Monday, December 26, 2011

NEWS OF THE DAY!

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் சரத் பொன்சேகாவின் குறிப்புகள் நீக்கம்.
இலங்கை இராணுவ வரலாற்று நூலில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பற்றி, புதிதாக எழுதப்படும் மகாவம்ச அத்தியாயங்களிலும் சேர்க்கப்படமாட்டார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சத்தில் புதிதாக மூன்று பகுதிகளை சேர்க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
அந்தவகையில், இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆற்றிய பங்களிப்பை மையப்படுத்தியதாக மகாவம்சத்தின் புதிய பகுதிகள் சேர்க்கப்படவுள்ளன.
எனினும், மகாவம்சத்தின் புதிய பகுதிகளில் சரத் பொன்சேகா பற்றிய எந்தக் குறிப்புகளும் இடம்பெறமாட்டாது என்று இலங்கையின் கலாசார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாக உருவாக்கப்படவுள்ள மகாவம்சப் பகுதிகளில் 1978 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியின் நிகழ்வுகள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் இதில் முக்கியமாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்துக்குத் தலைமையேற்று விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் சரத் பொன்சேகா முக்கிய பங்கு வகித்திருந்தார்.நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து நீக்கப்பட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புகள் இலங்கை இராணுவ வரலாற்று நூலில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மகிந்த பயணிப்பதற்கு மேலும் இரண்டு ஹெலிக்கொப்டர்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுத்துவதற்காக மேலும் இரண்டு பெல்- 412 ஈபி ரக உலங்குவானூர்திகள் ( ஹெலிக்கொப்டர்)  இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த இரண்டு உலங்குவானூர்திகளும் ( ஹெலிக்கொப்டர்), இந்தவாரம் இலங்கை விமானப்படைக்கு விநியோகிக்கப்பட்டதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவை ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் டொலர் (225 மில்லியன் இலங்கை ரூபா) பெறுமதி கொண்டவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள்,  விமானப்படையின் மிகமுக்கிய பிரமுகர்களுக்காக விமான அணியில் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.இந்த மாதத் தொடக்கத்தில் Textron நிறுவனத்தினால் இரண்டு பெல்- 412 உலங்குவானூர்திகள்  (ஹெலிக்கொப்டர்) இலங்கை விமானப்படைக்கு விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை விமானப்படையில் பத்து பெல்- 412 ரக  உலங்குவானூர்திகளும், பதினெட்டு பெல்- 212 ரக  உலங்குவானூர்திகளும், ஐந்து பெல்- 206 ரக உலங்குவானூர்திகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரணிலின் வாகனம் மீது தாக்குதல்! 5 மில்லியன் ரூபா சேதம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் குண்டு துளைக்காத Mercedes Benz காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது 5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தகவல் தெரிவித்துள்ளார்.கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தேர்தல் அண்மையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்றது.
இத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்,  ஐக்கிய தேசிய கட்சியில் அவருக்கு எதிராக  செயற்படுவோர், கட்சியின் தலைமையகம் மீது தாக்குதல்களை நடத்தினர். இதன்போதே ரணில் விக்கிரமசிங்கவின் குண்டுத்துளைக்காத காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த காரின் சேதமடைந்த பகுதிகளை திருத்த வேண்டுமாயின் அவற்றை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்யவேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவத்தின்போது கட்சியின் தலைமையகத்தின் உடமைகளுக்கும் 5 மில்லியன் ரூபா அளவிலான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தை விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்தக் குழு, சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக்கொண்டு, விசாரணை அறிக்கையை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அளிக்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறையிலிருக்கும் காதலரை திருமணம் செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்.
சிறையில் இருக்கும் தனது காதலரைத் திருமணம் செய்ய அனுமதி தருமாறு கோரி வவுனியா நெயகுளம் வீரபுலத்தைச் சேர்ந்த சுதர்ஜினி என்பவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எனது காதலரான சக்திவேல் இலங்கேஸ்வரன் புதிய மகசீன் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். நான் அவரை 12 வருடங்களாக நேசித்து வந்துள்ளேன். அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரை நான் சிறைச்சாலையில் திருமணம் செய்ய விரும்புகிறேன். இதற்கான அனுமதியை தந்துதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
எனது காதலரும் தங்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்கிறார் என்பதை அறிந்துள்ளேன்.இந்நிலையில் எமது திருமணப் பதிவினை சிறைச்சாலையில் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஆபத்துடன் கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்.
ஆசியாவில் உயர் ஆபத்தை கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமைகளை கணிப்பிடும் Fitch Ratings பிட்ச் தரப்படுத்தல் இதனைத் தெரிவித்துள்ளது.
பிட்ச் தரப்படுத்தலின் இந்த கருத்தை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால் பொருளியலாளர்கள் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இந்த கருத்தை நிராகரித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் உயர் ஆபத்தை கொண்ட ஆசிய நாடுகளாக Fitch Ratings  குறிப்பிட்டுள்ள இந்திய இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் உயர் உற்பத்திகளை வெளிப்படுத்தி வருவதாக கப்ரால் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்தநிலையில் அந்த நாடுகளைப்பற்றி பேசாது, Fitch Ratings  ஏன் இலங்கை போன்ற நாடுகள் பற்றி பேசுகிறது என்று கப்ரால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அடுத்த வருடத்தில் 8 வீத பொருளாதார அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பொருளியல் நிபுணர்கள் இலங்கை மத்திய வங்கியின் செயற்கை செயற்பாடு காரணமாக இலங்கையின் ஆபத்தான நிதிக்கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி, ரூபாவின் பெறுமதியை உயர்நிலையில் வைத்திருக்க முயற்சித்தது. பின்னர் ரூபாவின் பெறுமதியை குறைத்தது. வட்டிவீதங்களை செயற்கையாகவே குறைத்தது. இந்த செயற்பாடுகள் காரணமாகவே இலங்கையின் நிதிக்கட்டமைப்பின் மீது அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பொருளியல் நிபுணர், பேராசிரியர் சிறிமல் அபேரத்னவின் கருத்துப்படி, இலங்கையின் நடைமுறைக்கணக்கு மற்றும் நிதிக்கணக்குகள் மேம்படவில்லை என்றுக்குறிப்பிட்டுள்ளார்.ஏற்றுமதி வியாபாரத்தின் போது நடைமுறைக்கணக்கு கொடுப்பனவுகளே பெரிய பங்காற்றவேண்டும். எனினும் தற்போதைய நிலை அதற்கு சாதகமாக அமையவில்லை.
நிதிக்கணக்குள் மற்றும் அரசாங்க பெறுகைகள் பாரிய நிதிக்கட்டமைப்புகள் என்றபோதிலும் அவை இலங்கைப்போன்ற சிறிய நாடுகளின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு உதவமாட்டாது  என்று அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை பொருளாதார கொள்கைக்கு முரண்பாடான செயற்பாடுகளால் இலங்கையின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.இந்தநிலையில் எவ்வாறு உற்பத்தி பெருக்கமுடியும் என்று பேராசிரியர் அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். 
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு பின்னடைவு.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மூத்த தலைவர் ஜாவேத் ஹாஷ்மி இம்ரான் கானின் கட்சியில் இணைந்து விட்டார். இது நவாசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் துணைத் தலைவருமான ஜாவேத் ஹாஷ்மி நேற்று முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சியில் இணைந்து விட்டார்.
அவரது தாவலைத் தடுப்பதற்காக நவாஸ் கட்சியினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. ஹாஷ்மியுடன் நவாஸ் தொலைபேசியில் பேசினார். அப்போது ஏற்கனவே தான் இம்ரான் கானுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி சேர போவதாக ஹாஷ்மி தெரிவித்தார்.
இம்ரான் கட்சியில் சேர்வதற்கு முன் பேட்டியளித்த ஹாஷ்மி கூறுகையில், பாகிஸ்தான் மாறி வருவதை அடையாளம் காட்டுவது தாரிக் இ இன்சாப் கட்சி தான். பல பிரச்னைகளில் இருந்து நாட்டை அக்கட்சி தான் விடுவிக்கும்.நவாசுடனோ, அவரது சகோதரரும் பஞ்சாப் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப்புடனோ எனக்கு எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது என்றார்.ஹாஷ்மியின் இந்தக் கட்சித் தாவலால் அவரது செல்வாக்கு மிகுந்த பஞ்சாபின் தெற்கு பகுதியில் நவாசின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அடுத்தாண்டில் நாடு திரும்ப உள்ள முஷாரப்புடன் இந்தச் சவாலையும் நவாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மீதான தாக்குதல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் இருநாடுகளிடையே சுமுக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் அமைதிப் பேரணி.
இயேசு கிறிஸ்து பிறந்த ஊரான பெத்லஹேம் பகுதியில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி அமைதி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் பல்வேறு நாட்டிலிருந்து வந்தவர்களும் கலந்து கொண்டனர்.இதுகுறித்து பாதிரியார் ஒருவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே அமைதியை ஏற்படுத்த கடவுளிடம் பிரார்த்தனை செய்ய பேரணி நடத்தப்பட்டதாக கூறினார்.
முஸ்லிம்கள் மீது இராணுவம் தாக்குதல்: 60 பேர் பலி.
நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் போகோஹராம் என்ற பழமைவாத முஸ்லிம் பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர்.இவர்கள் அந்த மகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இராணுவத்துக்கும், இவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வரும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பழமைவாத முஸ்லிம்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது. டாமாடுரா நகரில் நடந்த மோதலில் முஸ்லிம்கள் 56 பேர் கொல்லப்பட்டனர், 4 இராணுவ வீரர்களும் பலியானார்கள்.
இராணுவத்தின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல், கலவரக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக இராணுவ அதிகாரி அஜுபைக் இஹொஜரிக்கா கூறினார்.
ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரிக்க வேண்டாம்: ஸர்தாரி மக்களுக்கு வேண்டுகோள்.
பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக நடைபெறும் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரிக்க வேண்டாம் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி தன் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி மாற்றம் என்பது வாக்குச்சீட்டில் தான் நடைபெற வேண்டும்.
துப்பாக்கி குண்டுகளின் மூலம் நடைபெறக்கூடாது என ஜின்னா முழுமையாக நம்பினார். இதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். வலுக்கட்டாயமாக நடைபெறும் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: கனடா கடும் கண்டனம்.
சிரியா போராட்டக்காரர்கள் மீது நடத்தும் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பேய்ர்டு கூறியுள்ளார்.சிரியாவின் ஜனாதிபதி பஷார் ஆசாத் கட்டுப்பாடற்ற முறையில் தனது இராணுவத்தை ஏவி பொதுமக்களை அச்சுறுத்தியும், கொலை செய்தும் வருகிறார்.
இதனைத் தடுக்கும் விதத்தில் சிரியா மீது சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்க கனடா முன்வந்துள்ளது. இனி சிரியாவிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருள் தவிர வேறு எந்தப் பொருளையும் கனடா பெற்றுக்கொள்ளாது.கனடாவிலிருந்து இனி சிரியாவிற்கு கணணி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் ஏற்றுமதியாகாது. சிரியா இராணுவத்தினருடன் தொடர்புடைய தனிநபர் மற்றும் நிறுவனங்களுடன் கனடா இனி வர்த்தகத் தொடர்பு வைத்துக்கொள்ளாது.
ஆசாத் ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று பெயர்டு கண்டிப்புடன் தெரிவித்தார். சிரியாவின் தேசியக் குழுவைச் சேர்ந்த சிலர் பெயர்டைச் சந்தித்துப் பேசினர்.அவர்களில் ஒருவரான உபைதா நவாஸ் கூறுகையில், சிரியாவில் மக்களாட்சி மலரவும், மக்கள் விடுதலை பெறவும் மக்கள் இன்று நடத்தி வரும் புரட்சியை கனடா அரசு உணர்ந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
ஆசாத்திற்கு மேலை நாடுகளும், துருக்கியும், அரபு நாடுகளின் கூட்டமைப்பும் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதால் அவரால் அதிக நாட்களுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிக்க இயலாது. எனவே எங்களின் அறிவுரையை ஏற்று உடனே பதவி விலகினால் அவருக்கு சில லாபங்களும் கிடைக்கும் என்று பெயர்டு எச்சரித்தார்.இவர் எச்சரிக்கை விட்ட அதே நாளில் இரட்டை தற்கொலைப் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கசில் நடைபெற்றன. இதில் 44 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயம்பட்டனர்.
நாஜி ஆதரவாளர் விருந்தில் பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்.
நாஜிகள் ஆரவாரமாக நடத்திய இளைஞர் விருந்தில் பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதை பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.இந்த விருந்து பிரான்சின் வால் தொரன்ஸ் மாகாணத்தில் உள்ள அல்பைன் விடுதியில் நடைபெற்றது.
நாஜிகளுக்கு ஆதரவுளிப்பதும், யூதப்படுகொலையை நியாயப்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டில் நாஜிகளின் சீருடை அணிந்து, ஹிட்லருக்கு வணக்கம் சொல்லி இவ்விருந்தினை நடத்தியிருக்கின்றனர்.இந்த இளைஞர் விருந்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அய்டான் பர்லி என்ற பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டது ஒளிப்படங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது. 
இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தன்னுடைய இளம் உதவியாளர் அழைத்ததால் அங்கு சென்றதாகக் குறிப்பிட்டு தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இவர் மீது பிரெஞ்ச் காவல் துறையினர் வழக்குத் தொடரலாமா அல்லது பிரிட்டன் அரசிடம் இவரைப் பற்றி முறையிடலாமா என்று பிரான்ஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
ஹிட்லருக்கு வணக்கம் கூறிய நபர் கைது.
ஜேர்மனியில் உள்ள காசெல் என்ற நகரத்தில் நவீன நாஜி இயக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.32 வயதான இந்த இளைஞன் இடதுசாரி கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்த்து ஹிட்லருக்கு வணக்கம்(ஹிட்லர் சல்யூட்) செலுத்தினான். இவன் தீவிர வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன்.
இடதுசாரிகள் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிக்கைனளை அனைவருக்கும் கொடுத்தனர். அதனை வாங்கிப் படித்த இந்த இளைஞன் அவர்கள் மீது கோபம் கொண்டு வலது சாரிக்கு ஆதரவாக நாஜிகளை வாழ்த்தி ஹிட்லருக்கு வணக்கம் செலுத்தினான்.இதனால் இவனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் நீதிபதி இவனுக்கு 600 யூரோ அபராதம் விதித்தார். இந்த அபராதத்தை நாள் ஒன்றுக்கு பத்து யூரோ வீதம் அறுபது நாளைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஜேர்மன் நாட்டில் நாஜிகளின் சின்னமான ஸ்வஸ்திக், கொடி, சீருடை, வணக்கம் தெரிவிக்கும் முறை, நாஜி மற்றும் ஹிட்லருக்கு சொல்லும் வாழ்த்தொலி என்று அனைத்தும் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த இளைஞர் ஹிட்லர் பாணியில் வணக்கம் தெரிவித்தது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இளவரசரை சந்தித்த அரசி.
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் இருதய அறுவை சிகிச்சைக்கப் பின் குணமடைந்து வருகிறார்.90 வயது நிரம்பிய இளவரசர் பிலிப்புக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததை கண்டுபிடித்து ஸ்டெண்ட் பலூன் முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.நேற்றிரவு அரசு குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு சென்று இளவரசர் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இங்கிலாந்து அரசி எலிசபெத்துடன் இளவரசர் சார்லஸ், இளவரசர் எட்வர்டு, இளவரசி ஆனி, இளவரசர் ஆண்டுரூ மற்றும் இளவரசி கமீலா ஆகியோர் சென்றனர்.இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, அறுவை சிகிச்சைக்குப் பின் இளவரசர் பிலிப் நன்கு உறங்கியதாகவும், அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வைத்தியர்கள் இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
கடந்த 1990ம் ஆண்டு முதலே சேண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடந்து வரும் கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் தவறாமல் பங்குபெற்று வந்த இளவரசர் பிலிப் இந்த ஆண்டு தவறவிட்டுவிட்டார். ஆனால் ஆராதனை திட்டமிட்டபடி நடைபெற்றது.அரச குடும்பத்தாரின் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. தன் 90ஆண்டு வாழ்க்கையில் இதுவே இளவரசர் பிலிப் செய்து கொண்ட முதல் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் அமைச்சர் திடீர் ராஜினாமா: அழுதபடியே தனது கடிதத்தை கொடுத்தார்.
பாகிஸ்தான் தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் எந்தவித காரணமும் கூறாமல் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று கராச்சியில் நடந்தது.
அந்த கூட்டம் அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பராப்பானது. இதில் கலந்து கொண்ட அந்நாட்டு தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பிரதமர் கிலானியிடம் அவான் கூறியதாவது, அமைச்சரவை உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் அனுமதியுடன் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி அழுதுவிட்டார். தனது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று அவர் தெரிவிக்கவில்லை.
இதன் பின்னர் ராஜினாமா குறித்து அமைச்சரும், பிரதமரும் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் நிராகரித்தார்.கடந்த 2008ம் ஆண்டு ஸர்தாரி அரசு பதவிக்கு வந்த பிறகு பொறுப்பேற்ற 3வது தகவல் அமைச்சர் அவான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பு ஷெர்ரி ரஹ்மான்(தற்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர்) மற்றும் குவாமர் ஜமான் கைரா ஆகியோர் தகவல் அமைச்சர்களாக இருந்தனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பிரச்சனை ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு ஆதரவு அளித்து வந்த அவான் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றித்தின் போது அமைச்சரானார்.
வரலாறு காணாத அளவில் ரஷ்யாவில் பிரமாண்ட பேரணி.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது.ரஷ்யாவில் கடந்த 4ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது என குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், அரசியலில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அறிவித்தார்.ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் கடந்த வாரங்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பேரணிகளை நடத்தின.
இந்நிலையில் நேற்று இதுவரை ரஷ்யா எதிர்பாராத அளவிற்கு தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அலக்சி நவான்லி பேசுகையில், இனி ரஷ்யா ஊழலைப் பொறுத்துக் கொள்ளாது. இந்தக் கூட்டம் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற போதுமானது தான். ஆனால் நாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் உட்பட பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தன.
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் கலவரங்கள்.
எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நேற்று முன்தினம் தலைநகர் கெய்ரோவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரம் இராணுவ ஆட்சியை ஆதரித்து மற்றொரு பகுதியில் பேரணி நடந்தது.எகிப்து மக்கள் மத்தியில் இராணுவ ஆட்சி தொடர்பாக, கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன என்பதை இந்தப் பேரணிகள் எடுத்துக் காட்டுகின்றன.
எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி முதல் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் சிலர் திரண்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் திடீரென இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது.பெண் ஒருவரை காவல்துறையினர் கொடுமைப்படுத்திய காட்சிகள் பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளியாகின. இது போராட்டத்தை மேலும் தூண்டிவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தாரிர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இராணுவ ஆட்சி உடனடியாக பதவியிறங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலெக்சாண்டிரியா உட்பட பிற நகரங்களிலும் இராணுவ ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இந்நிலையில் இராணுவ ஆட்சி மூலம் தான் நாட்டில் ஓரளவுக்கு அரசியல் நிலைப்படும் என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் கெய்ரோவின் பிற பகுதிகளில் திரண்டு இராணுவ ஆட்சிக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தினர்.
ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்த போது முக்கிய பங்காற்றிய பல இயக்கங்கள் தற்போதைய இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. சலாபி பிரிவு அரசியல் கட்சியான அல் நூரும் ஆதரவளித்துள்ளது.அதே நேரம் நாட்டின் மிக முக்கிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவான நீதி மற்றும் விடுதலைக் கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. இதனால் மக்கள் தாங்கள் அக்கட்சியால் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கியூபாவில் மனிதாபிமான அடிப்படையில் மூவாயிரம் சிறைக்கைதிகள் விடுதலை.
கியூபாவில் மனிதாபிமான அடிப்படையில் மூவாயிரம் சிறைக்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.கியூபா நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் முடிவில் பேசிய ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கூறுகையில், கத்தோலிக்க சர்ச், பல்வேறு பிராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் ஆகியவற்றின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அடுத்தாண்டில் முதன் முறையாக போப் கியூபாவுக்கு வருவதை முன்னிட்டும் மூவாயிரம் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய போப் ஜான்பால் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டதை ஒட்டி 299 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.தற்போது மிகப் பெரிய எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இவர்களில் 25 நாடுகளைச் சேர்ந்த 86 கைதிகளும் அடக்கம். ஆனால் 2009ம் ஆண்டு டிசம்பரில் கைதான அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் ஒப்பந்ததாரர் ஆலன் கிராஸ் என்பவரை விடுதலைப் பட்டியலில் ஜனாதிபதி சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.கடந்த 2006ம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து ஜனாதிபதி பதவியை பெற்ற போது இந்த திருத்தங்களைக் கொண்டு வருவதாக உறுதியளித்த ரவுல் இதுவரை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் இரகசிய குறியீடுகளை மாற்றியமைத்த வடகொரியா: தென்கொரியா திணறல்.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல்லின் மரணத்திற்குப் பின் தென்கொரியா உளவு பார்த்து வருவதால், அதைத் தடுக்கும் வகையில் தகவல் பரிமாற்றங்களில் இரகசிய குறியீடுகளை வடகொரியா மாற்றியுள்ளது.வடகொரிய தலைவர் கிம் ஜாங் இல் மறைந்த பின் அந்நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள தென் கொரியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அதற்காக தென் கொரிய உளவுத் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல் மரணம் அடைந்த செய்தி கூட உடனடியாக வெளியுலகுக்குத் தெரிந்து விடாதபடி வடகொரியாவின் உளவுத் துறை செயல்பட்டதைக் கண்டு தென் கொரியா அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதன் பின் தான் தென் கொரிய உளவுத் துறை, வடகொரியாவை உளவு பார்ப்பதில் அதிக வேகம் காட்டி வருகிறது.
மேலும் கிம் ஜாங் இல் இறந்த உடன் பல்வேறு இடங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த இராணுவத்தினரை உடனடியாக பயிற்சிகளைக் கைவிட்டு தங்கள் தளங்களுக்குத் திரும்பும்படி புதிய தலைவர் கிம் ஜாங் உன் முதன் முதலாக உத்தரவு பிறப்பித்ததாக தென் கொரிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.இந்த உத்தரவு இரகசிய குறியீடுகளாக கம்பியில்லா தந்திகள் மூலம் இராணுவத்தினருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் குறியீடுகளை தென் கொரிய இராணுவம் கண்டுபிடித்து தகவலை அறிந்து கொண்ட பின் தான் தென் கொரிய ஊடகங்களில் கிம் ஜாங் உன்னின் முதல் உத்தரவு பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து தற்போது வடகொரியா தனது உளவு மற்றும் இராணுவத் தகவல்களுக்கான இரகசியக் குறியீடுகளை மாற்றி அமைத்துள்ளது. இதனால் தென் கொரியா உளவு பார்ப்பதில் மேலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF