Tuesday, December 6, 2011

இன்றைய செய்திகள்.

இணைய தளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் மனு.
இணைய தளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக மேல் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் சுனில் ஜயசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசாங்க செய்திப் பணிப்பாளர் வெகுசன ஊடக அமைச்சர் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணைய தளங்கள் தடை செய்யப்படுவதன் மூலம; மக்களின் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை முடக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட இணைய தளங்கள் தனிப்பட்டவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையிலோ அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ செய்திகளை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தளங்களை தடை செய்வதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த தடையை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை தடை செய்யப்பட்ட இணைய தளமொன்றும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இலங்கையின் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பொலிஸ் திணைக்களத்திற்கு 100 மோப்ப நாய்கள் இறக்குமதி.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மோப்ப நாய்ப் பிரிவு 100 நாய்களை இறக்குமதி செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 5 இலட்சம் இலங்கை ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், எனினும் ஏனைய செலவுகள் உட்பட ஒவ்வொன்றுக்கும் சுமார் 775,000 ரூபா எனவும் தெரிவித்துள்ளன.
போதைப் பொருட்களைக் கண்டறிதல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான மோப்பம் பிடித்தல் என்பவற்றுக்கு இந்நாய்கள் பயன்படவுள்ளன.
பெல்ஜியம், நெதர்லாந்து. பிரிட்டன், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலிருந்து இந்த நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நாடுகளிலிருந்து கிடைத்த 240 விண்ணப்பங்களிலிருந்து இந்நாய்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தினைச் சேர்ந்த டொக்டர். அசோக் தங்கெல்ல மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர வீரக்கோன் ஆகியொரால் இத்தெரிவுகள் இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு.
இலங்கையில் சுயமாக இயங்கும் மருத்துவ சபையை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சிக்கு இலங்கை அரசாங்க மருத்துவர் சம்மேளனம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .இந்த நடவடிக்கை இலங்கையின் சுகாதாரத்துறையை செயலிழக்கச்செய்யும் என்று அரசாங்க மருத்துவர் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

மருத்துவத்துறையினரின் அனுமதியில்லாமல் இவ்வாறான நடவடிக்கை எவையும் எடுக்கப்படக்கூடாது என்றும் அந்த சம்மேளனம் கோரியுள்ளது.மருத்துவ சபையை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அதற்கு சர்ச்சைக்குரிய ஒருவரை தலைவராக நியமிக்கும் ஒரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக இலங்கை அரசாங்க மருத்துவ சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.தே.கவின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கு நான் தயார்!- கரு ஜயசூரிய தோ்தல் குறித்து எதுவும் தெரியாது!- ரணில்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விசேட அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.கரு ஜயசூரிய நேற்று விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு எனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அவற்றை நான் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளேன்.இதனால் எனக்கு இந்த விசேட அறிவித்தலை விடுக்க நேரிட்டது.
நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்துள்ளேன். எனது இந்த அறிவித்தல் மூலம் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டி வரும் என நானும் எனது ஆதரவாளர்களும் அறிவோம். எமக்கு எதிரான நடவடிக்கை குறித்து நாம் அறிந்துள்ளோம்.
ஆனால் எவ்வித பிரச்சினைகளுக்கு எனது ஆதரவாளர்கள் முகங்கொடுக்க நேரிட்டாலும் நான் அவர்களுடன் இருப்பேன்.ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றவும் ஐக்கியப்படுத்தவுமே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்துள்ளேன்.
பதவிகளுக்கு அப்பால் நான் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கிறேன். என்னை தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ள அனைவருக்கும் நான் இந்த உறுதிமொழியை வழங்குகிறேன்.ஐ.தே.க.வின் தலைமைப் பதவியினை ஏற்குமாறு கரு ஜயசூரியவுக்கு மாற்றுக் குழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்தே இந்த அறிவிப்பினை கரு ஜயசூரிய விடுத்துள்ளார்.
தலைமைத்துவத்துக்கான தேர்தல் குறித்து எனக்கு அறிவிக்கவில்லை! ரணில்
ஐ.தே.க.வின் தலைமைத்துவத்திற்கான தேர்தல் மற்றும் போட்டியிடுபவர்கள் தொடர்பில் இதுவரையில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வதந்திகள் குறித்து ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2012 ஆம் ஆண்டிற்கான வரவு  செலவுத் திட்ட வாக்களிப்பின் போது மொஹான் லால் கிரேரு அரசாங்கத்திற்கு வாக்களித்ததுடன் தற்போது ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டுள்ளார். எனவே, இவற்றுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து நாளை தீர்மானிக்கப்படும்.
இதைத் தவிர கட்சியின் தலைமைத்துவத்திற்கான தேர்தல் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது, பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவையும் தற்போது சந்தித்து விட்டுத்தான் வருகின்றேன். ஆனால் இவர்கள் இதுகுறித்து எனக்கு எதுவும் கூறவில்லை என்றார்.ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மேற்கண்டவாறு பதிலளித்தார். 
கட்சி தலைவர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்– சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தெரிவு செய்யும் செயற்குழுக்கூட்டத்தில் கட்சித்தலைவருக்கான தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.திறந்த நிலை வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றால் அங்கத்தவர்கள் தமது உண்மை நிலைப்பாட்டை தெரிவிக்க அச்சம் கொள்வர் எனவே வாக்கெடுப்பு இரகசியமாக இடம்பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் வெற்றிடமாக உள்ள இடங்கள் எதிர்வரும் வாரம் நிரப்பப்படும் என்று கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் செயற்குழுவில் 9 உள்ளுராட்சி மன்ற பிரதிநிதகள் மற்றும் 11 தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகிய வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. எனினும் கடந்த மாதங்களில் தேர்தல்கள் இடம்பெற்றமை காரணமாக அவற்றை நிரப்பமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவை எதிர்வரும் வாரத்தில் நிரப்பப்படும் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக்காக தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித்தலைவர் கரு ஜெயசூர்யவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றை கலைப்பதாக ரணிலுக்கு ஜனாதிபதி சவால்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி சவால் விடுத்துள்ளதாகவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படும் அநீதிக்கு எதிராக போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அநீதிக்கு எதிராக பாரியளவில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 29ம் திகதி வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மாபெரும் வெற்றியளித்ததாகவும் போராட்டங்களின் காரணமாக அரசாங்கம் சற்றே பின்வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட தினத்தில் அரசாங்கம் அநீதியை நாடாளுமன்றிற்குள் கொண்டு சென்றது. அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தப்படுகின்றதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்தநிலையில் அரசியலுக்காக தாம் ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதன் மூலம் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களுக்கு முரணாக செயற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக இணைத்துக் கொண்ட இளைஞர் யுவதிகளை சிறையில் அடைத்து, குமரன் பத்மநாதனுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளது.எனவே இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்தி மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜ் ராஜரட்ணம் சிறைவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அமெரிக்காவில் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைத்தமிழரான ராஜ் ராஜரட்ணம் நேற்று தமது 11 வருட சிறை வாழ்க்கையை ஆரம்பித்தார்.
Massachusetts இல் உள்ள சிறைச்சாலையில் அவர் சிறைவைக்கப்பட்டார்.
இதேவேளை ராஜ் ராஜரட்ணம், நேற்று Devens  இல் அமைந்துள்ள பிராந்திய சிகிச்சை நிலையத்துக்கு வழமையான தேகநல சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டதாக அமெரிக்க சிறைச்சாலை பேச்சாளர் Traci Billingsley  தெரிவித்துள்ளார்.
பல பில்லியன்களுக்கு சொந்தக்காரரான ராஜ் ராஜரட்ணம், அமெரிக்க உட்சந்தை மோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு 11 வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.இறுதிநேரத்தில் அவரின் தேகநிலையை காரணம் காட்டி பிணை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
துபாயில் களவில் ஈடுபட்ட இலங்கைப் பணிப்பெண்..
துபாயில் தான் பணிபுரியும் இடத்தில் களவில் ஈடுபட்டதாக இலங்கைப் பணிப்பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர் 128 ஆயிரம் திர்ஹாமையும் மூன்று கையடக்க தொலைபேசிகளையும் களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பில் நேற்று திங்கட்கிழமை(05.12. 2011)துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது முதலில் தமது குற்றத்தை குறித்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பின்னர் பெண் பொலிஸார் அவரின் உடமைகளை சோதனை செய்தபோது பணமும் கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து இலங்கைப் பணிப்பெண் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்: புடினின் கட்சிக்கு பின்னடைவு.
ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று(4.12.2011) நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50.2 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை இழந்தது.இரண்டாவது இடத்தை கம்யூனிஸ்டு கட்சி பிடித்துள்ளது. அக்கட்சிக்கு 19.12 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி சார்பில் விளாடிமிர் புடின் போட்டியிட உள்ளார்.
இந்த சமயத்தில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு ஊழல் முறைப்பாடுகள் தான் காரணம் என கூறப்படுகிறது.கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி 64 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.
இரண்டாம் உலகப் போரின் போது எறியப்பட்டு புதைந்து கிடைந்த மூன்று வெடி குண்டுகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டானது கோப்லென்ஸ் என்ற நகரத்தில் உள்ள ரைன் நதியில் கண்டறியப்பட்டது. இந்த நகரத்தில் வாழ்ந்த 45,000 பேரை வெளியேற்றி விட்டு வெடிகுண்டை அதிகாரிகள் வெடிக்கச் செய்தனர்.
நேற்று(4.12.2011) காலையில் மக்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வைத்தியசாலைகளில் உள்ள நோயாளிகள் மற்றும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளும் வெளியேற்றப்பட்டனர்.இந்த வெடிகுண்டுகள் ஒவ்வொன்றும் 1.8 டன் எடையுள்ளது. இந்த மூன்று குண்டுகளும் வரிசையாக இரண்டு மணி நேரத்தில் வெடிக்கப்பட்டன.
வெடித்த பிறகு அந்த பகுதியில் வேறு ஏதேனும் ஆபத்தை விளைவிக்ககூடிய வேதிப்பொருள்கள் சிதறிக் கிடக்கின்றனவா என்று தீயணைப்பு துறையினர் ஆராய்ந்து, ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு நகரமக்களுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தனர்.



பிரான்சுக்கு சீனா பாண்டா கரடிகள் விற்பனை.

இந்த கரடிகளுக்கான தொகையை பிரான்ஸ் 2012ம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். இதற்கு முன்பு அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின், ஆஸ்டிரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் சீனா பாண்டா கரடிகளை அனுப்பியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் பிரான்சுக்கு அனுப்பிய ஒரு ஜோடிக் கரடிகளில் யென்யென்(Yen Yen)என்ற கரடி இறந்து விட்டதால் இப்போது புதிதாக ஒரு ஜோடி கரடியை சீனா அனுப்புகிறது. இதுகுறித்து மிருகக்காட்சி சாலையின் இயக்குனர் ரொடோல்ப்(Rodolphe) கூறுகையில், அடுத்த சில நாட்களுக்குள் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ளார். 


கனடாவில் தொடரும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள். கனடாவின் எட்மண்டன் மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஐந்து பேர் கேல்கரிக்கு தெற்கே 300 மைல் தொலைவில் கூடாரம் அமைத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.இவர்கள் முதலில் ஒலிம்பிக் பிளாசா பூங்காவில் கூடாரங்களை அமைக்கத் தொடங்கினர். இதுவே கேல்கரி ஆக்கிரமிப்பு இயக்கத்தின் மையமாக இருந்தது.
ஆனால் கேல்கரி நகராட்சியின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களிடம் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தியவர்களில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் காவல்துறையினர் அந்த கூடாரத்திற்கு அருகிலேயே தொடர்ந்து காணப்படுவது போராட்டக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து நகர மேயர் நஹீத் கூறுகையில், காவல்துறையினர் தங்களது கடமையை செய்கிறார்கள் என்றார்.
கடந்த நவம்பர் மாதம் ஒலிம்பிக் பிளாசா பூங்காவிற்குள் நுழைந்த காவல்துறையினரும், சட்ட அதிகாரிகளும் போராட்டக்காரர்களை அதிரடியாக வெளியேற்றினர்.மேலும் விக்டோரியா, மொன்றியல், ஒட்டாவா மற்றும் டொரண்டோ நகரங்களில் நடந்த ஆக்கிரமிப்பு போராட்டத்தையும் முறியடித்தனர்.
இந்தியாவுடன் போட்டி போடும் பாகிஸ்தான்.
யுரேனியத்தை விநியோகம் செய்யும் திட்டத்தில் அனைத்து நாடுகளையும் சமமாகப் பார்க்க வேண்டும் என பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.பாகிஸ்தானுக்கும் யுரேனியம் தர வேண்டி அவுஸ்திரேலியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் அப்துல் மாலிக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளதை போன்று, பாகிஸ்தானுக்கும் யுரேனியம் விநியோகம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பிரதமர் ஜூலியா கில்லார்டின்(Julia Gillard) ஆளும் தொழிற் கட்சி பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதற்கு ஆதரவாக நேற்று(4.12.2011) வாக்களித்தது.அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடாததால், அதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் முடிவு செய்துள்ளார்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற்றம்.
இந்தோனேசியாவின் காமலாமா என்ற எரிமலை வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
5,650 அடி உயரம் கொண்ட இந்த காமலாமா எரிமலை நேற்றில்(4.12.2011) இருந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்பும், கரும்புகையும் வெளியாகி வருகிறது.
இதனால் எழுந்த சாம்பல், பல கிலோமீற்றர் தூரம் வரை பரவி உள்ளது. எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மலூக்கு மாநிலத்திலுள்ள டேர்நெட் நகரிலுள்ள விமான நிலையம் இன்று மூடப்பட்டது.மேற்கொண்டு எரிமலை வெடிக்காமல் இருந்தால் விமான நிலையம் நாளை திறக்கப்படுமென்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
96 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட கோகோ கோலா பாட்டில்கள் ஏலம்.
உலக புகழ் பெற்ற குளிர்பானம் கோகோ கோலா(Coca Cola). அமெரிக்காவின் கொலம்பஸ் நகரை சேர்ந்த ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவர் 1886ம் ஆண்டு இந்த பானத்தை கண்டுபிடித்தார்.ஆசா காண்ட்லர் என்பவர் 1889ம் ஆண்டு இதன் தயாரிப்பு உரிமையை பெற்று, 1892ம் ஆண்டு தி கோகோ கோலா நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த கால கட்டத்தில் தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது. இந்நிலையில் பாட்டில் வடிவத்தை மாற்ற விரும்பிய கோக் நிறுவனம் 1915ம் ஆண்டில் போட்டியொன்றை அறிவித்தது.
தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. இயர்ல் டீன் என்பவர் வரைந்து அனுப்பிய வடிவம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் சோதனைக்காக சில பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன. அடிப்பகுதியைவிட நடு பகுதி குண்டாக இருந்ததால், கன்வேயர் பெல்ட்டில் செல்லும் போது பாட்டில் விழுந்துவிட்டது. பின்னர் வடிவம் சற்று மாற்றப்பட்டு பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
சோதனைக்காக தயாரித்ததில் 2 பாட்டில்கள் மிஞ்சின. ஒன்று அட்லான்டாவில் உள்ள கோக் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பாட்டிலை இயர்லின் பேரன் பிராட் வைத்திருந்தார்.ஜூலியன் நிறுவனம் மூலமாக அதை அவர் தற்போது ஏலம் விட்டார். 96 ஆண்டு பழமையான கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு(இந்திய ரூபாய் மதிப்புபடி) ஏலம் எடுக்கப்பட்டது. இயர்ல் வரைந்து அனுப்பிய காகிதம் ரூ.1.16 கோடிக்கு(இந்திய ரூபாய் மதிப்புபடி) ஏற்கனவே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் அணு சக்தி நிலையத்தில் கதிரியக்க நீர் கசிவு.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கமும் மற்றும் சுனாமியும் ஜப்பானை சூறையாடிச் சென்றது. இதில் ஜப்பானின் அணு சக்தி நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கலந்தது. இந்த பேராபத்திற்கு பின்பு சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் அணு சக்தி நிலையம் இயங்க ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த அணு சக்தி நிலையத்தின் சுத்திகரிப்பு பகுதியில் தூய்மைப்படுத்துவதற்காக வைத்திருந்த சுமார் 45 டன் எடையுள்ள கதிரியக்க நீர் கசிந்து பசிபிக் கடலில் கலந்துள்ளது. இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் அனைத்து இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர். 
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்: விண்வெளி வீரர்கள் வாக்களித்தனர். ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று(4.12.2011) நடந்தது. இதில் 11 கோடி பேர் வாக்களித்தனர்.ஸ்டேட் டுமா எனப்படும் கீழ் அவைக்கு மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில் 7 கட்சிகள் போட்டியிட்டாலும், பிரதமர் விளாடிமிர் புடினின் ஜக்கிய ரஷ்யா கட்சி, எ ஜஸ்ட் ரஷ்யா, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் புடினின் ஜக்கிய ரஷ்யா கட்சி பெரும்பான்மை பெறும் என்று கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் நேற்று நடந்த தேர்தலில் புடின் கட்சிக்கு நான்கில் 3 பங்கு இடங்கள் கிடைப்பது கஷ்டம்தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கிடையில் இந்தியா உட்பட வெளிநாடுகளில் தங்கியுள்ள ரஷ்யர்களும் அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்களித்தனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை ரஷ்யா நிறுவி உள்ளது.
அந்த மையத்தில் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆன்டன் ஷகாப்லரோவ், அனடோலி இவானிஷின் ஆகியோர் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களும் விண்வெளி மையத்தில் இருந்தபடியே ரஷ்ய தேர்தலில் வாக்களித்துள்ளனர்.மாஸ்கோவில் உள்ள விண்வெளி பயிற்சி மையத்துக்கு நேற்று வந்த அதிகாரி டிமிட்ரி ஜூகோவ், விண்வெளியில் உள்ள வீரர்களுடன் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறினார்.
அப்போது ஆன்டன் மற்றும் அனடோலி ஆகிய 2 வீரர்களும் தாங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி, வேட்பாளரின் பெயர்களை கூறினர். அதை வாக்குச்சீட்டில் பதிவு செய்து, வாக்குப்பெட்டியில் டிமிட்ரி போட்டார்.இந்த நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரி ஒருவர் கண்காணித்தபடி இருந்தார். விண்வெளி வீரர்களின் வாக்கு ரகசியமாக பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது இவர்களின் 2 வாக்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஹிலாரியின் கோரிக்கையை நிராகரித்த கிலானி.
நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்(Hillary Clinton) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் பான்(Bonn) நகரில் இன்று(5.12.2011) தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனின் கோரிக்கையை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி(Yousaf Raza Gillani)நிராகரித்து விட்டார்.
பாகிஸ்தான் எல்லைச்சாவடி மீது நேட்டோ தாக்குதல் நடத்திய விவகாரத்தால், அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு தரப்பிலும் இந்தச் சீர்குலைவை சரிக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி நேற்று முன்தினம்(3.12.2011) மாலை பாகிஸ்தான் பிரதமர் கிலானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேட்டோ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
அத்தாக்குதல் உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததல்ல எனக் குறிப்பிட்ட அவர், விசாரணை முடியும் வரை பாகிஸ்தான் பொறுத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மிக உயர்வாக மதிக்கிறது. இத்தாக்குதலால் இரு தரப்பு உறவு சீர்குலைய அனுமதிக்க மாட்டோம். இரு தரப்பும் ஒருமித்த நோக்கங்களை உடையவை எனவும் கூறினார்.
அத்துடன் ஜேர்மனியின் பான் நகரில் இன்று தொடங்க உள்ள ஆப்கான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் அவர் கோரிக்கை வைத்தார்.அதற்கு பதிலளித்த கிலானி மாநாட்டை புறக்கணிப்பதாக அமைச்சரவை எடுத்த முடிவை நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இத்தகவல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சலாலா எல்லைச்சாவடி மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் இராணுவம் அனுமதி அளித்த பின் தான் தாக்குதல் நிகழ்ந்தது என்ற அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைக்கு பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தில் தலிபான்கள் ஒளிந்திருப்பதாகத் தான் நேட்டோ எங்களுக்கு முதலில் தகவல் தந்தது. அதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் அனுமதியளித்தது. ஆனால் நள்ளிரவில் தாக்குதல் நடந்ததால் விடிந்த பின் தான் அது பாகிஸ்தான் எல்லைச்சாவடி என்பது தெரியவந்தது. அமெரிக்கா எங்களுக்கு தவறான தகவலை தந்ததால் தான் இது நடந்தது என தெரிவித்தார்.
ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்: புடினின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு.
ரஷ்யாவில் நேற்று(4.12.2011) நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இம்முறையும் பிரதமர் விளாடிமிர் புடினின்(Vladimir Putin) ஐக்கிய ரஷ்யா கட்சியே மீண்டும் வெற்றி பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்யாவில் நாடாளுமன்றம் ஸ்டேட் டுமா(State Duma) என்ற கீழவை மற்றும் தி பெடரேஷன் கவுன்சில்(The Federation Council) என்ற மேலவை ஆகிய இரு அவைகளை உடையது. கீழவை 450 உறுப்பினர்களையும், மேலவை 178 உறுப்பினர்களையும் கொண்டது.
கீழவைக்கான தேர்தல் நேற்று ரஷ்யா முழுவதும் நடந்தது. மொத்தம் ஒன்பது கால மண்டலங்களைக் கொண்ட ரஷ்யாவில் ஒரே நாளில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கோலோஸ்(Golos), பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்யா கட்சி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, தங்களுக்கு 5,300 முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் நடந்த பல இடங்களில் தனது பிரதிநிதிகளை அரசு அனுமதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. கோலோஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் நிதியுதவியில் இயங்குவதால் ஆளும் கட்சியினர் அதன் மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.இத்தேர்தலில் ஐக்கிய ரஷ்யா உட்பட மொத்தம் ஏழு கட்சிகள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2007ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 11 கட்சிகள் போட்டியிட்டன.
கடந்த தேர்தலில் ஐக்கிய ரஷ்யா கட்சி 64.3 சதவீதம் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் 315 இடங்களை கைப்பற்றியது.ஆனால் இம்முறை 53 சதவீதம் வாக்குகளை பெற்று குறைவான இடங்களையே நாடாளுமன்றத்தில் கைப்பற்றும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அடுத்தாண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் விளாடிமிர் புடின் போட்டியிடுகிறார்.
அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.
ஈரானில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் இராணுவத்தின் விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட மறுத்து வருகிறது. இதனால் கோபமடைந்த அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
இதற்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள இராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான ஆர்.கியூ.-170 என்ற விமானம் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்ததாகவும், இதனால் ஈரான் விமானப்படையினர் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு அராபிக் அல்-அலாம் என்ற தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரில் உள்ள அணுதிட்ட நிலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF