இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா கணக்கிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மின் நிலையம் செயற்படாமல் போகும் ஒவ்வொரு நாளிலும் 80 மில்லியன் ரூபா இழப்பை அரசாங்கம் சந்தித்து வருவதாகவும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளினால் நுரைச்சோலை மின்நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கடந்த மார்ச் மாதம் நுரைச்சோலை மின்நிலையம் திறந்து வைக்கப்பட்ட போதும், பல்வேறு காரணங்களினால் 35 நாட்கள் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இடம்பெறவில்லை. இதனால் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது..
தற்பொழுது வெளியிடப்பட்ட கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடமும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஆனந்த நடராஜா சஞ்சயன் 3ஏ பெற்று விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.இந்த முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என இரு பிரிவுகளாக நடைபெற்றதுடன் யாழ் மாவட்டத்தில் இந்த முறை முதல் தடவையாக பல பாடசாலைகளின் மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பட்சைக்குத் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
விசேட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானம்! சரத் பொன்சேகா விடுதலையாவாரா?
விசேட கைதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
குற்றச் செயல்களின் காரணமாக ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்ட விசேட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.உல்ப் தன்னுடைய பெல்லீவ் அரண்மனையில் இருந்து நாட்டின் உயர்மட்டக் குடிமக்கள் கூடிய கூட்டத்தில் சமூகப் பொறுப்புணர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை குறித்து பேசினார்.மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த சமூகத்திற்குத் தன்னாலான ஏதோ ஒரு நன்மையை வழங்குகிறான் என்று பாராட்டினார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளினால் உருவாக்கப்பட்ட உலகின் மிக நீண்ட வாழ்த்து அட்டை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்குவது குறித்து தெரிவித்துள்ளார்.பொது மன்னிப்பு மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.இந்தநிலையில் கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
2002ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விசேட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தைக் கொண்டு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.எவ்வாறெனினும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்கும் புதிய அறிக்கையை எதிர்பார்க்கின்றது அமெரிக்கா! - இலங்கை அதிருப்தி.
அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபாடுகளை கொண்டது போதுமானதாக இல்லை என்ற தகவல் இலங்கை அரசுக்கு அமெரிக்காவினால் இதன் மூலம் பரிமாறப்பட்டுள்ளது.
அத்துடன் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையிலான புதிய அறிக்கை ஒன்றை இலங்கை அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்ற தகவலும் பரிமாறப்பட்டிருக்கிறது.அமெரிக்காவின் இந்த அழைப்பு இலங்கைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளபோதும், இன்னமும் உரிய பதில் கொடுக்கப்படவில்லை, என்று தெரியவருகிறது.
இலங்கையின் முறைப்படியான பதிலை இராஜதந்திர முறையில் அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் நம்பப்படுகிறது. அமெரிக்கா கோரியுள்ளது போன்று மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான முழுமையான அறிக்கையை இலங்கை அரசு சமர்ப்பிக்க இணங்கினால், அமெரிக்கா மென்போக்கில் அணுகும் என்றும், இல்லையேல் கடும் போக்கை வெளிப்படுத்தும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.தகுந்த பதில் கிடைக்காவிடில் கடும் போக்கை வெளிப்படுத்தும் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், புதிய அறிக்கை ஒன்றை தயாரிக்க அது இணங்காது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
வடகொரியா குறித்து ஜப்பான் அவசர ஆலோசனை.
வட கொரியாவில் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கிம் ஜாங் உன்னின் மாமா இராணுவ உடையில் தோன்றி, மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின.இதனால் கிம் ஜாங் உன் தலைமையிலான புதிய அரசில் அவரது மாமா முக்கிய பொறுப்பு வகிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிம் ஜாங் இல்லின் மறைவை அடுத்து நேற்று(25.12.2011) மூன்றாவது முறையாக கிம் ஜாங் உன் தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவரது வருகையை தேசிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ விவரிக்கையில், இராணுவ உயர் அதிகாரிகள் புடை சூழ நாட்டின் தலைவர் அஞ்சலி செலுத்தினார் எனத் தெரிவித்தது.இதற்கு முன் நாட்டின் அடுத்த தலைவராகப் போகிறவர் என்று தான் உன் பற்றி அந்நிறுவனம் வர்ணித்து வந்தது. எனினும் தற்போது வரை கிம் ஜாங் உன் அவரது அதிகாரப்பூர்வ பதவியான மத்திய இராணுவ கமிஷனின் துணைத் தலைவர் பொறுப்பில் தான் உள்ளார்.
இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் மாமா டயீக் இராணுவ உடையில் தோன்றி உன் அருகில் நின்று அஞ்சலி செலுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதுவரை சாதாரண சூட் உடையில் தோன்றி வந்த அவர் நேற்று தான் முதன் முதலாக இராணுவ உடையில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இக்காட்சிகள் மூலம் மறைந்த தலைவர் கிம் ஜாங் இல்லின் “இராணுவத்துக்குத் தான் முன்னுரிமை” என்ற கொள்கையை வட கொரியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதை வெளியுலகுக்கு அந்நாடு தெரியப்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மறைந்த தலைவர் கிம் ஜாங் இல்லின் உடன் பிறந்த சகோதரி, கிம் யாங் ஹூயியை மணந்தவர் சாங் சுங் டயீக்(65). இவர் கிம் ஜாங் இல் தேசியப் பாதுகாப்புக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்த போது கடந்த 2009ம் ஆண்டில் அக்குழுவின் துணைத் தலைவராக்கப்பட்டார்.தற்போது நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள கிம் ஜாங் உன்(27) மிக இளம் வயதினராக இருப்பதால் அவருக்கு நிர்வாகத்தில் உதவிகள் செய்வதற்காக டயீக் முக்கிய பொறுப்பேற்பார் என்ற தகவலை முன்பு தென் கொரிய உளவுத் துறை வெளியிட்டிருந்தது. அதேநேரம் வட கொரியாவில் அதிகார மாற்றத்தின் பின்னணியில் சக்தி வாய்ந்த முக்கிய நபராக டயீக் இருப்பார் என சீனா, தென் கொரியா நாடுகள் கருதுகின்றன.
இதற்கிடையில் வட கொரியாவில் ஒருவேளை அரசியல் நிலைமை சீர் குலையும் பட்சத்தில் அகதிகள் வெள்ளம் போல் வருவார்களானால் அவர்களைச் சமாளிக்கும் வழி என்ன என்பது குறித்து ஜப்பான் அரசு தனது மாகாண அரசுகளுடன் கலந்தாலோசிக்க உள்ளது.தென் கொரியாவில் 2009ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின் படி, 28 ஆயிரத்து 320 ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர். பதட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக தாய்நாட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவதில் அமெரிக்காவின் உதவியையும் ஜப்பான் கோரியுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலம்: சோகத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள்.
உலகம் முழுவதும் நேற்று மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமசைக் கொண்டாடிய போது பிலிப்பைன்சில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்துமஸ் தினத்துக்கான உணவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பிலிப்பைன்சில் சமீபத்தில் வாஷி சூறாவளி அடித்ததில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நாட்டின் தென் பகுதி தீவான மிண்டானா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அத்தீவில் உள்ள ககயான் டி ஓரா மற்றும் இலிகான் ஆகிய இரு துறைமுகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
இந்த வெள்ளத்தில் 2000 பேர் பலியாயினர், 1000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். 69 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் மூன்று லட்சத்து 28 ஆயிரம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டிக்கிலான் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோர் போக 422 பேர் தப்பிப் பிழைத்துள்ளனர்.
இவர்களில் கிராமத் தலைவர் அரிலியோ மகாரோவும் ஒருவர். இக்கிராமத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உணவைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.இதுகுறித்து மகாரோ கூறுகையில், இந்தாண்டு மிகவும் சோகமான கிறிஸ்துமஸ் தினமாக எங்களுக்கு அமைந்துள்ளது. எங்களிடம் பணம் இல்லை, வீடில்லை, எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்? என்றார்.
ரஷ்யாவில் விளாடிமிர் புடினுக்கு ஆதரவு உள்ளது: அரசு தகவல்.
ரஷ்யாவில் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவு இருக்கிறது என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 4ம் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. இதனால் கோபம் அடைந்த மக்கள் எதிர்க்கட்சிகளின் தலைமையில் நேற்று முன்தினம்(24.12.2011) பிரமாண்ட பேரணி நடத்தினர்.இந்தப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகர் மாஸ்கோவில் குவிந்தனர். அத்துடன் நாடு முழுவதும் பல நகரங்களில் பேரணிகள் நடந்தன.
புடின் உடனடியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஒரு வாக்கு கூட போடக்கூடாது என மக்கள் பேரணியில் தீர்மானம் நிறைவேற்றினர்.இந்நிலையில் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்த பேட்டியில், அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறைகளில் புடினுக்கு மக்கள் மத்தியில் இன்னும் பெருத்த ஆதரவு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டிக்கு அப்பாற்பட்ட முறையில் வேட்பாளராக நிற்கிறார் என்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரியின் விருந்து நிகழ்ச்சி: கயானி புறக்கணிப்பு.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி அளித்த விருந்தில் இராணுவ தலைமை தளபதி கயானி கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி உடல்நலக்குறைவால் துபாய் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதே நேரத்தில் மெமோகேட் விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை சாதகமாக பயன்படுத்தி இராணுவ புரட்சி ஏற்படலாம் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஜனாதிபதி ஸர்தாரி அளித்த பேட்டியில், ஆட்சியை அதிகாரத்தின் மூலமோ, அச்சுறுத்தியோ கைப்பற்ற முடியாது என கூறியிருந்தார்.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா நாட்டு தூதர் தைபிங்கூவோ உட்பட பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மிக முக்கியமான வி.ஐ.பி.யாக அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி பங்கேற்க வேண்டும்.ஆனால் இராணுவ தலைமை தளபதி அஷ்ப்தக் பர்வேஷ் கயானி புறக்கணித்தார். அவருடன் இராணுவத்தின் செயற்குழு தலைவரான ஜெனரல் காலித் ஷமிம் வைனியும் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனாமி நினைவு தினத்தையொட்டி பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி.
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும், அரசியல் கட்சித்தலைவருமான இம்ரான்கான் சுனாமி நினைவு தினத்தையொட்டி மெகா பேரணி நடத்தினார்.இதில் லட்சம் பேர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சியாக தக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான்கான் தொடங்கினார்.
இந்நிலையில் அந்நாட்டு தந்தையான முகமது அலி ஜின்னா பிறந்த தினம் மற்றும் இந்தியா, இந்தோனோஷியா உட்பட ஆசிய நாடுகளில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்குதல் நினைவு நாளையொட்டி அக்கட்சி சார்பில் கராச்சியில் மெகா பேரணி நடத்தப்பட்டது.பாகிஸ்தானின் குவாத் இ அசம் பூங்காவிலிருந்து தொடங்கிய பேரணியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலர் கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
பேரணியை சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டே இம்ரான்கான் பார்வையிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பல்வேறு தலைவர்கள் இம்ரான்கானை வாழ்த்தி பேசினர்.பேரணி முடிவில் இம்ரான்கான் பேசுகையில், ஊழலையும், அநீதியையும் ஒழித்து நீதியை நிலைநாட்டுவது தான் எனது கட்சியின் நோக்கம். கடந்த அக்டோபர் மாதம் நடத்திய பேரணியை காட்டிலும் இப்போது நடக்கும் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பாகிஸ்தான் அரசியலில் எதிர்காலத்தில் நமது கட்சி மகத்தான சாதனை படைக்கும் என்றார்.
உலக நாடுகளில் அமைதி ஏற்பட வேண்டும்: போப் ஆண்டவர் பிரார்த்தனை.
சிரியாவில் வெடித்துள்ள புரட்சி விரைவில் முடிவுக்கு வந்து அங்கு அமைதி ஏற்பட வேண்டும் என்று போப் 16-வது பெனடிக்ட் கேட்டுக்கொண்டார்.கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வாடிகனின் புனித பீட்டர் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அவர் மக்களுக்கு ஆசி வழங்கி ஆற்றிய உரை வருமாறு: உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.அவர்கள் அந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட ஆண்டவரை பிரார்த்திக்கிறேன். சிரியாவில் வெடித்துள்ள புரட்சியால் மக்கள் அமைதி இழந்துள்ளனர். இந்தநிலை மாறி அங்கு அமைதி ஏற்பட வேண்டும்.
இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க நிச்சயம் கடவுள் உதவி செய்வார்.தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சுமுகமான வாழ்க்கையைத் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மியான்மர் அரசியல் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் விரைவில் ஸ்திரமான அரசியல் சூழல் உருவாக வேண்டும்.கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போது பெருமளவில் வணிகமயமாகி வருகிறது. கிறிஸ்து பிறப்பு என்பது மிகவும் எளிமையான நிகழ்வு. அது இப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆடம்பர கொண்டாட்டமாகிவிட்டது.கிறிஸ்துமஸ் பண்டிகை அதன் உண்மைத்தன்மையில் இருந்து விலகி வருகிறது. மேம்போக்காகவும், மிகவும் பகட்டாகவும் நடத்தப்படுகிறது. எனவே இப்போதைய சூழ்நிலையில் நாம் ஆண்டவரிடம்தான் உதவி கேட்க வேண்டும்.
பெத்லஹேமில் பிறந்த அவரது வாழ்வின் உண்மை நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம்தான் உண்மையான மகிழ்ச்சியை நாம் அடைய முடியும். அதுவே உண்மையின் ஒளி என்றார் போப்பாண்டவர்.84 வயதாகும் போப் 16-வது பெனடிக்ட், பிரார்த்தனையின் போது சிறிது களைப்பாகவே காணப்பட்டார். ஆசி வழங்கி உரையாற்றிய போது இடையே சிலமுறை அவருக்கு இருமலும் ஏற்பட்டது.
முன்னதாக சனிக்கிழமை மாலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போப்பாண்டவர் முறைப்படி தொடங்கிவைத்தார்.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போப் அளிக்கும் உரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த உரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது என்று போப் வருத்தம் தெரிவித்திருப்பது இன்றைய நவீன உலக கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை என்பதையும், கிறிஸ்து பிறப்பை எளிமையாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தும் கொண்டாடவே விரும்புகிறார் என்பதையுமே வெளிக்காட்டுகிறது.
அதிவேக ரயில்களை இயக்க சீனா திட்டம்.
ஹோங்கொங் உட்பட பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவதென சீனா முடிவு செய்துள்ளது.இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 300 கி.மீ வேகம் வரை செல்லக் கூடியதாக இருக்கும்.சீனாவின் தெற்கு பகுதியில் தொழிற்சாலை அதிகமுள்ள குவாங்ஷூ, சென்ஷன் நகரங்களுக்கு இடையில் புதிய புல்லட் ரயில் இன்று(26.12.2011) முதல் இயக்கப்பட உள்ளது.
பின் இது ஹோங்கொங் வரை நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் ரயில்கள் 36 உள்ளன. கடந்த ஜீலை மாதத்தில் புல்லட் ரயில் ஒன்று விபத்தில் சிக்கவே, புல்லட் ரயில் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் கனடாவின் பொருளாதாரச் சூழ்நிலை குறித்து பிரதமர் விளக்கம்.
தொடர்ந்து பல ஆண்டுகள் பொருளாதார சிக்கலில் இருந்த பிறகும் கூட இன்னும் அந்த சிக்கலில் இருந்து நம்மால் வெளிவர முடியவில்லை என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
மேலும் கியோட்டோ ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திடாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்த நிலையிலும் தாம் அதில் உறுதியாக இருக்கிறோம்.அணுசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சிலர் மட்டும் கையெழுத்திடுவதால் பயனில்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா போன்றவை தமது அணுசக்தி உற்பத்தியைக் குறைப்பதாக இல்லை என்பதையும் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் உறுதியற்ற பொருளாதாரச் சூழ்நிலைகளால் கனடாவும் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நிலையைச் சீர்செய்ய முன்னுரிமை கொடுக்கப்படும். நம்முடைய முக்கியமான பங்குநாடுகளும் நட்பு நாடுகளும் வளராவிட்டாலும் நாம் நமது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.புலம்பெயர்ந்தோர் உழைப்பும், ஊக்கமும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. நமது வளர்ச்சிக்குத் தேவையான திறன்களை வளர்க்க நாம் புலம்பெயர்ந்தோரை ஆதரித்து அவர்களின் தனித்திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
பொருளாதாரத்தில் பிரிட்டன் முந்திச் செல்லும் பிரேசில்.
2012ம் ஆண்டு பிரிட்டனை விட அதிகப் பணக்கார நாடாக பிரேசில் மாறிவிடும் என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சிந்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.இதன் தலைமை நிர்வாகி டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், கால்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் ஐரோப்பிய நாடுகளை எப்போதோ வென்றுவிட்டது. பொருளாதாரப் போட்டியில் இப்போது வெற்றிவாகை சூடுகிறது. இது புதிய நிகழ்வு என்றார்.
இந்தியாவும், ரஷ்யாவும் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி பெற்று வருவதால் அந்த நாடுகளும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் பிரிட்டனை முந்திவிடும்.இப்போது ஆறாவது இடத்தில் இருக்கும் பிரிட்டன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பிரான்சின் ஐந்தாவது இடத்தைப் பிடித்துவிடும். பிரான்ஸ் யூரோ மண்டலப் பிரச்னையில் சிக்கியிருப்பதால் அது தன் இடத்தை இழக்கின்றது.
டக்ளஸ் கருத்துப்படி உலகத்தின் பொருளாதார வரைபடம் மாறிக் கொண்டே வருகிறது. ஆசிய நாடுகளும் அவற்றின் நுகர்பொருள் உற்பத்தி பொருளாதாரமும் முன்னேறி வருவதால் ஐரோப்பாவின் நிலைமை வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.தற்போது சீனா, ஜப்பான், ஜேர்மனி நாடுகளை விட அமெரிக்கா தான் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கின்றது.
நிக்கோலஸ் சர்கோசியின் பெயரில் இஸ்லாமியர்களின் பண்பாட்டு தளக் கோபுரம்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு இஸ்லாம் சமூகத்திடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.Gennevillier 5 route Principale-du-Pont இலுள்ள இஸ்லாமியர்களிள் பண்பாட்டுத் தளத்தில் நிறுவவுள்ள கோபுரத்திற்கு(Minaret) நிக்கோலஸ் சர்கோசி கோபுரம் எனப் பெயரிப்படவுள்ளது.
ஐரோப்பாவிலேயே மிக உயரமான பண்பாட்டுத் தளக் கோபுரமாக 35 மீற்றர் உயரத்துடன் இது அமையவுள்ளது.இஸ்லாமிய சமூகத்தினர் ஏராளமானோர் தொழுகை செய்து வந்த இந்த இடமானது அதன் உரிமையாளரால் விற்கப்பட்டு காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து இஸ்லாம் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்விடயம் ஒரு இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினரால் சர்கோசி வரை எடுத்துச் செல்லப்பட்டதால் அந்தக் காணி சர்கோசியின் தலையீட்டின் பின்னர் இஸ்லாமியர்களுக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய சமூகத்தினருக்கு சர்கோசி செய்த உதவிக்காகவே அங்கு அமைக்கப்பட்டு உள்ள கோபுரத்திற்கு MINARET NICOLAS SARKOZY எனப் பெயரிட்டுள்ளதாக புறநகர்ப் பகுதிகளின் சுதந்திர முண்ணனியின்(Front des banlieues indépendant (FBI)) தலைவர் Hassan Ben M’Barek தெரிவித்துள்ளார்.
மிகத் துரிதமாக வேலை செய்து நிக்கோலஸ் சர்கோசியின் பிறந்த தினமான ஜனவரி 28 அன்று திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இஸ்லாமிய பெண்களுக்கான முகம் மறைக்கும் உடைகளுக்குத் தடை விதித்து அணிபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியவர் நிக்கோலஸ் சர்கோசி என்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜேர்மனி ஜனாதிபதி |
மேலும் இன்று ஏராளமான மக்கள் ஐரோப்பாவின் கடன்நெருக்கடிக்காக கவலைப்படுவதைப் போலவே அதன் ஒற்றுமை பறிபோனதற்கும் கவலைப்படுகிறார்கள்.ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ஒற்றுமை குறைந்ததால் ஜேர்மனிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஐரோப்பா நமது வளமிக்க பாரம்பரியமும், பூர்வீக இல்லமும் ஆகும். விடுதலை, மனித உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பின் சின்னமாக ஐரோப்பா திகழ்கிறது என்றார்.
அண்மையில் நவீன-நாஜி இயக்கத்தினர் தொடர்ந்து பல கொலைகளைச் செய்வது நமக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். நம்முடைய நாட்டில் இனவாதம், வன்முறை, அரசியல், தீவிரவாதம் போன்றவற்றிற்கு எள்ளளவும் இடமில்லை என்று உறுதிபடக் கூறினார்.
வெளிநாட்டில் வாழும் ஜேர்மானியர் நன்மதிப்பும் பெற்றுள்ளனர். அங்கே வாழும் மனிதர்களின் நலனுக்காகப் பாடுபடுவதால் வெளிநாட்டினர் இவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கின்றனர்.குறிப்பாக அடுத்த நாட்டின் அமைதிக்காவும், பாதுகாப்புக்காவும் பாடுபடும் நம் நாட்டுப் படைவீரர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். அந்த நன்றியை நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். எனவே நாம் நம் தாய்நாட்டைக் குறித்துப் பெருமைப்படலாம் என்று பேசி முடித்தார்.
நைஜீரியாவில் தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 100 பேர் பலி.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களில் பழமைவாத முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்த பகுதியில் ஷிரியத் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22-ந் திகதி முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் இராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.இந்நிலையில் மடலா மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த தேவாலயத்துக்கு வெளியே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் தேவாலயமும், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. அருகில் இருந்த கட்டிடங்களும் அதிர்ந்ததில் யன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. எனினும் சேதங்கள் குறித்த முழு விபரங்களும் உடனடியாக தெரியவில்லை.இந்த குண்டு வெடிப்பு மற்றும் கலவரத்தில் இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். டமட்ரு, போகோ ஹரம், பொம்போமரி உட்பட பல நகரங்களுக்கும் வன்முறை தீவிரமாக பரவி வருகிறது. தீவிரவாதிகளுடன் மதவாதிகளும் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்பு நிலைமையை சமாளித்து வந்த இராணுவம் இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. மதவாதிகளின் ஆதரவு கிடைத்திருப்பதால், தீவிரவாதிகளின் கை ஓங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் தொடர்ச்சியாக அங்கு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நைஜீரிய அரசு நட்பு நாடுகளின் இராணுவ உதவியை கோரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.