பணியிடங்களில் பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் பெண்களால் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும் என ஜேர்மனி அரசு வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக ஜேர்மனியின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் புதன்கிழமையன்று அரசு மேற்கொண்ட பேச்சு வார்த்தை உரிய பலன் தரவில்லை.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக ஜேர்மனி தொழிலாளர் துறை அமைச்சர் உர்சுலா வோன்டென் பேசுகையில்,"பெரும் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய பலன் கிடைக்கவில்லை. இது குறித்து உரிய கூடுதல் அவகாசம் அளிப்பதை அனுமதிக்கின்றோம். ஆனால் பெண்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு அளிப்பது குறித்து உரிய முடிவு எட்டப்பட வேண்டும்" என்றார்.
பெண்களுக்கு நிர்வாக நிலைகளில் அதிக இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஜேர்மனி அரசு நடத்தியப் பேச்சு வார்த்தையில் நாட்டின் 30 பெரும் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கு நிறுவனங்களில் உரிய இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என அமைச்சர் உர்சுலா வோன்டென் வலியுறுத்தி வருகிறார்.
பேச்சு வார்த்தை குறித்து பி.எப்.டபிள்யூ கார் நிறுவனத்தின் ஹரால்டு கிரகர் கூறுகையில்,"அரசுடன் நடத்தும் பேச்சு வார்த்தை நல்ல நிலையில் உள்ளது" என்றார். 2018 அல்லது 2020 ம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம் பெற வேண்டும் என்று அமைச்சர் வோன் டென் வலியுறுத்துகிறார். நாட்டில் உள்ள 200 முதன்மை நிறுவனங்களில் நிர்வாகிகளாக 2.5 சதவீத பெண்கள் உள்ளனர் என அவர் கூறினார்.
ஜப்பானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: பிரான்ஸ்
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இன்னும் தீர்வு காண முடியாத பிரச்சனைகள் புகுஷிமா அணு மின் நிலையத்தில் நிலவுகின்றன.
ஜப்பானின் புகுஷிமா பகுதியில் மட்டுமல்லாது தலைநகர் டோக்கியோவிலும் அயோடின் கதிர்வீச்சுத் தாக்கம் காணப்படுகிறது. ஜப்பான் இயற்கை பேரிடரால் உருக்குலைந்த புகுஷிமா அணு மின் நிலைய நிகழ்வில் இருந்து புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கற்றுக் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அணு சக்தி பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.இது குறித்து இந்த ஆணையத்தின் தலைவர் ஆண்ட்ரே கிளாடே லாகோஸ்ட் கூறுகையில்,"ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலைய விபத்தில் இருந்து நாம் புதிய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது" என்றார்.
பிரான்ஸ் நாடாளுமன்றமன்றத்தில் 2010 ம் ஆண்டிற்கான பிரான்ஸ் அணு சக்தி பாதுகாப்பு அறிக்கையை சமர்பித்த பின்னர் இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இம்மாதம் 11 ம் திகதியன்று ஜப்பானில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புகுஷிமா அணு மின் நிலையத்தை உருகுலைத்துள்ளது. அங்குள்ள அணு மின் உலைகளுக்கான குளிர்விப்பான்களுக்கு மின் விநியோகம் இல்லாமல் துண்டிக்கப்பட்டன.
இதனால் அணு உலையில் வெப்பம் அதிகரித்து ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்பட்டது. இந்த அணு உலைகளை சரி செய்ய ஜப்பான் அணு விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். உலகில் மிக மோசமான அணு விபத்து செர்னோபில் நிலையத்தில் ஏற்பட்டது. அதைப் போன்ற சூழல் ஜப்பானில் ஏற்படுமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்தைத் தொடர்ந்து பிரான்சில் தமது அணு உலை பாதுகாப்பை ஆய்வு செய்ய அணு பாதுகாப்பு ஆணையத்தை கேட்டுக் கொண்டது. பிரான்சில் தற்போது 58 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அணு உலையை குளிர்விக்கும் முயற்சி தோல்வி: 4 அணு உலைகளை அழிக்க திட்டம்
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 அணு உலைகளை குளிர்விக்கும் பணியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அவற்றை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 11ம் திகதி ஜப்பானின் மியாகி மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 9.2 ஆக பதிவானது. இந்த பேரழிவில் சிக்கி 30 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக பிகுஷிமா, டச்சி அணு மின் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இங்குள்ள 6 அணு உலைகளை குளிர்விக்கும் பணி பாதிக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் உதவியுடன் கடல்நீரைக் கொண்டு அணு உலைகளை குளிர்விக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
எனினும் 4 அணு உலைகளை குளிர்விக்கும் முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 5 மற்றும் 6 வது உலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிக வெப்பம் காரணமாக இந்த அணு உலைகள் வெடித்ததால் அப்பகுதியில் காற்றிலும், கடலிலும் கதிர்வீச்சு பரவி வருகிறது.
வழக்கமான அளவை விட பல ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு பரவி விட்டதாக இந்த தொழிற்சாலையை இயக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது. இதனால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கடுமையாக போராடியும் 4 அணு உலைகளை குளிர்விக்க முடியவில்லை எனவும், அவற்றை அழிக்க முடிவு செய்துள்ளதாகவும் டெப்கோ கூறியுள்ளது.கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 1 முதல் 4 அணு உலைகளை குளிர்விக்க கடுமையாக முயற்சி செய்தோம். எனினும் பலன் கிட்டவில்லை. எனவே அவற்றை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த விபத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என டெப்கோ தலைமை அதிகாரி சுனேஹிசா கட்சுமடா தெரிவித்துள்ளார்.
அணு உலைகளை குளிர்விப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த டெப்கோ தலைவர் மசடகா ஷிமிசு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெப்கோ தெரிவித்துள்ளது.
அமைதி ஏற்பட இணைந்து செயல்படுவோம்: பாகிஸ்தான் பிரதமர் உறுதி
இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து செயல்படுவோம் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி தெரிவித்தார்.இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தைக் காண்பதற்காக இந்தியா கிளம்பும் முன் ராவல்பிண்டி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இருநாட்டு உறவைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.
உள்துறைச் செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்திருந்ததற்காக பாராட்டுகள். பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் அனுபவமிக்கவர். ஆக்கப்பூர்வமான சிந்தனை உடையவர். இருநாட்டு உறவு குறித்து அவர் எப்போதும் எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருந்ததில்லை.
இந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதி எங்கள் இருவரிடமும் உள்ளது. சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும்.கிரிக்கெட் ஆட்டத்தைக் காணச் செல்வதன் மூலம் இருநாட்டு உறவில் சிறிய அளவிலாவது முன்னேற்றம் காண முடியும். அத்துடன் பாகிஸ்தான் அணிக்கு ஊக்கமூட்டுவதாகவும் எனது பயணம் அமையும் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் வருமாறு அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். இப்போது நாடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகிறோம்.
உகந்த அமைதியான சூழ்நிலையை உருவாக்க மக்கள் அரசியல் தலைமை என மொத்த நாடுமே முயற்சி செய்து வருகிறது. சூழ்நிலை கனிந்தவுடன் பாகிஸ்தான் வருமாறு இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின் இடையே பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தின் போது இருவரும் சந்தித்துப் பேசினர்.
இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் மீரா குமார், மத்திய அமைச்சர்கள் சரத் பவார், சச்சின் பைலட், பிரதமர் கிலானியுடன் வந்திருந்த அந் நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உலகின் மிகப் பெரிய மோசடிக் கும்பல் அவுஸ்திரேலியாவில் கைது.
உலகின் மிகப் பெரும் வலையமைப்பைக் கொண்ட கடன் அட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவில் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த 56 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இக்குழுவில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் அட்டை மோசடிக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை பெருமளவு பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடன் அட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர்.
அதன் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை இலக்கங்களை அவர்கள் பெற்றுகொண்டுள்ளனர். மற்றும் மறைத்து வைக்கப்படும் சிறிய கேமராக்கள் மூலமாக வாடிக்கையாளர் கடன் அட்டையின் இரகசியக் குறியீட்டு எண்களையும் பெற்று பின்னர் அதே போல போலியான கடன் அட்டைகளை தயாரித்து அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் மூலம் இந்தக் கும்பல் சுமார் 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 63 ஆயிரம் போலி கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு நிச்சயம் உதவி செய்வோம்: ஒபாமா
கடாபி ஆட்சிக்கு பின்னர் லிபியாவில் புதிய மாற்றம் வரவேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருந்தார்.
லிபியா சர்வாதிகார கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் புரட்சியாளர்கள் ராஸ்லனப் நகரை கடந்து கிழக்கு நோக்கி முன்னேறி வருகிறார்கள். இந்த நிலையில் ஒபாமா அளித்த நேர்காணலில் கூறியதாவது: கடாபி பெருமளவு பலவீனம் அடைந்துள்ளார்.அவர் பதவி இறங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. கடாபி ஆட்சியை அகற்றுவகற்கு போராட்டாக்காரர்களுக்கு உதவி செய்வது குறித்து மறுக்கவில்லை என்றார்.
லிபியாவில் புதிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என லண்டன் சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அரபு அரசுகளை கொண்டதாக கடாபி இல்லாத லிபியாவுக்கு தொடர்பு குழு அமைக்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் லிபியாவில் ஏற்பட்ட புரட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவின் கிழக்குப்பகுதி போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கடாபி ராணுவத்தினர் தலைநகர் திரிபோலியையும், மேற்கு நகரங்களைம் தங்கள் கட்டுப்படாட்டில் வைத்துள்ளனர்.
லிபியாவில் போராட்டக்காரர்களுக்கும் மனித நேய அடிப்படையில் ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கும் என ஒபாமா தெரிவித்தார். மருந்துப் பொருட்கள் மற்றும் தகவல் தொடர்புக் கருவிகளும் போராட்டக்காரர்களுக்கு அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.சிரியா மற்றும் இதர நாடுகளில் போராட்டம் ஒடுக்கப்பட்டதை போல லிபியாவில் புரட்சி போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
விண்கலம் அனுப்பிய அறிய புகைப்படங்கள் வெளியீடு.
6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்றடைந்திருக்கும் மெசஞ்சர் விண்கலம் முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக 2004 ம் ஆண்டு ஓகஸ்ட் 3 ம் திகதி மெசஞ்சர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா-2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி வினாடிக்கு 640 கி.மீ என்ற வேகத்தில் சென்ற ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு புதன் சுற்றுவட்ட பாதையை கடந்த 17 ம் திகதி சென்றடைந்தது.விஞ்ஞானிகளின் 36 ஆண்டு கால உழைப்பு வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நாசா கூறியது. சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெப்பநிலை பூமியைவிட பல மடங்கு அதிகம். அதாவது 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
சூரியனின் பார்வைபடாத இடங்களில் குளிரும் அதிகம் இருக்கும். இதை சமாளித்து ஆய்வு பணியில் ஈடுபடும் வகையில் மெசஞ்சர் விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நாசா தெரிவித்தது. இந்நிலையில் புதன் கிரகத்தை சென்றடைந்த மெசஞ்சர் விண்கலம் கிரகத்தின் தரைப் பகுதியை படமெடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
இது பற்றி நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு மெசஞ்சர் விண்கலம் வெற்றிகரமாக புதன் கிரகத்தை சென்றடைந்துள்ளது. முதல் போட்டோவையும் அனுப்பியுள்ளது. வட்டப்பாதையில் இருக்கும் விண்கலம் ஒன்றில் இருந்து புதன் கிரகத்தை படமெடுப்பது இதுவே முதல் முறை.
விண்கலத்தில் உள்ள கேமரா உள்ளிட்ட அனைத்து கருவிகளும் கடந்த 23 ம் திகதி முதல் சிறப்பாக செயல்பட தொடங்கியிருக்கின்றன. விண்கலத்தின் ஆய்வுப் பணிகள் ஏப்ரல் 4 ம் திகதி முதல் தொடங்கும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிந்தது: புதிய அரசு நியமனம்
மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.
மியான்மரில் தான் ஷ்வே தலைமையிலான ராணுவ ஆட்சி கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்தாண்டு நவம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து நேற்று ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அதிபராக தெய்ன் செய்ன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இரண்டு துணை அதிபர்கள், 58 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவையும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.
ராணுவ ஆட்சித் தலைவரான தான் ஷ்வே எதிர்காலத்தில் என்னென்ன பொறுப்புகள் வகிப்பார் அல்லது ஆட்சிக்கு ஆலோசகராக இருப்பாரா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது அவர் ராணுவத் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிக்கு ஜெனரல் மின் அவுங் ஹைங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய அரசு பொறுப்பேற்றதன் மூலம் மியான்மரில் ஜனநாயகம் மலரும் என்று நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.ஆனால் அமைச்சர்களில் பலர் ராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் என்பதால் இதுவும் ராணுவ ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.