Sunday, December 11, 2011

இன்றைய செய்திகள்.

ஜோன் அமரதுங்க ரணிலுக்கு ஆதரவு?- பா.உ ரஞ்சித் மத்தும பண்டார.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அக்கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஜோன் அமரதுங்க ஆளும் கட்சியிலா அல்லது எதிர்க்கட்சியிலா அங்கம் வகிக்கின்றார் என்பதில் சந்தேகம் நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரிய கட்சித் தலைமைப் பொறுப்புக்காக போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டமை முதல் அரச ஊடகங்கள் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்படுவதனை அரசாங்கம் விரும்பவில்லை என்பது இதன்போது தெளிவாகின்றது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் ஜோன் அமரதுங்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார். 
பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதே ஐ.தே.க. உறுப்பினர்களின் அவா!- அமைச்சர் சந்திரசிறி.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதே சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆவலாக அமைந்துள்ளது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலைவன் என்ற ரீதியில் ஏனைய கைதிகள் உட்கொள்ளும் உணவுகளையே சரத் பொன்சேகாவும் உட்கொள்ள வேண்டும். நான் சிறையில் இருந்தால் அவ்வாறே செய்வேன். எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சரத் பொன்சேகா அவ்வாறு செய்வதில்லை நோய் என்றால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் செல்லும் போது, சரத் பொன்சேகா அரசாங்கத்தை திட்டித் தீர்க்கின்றார். ஊடகங்களும் பிழையான பிரசாரத்தை செய்கின்றன.
இவற்றை சிறைச்சாலை அதிகாரிகளினால் தடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா மற்றுமொரு கைதி என்றே கருதப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பூரண சந்திர கிரகணம்! இலங்கையில் முழுமையாக காணலாம்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளதாகவும் இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் எனவும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.சூரிய மறைவுக்குப் பின் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 வரையான காலப் பகுதியில் இலங்கையில் இந்த சந்திர கிரகணத்தைக் காண முடியும் என ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. என்றும் இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை  பூரண சந்திர கிரகணம்  தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ள சந்திர கிரகணம்  இன்று இரவு 11 மணிக்கு நிறைவடையும் எனவும்  ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த சந்திர கிரகணம் அலஸ்கா, வடக்கு கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மத்திய மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தென்படும் என நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது. 
திருவனந்தபுரத்தில் எமிரேட்ஸ் - சிறிலங்கன் விமானங்கள் ஒரே ஓடுபாதையில்! தெய்வாதீனமாக தப்பிய 400 பயணிகள்.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை  எமிரேட்ஸ் மற்றும் சிறிலங்கன் விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டதுடன், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல்  11.10 மணியளவில்  எமிரேட்ஸ் விமானம் ஒன்று கட்டார் நாட்டுக்கு புறப்பட்டது.
விமானத்தள ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பிக் கொண்டிருந்த அதேநேரம், கொழும்பில் இருந்து வந்த எயர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரையிறங்கியது.
சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்திருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும்.ஆனால், தெய்வாதீனமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சமிக்ஞை கொடுப்பதில் ஏற்பட்ட தவறுதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என விமானநிலைய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மீது நேட்டோ தாக்குதலுக்கு இலங்கையில் கண்டனம்!
நேட்டோ படைகளின் தாக்குதலில் 24 பாகிஸ்தானிய படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியும் இலங்கை- பாகிஸ்தான் நட்புறவு சங்கம் என்பன இணைந்து  இவ்வார்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது கருத்துரைத்த தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் நேட்டோ படைகள் பாகிஸ்தானிய படையினரை கொன்றதன் மூலம் பாரிய குற்றத்தை செய்திருப்பதாக தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
குவைத்தில் இலங்கைப் பெண் படுகொலை! இளைஞர் ஒருவர் படுகாயம்.
குவைத்தின் தெஹரா நகருக்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட குழுவினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கைப் பெண் அங்கு பணியாற்றிய மற்றமொரு இலங்கையருடன் இரகசிய தொடர்பினைப் பேணி வந்தமையே இந்தக் கொலைக்கு முக்கிய காரணமென கூறப்படுகின்றது.அந்த இலங்கை இளைஞர் பலத்த வெட்டுக் காயங்களுடன் தெஹரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணைப்பதிகாரி ஹரிஸ்சந்திர படுகொட தெரிவிக்கையில் அவ்வாறான சம்பவமொன்று தமக்கு பதிவாகியுள்ளதாக    குறிப்பிட்டார்.
ஐரோப்பிய தமிழ் பாடசாலைகளில் ஈழம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன – லக்பிம.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் நிர்வாகம் செய்யப்படும் ஐரோப்பிய தமிழ் பாடசாலைகளில்  மாணவர்களுக்கு ஈழம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாக லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் வாழும் 22,000 தமிழ் மாணவ மாணவியருக்கு இவ்வாறு இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் கொள்கைகள் கற்பிக்கப்படுகின்றதாக புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான தகவல்களை கண்டு பிடித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் மூளைச் சலவை பொறியில் சிக்கியிருக்கும் இந்த சிறுவர் சிறுமியர் இலங்கையை பார்த்தது கூட இல்லை என்றும் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சோலை, தமிழ் அலை போன்ற பெயர்களில் இவ்வாறான பாடசாலைகள் இங்கி வருகின்றதாகவும் இதேவேளை, சுமார் 350 விடுதலைப்புலிப் பாடசாலைகளை அமைப்பதற்கு புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டவர்களே இந்தப் பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றி வருவதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது
சரத் பொன்சேகாவின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படும் - ரணில்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் போராட்டம் இன்று சனிக்கிழமை(10.12.2011)  கொழும்பில் ஆரம்பமானது.மேல் நீதிமன்றில இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா என்பது தெரியவில்லை. எனவே இந்தப் பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதுவே எமது பிரதான நீதிமன்றம் அதில் முறைப்பாடு செய்யப்படும் என்று ரணில் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.இதற்காக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்க நேரிடும் என்று  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று ஆரம்பமான கையொப்பம் திரட்டும் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்க இரகசியங்களை ஜப்பானுக்கு வழங்கிய அதிகாரிகள் பற்றி விசாரணை.
அரசாங்க இரகசியங்களை ஜப்பானுக்கு வழங்கிய அதிகாரிகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பில் குறித்த அதிகாரிகள், மாதாந்தம் ஜப்பானுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அரசாங்க அதிகாரிகள் இருவரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அரச உத்தியோகத்தர்கள் இருவரும் மிகவும் இரகசியமானது என்ற தலைப்பில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஜப்பானுக்கு அனுப்பி வைத்த இரகசிய தகவல்கள் புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கு கிடைத்துள்ளது.இந்த இரண்டு அரச உத்தியோகத்தர்களும் ஜப்பானின் நிதி உதவியுடன் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனத்தில் ஆலோசகர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
இதில் ஒருவர் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சில் கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து மோசமான விமர்சனங்களுடன் ஜப்பானுக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதேவேளை இலங்கை அரச இரகசியங்களை, அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பில் முதல் தடவையாக முறைப்பாடு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இலங்கையில் தோற்றிய சந்திர கிரகணத்தின் படங்கள்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.  இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருந்தது.
இன்று  தோற்றிய சந்திர கிரகணத்தின் காட்சிகள் அடங்கிய சில படங்கள்.


திவாலாகும் நிலையில் பிரெஞ்சு வங்கிகள்.
பிரான்ஸ் நாட்டு வங்கிகளில் மூன்று வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளது என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
BNP பரிபாஸ்(BNP Paribas), சொஸைட்டி ஜெனரலெ(Societe Generale) மற்றும் கிரெடிட் அக்ரிகொலே(Credit Agricole) என்ற மூன்று வங்கிகளும் இந்த மோசமான நிதிநிலைமையை எட்டியுள்ளன.
நிதியிருப்பை  அதிகரிக்க இயலாததாலும், கொடுத்த கடனை வசூலிக்க இயலாததாலும் இந்த வங்கிகள் திவாலாகும் நிலைக்கு வந்துள்ளன.
இவ்வங்கிகளோடு ஐரோப்பாவில் உள்ள வங்கிகளை ஒப்பிட்டால் அவை சில்லறை பரிவர்த்தனைகளிலும், நிலையான இருப்பு நிதி வைத்திருப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நிதிநெருக்கடியில் சிக்கிய நாடுகளிலும் இவ்வங்கி ஓரளவு சமாளித்து வருகிறது.
ஆப்கான் எல்லையில் தாக்குதல் நடத்தும் படைகளை குவிக்க பாகிஸ்தான் திட்டம்.
பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் படைகளை ஈடுபடுத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி பாகிஸ்தானில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ படை நடத்திய தாக்குதலை அடுத்து, எல்லைகளில் நேட்டோவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வழிகளை பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து நேற்று முன்தினம்(08.12.2011) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவில் பேசிய பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவு இயக்குனர் அஷ்பாக் நதீம் அகமது பேசுகையில், நேட்டோ தாக்குதலுக்குப் பின் மேற்குப் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதை எதிர்கொள்ளும் வகையில் அங்கு படைகள் ஈடுபடுத்தப்படும் என்றார்.
ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல்.
ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என பாகிஸ்தான் விசாரணை குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த மே 1ம் திகதியன்று பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்‌லேடன் அமெரிக்க கமாண்டோ படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பாகிஸ்தான் அரசு விரிவான விசாரணைக்கு உத்தர விட்டது. இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜாவியத் இக்பால் த‌‌லைமையின் கீழ் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை குழுவின் தலைவர் ஜாவியத் இக்பால் கூறுகையில், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை முடியும் நிலையில் உள்ளது. ‌அமெரிக்க அரசுடன் மேலும் சில தகவல்கள் பெற வேண்டியுள்ளது.மேலும் பின்லேடன் மனைவி, அரசியல்வாதிகள், இராணுவ உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 1000 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது, இம்மாத இறுதியில் அறிக்கை முழுமையாக முடிந்து விடும், பின்னர் அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
அந்த அறிக்கை வெளிப்படையானதாக இருக்கும். இந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம், உண்மை நிலவரத்தினையும் தெரிவிக்கலாம், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்றார்.
காங்கோ நாட்டின் ஜனாதிபதியாக கபிலா தெரிவு.
காங்கோ நாட்டின் ஜனாதிபதியாக ஜோசப் கபிலா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் குழு அறிவித்துள்ளது.ஜோசப் கபிலா தேர்தல் முறைகேட்டில் ‌ஈடுபட்டதாக எதிர்க்க‌ட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில் 11 நாட்களுக்கு பிறகு தேர்தல் குழு கபிலா ‌வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.மேலும் கபிலா 49 சதவிகித வாக்குகளை பெற்றதாகவும், எதிர்க்கட்சி 32 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட அமெரிக்க உளவு அதிகாரியின் காணொளி வெளியீடு.
ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட எப்.பி.ஐ உளவுப்பிரிவு அதிகாரியின் காணொளியை கடத்தல்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.அதில் அமெரிக்க அரசு தன்னை மீட்க கடத்தல்காரர்களின் நிபந்தனையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவு எப்.பி.ஐ.யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராபர்ட் லெவின்சன்(63).
ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இவரை மர்ம கும்பல் கடத்தியது. அவரை மீட்க அமெரிக்க படைகள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார், யார் கடத்தியது, என்ன நிபந்தனைகள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில் ராபர்ட்டின் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் கடத்தல்காரர்கள் காணொளி ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த காணொளியை ராபர்ட்டின் குடும்பத்தார் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில் ராபர்ட் கான்கிரீட் சுவருக்கு கீழே உட்கார்ந்துள்ளார். அந்த காணொயில் அவர் கூறியதாவது, என் அன்பான மனைவி கிறிஸ்டின், மகன், பேரன்களே, எனக்கு உடல்நலம் சரியில்லை. சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.
என்னை கடத்தல்காரர்கள் துன்புறுத்தவில்லை, நன்றாக பார்த்துக் கொள்கின்றனர், எனினும் குடும்பத்துடன் என்னை சேர்க்க அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி என்னை மீட்க வேண்டும் என்று காணொளியில் கண்ணீர் விட்டு ராபர்ட் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு சீனாவின் அமைதி விருது.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) சீனாவின் அமைதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புடினை எதிர்த்து மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.அமெரிக்கா தான் ஆர்ப்பாட்டத்தை தூண்டி விடுகிறது என்று புடின் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில் புடினுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருதுக்கு புடின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விருது வழங்கும் அமைப்பின் நிறுவனர் கியாவோ டமோ கூறுகையில், லிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவதற்கு புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக சீனாவின் அமைதி விருதுக்கு அவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார்.
சீனாவில் சர்வதேச அமைதி கல்வி மையம் நடத்தி வருகிறார் கியாவோ. அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து புடின் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்த விருது வழங்க சீன அரசு அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கியாவோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் பால் பண்ணை உரிமையாளருக்கு மரண தண்டனை விதிப்பு.
சீனாவில் பால் பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பால் பண்ணையில் இருந்து விற்கப்படும் பாலில் சட்டத்துக்கு புறம்பாக இன்டஸ்ட்ரியல் சால்ட் எனப்படும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உப்பு கலப்பு அதிகம் இருந்ததால் அதை குடித்த 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.
இதுகுறித்த வழக்கில் பாலில் நச்சுக்கலப்பு உறுதி செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பால் பண்ணை உரிமையாளருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவருடைய பெயர் உட்பட மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சிரியாவில் தொடரும் போராட்டம்: 24 பேர் பலி.
துனிசியா மற்றும் எகிப்து நாடுகளில் ஜனாதிபதிக்கு எதிராக புரட்சி ஏற்பட்டதையடுத்து சிரியாவிலும் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கெயில் நகரத்தில் நேற்று(09.12.2011) ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் திரண்டார்கள். இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இதை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 24 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு பயங்கர கலவரம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் குடியுரிமை விற்பனைக்கு அல்ல: புலம்பெயர்வுத்துறை அமைச்சர்.
கனடாவில் சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 6500 பேர்  நூறு நாடுகளில் இருந்து வந்து தங்கியிருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏமாற்று வேலையை கனடா மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கனடாவின் புலம்பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கனடாவின் குடியுரிமை விற்பனைக்கு இல்லை. மோசடியாகக் குடியுரிமை பெற்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்த கென்னி 2100 பேர் சட்டத்திற்குப் புறம்பாகவும், 4400 பேர் மோசடியாகவும் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றார்.
மேலும் கனடாவில் ஒருவர் குடியுரிமை பெற இரண்டாண்டுகளாவது கனடாவில் தங்கியிருக்க வேண்டும் என்றார்.அவ்வாறு தங்காதவர்கள் குடியுரிமை பெற்று இருப்பதை காவல்துறையும் புலம் பெயர்வுத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்.கடந்த 1867ஆம் ஆண்டு முதல் கனடாவில் குடியுரிமை பறிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் நவீன நாஜிக் கட்சிக்கு எதிர்ப்பு.
ஜேர்மனியின் பதினாறு மாநிலத்தின் உள்துறை அமைச்சர்களும் வெள்ளிக்கிழமை(09.12.2011) ஒன்று கூடி தீவிர வலதுசாரிக் கட்சியான NPD என்று அழைக்கப்படும் தேசிய குடியரசுக் கட்சியைத்(National Democratic Party) தடை செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஜேர்மனியின் வீஸ்படென் நகரத்தில் நடந்த அமைச்சர்களின் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து ஹெசெ மாநிலத்தின் உள்துறை அமைச்சரான போரிஸ் ரெய்ன் NPDயை, நாட்டின் சுதந்திரமான குடியரசு முறையைச் சிதைக்கவும், அழிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட நடத்தைகளையும், குறிக்கோள்களையும் கொண்ட கட்சி என்று விமர்சித்தார்.
நவீன நாஜிக்கட்சியாகத் திகழும் NPDயின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தற்போது மாநில மற்றும் கூட்டமைப்பின் பணிக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக ஜேர்மானியக் கூட்டமைப்பின் உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் ஃபிரெட்ரிக் தெரிவித்தார்.
பிரெட்ரிக் மேலும் தெரிவிக்கையில், NPDயை அழிக்க நாம் முனைந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாம் தோற்றுவிட்டால் அது NPDக்கு வெற்றியாக அமைந்துவிடும் என்றார்.மைய – இடது சாரிக் கட்சியான சமூகக் குடியரசுக் கட்சித் தலைவர்கள் நவீன நாஜிக் கட்சியை ஒழிக்க நினைக்கின்றனர். ஆனால் பழைமைவாத கிறிஸ்தவ குடியரசு கட்சி இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இவர்கள் நீதிமன்றத்தை நம்புகின்றனர்.
மகனை பணியில் அமர்த்த ஸர்தாரி திட்டம்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி சமீபத்தில் திடீர் என்று துபாய் சென்றார். அவரது பயணம் மர்மமாக இருந்தது. உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற சென்றதாக சில நாள் கழித்து தகவல் வெளியானது.
அவருக்கு மாரடைப்பு என்றும், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் பக்கவாதம் என்றும் கூறப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்னும் சில நாட்கள் துபாயில் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று தங்குவார் என்றும் அவர் பாகிஸ்தான் திரும்ப தயங்குவதாகவும் இன்று(10.12.2011) புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் இராணுவத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இராணுவ அதிகாரிகளுக்கும், ஸர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.ஸர்தாரியை கேட்காமலேயே இராணுவம் சில நடவடிக்கையில் ஈடுபட்டது. இது தனக்கு செய்யும் துரோகம் என ஸர்தாரி குற்றம் சாட்டினார். இது போன்ற துரோக செயலில் இராணுவம் ஈடுபடாது என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே நாடு திரும்புவேன் என்று ஸர்தாரி நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் சர்தாரி அமைதிப் புரட்சி மூலம் ஆட்சி நிர்வாகத்தை மகன் பிலாவால் பூட்டோவிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை பொறுப்புகளை பிலாவால் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸர்தாரியின் உதவியாளர் கூறும் போது, அவர் துபாயில் சிகிச்சை பெற்ற பின் லண்டன் சென்று மேல் சிகிச்சை பெறுவார். எனவே அவர் தற்போதைக்கு பாகிஸ்தான் திரும்பமாட்டார் என்றார். துபாயில் அவருக்கு இன்னும் பரிசோதனைகள் நடைபெற இருப்பதால் 2 வாரத்துக்கு மேல் தங்கி இருப்பார் என்றும் கூறினார்.இதற்கிடையே 3 நாட்களில் பாகிஸ்தானில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று மேலும் ஒரு அதிகாரி கூறினார். ஒரு வழக்கில் ஸர்தாரிக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 15 நாட்களுக்குள் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.
இராணுவ தளபதி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர், முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசைன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் ஸர்தாரி தவித்தார். இதனை தவிர்க்கவே துபாய் சென்றார் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசை மூன்று பெண்கள் பெற்றுக் கொண்டனர். இந்த பரிசு லிபெரியா ஜனாதிபதி எல்லன் ஜான்சன் சர்லிப், அதே நாட்டை சேர்ந்த லெமக் போவீ, ஏமன் நாட்டின் டவாக்குல் கர்மன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பலத்த கரகோஷத்துக்கிடையே தங்களுக்கான பரிசு மற்றும் பதக்கங்களை இவர்கள் பெற்றுக் கொண்டனர்.அநீதி, சர்வாதிகாரம், பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக போராடியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நோபல் பரிசுக்கான குழுத்தலைவர் தேர்ப்ஜெர்ன் ஜாக்லாந்து கூறுகையில், பரிசை பெற்ற பெண்கள் மனித உரிமை, பெண்களுக்கு சம உரிமை மற்றும் அமைதிக்கான தூதர்களாக விளங்குவதாக கூறினார்.
சிரியா தன் படைகளை திரும்பப் பெற வேண்டும்: பிரிட்டன் எச்சரிக்கை!
சிரியாவின் ஹோம்ஸ் நகரத்திலிருந்து தனது இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் சிரியாவை எச்சரித்துள்ளது.பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிஸ்ட்டேர் பர்ட் கூறுகையில், சிரியா அரசு இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி நடைபெற்ற அரபு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் சிரியா இதனை ஏற்கனவே ஒத்துக் கொண்டுள்ளது.
வன்முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் நகரங்களிலிருந்து தனது ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாகவும், சிறையில் வைத்துள்ளவர்களை விடுதலை செய்வதாகவும், அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச ஊடகத்தின் கண்காணிப்புக்கு உடன்படுவதாகவும் சிரியா கையெழுத்திட்டுள்ளது.ஆனால் இப்போது ஹோம்ஸ் நகரத்தில் இந்த உடன்பாட்டை மீறி இராணுவத்தை கொண்டு அப்பாவி பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவித்துள்ளதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது. சிரியா அரசு உடனே இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF