Tuesday, March 1, 2011

ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகள் லிபியாவைச் சுற்றிவளைக்க உள்ளன: ஹிலாரி கிளிண்டன்


தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது.
அவசர நிலைமைகள் ஏற்படும் போது அதற்கு முகம் கொடுக்கத்தக்க வகையில் அவ்வாறு இராணுவம் நிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் அதன் இன்னொரு நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கடல் அருகே அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியின் சிசிலியா தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கமாண்டோக்கள் முகாமிட்டுள்ளனர்.
அவர்களுக்கென விசேட முகாம்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையே லிபியாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிப்பது குறித்தும் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.
அதன் மூலம் வான் வழியாக கடாபி வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்று கருதப்படுகின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF