Saturday, December 3, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.
இலங்கையில் இயங்கி வரும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தொலைதொடர்பு ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2011) உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் இணையத்தளமொன்று நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இணையத்தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாக தொலைதொடர்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி அலி சாப்ரி நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். 
அரசியல் பக்கச் சார்பின்றி மூன்று மொழிகளிலும் இணைய செய்தி சேவை வழங்கி வருவதாகவும் நாளாந்தம் சுமார் 30,000 பேர் தமது இணையத்தளத்தை பார்வையிடுவதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதுடன் எனினும், எந்தவிதமான அறிவித்தலுமின்றி திடீரென தமது இணையத்தளம் தடை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதற்கு பதிலளித்த தொலைத்தொடர்கள் ஆணைக்குழு, பதிவு செய்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலை உதாசீனம் செய்த காரணத்தினால் குறித்த இணையத்தளத்தை முடக்க நேரிட்டதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு.
அரசாங்கத்திற்கெதிராக அண்மையில் ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்ப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காத கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்களை அணி திரட்டாதவர்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். 
போதியளவு ஆதரவு வழங்காத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.இதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை இணைத்துக் கொண்டு தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
போராட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ஆதரவாளர்களை அழைத்து வருவதாக சில தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் எனினும், இறுதி நேரத்தில் ஒரு பேரூந்தில் சொற்ப அளவிலான ஆதரவாளர்களை அழைத்து வந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை, போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் வழங்கிய ஆதரவு குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிகாவின் வாசஸ்தலத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம், எதிர்கால ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நிறைவடைந்து சில நிமிடங்களில் இந்த இரகசிய பேச்சுவார்த்தை குறித்து இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்தநிலையில் சரத் பொன்சேகாவிற்கு நேர்ந்த நிலையை சந்திரிகாவிற்கும் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக இந்தக்கூட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியவர் தெரிவித்ததாக சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருகிறது—கனேடிய வெளியுறவு அமைச்சர்.
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird  கனேடிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தொடர்பாக விமர்சனம் வெளியிட்ட பின்னர் முதல் தடவையாக வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு எதிராக கருத்துக்கூறியிருக்கிறார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறுகிறது.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வருகிறது.இந்தநிலையில் போர்முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் தொடர்பி;ல் உரிய முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தினார்.அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருவதை காணக்கூடியதாக இருப்பதாகவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் John Baird  தெரிவித்தார்.
2040 ஆண்டில் கடல்மட்டம் உயருமாயின் மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு நீரில் அமிழ்ந்துவிடும்? - மொரட்டுவை பல்கலை. பேராசிரியர்.
விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலுக்கு அமைய எதிர்வரும் 2040ஆம், 2050 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடல்மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகரின் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகரின் 15 சதவீதமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம கூறினார்.ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரண்ட வலயம், ஈர வலயம் என்ற அடிப்படையில் முறையே மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலுக்கு அமைவாக 2040, 2050ஆம் ஆண்டுகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சத வீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் மூழ்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும் 100 சதவீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது. கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.
ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால், அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை. இதனை தடுப்பதற்குரிய செயல்திட்டமொன்று எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது.
எனினும், நோர்வே உதவ முன் வந்துள்ளது. இந்த நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லாது விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயற்றிட்டததை எங்களால் மேற்கொள்ள முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் பாதுகாப்பு கமரா.
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதுகாப்புக் கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதுகாப்புக் கமராக்களைப் பொருத்தும் பொருட்டு அவற்றினைக் கொள்வனவு செய்வதற்காக பத்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சிறைச்சாலையில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இதேவேளை, யாழ்ப்பாணம்,தங்கல்ல,அக்குணுகொல்லபெலஸ்ஸ, மாத்தறை, பிட்டபெத்தறை போன்ற இடங்களில் புதிய சிறைச்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சதாம் ஹூசைன் கிராமத்தின் பெயரை நீக்குவதை எதிர்த்து மட். ஏறாவூரில் போராட்டம்.
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1978ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளி அழிவு ஏற்பட்டபோது ஈராக் உதவியுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது.
அப்போது அந்த நாட்டின் அதிபராக சதாம் ஹூஸைன் பதவியிலிருந்தமையினால் இக் கிராமம் சதாம் ஹூசைன் கிராமம் என மக்களால் பெயர் சூட்டப்பட்டது.ஈராக்கில் தற்போது அரசியலிலும் ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இக்கிராமத்திற்கு மீண்டும் உதவ இலங்கையிலுள்ள ஈராக் தூதுவராலயம் முன்வந்துள்ளது.
இருப்பினும் சதாம் ஹூசைன் கிராமம் என அழைக்கப்படும் இக் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்யும் பட்சத்திலேயே அது சாத்தியபப்டும் என்று இலங்கைக்கான ஈராக் தூதுவர் ஹதன் தாஹா ஹலாப் கடந்த செவ்வாய்க்கிழமை அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்தப் பெயர் மாற்றத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகமும் இணக்கம் தெரிவித்து பிரதேச அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்ட நிலையிலேயே உள்ளூர் மக்கள் இதற்கு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளிவாசல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அநுராதபுர சிறையில் சிங்களக் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்க திட்டமிட்டிருந்தனர்- அமைச்சர் கெஹலிய.
அநுராதபுர சிறைச்சாலையில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தில் பெரிய அழிவு ஏற்பட இருந்ததாகவும் அதனை சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.இதன்படி,தமிழ் அரசியல் கைதிகள் இரகசியமான திட்டத்தின்படி மாவீரர் தினம் கொண்டாட இருந்ததாவும், சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் அதனைத் தடுத்திருக்காவிடின், தமிழ் அரசியல் கைதிகளை சிங்களக் கைதிகள் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
மேலும், இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்பான பிரசாரங்கள், வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் ராஜதந்திர மார்க்கங்களினூடாக அரசாங்கம் அந்நாடுகளிடம் இதனைக்கோரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா.
இலங்கையில்  தற்போது உள்ள முறைமை மாற்றி அமைக்கப்படாவிட்டால் எந்த நாளும் அடிமைகளாக வாழ வேண்டி நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இடி அமீன், ஹிட்லர் என்று தம்மை வர்ணித்த புனிதர் இன்று தன்னையும் தனது குடும்பத்தாரையும் பழிவாங்குவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இந்த ஊழல் மோசடி மிக்க அரசியல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து மக்கள் நலன் மிக்க ஆட்சியொன்று என்றாவது உருவாக்கப்படும். இந்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
மக்களினால் அரசியல்வாதிகளை நிர்வாகம் செய்யும் ஓர் முறைமையை உருவாக்கவேண்டும் போரை வென்ற இந்த நாட்டை அரசியல்வாதிகள் சுரண்டுவதனை வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஹைகோர்ப் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றிற்கு சென்றபோதே அவர் நேற்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சிரியாவில் சிறைக்கைதிகளை விடுதலை.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது.எனவே கலவரத்தை அடக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக் கூட்டமைப்பு நாடுகள் சிரியா ஜனாதிபதி அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது அவர் பதவி விலக ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் சிரியா மீது பொருளாதார தடை விதித்தன. அரபு நாடுகளும், துருக்கியும் பொருளாதார தடை விதிக்க போவதாக கூறியுள்ளன.இதற்கிடையே ஆசாத் பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறைக்கைதிகளை சிரியா அரசு விடுதலை செய்து வருகிறது.
உலகில் முதன் முதலில் வெளியான காமிக்ஸ் புத்தகம் ரூ.10 கோடிக்கு ஏலம்.
உலகத்தில் முதன் முதலில் வெளியான காமிக்ஸ் புத்தகம் ரூ.10 கோடிக்கு(இந்திய ரூபாய் மதிப்புபடி) ஏலம் போனது.அமெரிக்காவில் கடந்த 1938ம் ஆண்டு முதன் முதலில் ஆக்ஷன் காமிக்ஸ்(படக்கதை) புத்தகம் வெளியானது. சூப்பர்மேன் சாகசங்களுடன் ஆன அந்த புத்தகம் அப்போது மிகவும் குறைவான விலையில் விற்றது.
இந்த நிலையில் அந்த புத்தகம் கடந்த நவம்பர் மாதம் 11ந் திகதி ஓன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. அந்த புத்தகத்துக்கு தொடக்க விலையாக 1 டொலர்(ரூ.50) என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அந்த புத்தகம் ரூ.10 கோடிக்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.கடந்த ஆண்டு இது போன்று ஒரு ஆக்ஷன் காமிக்ஸ் புத்தகம் ஏலம் விடப்பட்டது. இது ரூ.7 கோடிக்கு ஏலம் போனது. அப்போது அது மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த புத்தகம் ரூ.10 கோடிக்கு ஏலம் போனதன் மூலம் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்கொய்தா தலைவர்.
அல்கொய்தா அமைப்பின் தலைவரான எய்மன் அல்-ஜவாகிரி(Al-Zawahiri) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: 70 வயது அமெரிக்கரான வாரென் வென்ஸ்டீன்(Warren Weinstein) என்பவரை கடந்த ஆகஸ்டு மாதம் 13ந் திகதி அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் கடத்தியது.
இவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளின் மேல் நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும், உலக வர்த்தக மையத்தை தகர்த்ததாக 1993ம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களையும், ஒசாமா பின்லேடனின் உறவினர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.மேலும் ஒபாமா எல்லாவற்றிலும் பொய்யான வாக்குறுதிகளையே வெளியிடுகிறார், அவரை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் குறித்து பிரிட்டன் மக்களின் கருத்து.
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கைக்கும், உள்நாட்டு மக்களின் கருத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அண்மைக்கால ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புலம்பெயர்ந்தோர் துறையினர் நடத்திய ஆய்வில் 69 சதவீதம் பிரிட்டன் மக்கள் தம் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
லண்டன் நகரத்தில் வாழும் 37 சதவீதம் பேர் அயல்நாட்டில் பிறந்தவர்கள். இவர்கள் புலம்பெயர்ந்து வருவோர் மீது அனுதாபம் காட்டுகின்றனர். ஆனால் மொத்த மக்கள்தொகையில் 46 சதவீதம் பேர் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
ஸ்காட்லாந்தில் 4.4 சதவீதம் பேர் மட்டுமே அயல்நாட்டில் பிறந்தவர் ஆவர். இவர்கள் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாகவே உள்ளனர். 56 சதவீதம் பேர் இவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றனர்.எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதில் வடக்கில் 70.37 சதவீதம் பேரும், தெற்கில் 75 சதவீதம் பேரும், மத்திய நிலத்திலும், வேல்ஸிலும் 75 சதவீதம் பேரும் உறுதியாக இருக்கின்றனர்.
இதுகுறித்து ஆய்வாளர் முனைவர் ஸ்காட் பிளிண்டர் கூறுகையில், இலண்டனில் புலம்பெயர்ந்தோருக்கும், உள்நாட்டு மக்களுக்கும் இடையே நல்ல இணக்கமான உறவு காணப்படுகிறது. அதனால் அவர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் ஸ்காட்லாந்தில் இத்தகைய இணக்கமான உறவு இல்லை, எனவே அவர்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களை தகர்க்க ஈரான் சதித்திட்டம்.
ஜேர்மனி நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதை புலனாய்வு துறையினர் கண்டறிந்துள்ளனர்.ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள ஈரானின் தூதுவர் அலுவலகத்துடன் தொடர்பு வைத்துள்ள ஜேர்மன் தொழிலதிபர் ஒருவரும் இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூட்டமைப்பின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக் காவல்துறையின் தலைவரான ஜோர்க் ஸீயர்க்கெ, இந்தச் சதித் திட்டத்தால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றார். கடந்த சில நாட்களாக ஈரானுக்கும், மேலை நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை(28.11.2011) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜேர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது.பிரிட்டனின் தூதரகத்தை ஈரானிய மாணவர்கள் தாக்கியதால் ஜேர்மனி தன் தூதரக அதிகாரிகளுக்கு இவ் அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பான சூழலில் வாழும் கனடியர்கள்: ஆய்வில் தகவல்.
கனடாவில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி அந்நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.பதினைந்து வயதுக்கு மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 93 சதவீதம் பேர் தங்களின் பாதுகாப்பு குறித்து மனநிறைவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்விலும் இதே முடிவுகள் தாம் வெளிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.கனடாவில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பழமைவாதிகள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த பத்தாண்டுகளாகவே குற்ற விகிதம் குறைந்து கொண்டு போகிறது.
சில இடங்களில் இளைஞரிடையே குற்ற விகிதம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. ஆயினும் 15 முதல் 24 வயதினர் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வில் 94 சதவீதம் பேர் தாம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினர். 65 வயதுக்கு மேற்பட்டோரில் 90 சதவீதம் பேர் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
கனடாவின் கிழக்குப்பகுதியில் குற்றங்கள் மிக மிகக் குறைவாகவே நிகழ்கிறது. ஏனெனில் இங்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதால் மேற்குப்பகுதியைக் காட்டிலும் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.
ஈரானில் இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் விடுவிப்பு.
ஈரானில் இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அணுசக்தி திட்டங்கள் தொடர்பான சர்ச்சையால் இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட சில நாடுகள் ஈரான் மீது கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு எதிரில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டனர்.அப்போது இங்கிலாந்து தூதரகத்தை மாணவர்கள் சிலர் அடித்து நொறுக்கினர். வாகனங்களை தீயிட்டு எரித்தனர். தூதரக பொருட்களை சூறையாடினர். இதுதொடர்பாக 11 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.
தாக்குதலுக்கு பின் ஈரானில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டு எல்லா தூதர்களையும் இங்கிலாந்து வாபஸ் பெற்றது. அத்துடன் இங்கிலாந்தில் உள்ள ஈரான் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்து ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை ஈரானில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது.இந்நிலையில் தூதரக தாக்குதலில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று(1.12.2011) விடுவிக்கப்பட்டனர். அதற்கான காரணம் எதையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை ஈரானில் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் திடீரென 11 மாணவர்களை அரசு விடுவித்ததால் இங்கிலாந்து அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையில் அமைதியை குலைக்கும் விதமாக இங்கிலாந்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தாக்குதல் வரவேற்கத்தக்கது என்று ஈரான் தலைவர் கமேனியின் பிரதிநிதி முகமது முகமதியன் கூறியுள்ளார்.பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஆத்திரம் தாக்குதலாக வெளிப்பட்டுள்ளது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜனி கூறியுள்ளார்.
அமெரிக்க படைகள் தாக்கினால் திருப்பி தாக்குங்கள்: பாகிஸ்தான் படைகளுக்கு கயானி அதிரடி உத்தரவு.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.
நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.
மியான்மரில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்படும்: ஹிலாரி கிளிண்டன்.
மியான்மரில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்படும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.மியான்மர் ஜனாதிபதி தைன் செய்னை அந்நாட்டு தலைநகர் நேபிடோவில் நேற்று(1.12.2011) சந்தித்துப் பேசிய பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹிலாரி மேலும் கூறியது: மியான்மரில் அரசியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடரும் என்று ஜனாதிபதி தைன் செய்ன் என்னிடம் உறுதி அளித்துள்ளார்.ஜனநாயக இயக்கத் தலைவி ஆங் சான் சூச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அரசியல், பொருளாதார ரீதியாக இங்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார் அவர்.
ஆங் சான் சூச்சியையும் ஹிலாரி சந்திக்க இருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க தலைவர் ஒருவர் இப்போதுதான் முதல்முறையாக மியான்மர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்கள், அந்நாட்டு ஜனநாயக இயக்கத்தின் தலைவி ஆங் சான் சூச்சியை பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலேயே வைத்திருந்ததால், அந்நாட்டுடன் பல நாடுகள் அரசியல்ரீதியாக நெருங்கிய உறவில் இல்லை.கடந்த ஆண்டுதான் சூச்சி வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளும் ராணுவ ஆட்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவில் அடை மழை: 5 பேர் பலி.
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் நியாஸ் தீவின் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மஜோ காம்புங் பரிஜி என்ற கிராமத்தில் 115 குடும்பங்கள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 37 வீடுகள் புதையுண்டன.
பக்கத்து கிராமத்தினரின் உதவியுடன் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 30 பேரை காணவில்லை எனவும், அவர்கள் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.இந்த கிராமத்தை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீட்புக்குழுவினர் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம்.
எகிப்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் மீண்டும் காலதாமதம் ‌ஏற்பட்டுள்ளது.தேர்தல் முடிவு கடந்த பு‌தனன்று(30.11.2011) அறிவிக்கப்படுவதாக இருந்தது. பின்னர் நேற்று வரை தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை.‌
தேர்தல் முடிவுகள் குறித்து மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் ச‌கோதரர் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்ப‌தாக தெரியவந்துள்ளது.இது குறித்து தலைமை அதிகாரி இப்ராஹிம் கூறுகையில், இந்த காலதாமதம் இன்றியமையாதது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. எகிப்தின் சுதந்திர நீதி கட்சி(எப்.ஜெ.பி) 40 சதவீத வாக்குகளை பெறும் ‌என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்றார்.
ஜப்பானில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வரி விலக்கு.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதனால் புக்குஷிமா பகுதியில் அணு மின் நிலையங்கள் சேதமடைந்தன.அங்கு மீட்பு பணிகள் நடப்பதற்கு வசதியாக டொகோகு பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று முதல்சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒபாமாவை விட அதிக சம்பளம் பெறும் அவுஸ்திரேலிய பிரதமர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை விட அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அதிக சம்பளம் பெறுகிறார்.அவுஸ்திரேலியாவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த அந்நாட்டின் சம்பள டிரிபியூனல் முடிவு செய்துள்ளது.
இதன்படி அந்நாட்டின் பெண் பிரதமரான ஜூலியா கில்லார்டுக்கு சம்பளத்தில் 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கிறது.புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே 1 லட்சத்து 40 ஆயிரம் டொலர்களில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் டொலர்களாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதில் மற்ற செலவுகளும் அடங்கும்.
பிரதமரை பொறுத்தவரை மற்ற செலவுகளுடன் சேர்த்து 4 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும். இது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பெறும் சம்பளத்தை விட அதிகமாகும்.ஒபாமா 4 லட்சம் அமெரிக்க டொலர்களும், கமரூன் 2 லட்சத்து 21 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலியக் கொள்ளையர்கள் கடத்திய சிங்கப்பூர் கப்பல் விடுவிப்பு.
சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பாமாயில் ஏற்றி வந்த சிங்கப்பூர் கப்பல் 215 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கப்டன் உள்ளிட்ட தென் கொரியர்கள் நான்கு பேர் விடுவிக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் சுமத்ரா துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி சிங்கப்பூரின் குளோரி ஷிப் நிறுவனத்துக்கு சொந்தமான ஜிமினி என்ற எண்ணெய் கப்பல் பாமாயில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.இக்கப்பலை சோமாலிய கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். குளோரி ஷிப் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை பலனாக நேற்று முன்தினம் இந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.
கப்பல் ஊழியர்கள் 21 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கப்பலின் கப்டன் உட்பட தென் கொரிய ஊழியர்கள் நான்கு பேரை கொள்ளையர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.இதுகுறித்து குளோரி ஷிப் நிறுவனம் குறிப்பிடுகையில், கொள்ளையர்கள் பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நடக்கவில்லை. அனைவரையும் விடுவிப்பதாகக் கூறி நான்கு பேரை இன்னும் விடுவிக்காமல் உள்ளனர். அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF