Thursday, December 1, 2011
நம்பரைஅழுத்தவேண்டாம்: நினைத்தாலே ‘Call’ போகும்!
கடுதாசி வாங்கி ‘நலம் நலமறிய ஆவல்’ எழுதி, பசை தடவி ஒட்டி பெட்டியில் போடும் வேலை இல்லை. எஸ்டீடி பூத் தேடிப் போய் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தயாராய் பாக்கெட்டிலேயே இருக்கிறது செல்போன். எந்நேரமும் யாரிடமும் பேசலாம். அதற்குக்கூட சிலருக்கு அலுப்பு. நைன், எய்ட், ஃபோர், சிக்ஸ் என்று 10 நம்பர்கள் அழுத்தியாக வேண்டுமே. மெமரியில் வைத்திருந்தால்கூட பெயரை தேட வேண்டுமே.
உழைப்பை சிக்கனப்படுத்தும் இவர்களுக்கு நல்ல தகவல் தந்திருக்கின்றனர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள கம்ப்யூடேஷனல் நியூரோ சயின்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள். இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: மனதில் நினைப்பதை புரிந்துகொண்டு செயலாற்றும் கம்ப்யூட்டர்கள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம்.
மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி. கருவி மூலமாக பதிவு செய்து, அதற்கேற்ப இது செயல்படுகிறது. இதற்காக ப்ளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். ‘இன்னாருக்கு போன் செய்ய வேண்டும்’ என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இஇஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் ப்ளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினைத்த எண்ணுக்கு ‘கால்’ போகும். நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக்கொண்டால், யார் வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் ‘கால்’ செய்ய முடியும். நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு ஜங் கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF