நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர் ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர் இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உட்பட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்த போது ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆய்வாளர் ஸ்டோன்ஹவுஸ் தெரிவிக்கையில், இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என தெரிவித்துள்ளார்.