, தெரிந்தவர்களோ அல்லது அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை முன் வைப்பதோடு குறிப்பிட்ட அந்த பொருள் குறித்து நமக்கு தோன்றாத அல்லது நாம் நினைத்து பார்த்திராத கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும்.
தான் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று இருப்பதை விட மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்வது பல விதங்களில் பயனுள்ளதே. பிறருடன் விவாதிப்பதை விட இதற்கு சிறந்த வழி வேறில்லை. விவாதங்கள் நல்லது. விவாதிக்க நானும் தயார் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக என்றே அழகான ஒரு இணையதளம் இருக்கிறது.
திஸ்.இஸ் என்னும் அந்த தளத்தில் எந்த தலைப்பு குறித்தும் சுலபமாக விவாதிக்கலாம். எந்த விஷயம் குறித்து நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்களோ அதற்கான பக்கத்தை இந்த தளத்தில் உருவாக்கி கொண்டு உங்கள் மனதில் உள்ள கருத்தை தெரிவிக்கலாம்.
விவாதத்திற்கான பக்கத்தை அமைப்பது மிகவும் சுலபம். பெயரையும், இமெயில் முகவரியையும் பதிவு செய்து விட்டு விவாதத்துக்கான தலைப்பை குறிப்பிட்டு விவாதத்திற்கான கருத்தை குறிப்பிட்டால் போதுமானது.
அதன் பிறகு இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் அந்த கருத்தை வெட்டியோ ஆதாரித்தோ தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் பதில் தெரிவிக்கலாம். வேறு ஒருவர் அதற்கு தன் கருத்தை பதிவு செய்யலாம். இப்படியாக தொடர் பரிமாற்றமாக கருத்துக்கள், மாற்று கருத்துக்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
நாம் நினைத்தை மாற்றி கொள்ள வைக்காவிட்டாலும் மற்றவர்களின் கோணங்கள் மற்றும் பார்வைகள் புதிய புரிதலை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்கள் மாற்று கருத்துக்கள் நம்முடைய கருத்து மேலும் வலுப்படவும் உதவலாம். அந்த வகையில் இந்த தளம் ஒருவருடைய கருத்துக்களை பட்டை தீட்டிக்கொள்ளவும், புரிதலை அதிகமாக்கி கொள்ளவும் கை கொடுக்கும்.
இணையத்தின் ஆதார பண்பே விவாதத்திற்கு வழி வகுப்பது தான் என்னும் போது விவாதிப்பதற்காகவே ஒரு தளம் இருப்பது திறந்த மனம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதோடு இந்த தளத்தின் எளிமையான வடிவமைப்பு விவாதிப்பதை மேலும் சுலபமாக்குகிறது.
ஆனால் ஒன்று இந்த தளம் இப்போதைக்கு அறிமுக நிலையிலேயே இருக்கிறது. விவாதுப்பதற்கும் கருத்து சொல்லவும் ஆர்வம் கொண்ட ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்க முடிந்தாலே இந்த தளம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும்.