Friday, December 23, 2011
ஓய்வின் ரகசியம்!
இன்றைய காலகட்டத்தில் ஓய்வெடுப்பது மிக மிக குறைவு. விடுமுறை நாளில் ஓய்வெடுக்க எண்ணினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.ஓய்வு என்பது கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல, அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பதற்றமோ, படபடப்போ இருக்காது.அன்றைய பணிகளை அமைதியாக திட்டமிட அந்த நிமிடங்கள் ஏற்றவை. எனவே இதுவும் ஒருவித ஓய்வு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தியானம், யோகா ஆகியவை மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் மனத்திற்கும், உடலுக்கும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு வரும்.மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு பாடுவது இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் நம் மனதை லேசாக்கும். அதேபோல் விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது உடலையும், உள்ளத்தையும் வானத்தில் பறக்கவைக்கும். இதன்மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் நம்மால் சமாளிக்கக் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் அது போல் நாம் சிரித்தால் மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு.
அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் பேசி சிரிப்பது ஒரு ஓய்வு மனநிலையை தரும். பணி சுமையை குறைக்கும். வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி மற்றும் டிவிடியில் நகைச்சுவையான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
விடுமுறை நாட்களில் சற்றே மாற்றமாக சமையலில் உதவி செய்வது, துணி துவைப்பது என வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய ஓய்வினை தரும். மாலை நேரங்களில் காற்றாட நடப்பதும் சற்று ஓய்வினை தரும்.இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை, தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். அப்புறம் சோர்வு எங்கே எட்டிப்பார்க்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனம் தான். எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம்கையில்தான் இருக்கிறது.ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். ஓய்வின் மூலம் நோயை விரட்டி ஆரோக்கியத்தை அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF