Tuesday, December 13, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.தே.கவின் தலைவராக கரு! எதிர்க்கட்சித் தலைவராக ரணில்!- இருதரப்பினரையும் சமரசப்படுத்த முயற்சி.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கரு ஜெயசூயரிவை நியமிப்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வகிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கட்சியின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட உறுப்பினர்கள் சிலர் இரு தரப்பினரதும் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தினால் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென்றும், இக் குழு பிரதி நிதிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இரு தரப்பினருக்கும் பாதகமேற்படாத வகையில் தீர்வைக் காண்பதற்கே இக் குழுவினர் இந்நடவடிக்கையை ன்னெடு த்துள்ளனர்.
சமரசத்தை ஏற்படுத்த முனையும் குழுவினரின் யோசனைகள் அடங்கிய அறிக்கை, கரு எம்.பி.யின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இவ் யோசனைகள் கையளிக்கப்படவுள்ளன.
இதன்போது கூடிய விரைவில் சமரசமான தீர்மானத்தைக் காணவேண்டுமென குழுவினரால் வலியுறுத்தப்படவுள்ளது.
இம் முயற்சி தோல்வியுற்றால் கட்சியின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சமரசக் குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கட்சிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
இதேவேளை, எதிர்வரும் 31 ம் திகதிக்கு முன்பதாக கட்சியின் சம்மேளனத்தை நடத்தியாக வேண்டும். ஆனால் செயற்குழுவிற்கு உறுப்பினர்கள் முழுமையாக நியமிக்கப்படாமை மற்றும் கட்சியில் தோன்றியுள்ள நெருக்கடிகளை காரணம் காட்டி 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சம்மேளனத்தை ஒத்திவைப்பதற்காக கட்சியில் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறு ஒத்திவைக்கப்படுமானால் அதற்கெதிராக ஒரு குழுவினர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
ஐ.தே.க இரண்டாகப் பிளவடையும் அபாயம்
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடையக் கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக கரு ஜயசூரிய தரப்பு வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் கட்சித் தலைமைப் பதவிக்காக மட்டுமே வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்பட்டது.
எனினும், தற்போது இரண்டு குழுக்களாக பிளவடைந்து ரணில் ஆதரவாளர்களும், கரு ஆதரவாளர்களும் முக்கிய பதவிகளுக்காக போட்டியிட உள்ளனர்.
இது கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தலைமைப் பதவிக்காக போட்டியிடப் போவதாக கரு ஜயசூரிய ஊடகங்களில் அறிவித்த போதிலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர், இரண்டு இணைப் பிரதித் தலைவர்கள், தேசிய அமைப்பாளர், தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இணக்கப்பாட்டின் ஊடாகவோ அல்லது தேர்தலின் மூலமாகவோ நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 18ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாட்டில் நீதி நிலைநாட்டப்படுகின்றதா என்பது சந்தேகமே! பாரதவின் மகள் ஹிருனிகா.
நாட்டில் நீதி நிலை நாட்டப்படுகின்றதா என்பது சந்தேகமே என அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.நீதி, நேர்மை குறித்து எந்த நாளும் பேசப்படுகிறது. எனினும் அவை அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது சந்தேகமாகவே காணப்படுகின்றது.
அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் முதுகெலும்புடன் எழுந்து நின்று நீதி நலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனால் நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய அரசியல் கலாசாரத்தை தலைகீழாக மாற்றி அமைக்க வேண்டுமாயின் இலங்கையர் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை மீண்டும் இடதுசாரி அரசியல் பிரவாகம் ஒன்றை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 12ம் ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போது ஹிருனிகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்.
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக ஐந்து லட்சத்து முப்பத்து ஓராயிரத்து முன்னூற்று இருபத்தைந்து பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதில் மூன்று லட்சத்து எண்பத்து ஐயாயிரத்து எண்பத்து ஐந்து பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2010ம் ஆண்டை விடவும் இம்முறை 22,000 பரீட்சார்த்திகள் அதிகமாக பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
சாதாரண தரப் பரீட்சைக்காக தோற்றும் அதிகளவு பரீட்சார்த்திகள் என்ற எண்ணிக்கை இம்முறை பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கை அமைச்சரவையில் மாற்றம்?
இலங்கையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய பிரதியமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சுபதினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.அத்தோடு, பதினைந்து அரச நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் நியமிப்புக்கான பட்டியலும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது, வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு அடுத்த வாரத்தில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகிறது.ஆனால் ஜனவரி மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வரும் சுபதினத்தில் அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்ளவும், புதிய பிரதியமைச்சர்களை நியமிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தெரிவுகள் கடந்த வாரம் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.இதேவேளை அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் புதிய தலைவர்களை நியமிக்கும் பட்டியலும் அரசாங்கத்தால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து நிறுவனங்களுக்கு, புதிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளதோடு மேலும் 12 நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அறியக்கடைக்கிறது.
சீனா இந்திய உபகண்டத்துக்கு அச்சுறுத்தலாக இருக்காது!- இலங்கை.
சீனா இந்து சமுத்திர பகுதியில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இந்திய உபகண்டத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரிய இதனை இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய இராணுவக்கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது கருத்துரைத்த அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்புகள் திருப்தியாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழீpழ விடுதலைப்புலிகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் அனுதாபிகள் ஏனைய நாடுகளில் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கைக்கு ஆயுதரீதியான அச்சுறுத்தல் இல்லை என்று அவர் கூறினார்.
மன்னாரில் 10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் மீட்பு.
பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் தாழ்ப்பாடு பிரதேசத்தில் இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பிறவுண் சுகர் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சுமார் நான்கு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.இலங்கைக் கடற்படையினர் குறித்த போதைப் n;பாருட்களை மீட்டுள்ளனர்.
போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒன்பது சிம் அட்டைகளும், 2000 ரூபா இந்திய நாணயமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா செல்லும் அமெரிக்க அதிகாரி இலங்கை பிரச்சனை குறித்து பேச்சு நடத்தலாம்! கொழும்பு ஊடகம்.
இந்தியாவிற்கு விஜயம் செய்கின்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இலங்கை குறித்த விவகாரங்களை கையாளும், அமெரிக்க உதவி இராஜாங்கத் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் மற்றும் துணைக் கண்டத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்த வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லிக்கு நேற்று சென்ற இவர் நாளை 13-ம் திகதி வரை அங்கு தங்கியிருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பாக வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் கலந்துரையாடுவாரா என்பதை உறுதிப்படுத்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனிடையில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய தரப்புடன் விரிவாக ஆராயவுள்ள இவர், இதன்போது இலங்கையின் அரசியல் போக்குகள் குறித்தும் ஆராய்வர் என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
சீனாவின் உயர்மட்ட இராணுவக்குழு இலங்கையில் பேச்சு.
சீனாவின் உயர்மட்ட இராணுவ தூதுக்குழு இலங்கைக்கு சென்றுள்ளது சீனாவின் இராணுவ அதிகாரிகளின் பிரதி தலைமையாளரான General Ma Hixiaotianதலைமையிலான குழுவே இலங்கைக்கு சென்றிருக்கிறது.
இந்தக்குழு இலங்கையில் இராணுவப் பயிற்சிகள், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
சீனாவில் உள்ள இராணுவக் கல்லூரிகளில் இலங்கையின் இராணுவத்தினரை பயிற்சிகளுக்காக அதிகளவில் உள்ளீர்ப்பது குறித்து இதன்போது இரண்டு தரப்பும் பேச்சு நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கையின் இராணுவத்தளபதி இந்தியா சென்று திரும்பிய ஒரு சில நாட்களுக்குள்ளேயே சீன இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்கப் போவதில்லை!– ஐ.தே.க..
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரையில், பிரதிநிதிகளை நியமிக்கப் போவதில்லை என அந்தக்கட்சி தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முதலில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு அரசாங்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியிருந்தது.இதன்படி, பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்படும் வரையில் பிரதிநிதிகள் பட்டியல் அரசாங்கத்திற்கு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மேசடி செய்த நபர் கைது.
கனடாவில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் 18 லட்சம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
20 இளைஞர்களிடம் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவாகியிருந்த இந்நபர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட முற்றுகையின்போது, குறித்து இளைஞர்களின் 16 கடவுச்சீட்டுகளையும அச்சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!
அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குநருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்று கேட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார். உடனடியாக அவர் மஹிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார்.
தொலைபேசியை எடுத்து என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்? என்று கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார். வாழ்க்கைச்செலவு உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொண்ட அந்தப் பெண், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தயவு செய்து எங்களுக்கு நிவாரணம் அளியுங்கள் என்று கேட்டார்.சந்தேகம் கொண்ட ஜனாதிபதி யார் பேசுவது என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் அனோமா என்று பதிலளித்து விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்ட ராஜபக்ச, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு அனோமாவை தெரியும். அவருடன் நான் பேசியுள்ளேன்.உங்களைப் போல் அவர் ஒரு வாயாடிப் பெண் அல்ல. அவர் நன்றாக நடந்து கொள்வார். நீங்கள் அனோமாவாக இருந்தால், உங்களின் கணவன் சிறையில் இருக்கும் போது சிரிக்கிறீர்களே என்று கூறிவிட்டு கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார்.
உடனடியாக அவர் தொலைபேசியில் அழைத்த பெண் யார் என்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.  விரைவாகவே அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.அவர் ஒரு மனநலம் குன்றிய பெண் என்பது தெரிய வந்ததும், அந்த விவகாரம் அத்துடன் முடிக்கு வந்தது.சண்டே ரைம்ஸ் இது குறித்த செய்தியை சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது: கிலானி.
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியுள்ளார்.ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பைசாய் என்ற இடத்தில் நேட்டோ படையின் விமானங்கள் கடந்த 26ம் திகதி குண்டுகளை வீசித் தாக்கின. இதில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற பாகிஸ்தான் அரசு 15 நாள் கெடு விதித்தது. கெடு முடிந்ததால் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி தளத்தில் இருந்து அமெரிக்க படை நேற்று(11.12.2011) வெளியேறியது. இது அமெரிக்கா- பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில், அமெரிக்கா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை குறைந்திருக்கிறது. கணிசமான இடைவெளி விழுந்திருக்கிறது என்றார்.அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஷாம்சி தளம் பாகிஸ்தானின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதை கிலானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி மீது ஷூ வீச்சு.
ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மீது இளைஞர் ஒருவர் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ஷ்டவசமாக அந்த ஷூ அவரது மீது படவில்லை. அவன் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாரி நகரைச் சேர்ந்தவன் என்றும், டெக்ஸ்டைல் மில்லில் வேலைப்பார்த்த அவன், சமீபத்தில் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரானில் ‌வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையில்லாத‌வர்களுக்கு அரசின் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்று அவன் குற்றம் சாட்டியுள்ளான்.ஈரான் நாட்டில் வேலையின்மை விகிதம் 11 சதவிகிதமாக பதிவாகி உள்ளது என சமீபத்தில் அரசு கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது: ஈரான் திட்டவட்டம்.
நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது என ஈரானின் புரட்சிப்படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ தொலைவில் ஈரானுக்குள் கடந்த டிசம்பர் 4ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும், அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார்வையிடும் காணொளியையும் வெளியிட்டது.இந்நிலையில் ஈரானின் புரட்சிப்படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று(11.12.2011) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது போரைத் தூண்டும் நடவடிக்கையாகும். இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஆர்.க்யூ-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணணி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.ஆனால் எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி குறைவானது தான் என்றார்.
எல்லைக்குள் நுழையும் அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளுங்கள்: பாகிஸ்தான் அதிரடி உத்தரவு.
நேட்டோ தாக்குதலுக்கு எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக பதிலடி கொடுக்கலாம் என பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானியும், பிரதமர் கிலானியும் உத்தரவிட்டு இருந்தனர்.
பாகிஸ்தான் புதிய இராணுவ கொள்கையின்படி வான்வெளிக்குள் ஊடுருவும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் உட்பட எந்த ஒரு பொருளையும், பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் என பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் அரசு மறுப்பு.
பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தானி தலிபான் தளபதி வெளியிட்ட செய்திக்கு அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தாரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின் இராணுவத் தளபதியான மவுல்வி பக்கீர் முகமது நேற்று முன்தினம்(10.12.2011) வெளியிட்ட பேட்டியில் கூறியதாவது, பஜாவுர் பழங்குடியினப் பகுதி தலிபான்கள், பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் தயாராகிவிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று விடுத்த அறிக்கையில், ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் வரையில் பாகிஸ்தான் அரசுடனான எங்கள் போர் தொடரும். பேச்சு நடப்பதாக வெளியான செய்தி பொய்யான தகவல் என தெரிவித்தார்.
தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவித்து வரும் அமெரிக்கா, பாகிஸ்தானி தலிபானுடனான பாகிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பஜாவுர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தலிபான் தளபதியான முல்லா ததுல்லாவும், பக்கீர் முகமதுவின் பேட்டியை மறுத்துள்ளார். பழங்குடியினப் பகுதிகளுக்கான கூடுதல் தலைமைச் செயலர் பசல் கரீம் கட்டாக்கும், பக்கீரின் பேட்டி ஆதாரமில்லாதது என தெரிவித்துள்ளார்.
பக்கீரின் பேட்டிக்கு முரணாக அதே அமைப்பைச் சேர்ந்த இருவர் கருத்து வெளியிட்டிருப்பது பாகிஸ்தானி தலிபான் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. அந்த அமைப்பு 100க்கும் மேற்பட்ட குழுக்களாக சிதறிவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்திருந்தமை குறிப்படத்தக்கது.
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள்: விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு.
ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த முறைப்பாடினை தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி டிமெட்ரிமித்வதேவ்(Dmitry Medvedev) உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரஷ்ய நாடாளுமன்றமான டூமாவிற்கு கடந்த 4ம் திகதி தேர்தல் நடந்தது.
தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின்(Vladimir Putin) அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரஷ்யாவின் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்யா கட்சியே வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் கூறிவந்தன.
இந்நிலையில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாடாளுமன்ற இடங்களை ஐக்கிய ரஷ்யா கட்சி பிடித்தது.மேலும் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக முறைப்பாடுகள் எழுந்ததை தொடர்ந்து  ‌தலைநகர் மாஸ்கோவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டன பேரணி நடத்தி பிரதமர் விளாடிமிர் புடின் பதவியை ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி டிமெட்ரிமித்வதேவ் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.விளாடிமிர் புடினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் அந்நாட்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக வேகமாக பரவி வருகின்றன.
இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி டிமெட்ரிமித்வதேவ் அல்லது விளாடிமிர்புடின் யாரேனும் ஒருவர் நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி வாயிலாகவோ மக்களுக்கு விளக்கமளிக்க உள்ளதாக தெரிகிறது.
இடைக்கால அரசியல் அமைப்பு சட்டம்: துனிஷிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.
துனிஷிய அரசியல் அமைப்பு சட்டம் நாடாளுமன்ற இடைக்கால அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.துனிஷியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் அரசியல் அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தது.இதில் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து இடைக்கால அரசு ஒன்றை அமைத்தன. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்துவது ஆகியவை இந்த அரசின் பொறுப்புகள்.
மொத்தம் 217 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்களுக்கு முன் 26 பிரிவுகள் கொண்ட இடைக்கால அரசியல் அமைப்புச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.ஐந்து நாட்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளியே ஐந்து நாட்களும் மக்கள் திரளாகக் கூடி நின்று விரைவில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்படி கோஷமிட்டனர்.
இந்நிலையில் நேற்று(11.12.2011) துனிஷியா நாடாளுமன்றத்தில் இடைக்கால அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் விரைவில் புதிய அரசு அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படும்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பிரதமர் போட்டியிடுகிறார்.
பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதியாக நிக்கோலஸ் சர்கோஸி உள்ளார். இவரது பதவி காலம் அடுத்த ஆண்டு(2012) நிறைவடைகிறது.
எனினும் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை. இந்த சூழ்‌நிலையில் அந்நாட்டின் முக்கிய கட்சியான கன்சர்வெடிவ் கட்சியின் டொமினிக்விலிப்பின்(58) ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2003ம் ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும், 2005ம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிர்வாகத்தில் தான் பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.இது குறித்து டொமினிக்விலிப்பின் கூறுகையில், பிரான்ஸ் நாடு தொடர்ந்து நிதி நெருக்கடியால் தள்ளாடி வருகிறது. நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பிரான்ஸ் நாட்டினை ஒன்றிணைத்து கடனிலிருந்து மீட்பேன் என்றார்.
பாதுகாப்பு கருதியே ஸர்தாரி துபாய்க்கு சென்றார்: கிலானி புது விளக்கம்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி துபாய்க்குச் சென்றது பாதுகாப்பு காரணமாக தான். எதிர்வரும் 25ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளேன் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று(11.12.2011) அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனாதிபதி ஸர்தாரி பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது ஸர்தாரியைக் கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.
அதனால் தற்போது பாதுகாப்பு மற்றும் சில சவுகரியங்கள் கருதி தான் அவர் துபாய் சென்றுள்ளார். மெமோகேட் விவகாரத்தில் இராணுவத் தளபதி கயானியும், ஐ.எஸ்.ஐ தலைவர் சுஜா அகமது பாஷாவும் தங்கள் விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் அளிப்பர். அதற்கும், ஸர்தாரி நாடு திரும்புவதற்கும் சம்பந்தம் இல்லை.
பிரபல தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் சொன்னவற்றை அப்படியே நம்ப இயலாது. இதுகுறித்து அவர் வெளியிட்ட கட்டுரையால் நாட்டிற்கு ஒரு பாதிப்பும் இல்லை.நேட்டோ தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரித்து வருகிறது. அத்தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டது என முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
சட்டம் ஒழுங்கு, மின் பற்றாக்குறை, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், இரயில்வே, கடன் ஆகிய விவகாரங்கள் குறித்து பல சவால்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இம்மாதம் 25ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்தார்.
தூதரகம் தாக்குதல்: இங்கிலாந்திடம் மன்னிப்பு கோரிய ஈரான்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மீது கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி தாக்குதல் நடந்தது.இதைத் தொடர்ந்து ஈரான் அரசுக்கு இச்செயலில் தொடர்பு இருப்பதாக கூறி தனது தூதரகத்தை இங்கிலாந்து மூடிவிட்டது.
அதே போல் தனது தூதரகத்தையும் ஈரான் மூடிவிட்டது. இந்நிலையில் தாக்குதல் எதிர்பாராத விதமாக நடைபெற்றதாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலே நேற்று(11.12.2011) தெரிவித்தார்.
கடாபியின் மகனுக்கு உதவிய கனடிய பெண் கைது.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் மெக்சிகோ வருவதற்கு உதவி செய்ததாக சிந்தியா வேர்னியர் என்ற கனடிய பெண் கைது செய்யப்பட்டார்.இவர் வீடு, மனை விற்பனை, வாடகை விடுதி என்று பல தொழில்களைச் செய்து வந்த போது கடாபியின் மகனான அல் சாதி என்பவர் சட்டத்திற்குப் புறம்பாக மெக்சிகோ வருவதற்கு உதவிகள் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோ அதிகாரிகள் நவம்பர் மாதம் 10 திகதி இவரை கைது செய்தனர். டிசம்பர் 22ஆம் திகதி வரை அவர் சிறையில் இருக்கக்கூடும்.
இதுகுறித்து மெக்சிகோவின் உள்துறை அமைச்சர் கூறுகையில், அல்சாதி மெக்சிகோ வருவதற்கு வேனியர் தான் உதவி புரிந்துள்ளார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.மேலும் வேனியருக்கு உதவி புரிந்த இரு மெக்சிகோ நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
லெபனான் குண்டுவெடிப்புக்கு சிரியாவே காரணம்: பிரான்ஸ் அமைச்சர்.
லெபனானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு சிரியாவுக்கும், குறிப்பாக ஹிசிபுல்லா இயக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த வெடிகுண்டுத் தாக்குதல் ஐ.நா படையினர் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும். ஆதாரம் இல்லையென்றாலும் சிரியா தான் இந்தத் தாக்குதலை நடத்தியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன என தெரிவித்தார்.இந்தப் பிரச்னை குறித்து சிரியாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா.விடம் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
சிரியாவில் சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவப் படைகள் ஏவப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்நாடுகள் எடுத்த முடிவை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்கவில்லை. சிரியாவின் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவவும் பாரிஸ் முனைந்து வருகிறது.
ஹிசிபுல்லா சிரியாவின் இராணுவமாகவே லெபனானிலிருந்து செயல்பட்டு வருவதால் இப்போது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அந்த இயக்கமே காரணமாகும் என்று ஜுப்பே ஆணித்தரமாகக் கூறினார்.லெபனான் அரசு அங்கு தங்கியிருக்கும் அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா பாதுகாப்புக் குழு லெபனானில் தங்கி உள்ள ஐ.நா.வின் இடைக்காலப் படைகளின் நோக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுவரை நடந்த தாக்குதல்களின் விளைவை மதிப்பிடவேண்டும் என்று ஜுப்பே கோரியுள்ளார்.இவரது கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் இதற்கு ஆதரவு தராத நிலையிலும் பிரான்சின் கோரிக்கையை ஐ.நா.பாதுகாப்புக் குழு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் போர்க்குற்றவாளி ஜேர்மனியில் தஞ்சம்.
ஆப்கானிஸ்தானின் இரகசிய படையில் ஈடுபட்டிருந்த முன்னாள் தளபதி ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக 30,000 பேரைக் கொன்ற குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.இவர் தற்பொழுது ஜேர்மனியில் தஞ்சமடைந்திருப்பதாக தெரிகிறது. அரசு சட்டத்தரனி தாமஸ் ஸ்டீன்கிராஸ் கோஷ் போகஸ் என்ற நபர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த நபருக்கு தற்பொழுது அறுபது வயது இருக்கும். இவர் காபூலிலிருந்து ஜேர்மனி வந்திருக்கிறார்.
பவேரியா காவல்துறையினர் இவரைத் தேடி வருகின்றனர். இவர் கடந்த 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு முன்னும், பின்னும் இவர் ஆப்கானிஸ்தான் இரகசியப் படையின் தளபதியாக இருந்துள்ளார் என தெரிவித்தார்.கடந்த 1988ஆம் ஆண்டில் சோவியத் படைகள் வெளியேறிய தகவல் தெரிந்து மகிழ்ந்து ஆர்ப்பரித்த சிறைக்கைதிகளைச் சுட்டுக் கொல்லுமாறு இவர் உத்தரவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
ஜேர்மனியின் ஹெஸி மற்றும் வெஸ்ட் பலியா அரசு சட்டத்தரனிகள் இருவரும், ஆப்கானிஸ்தானின் முந்தைய இரகசியப் படையைச் சேர்ந்த வேறு ஐந்து முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் தேடி வருகின்றனர். இவர்கள் ஐவரும் ஜேர்மனியில் தான் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தை 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற முடிவு.
பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015ம் ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும் என தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்த ஒப்பந்தம் 2020ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது “கியோட்டோ ஒப்பந்தம்”. 2008ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப்பட்டது.இந்த அளவானது 1990ம் ஆண்டுக்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி பசுமை இல்ல வாயுவை(கார்பன் டை ஆக்ûஸடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையே முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது.இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள் தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும், சீனாவும் புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார்.
மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார்.தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ்விடயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். சனிக்கிழமை இரவு வரை இந்த விவாதம் நீடித்ததால், மாநாட்டின் தலைவரும், தென்னாப்பிரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சருமான மெய்டே நொகானா-மஷாபேன் 10 நிமிட இடைவேளையை அறிவித்தார்.
இந்த இடைவேளையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015ம் ஆண்டுக்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர்.மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கென ஏழை நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதிநிதிகளின் தலைவர் ஸிஸன்ஹுவா கூறுகையில், அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார்.இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளாதாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.அதே சமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுவன் தப்பினான்.
அமெரிக்காவை சேர்ந்தவன் கெவின் லன்ஸ்மான்(14). இவன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தான்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவன் அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டான். அவர்களிடம் பிணைய கைதியாக இருந்தான். அவனை பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாசிலான் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் உள்ள ஒரு நீரோடையில் இவனை குளிக்க தீவிரவாதிகள் அழைத்து சென்றனர்.அப்போது அவர்களிடம் இருந்து அவன் தப்பினான். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்துக்குள் புகுந்து அவனை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வந்தனர்.
தீவிரவாதிகள் தாக்கியதால் உடலில் காயத்துடன் இருந்த அவன் ஷாம்போங்கா நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டான்.இதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். விரைவில் அவன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஹாரி தாமசிடம் ஒப்படைக்கப்படுகிறான்.
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 12 பேர் பலி.
சிரியாவில் மனித உரிமைகள் தினத்தன்று ராணுவத்தினரால் பொது மக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில் கடந்த பல மாதங்களாக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில் சிரியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று(11.12.2011) கடைப்பிடிக்கப்பட்டது. மாரட் நுமன் நகரில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது இராணுவம் ஞாயிற்றுக்கிழமை சுட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை இன்று முதல் தொடங்கப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச்சில் தொடங்கிய இப்போராட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் செயல்பாடுகள் குறித்து நவி பிள்ளை ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசவுள்ளார்.சிரியாவில் நிகழும் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் விசாரிக்க சிரிய அதிபர் பஷார் அல் அசாத் மறுத்து வருகிறார்.சிரியாவில் நிகழ்ந்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க உலக நாடுகளின் உதவியை நாட அரபு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் அடுத்த வாரத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF