Friday, December 9, 2011

இன்றைய செய்திகள்.

போக்குவரத்து விதியை மீறிச் சென்றவருக்கு 17ஆயிரம் ரூபாய் அபராதம்.
பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்த ரயில் கடவையொன்றினூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவருக்கெதிராக கொழும்பு நீதிமன்றம் 17ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.களனி பிரதேசத்தில் வீதியொன்று போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த வேளையில் களனி கல்பெர்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றமைக்காக போக்குவரத்து நீதிமன்ற நீதவான் ஜெயரட்னம் ட்டொட்ஸ்கி இந்த அபராதத்தை விதித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறுவதால்தான விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் இவ்விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா விடயத்தில் மேர்வின் சில்வாவின் நிலைப்பாடு சரி என்கிறார் விமல் வீரவன்ச.
சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்துக்களில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவை தவிர எந்தவொரு கைதியும் நீதிமன்றிற்கோ அல்லது வைத்தியசாலைக்கோ அழைத்துச் செல்லப்படுகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
சரத் பொன்சேகா  விடயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா  தெரிவித்துள்ள கருத்துக்களில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. காரணம் சிறைக் கைதிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். அது சரியானதாகும்.
உண்மையில் அவ்வாறுதான் நானும் கருதுகின்றேன். காரணம் வேறு எந்த சிறைக் கைதிகளும் நீதிமன்றத்துக்கோ மற்றும் மருத்துவமனைகளுக்கோ வந்து செல்லும் போது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதில்லை. 
கலகம் ஏற்படுத்திய 11 பௌத்த பிக்கு மாணவர்களுக்கு தடை.
அனுராதபுரம் புத்தஸ்ராவக்க பல்கலைக்கழகத்தில் கலகம் ஏற்படுத்திய 11 பௌத்த பிக்கு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 28 பௌத்த பிக்கு மாணவர்களின் வகுப்பு தடை செய்யப்பட்டுளளதாக பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கும்புல்லே ஸ்ரீலக்கந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய பௌத்த பிக்கு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக புத்தஸ்ராவக்க பல்கலைக்கழகம் கருதப்படுகின்றது.பகிடி வதையில் ஈடுபட்டமை மற்றும் கலகச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த பௌத்த பிக்கு மாணவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சில மாணவர் பௌத்த பிக்குகளுக்கு ஐந்து ஆண்டுகால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கைப் படையினர் 1000 பேர்.
இலங்கை படைவீரர்கள் 1000 படைவீரர்கள் லெபனான் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணையவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அவர்கள் குறித்த நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானுக்கு செல்லும் படைவீரர்கள் ஆயுதங்கள் மற்றும் படை வாகனங்கள் சகிதம் அனுப்பப்பபடவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையினராக செல்வோருக்கு மாதம் ஒன்றுக்கு 1100 அமெரிக்க டொலர்கள் வரையில் செலுத்தப்படுகின்றன.
இலங்கைப்படையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்காக இலங்கை படைவீரர்கள் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரின் வங்கி அட்டையின் மூலம் பணத்தை திருடிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விசாரணை.
போதைப்பொருள் வழக்கொன்றில் கைதான சந்தேக நபரின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாவை களவாக பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கெதிராக விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ரணில்  என்பவரே இச்செயலைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று(07.12.2011) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் வங்கி அட்டையின் கடவு  இலக்கத்தை வற்புறுத்தி பெற்றுக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் வங்கியிலிருந்து பணத்தை பெற்றுள்ளதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபராகவுள்ளவரின் மாதாந்த வங்கிக் கணக்கு விபரத்தை அவதானித்த அவரின் மனைவிஇ 20,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளதை அறிந்ததாக சந்தேக நபரின் சட்டத்தரணி வசந்த பிட்டிகல நீதிமன்றில் தெரிவித்தார்.
வங்கியின் கண்காணிப்பு கமெராவில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படம்  பதிவாகியிருந்ததாக தெரிவித்த சட்டத்தரணி அக்கமெராவின் பதிவுகளை அழிக்க வேண்டாம் என வங்கிக்கு உத்தரவிடுமாறும் நீதவானைக் கோரியுள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் நடப்பது பொலிஸாருக்கு வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டிய நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க, இதுகுறித்து விசாரிக்குமாறு  கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள சர்வாதிகாரிகளை விரட்ட சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும்- சரத் பொன்சேகா.
இலங்கையில் உள்ள சர்வாதிகாரிகளை விரட்டியடிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் இராணவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, உலகம் முழுவதிலும் சர்வாதிகாரிகளை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து விரட்டியடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்கு அச்சம் கொண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களை விரட்டுகின்றனர்.வீடியோ கமராக்கள் அனைத்தையும் வீசி எறிய முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா அரசாங்த்திற்கெதிராக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருவதாகவும், அவரை தன்னிடம் ஒப்படைக்குமாறும் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்த கருத்துக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இன்று (08.12.2011) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த போதே சரத் பொன்செகா இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்பவர்கள் தரகுப்பணம் பெறுவது தொடர்பாக விசாரணை!
இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் வீட்டு எஜமானர்களிடமிருந்து தரகு பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் செல்வதாகவும் அவ்வாறு செல்பவர்களை விசாரணை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கைப் பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலம் எஜமானர்களினால் அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபா தரகு வழங்கப்படுவதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.


இதன்படி, சில பெண்கள் தரகை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலமுறை வெளிநாடு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெண்ணொருவர் மூன்று அல்லது நான்கு தடவைகள் வெளிநாடு சென்று சிறிது காலம் பணியாற்றிய பின்னர் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதாக கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


இத்தகைய பணிப்பெண்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை மீண்டும் வெளிநாடு செல்லமுடியாதவாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோரியுள்ளார்.இதுவொரு வியாபாரமாக நடத்திச் செல்லப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தி்ன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்கள் பேரழிவை ஏற்படுத்தும்: ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை.
பயங்கரவாதிகள் புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயோவெப்பன்கள்(BioWeapon) எனப்படும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உயிர் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, உயிர் ஆயுதங்கள் குறித்த பயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஈரான் மற்றும் வடகொரிய நாடுகள் மேற்கொண்டுவரும் அணு ஆயுதங்களை விட அதிகமான அழிவை இந்த உயிர் ஆயுதங்கள் ஏற்படுத்தும். புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம், பயங்கரவாதிகளிடம் சென்றால் அணு ஆயுதங்களை விட பேரழிவை அவர்கள் இந்த உயிர் ஆயுதங்கள் மூலம் ஏற்படுத்த முடியும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு எல்லையில் உள்ள வீரர்கள் எவ்வாறு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறார்களோ, அதே போன்று இந்த உயிர் ஆயுதங்கள் விவகாரத்தில் விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் பார்த்துக் ‌கொள்ள வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் விஞ்ஞானிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு திட்டம்: கனடா - அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு.
கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பரும், அமெரிக்காவின் ஜனாதிபதியுமான பராக் ஒபாமாவும் வாஷிங்டனில் 45 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.அப்போது கனடா- அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், பயணத்தை விரைவுபடுத்தவும் திட்டம் ஒன்று கையெழுத்தானது.
62 விடயங்களை கொண்ட இச்செயல் திட்டம் இரு நாடுகளின் எல்லைப்பகுதியில் பயணிகளின் நுழைவுத் தகவலை 2014ம் ஆண்டு வரை பரிமாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஹார்ப்பருக்கு இன்னும் பல வருடங்கள் ஆட்சியதிகாரம் இருந்தாலும் ஒபாமாவுக்கு தேர்தல் நெருங்கி வருவதால் இத்திட்டம் அவர் ஆட்சியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.
இரண்டு நாடுகளின் அரசியலுரிமை மற்றும் சட்ட அமைப்புகளுக்கு உட்பட்டு எல்லையோரப் பயணிகளின் தகவல் பரிமாற்றங்கள் அமையும். பயணம் தவிர வணிகமும் செழிப்படையும் வகையில் இச்செயல்திட்டத்தில் 29 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.உணவு, வேளாண்மை, போக்குவரத்து போன்றவையும் இந்த 29 அம்சங்களில் இடம் பெற்றுள்ளன. எல்லையின் இரு பக்கமும் தொழில் நடத்தவும் உற்பத்தி செய்யவும் இச்செயல் திட்டம் எளிமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்தி இருப்பதாக ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் நாடாளுமன்ற தேர்தல்: முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வெற்றி.
எகிப்தில் சமீபத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் சமீபத்தில் நாடாளுமன்றத்தின் முதற்கட்ட தேர்தல் நடந்தது. அதில் இஸ்லாமிய பழமைவாதக் கட்சியான அல் நூர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் மேற்கத்திய நாடுகள் மத்தியில் பீதி உருவானது. இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் அரசியல் பிரிவான விடுதலை மற்றும் நீதிக் கட்சி பாதிக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பொழுதுபோக்கிற்காக இணையத்தை பயன்படுத்துபவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்.
அமெரிக்காவில் யார் யார் எதற்காக இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பியூ ஆய்வு மையம் பொதுமக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,250-க்கும் அதிகமானவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் தகவல் பெறப்பட்டது.இதில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: 18-29 வயதினரில் 53 சதவீதம் பேர் எந்த வேலையும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக தான் இணையத்தை பார்க்கின்றனர்.
50-64 வயதினரில் 27 சதவீதம் பேரும், அதைவிட வயது அதிகமானவர்களில் 12 சதவீதம் பேரும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள்.மொத்தத்தில் முக்கால்வாசி பேர் எதற்கும் பயனின்றி பொழுதுபோக்கிற்காக தான் இணையத்தை பார்க்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
வைரங்கள் கடத்தல்: இந்தியர்களுக்கு சீனாவில் சிறைத் தண்டனை.
சீனாவில் 73 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புடைய வைரங்களைக் கடத்தியதாக இந்திய வர்த்தகர்கள் 10 பேருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 இந்திய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
சீனாவின் ஷென்ஜென் நகரில் 73 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புடைய வைரங்களைக் கடத்தியதாக கடந்தாண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி 22 இந்திய வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 14 ஆயிரம் காரட் வைரங்களை ஹோங்கொங்கில் இருந்து சீனாவுக்குள் கடத்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் ஒரு கடத்தல் கும்பலையே இவர்கள் தங்கள் வசம் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
கடந்தாண்டில் சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் இப்பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்தார்.சமீபத்தில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும், அவர்களை விடுவிக்கும்படி கோரினார். இந்த தொடர் முயற்சிகளால் சிறையில் இருந்த வர்த்தகர்களுக்கு சில வசதிகள் செய்யப்பட்டன.அவர்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்போர் என்பதால் சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களை அவர்களின் குடும்பத்தார் பார்க்கவும், இது தொடர்பாக இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று(7.12.2011) சீனாவின் ஷென்ஜென் உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி ஒருவருக்கு ஆறு ஆண்டுகளும், இருவருக்கு தலா ஐந்தாண்டுகளும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களும், ஐந்து பேர்களுக்கு தலா மூன்று ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.மேலும் ஒரு நபருக்கு ஓராண்டு 11 மாதங்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 12 பேரை இந்தியாவுக்கு அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர சில வர்த்தகர்களுக்கு 24 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதித்துள்ளது.
எகிப்து நாட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்பு.
எகிப்து நாட்டில் பிரதமர் கமல் அல் கன்சோரி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு இராணுவ நிர்வாகக் குழுவின் தலைவர் முஹமத் ஹுஷேன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.எகிப்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை இந்தப் புதிய அரசு தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை கவனிக்கும்.பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய இரு பிரச்னைகளை தற்காலிக அரசு சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கமல் அல் கன்சோரி இராணுவ ஆதரவாளர் என்பதாலும், முந்தைய முபாரக் ஆட்சிக் காலத்தில் 1990ம் ஆண்டுகளில் பிரதமராக இருந்தவர் என்பதாலும் இவருக்கு போராட்டக்காரர்களிடையே எதிர்ப்பு காணப்படுகிறது.எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்த முபாரக் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்து விலகிய பின்னர் முஹமத் ஹுஷேன், அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் விமான விபத்து: 5 பேர் பலி.
அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தில் உள்ள ஹூவர் அணையை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
பலியானவர்களில் விமானியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டாவோ மாகாணத்தின் காங்கோ தூதரகத்தில் வன்முறை.
கனடாவின் ஒட்டாவோ மாகாணத்தில் உள்ள காங்கோ தூதரகத்தில் எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை முடிவுக்கு வந்தது.ஒட்டாவோ நகரில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் காங்கோ தூதரகம் முன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறிது நேரத்தில் அந்த வன்முறை போராட்டமாக வெடித்தது. எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட ஆறு மணிநேர போராட்டத்திற்கு பின் வன்முறையை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர்.ஒட்டாவோ காவல்துறையினர் மற்றும் கனடியன் மவுண்ட் காவல்துறையினர் இணைந்து விடுத்த அறிக்கையில் கூறியதாவது, இதுவரை கலவரத்தில் ஈடுபட்டவர்களில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வெகு சிறப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்: அமைச்சர் தகவல்.
ஒலிம்பிக் போட்டிகள் 2012ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கிறது. பல கோடி செலவில் மைதானங்கள், வீரர்கள் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஒலிம்பிக் செலவுகள் தாறுமாறாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.74 ஆயிரத்து 500 கோடி(இந்திய ரூபாய்). ஆனால் செலவுகளை பார்க்கும் போது இதை தாண்டிவிடும் போல தெரிகிறது என்று தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது.
ஜூலை மாதம் 27ம் திகதி நடக்கும் தொடக்க விழா மற்றும் ஆகஸ்ட் 12ம் திகதி நடக்கும் நிறைவு விழா ஆகிய இரு நாட்களிலும் மணிக்கு ரூ.48 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதுபற்றி ஒலிம்பிக் துறை அமைச்சர் ஹூக் ராபர்ட்சன் கூறுகையில், செலவுகள் அதிகரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டியை விமரிசையாக, சிறப்பாக நடத்துவது உலக அரங்கில் இங்கிலாந்தின் பெருமையை உயர்த்தும். தேவை ஏற்பட்டால் மற்ற இனங்களில் இருந்து நிதி பெறப்பட்டு எந்த குறையும் இன்றி போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
2 ஆண்டுகளாக பொய்யான முறைப்பாடுகளை கூறி வந்த மர்ம ஆசாமி கைது.
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாண காவல்துறையினருக்கு 2 ஆண்டுகளாக பொய்யான முறைப்பாடுகளை கூறி அலைக்கழித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இவர் கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி காவல்துறையினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் குற்றச்செயல் நடந்திருப்பதாக  கூறி, ஒரு முகவரியையும் கொடுப்பார்.
அங்கு விரைந்து செல்லும் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்பு தான் அது பொய்யான முறைப்பாடு என்பதும், அவர் கொடுத்த முகவரி தவறானது என்பதும் தெரிய வரும்.இதுபோல கடந்த 2 ஆண்டுகளாக 150-க்கும் அதிகமான பொய்யான முறைப்பாடுகள் வந்தன. அத்தனையும் அதே ஆசாமியிடம் இருந்து வந்தது தான். ஆனால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.
அவர் கொடுத்த முகவரியில் காவல்துறையினர் விசாரிப்பதால், அந்த வீட்டினரும் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரது பெயர், விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
ரஷ்யாவில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோசடிகள், முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மிக்கெயில் கோர்பச்சேவ் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இத்தேர்தலில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த இரு நாட்களாக தலைநகர் மாஸ்கோவில் எதிர்க்கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் பேரணி நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டில் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மிக்கெயில் கோர்பச்சேவ் நேற்று(7.12.2011) அளித்த பேட்டியில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோசடிகள், முறைகேடுகள் நடத்தப்பட்டதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் நேர்மையானவை என்று மக்கள் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் எதிர்வரும் 10ம் திகதி மாஸ்கோவில் நடக்க உள்ள பிரமாண்ட பேரணியில் கலந்து கொள்ளும்படி ட்விட்டர்(Twitter) உட்பட சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஜேர்மனி, பிரான்ஸ் இணைந்து அறிவித்த தீர்வுகள் தேவைப்படாது: ஐரோப்பிய தலைவர்.
ஜேர்மனியும், பிரான்சும் இணைந்து அறிவித்த புதிய தீர்வுகள் தேவைப்படாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பி தெரிவித்துள்ளார்.யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு ஜேர்மனியும், பிரான்சும் இணைந்து புதிய தீர்வுகள் சிலவற்றை நேற்று முன்தினம்(6.12.2011) அறிவித்தன. இந்தத் தீர்வுகள் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் செய்யப்படும் திருத்தங்கள் மூலம் அங்கீகரிக்கப்படும்.
அந்தத் திருத்தங்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்கள் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் அல்லது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு காலம் ஆகும். ஆனால் புதிய தீர்வுகள் மார்ச் மாதத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என இரு நாடுகளும் கால வரையறை செய்துள்ளன.
இந்நிலையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதில் இரு நாடுகளின் புதிய தீர்வுகளுக்குப் பதிலாக ரோம்பி, நிதி ஒப்பந்தம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடுகளின் நாடாளுமன்றம் அங்கீகாரம் அல்லது பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.அதேபோல் யூரோ கடன் மீட்புக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு(ஐ.எம்.எப்) கூடுதல் நிதி எதுவும் அளிக்க முடியாது என அமெரிக்க நிதியமைச்சர் டிமோதி கெய்த்னர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உதவிகள் தொடரும்: அமெரிக்கா அறிவிப்பு.
பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் அமெரிக்க உதவிகளுக்கு பலன் கிடைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் அமெரிக்க உதவிகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க உதவிகளால் இரு நாடுகளுமே பயனடைந்து வருகின்றன. பாகிஸ்தானின் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்துவதும், அந்நாட்டு பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதும்தான் நாம் அடைய நினைக்கும் நீண்டகாலப் பலன்கள் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்தார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் ஜான் மெக்கெய்னும், லிண்ட்ஸ் கிரஹாமும் பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவுகளை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நேட்டோ தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இருவரும் குறைகூறியிருந்தனர்.
நேட்டோ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்த விடயம், அந்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையே பாகிஸ்தானின் பதில் நடவடிக்கைகள் காட்டுவதாக டோனர் தெரிவித்தார்.அது மிகவும் துயரமான சம்பவம். இந்த புதிய சவாலை வெற்றி கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று டோனர் தெரிவித்தார்.
அதிநவீன ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டம்.
அதிக தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகளை வாங்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது. 170 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வாங்கப் போவதாகவும், அதற்கு இன்னும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லையென்று தென் கொரிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் தாக்குதலுக்குப் பதிலடி தரவே இதுபோன்ற ஏவுகணைகள் வாங்கப்படுவதாக தென்கொரிய டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.சியோலில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, வட கொரியாவின் பியோன்ஜியாங் பகுதியைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் லாக்ஹீட் மாட்டீன் எனும் நிறுவனமும், ஜேர்மனியின் டாரஸ் நிறுவனத்திடமும் வாங்க திட்டமிட்டுள்ளது.இந்த இரு நிறுவனத்தின் ஏவுகணைகளையும் சோதித்த பின் ஏவுகணையின் செயல்பாடு, விலை மற்றும் தொழில்நுட்ப தகவல் பறிமாற்றம் போன்ற காரணிகளைக் கொண்டு அடுத்த செப்டம்பர் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்காக தென் கொரியா ரூ 38,800 கோடி டொலர் நிதி ஒதுக்கியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF