Saturday, December 17, 2011

இன்றைய செய்திகள்.

தேசிய மனித உரிமை செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலிய ரம்புக்வெல்ல.
தேசிய மனித உரிமை செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியான எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் நோக்கில் இந்த செயல் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளளாகவும் 2008ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த செயல் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, மனித உரிமை கவுன்ஸில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுகின்றது என்ற செய்தியை வெளிப்படுத்த இந்த செயல் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு பிரதான உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனித உரிமை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கொழும்பு மெனிங் சந்தை வழமைக்கு! மரக்கறி விலைகள் குறைவடைந்துள்ளன!
கொழும்பு மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியதையடுத்து மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்றைய தினம் அதிகமான மரக்கறி வகைகள் கிடைத்தமையே இதற்குக் காரணம் என மெனிங் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் எச்.எல்.சந்தனரத்ன தெரிவித்துள்ளார். 
மெனிங் சந்தைக்கு வழமைக்கு மாறாக இன்று அதிகளவான மரக்கறி லொறிகள் வந்திருந்தன. வழமையாக 150 - 200 ற்கும் இடைப்பட்ட மரக்கறி லொறிகள் சந்தைக்கு வருகின்ற போதிலும் இன்றைய தினம் 250 லொறிகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
மரக்கறி கொள்வனவுக்காக மெனிங் சந்தைக்கு செல்லும் நுகர்வோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும். அனைத்து பகுதிகளிலும் இருந்து மரக்கறி வகைகள் கிடைத்துள்ளதாகவும் அதிகளவான மரக்கறி வகைகள் உர மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் மெனிங் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
அதிக லொறிகள் சந்தைக்கு வருகை தந்ததால் இன்று அதிகாலை இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரக்கறி மற்றும் பழவகைகளை கொண்டுசெல்லும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததால் கடந்த சில தினங்களாக மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவுக்கு மூன்று மாத விடுமுறை.
முல்லேரிய சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறையை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு துமிந்த சில்வாவிற்கு விடுமுறை வழங்கக் கோரிய கடிதத்தை அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றில் சமர்பித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையிலேயே, மூன்று மாத விடுமுறை வழங்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறைக்கான அங்கீகாரம் வழங்கியது.
காணி விவகாரங்களில் இராணுவத்தினர் எவ்வித தீர்மானமும் எடுக்கமாட்டார்கள், சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை: அமைச்சர் நிமல் சிறிபால.
இராணுவத்தினர், சமூக வாழ்வின் சகல அம்சங்களிலிருந்தும் வாபஸ் பெறப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று(16.12.2011) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவில் நிர்வாகத்தில் தமது ஈடுபாட்டைக் காட்டும் பாதுகாப்புப் படையினர் அவற்றிலிருந்து விலக்கிக் கொள்வர் எனவும் குறிப்பாக காணி விவகாரங்களில் எவ்வித தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்குபற்ற மாட்டார்கள் எனவம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போர் இடமடபெற்ற பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை:
போர் இடம்பெற்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை(16.12.2011) நாடாளுமன்றில் சமர்ப்பித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் இராணுவத்தினர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் போரின் போது சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய ஆதாரங்களுடன் குற்றச் செயல்கள் நிரூபணம் செய்யப்பட்டால் அவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுபான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரிவினைகளை மறந்து, தேசியப் பிரச்சினையின் போது பொதுவான ஓர் இணக்கப்பாட்டை எட்டக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கொலை வழக்கின் சந்தேக நபர் சுயவிருப்பின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்: நீதிமன்றம் தீர்ப்பு.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கார குமாரதுங்கவை இலக்கு வைத்து, கடந்த 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுயவிருப்பின் பேரிலேயே பொலிஸாரிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொலிஸார் தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்ததாக வழக்கின் பிரதான சந்தேகநபரான வேலாயுதம் வரதராஜா நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபர் கூறிய கருத்துக்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதா என உறுதிசெய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வராவெவ முன்னிலையில் விவாதம் இடம்பெற்றது.
குறித்த சந்தேகநபரை விசாரணை செய்த பொலிஸ் மற்றும் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரிகளிடம் சாட்சிங்கள் பெறப்பட்டதன் பின், சந்தேகநபர் சுயவிருப்பின் பேரிலேயே பொலிஸாரிடம் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவ்வழக்கு தொடர்பாக பல வருடங்களாக தண்டனை வழங்கப்படாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் கைது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்ற நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பாக, அப்பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரை சந்தேகத்தின் பெயரில் கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சதாக் மொஹமட் பாஹிம் எனும் நபர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்றபின் மரணமடைந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மரணம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கோட்டை பதில் நீதவான் தீமனி பெத்தேவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மேற்படி பணியகத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கான்ஸ்டபிள் ஒருவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு! இந்த தீர்ப்பினை எதிர்பார்த்தோம்!- சரத் பொன்சேகாவின் மகள்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இரண்டாம் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனையை அனுமதிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
எரிக் பஸ்நாயக்க, ஏ.டபிள்யு.ஏ. சலாம் மற்றும் உபாலி அபேரட்ன ஆகிய நீதவான்களினால் இந்த மனு விசாரணை செய்யப்பட்டது.
இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு சரியானதே என மூன்று நீதவான்களும் ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மனுதாரர் தவறியுள்ளதாகவும் இதனால் மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்களை வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தண்டனையை நீக்குமாறு கோரி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தீர்ப்பினை எதிர்பார்த்தோம் - அபர்ணா பொன்சேகா
இந்தத் தீர்ப்பினை எதிர்பார்த்தோம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீதிக்கும் நேர்மைக்கும் இடமில்லை.
இவ்வாறான ஓர் நிலைமையில் இலங்கையில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
எனது தந்தைக்கு ஏற்பட்ட நிலைமை உங்களது தந்தைக்கும் நேர்ந்தால் என்னவாகும் என நினைத்துப் பார்க்கவும்.
அனைவரும் ஒன்றிணைந்து எனது தந்தையை விடுதலை செய்ய முயற்சிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தனைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்!
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக இலங்கைப் போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. 
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பலி
இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.
அப்பாவி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டுவந்த இந்தப் போரில், கணிசமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு ஒப்புக்கொள்வது இதுதான் முதற்தடவையாகும்.
அத்துடன் விடுதலைப் புலிகள்தான் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அதே நேரம் இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அதன் பிறகு காணமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
போர்க் குற்றம் குறித்து சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகமானதை அடுத்தே கடந்த ஆண்டு இலங்கை அரசு இந்த விசாரணைக் குழுவை அமைத்தது.
முன்னணி சட்ட நிபுணரான சி ஆர். டி சில்வா தலைமையிலான இக் குழுவினர் நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
இருந்தும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த ஐயப்பாடுகள் காரணமாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹுமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன.
இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே மிகவும் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
எப்படியிருந்த போதிலும் சில தருணங்களில் பலப்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அவை குறித்து மேலதிக புலன் விசாரணைகள் தேவை என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.
அளவுக்கு அதிகமான தாக்குதல்
அதாவது விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்திய காரணத்தால், அதற்கான இலங்கை இராணுவத்தின் பதில் தாக்குதல்கள் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்றும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகின்றது.
அந்தத் தாக்குதல்கள் தேவைக்கு அளவானதாக இருந்ததா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.
இந்த விடயத்தில் இராணுவத்தின் பொதுவான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, குற்றங்காணப்படும் இலங்கை இராணுவச் சிப்பாய்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பபட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
மருத்துவமனை மீதான தாக்குதல்
போர் வேளையில் மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து தனது கருதத்தைக் கூறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்ற போதிலும், அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று முடிவுக்கு வருவது கடினம் என்று கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவரின் சாட்சியின்படி, விடுதலைப்புலிகள் புதுமாத்தளன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திவிட்டு அதற்கான மன்னிப்பு கோரியதாகவும் ஆணைக்குழு ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ளது.
போர்ச் சட்டங்களில் மாற்றம் தேவை
சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, தற்போதைய சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், அரசாங்கங்களுக்கும், அரசாங்கம் அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
மருந்துப் பற்றாக்குறை
பொதுமக்கள் தஞ்சமடைவதற்காக அறிவிக்கப்பட்ட தாக்குதல் சூனியப் பிரதேசங்களில் போதுமான மருந்து மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகம் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, அரசாங்கம் போதுமான விநியோகத்தை அங்கு அனுப்பிய போதிலும், அவற்றில் ஒரு பகுதியை விடுதலைப்புலிகள் பறித்துக்கொண்டு விட்டதாக கூறியுள்ளது. இருந்த போதிலும், அங்கு மருந்துப்பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை என்று அது ஒப்புக்கொண்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கான சிறப்பு ஆணைக்குழு
அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணமல் போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவை குறித்து விசாரிக்க காணாமல் போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் சாட்சியமளித்த சிலர் ஈ பி டி பி, கருணா குழு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்கள் மீது ஆட்கள் கடத்தப்பட்டமை குறித்து புகார் செய்துள்ளதாகவும். ஆனால், அந்த அமைப்புக்கள் அவற்றை மறுத்துள்ளதாகவும் கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கை, சட்ட விரோத ஆயுதக்குழுக்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ்சுமத்தப்படாமல், பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இராணுவ தலையீடு
வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதிகாரப் பகிர்வு தேவை
தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய ''வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு'' ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
வெளியுலகுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுதலில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
30 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்ட சோக நாடகம் முடிவடைந்துள்ளது : ஜனாதிபதி மகிந்த.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு வந்த சோக நாடகம் தற்போது முடிவடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“தாமரை தாடகம்” மகிந்த ராஜபக்ஸ கலையரங்கினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அழுது புலம்பி கவலைப்படும் யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் செழுமையை பிரதிபலிக்கும் நாடகங்களை அரங்கேற்றக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
நூறு ஆண்டுகள் கலைச் சேவை ஆற்றி வரும் டவர் அரங்கைப் போன்றே தாமரைத் தடாகம் அரங்கும் நாட்டு மக்களுக்கு அரிய கலைச் சேவைகளை ஆற்றும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களின் பௌதீக வாழ்க்கையை கட்டியெழுப்புதல் மற்றும் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனைக்கு வெலிக்கடை சிறைச்சாலை தயார்.
உலகின் மிக நீளமான புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலை களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுவருட வாழ்த்து அட்டையை தயாரிக்கும் பணியில் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 195 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் புதுவருட வாழ்த்து அட்டை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் மீது கட்டுநாயக்க விமானநிலைய புலனாய்வு பிரிவினர் விசாரணை.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் சற்று முன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாக பதவியேற்பு.
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாமல் எம்.பியின் பெற்றோர் அவரை கட்டி தழுவியதுடன் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இவரது சத்தியப்பிரமாணத்தின் போது மேலும் 250 பேர் சட்டத்தரணிகளாக பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச வங்கியின் கடனட்டை இயந்திரத்தில் 66 இலட்சம் ரூபா திருடிய நபர் கைது.
திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேச அரச வங்கியொன்றின் கடனட்டை இயந்திரத்தின் மூலம் 66 லட்சம் ரூபாவை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் எனக் கருதப்படுவதாகவும், பேராறு பகுதியில் ஒழிந்திருந்தபோது இவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும்போது சந்தேக நபரிடமிருந்து 19 லட்சம் ரூபாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி பேராறு பகுதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து 42 லட்சம் ரூபா கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன்பின் இந்நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கார் பந்தய போட்டிக்காக கொழும்பில் முக்கிய சில பாதைகளுக்கு மூடுவிழா.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ள 'நைட் ரேஸ்' போட்டிக்காக கொழும்பிலுள்ள சில பாதைகள் மூடப்படவுள்ளன. இதன்படி, இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையும் மீண்டும் நாளை பிற்பகல் 4.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையும் குறித்த சில பாதைகள் மூடப்படவுள்ளன.
லோட்டஸ் வீதியில், கலதாரி ஹோட்டல் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள இப்போட்டி, செரமிக் சந்தி, சீ.ரீ.ஓ சந்தியிலிருந்து இடப்பக்கம், சதாம் வீதி, பாரொன் ஜயதிலக்க மாவத்தை பின் யோர்க் வீதியினூடாக யோர்க் வீதி-வங்கி வீதிச் சந்தி எனத் தொடர்ந்து ஜனாதிபதி மாவத்தை ஊடாக இடப்பக்கமாகச் சென்று என்.எஸ்.ஏ சுற்று வட்டத்தை அடைந்து இறுதியாக மீண்டும் லோட்டஸ் வீதியை வந்தடையவுள்ளது.
குறித்த இடங்களில் பந்தயம் இடம்பெறவுள்ள நேரங்களில் லொறிகள் மற்றும் பேருந்துகள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி சந்தி, பித்தளைச் சந்தி, இப்பானவ சந்தி, காமினி சுற்றுவட்டம், சீனர் சந்தி மற்றும் கான் சுற்று வட்டம் போன்ற இடங்களிலேயே இந்தத் தடை அமுலிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டையிலிருந்து காலி வீதிக்கும் காலி வீதியிலிருந்து கோட்டைக்கும் பயணிக்கும் வாகனங்கள் முறையே கொள்ளுப்பிட்டி சந்தி, பித்தளைச் சந்தி, லிப்டன் சிரஸ், இப்பன்வெல சந்தியிலிருந்து வலது பக்கமாக திரும்பி மருதானைச் சந்தி, டெக்னிக்கல் சந்தி, கோட்டை என பயணித்து மீண்டும் சீனர் சந்தியினூடாக காலி வீதிக்குச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோட்டையிலிருந்து ஹவ்லொக் வீதிக்கும் ஹவ்லொக் வீதியிலிருந்து கோட்டைக்கும் பயணிக்கும்போது சொய்சாபுர சுற்றுவட்டம், லிப்டன் சிரஸ், இப்பன்வெல சந்தியிலிருந்து வலது பக்கமாகத் திரும்பி மருதானைச் சந்தி, டெக்னிக்கல் சந்தி, கோட்டை எனப் பயணித்து மீண்டும் சீனர் சந்தியிலிருந்து இதே பாதைகளினூடாக ஹவ்லொக் வீதிக்கும் பயணிக்க வேண்டும் எனச் சாரதிகள் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சோதனை சாவடிகள் அமைத்து ஆப்கானுக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் தலிபான்கள்.
பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியான வடக்கு வஜிரிஸ்தானில் தலிபான்கள் சாலைகளில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிலிருந்து வரும் வாகனங்கள் நேட்டோ படைகளுக்கு எரிபொருளைக் கொண்டு செல்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக இத்தகைய சோதனைச் சாவடிகளை தலிபான்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நேட்டோ படை நடத்திய வான் வழி தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கைபர் பகுதியில் உள்ள டோர்ஹாம் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள சாமன் பகுதி வழியை நேட்டோ படையினர் பயன்படுத்தக் கூடாது என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதனால் வடக்கு வஜிரிஸ்தான் வழியாக ஆப்கானுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் டேங்கர் லொறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
முதல்கட்டமாக சோதனைச் சாவடி அமைப்பது என தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை அறிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை தேடும் மலேசிய அரசு.
மலேசிய அரசு குடியேற்ற சட்ட விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இங்கு கைரேகை பதிவின் மூலம் வெளிநாட்டவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மலேசிய குடியுரிமை துறை அதிகாரிகள் குறிப்பிடுகையில், தோட்ட தொழிலாளர்கள், ஹோட்டல் வேலை செய்பவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் என மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டினரில் பலர் பல்வேறு பெயர்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா வைத்துள்ளனர்.
இன்னும் பலர் தங்கள் சொந்த நாட்டில் குற்றம் செய்து விட்டு மலேசியாவில் வேறு பெயர்களில் நடமாடி வருகின்றனர்.
இது போன்ற பின்னணி உடைய 3 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இதற்காக சர்வதேச காவல்துறையினரின் உதவியையும் கோரியுள்ளோம் என்றனர்.
அவுஸ்திரேலிய பிரதமரின் ஊதியம் உயர்வு.
அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரைவிட அதிகமாக ஊதியம் பெறுபவராகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இப்போது வருடத்துக்கு இந்திய மதிப்பில் ரூ. 2 கோடியே 13 லட்சத்து 19 ஆயிரத்து 850-ஐ ஊதியமாகப் பெறுகிறார். கமரூன் ரூ. 1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 217-ஐ ஊதியமாகப் பெறுகிறார்.
ஜூலியா கிலார்டின் ஊதியத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட குழு, அவரின் ஊதியத்தை வருடத்துக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்து 37 ஆயிரத்து 120 ஆக உயர்த்தியுள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட ஊதியத்தைவிட இது 31 சதவீதம் கூடுதலாகும். இது குறித்து கருத்துத் தெரிவித்த ஊதிய உயர்வுக் குழுவின் தலைவர் ஜான் கோண்டி, இந்த ஊதிய உயர்வு காரணத்துடனே செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமருக்கு மட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கும் 20-லிருந்து 27 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அவுஸ்திரேலியாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிறைவான ஊதியம் வழங்கப்படுவதாகக் கருத்து உண்டு.
இந்திய - ரஷ்யா கூட்டு முயற்சியில் அறிவியல் தொழில்நுட்ப நிலையங்கள்.
இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் ‌அறிவியல், தொழில்நுட்ப நிலையங்கள் திறக்கப்பட்டது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் நடக்கும் இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதின் தொடக்கமாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அறிவியல், ‌தொழில்நுட்ப நிலையம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளிடையே நவீன தொழில்நுட்ப செயல்பாடுகளை ஊக்குவித்து கொள்வது தொடர்பாக இரண்டு நாடுகளின் புதிய அறிவியல் தொழில்நுட்ப நிலையங்கள் பயன் உடையதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இருநாடுகளும் வர்த்தக மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பாக 20 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஆதரவு இல்லையென்றால் பதவி விலக தயார்: விளாடிமிர் புடின்.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பெற்றது. எனினும் கடந்த தேர்தலை விட வாக்கு சதவிகிதம் குறைந்தே காணப்பட்டது.
அத்துடன் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தலைநகர் மாஸ்கோவில் பல லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வலையில் எதிர்க்கட்சிகள் விழுந்து விட்டதால், அப்பாவி ரஷ்யர்களை கிளர்ச்சி செய்ய அமெரிக்கா தூண்டி வருகிறது என புடின் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்பில் புடினுக்கு மக்கள் ஆதரவு 60 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைந்து இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய தொலைக்காட்சியில் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் புடின் பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார்.
அப்போது கூறியதாவது: மக்கள் ஆதரவுடன் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறோம். அரசின் கொள்கை, செயல்பாடு எதிலாவது தவறு இருந்திருந்தால் இதுவரை ஏன் எதிர்ப்பு எழவில்லை.
இப்போது தேர்தல் முடிந்து மீண்டும் பெரும்பான்மை பெற்ற ஒரு ஆட்சிக்கு எதிராக எப்படி திடீரென கிளர்ச்சி வந்தது? எனவே அதில் வெளிநாட்டு சதி இருப்பதாக நினைக்கிறேன்.
மறுதேர்தல் நடத்துவது உட்பட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன். எனக்கு உண்மையிலேயே ரஷ்யர்களிடம் ஆதரவு இல்லை என்று தெரிந்தால் ஒருநாள் கூட பதவியில் நீடிக்க மாட்டேன். விலகத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அணு சக்தி திட்டங்களுக்கு தேவையான யுரேனியத்தை தயாரிக்க ஈரான் முடிவு.
ஈரான் அணு சக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
ஐ.நா.வும், சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு அமைப்பும் ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சர்வதேச நாடுகளின் அணு சக்தி கொள்கைகளை மீறி ஈரான் செயல்படுவதாகவும், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும் கூறி பல்வேறு நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தன.
ஈரான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஆனால் அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் தேவை. இதை எந்த நாடுகளும் ஈரானுக்கு வழங்கவில்லை. கடந்த 1993ம் ஆண்டு அர்ஜென்டினா, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை வைத்து இத்தனை ஆண்டுகளாக அணு உலை திட்டப் பணிகள் நடந்து வந்தன.
அந்த யுரேனியம் சக்தி குறைந்த அளவு 3.5 சதவிகிதமே செறிவூட்டப்பட்டது. இந்நிலையில் அணு உலைகளுக்கு தேவையான அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஈரான் முடிவெடுத்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணு உலைக்கு தேவையான யுரேனியம் எரிபொருள் இன்னும் 2 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும்.
20 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உள்நாட்டிலேயே தயாரிப்போம், எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி தெரிவித்தார். இதனால் பல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அமெரிக்காவுடனான உறவே காரணம்: இம்ரான் கான்.
பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதற்கு அமெரிக்காவுடனான உறவே காரணம் என்று முன்னாள் கிரிக்கட் வீரரும், தெரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் கேமரான் முன்டர், முன்னாள் தூதர் ராபின் ரபேல் ஆகியோரை இம்ரான் கான் நேற்று(15.12.2011) சந்தித்து பேசினார்.
அப்போது இம்ரான் கூறியதாவது: அமெரிக்கா உட்பட உலகின் எல்லா நாடுகளுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில் ஒரு நாட்டுடன் உறவு வைத்து கொள்வதால் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது.
ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதற்கு அமெரிக்காவுடனான உறவே காரணமாக உள்ளது. பாகிஸ்தான் மக்களுடன் நட்பு வைத்து கொள்ள விரும்பினால் ஆளில்லா விமானங்கள் மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
10வது மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்.
ஜப்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து அவரது தந்தையினால் வெளியே வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் வசிப்பவர் ஷிங்கோ ஹஷிமோட்டோ(37). இவருக்கு 4 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு வயதில் மகன் உள்ளனர்.
மனைவியும், மகளும் வெளியே சென்றிருந்தனர். ஷிங்கோவும் ஒரு வயது குழந்தையும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்த ஷிங்கோ பால்கனிக்கு தூக்கி வந்து அந்த குழந்தையின் கழுத்தை நெரிக்க முயன்றார்.
அதே வேகத்தில் குழந்தையை வெளியே வீசினார். 10வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை, கீழே சுற்றுப்புற சுவரை ஒட்டியிருந்த புதரில் விழுந்தது. லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
காவல்துறையினருக்கு ஷிங்கோ போன் செய்து விபரம் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதிக வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகளவு வருமானம் ஈட்டிய நபர்களின் பட்டியல்: லேடி ககா முதலிடம்.
2011ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த பொப் பாடகர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது.
அதில் அமெரிக்க பொப் பாடகி லேடி ககா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் மட்டும் இவர் 90 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்துள்ளார்.
இதன் மூலம் முன்னிலையில் இருந்த பொப் பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார்.
டெய்லர் சுவிப்ட் 45 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்து 2-வது இடத்தையும், பெர்ரி 44 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பியான்ஸ் நோலஸ், ரிகானா ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.
லேடி ககாவின் மான் ஸ்டர்ஸ்யில், மிர் போன்ற வீடியோ ஆல்பங்கள் அவருக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யூரோ நெருக்கடி 2012ல் கனடாவை பாதிக்கும்: முன்னணி அறிஞர் கருத்து.
யூரோ நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்த நிலை அடையும், மேலும் நிலையற்ற தன்மை தொடரும் என கனடாவின் முன்னணி அறிஞர் போர்ட்டர் கருத்துத் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் பொருளாதார ரீதியாக பிரிந்து விட்டாலும் ஐரோப்பாவின் நெருக்கடி வட அமெரிக்காவை அதிகம் பாதிக்காது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த அரசியல் கலவரங்களும், யுத்தங்களும் பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டன. ஐப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சின் அபாயம் சந்தைகளை அச்சுறுத்தின.
இவற்றுடன் அமெரிக்காவின் கடன் பற்றிய விவாதங்களும், ஐரோப்பாவின் கடன் பற்றிய விவாதங்களும், ஐரோப்பாவின் கடன் நெருக்கடியும் சேர்ந்து 2011இல் கனடாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட்டன.
2011ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சிறப்பாகத் தோன்றிய கனடாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கூறிய உலக நடப்புகளால் மூன்று சதவிகிதத்தில் இருந்து 2.3 சதவிகிதமாக குறைந்தது. 2012ம் ஆண்டில் கனடாவில் பொருளாதார வளர்ச்சி 2 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று போர்ட்டர் குழு கருதுகிறது.
2012ம் ஆண்டின் இறுதியில் சந்தையின் சமநிலை தளர்த்தப்பட்ட நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி: நீதிபதி தீர்ப்பு.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜேக்கஸ் சிராக் அதிகார துஷ்பிரயோகம், அரசு நிதி கையாடல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை பாரிஸ் நகரத்தின் மேயராக இருந்த ஜேக்கஸ் சிராக் தன் அரசு அதிகாரத்தை கட்சி நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு பாரிஸ் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும், 1,50,000 யூரோ அபராதமும் விதிக்கப்படலாம்.
சிராக் தனக்கு வேண்டியவர்க்கும், தன் கட்சிக்காரர்களுக்கும் விதிகளை மீறி தன் அரசியல் செல்வாக்கின் காரணமாக அரசு வேலை பெற்றுத் தந்தார். இவ்வாறு 28 பேருக்கு முறைக்கேடாக வேலை கிடைத்தது.
நேற்று(15.12.2011) இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சிராக்கின் சட்டத்தரனிகளில் ஒருவரான ஜார்ஜல் கீஜ்மன் கூறுகையில், சிராக்கிற்கு தற்போது 79 வயது ஆகிறது. அவர் நினைவு மறதி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். பாரிசில் உள்ள எப்பல் டவர் அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். எனவே அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் சிராக் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றாலும் அவரது முதிர்ந்த வயதை கருத்தில் கொண்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கவில்லை என்று அறிவித்தார்.
ஆப்கானில் ஜேர்மன் படைகள் தொடர்ந்து நீடிக்கும்: குய்டோ வெஸ்டர்வேலே.
ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளாக நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் ஒரு திருப்பு முனையை அடைந்திருக்கிறது என ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே தெரிவித்தார்.
ஜேர்மன் இராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருப்பது குறித்து நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான மைய -இடது சமூக குடியரசு கட்சி ஆதரவளித்தது, இடது சாரிகளும் பசுமைகட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன.
சமூகக் குடியரசுக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைச் செய்தித் தொடர்பாளரான கெர்னாட் ஏர்லெர் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் நிலைமை முன்னேற்றம் அடைந்து வருவதால் நமது படைகளை வாபஸ் பெறுவது சரிதான் என்றாலும், அந்த நாட்டில் இருக்கும் ஊழலை எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நாட்டில் உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து படைகள் ஜேர்மனிக்கு திரும்பி வரக்கூடும். தற்பொழுது 5850 பேர் ஆப்கானிஸ்தானில் இருக்கின்றனர். பிப்ரவரிக்குப் பிறகு 4900 பேர் மட்டுமே இருப்பர்.
2013ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி வரை இராணுவப் படைகளுக்கு 1.06 பில்லியன் யூரோ செலவாகலாம் என்று அரசு கணக்கிட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு 13500 வீரர்கள் பாதுகாப்பு.
இங்கிலாந்து நாட்டில் எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் லண்டன் மாநகரத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 13,500 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் பிலிப் ஹேமோண்ட் தெரிவித்தார்.
மேலும் இவர்களோடு கப்பல்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்களும், போர் விமானங்களும், ஏவுகணைகளும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படும்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவதால் நாட்டின் முக்கிய நிகழ்வாகப் போற்றப்படுகிறது. எனவே உலகம் முழுவதிலுமிருந்து இங்கிலாந்துக்கு வரும் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.
13,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதால் இவர்களுக்கு 553 மில்லியன் பவுண்டு செலவாகும். காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உதவியாக 5000 இராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவர்.
பொதுமக்களின் அவசர உதவிகளுக்காக ஆயுதம் ஏந்தாத 1000 உதவிப்படையினர் நியமிக்கப்படுவர். இவர்களைத் தவிர விளையாட்டு அரங்குகளிலும் பயிற்சிக் கூடங்களிலும் 7,500 பேர் பணிபுரிவர்.
இத்துடன் இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் இராணுவ அணிவகுப்பு ஒன்றும் நடைபெறும், அந்த அணிவகுப்பு உலகத்தாருக்கு எங்களின் இராணுவபலத்தைப் பறைசாற்ற உதவும் என்றார்.
தன் பேச்சை மீறி கல்லூரிக்கு சென்று படித்ததால் கைவிரல்களை துண்டித்த கணவர்.
வங்காளதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம்(30). திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு சென்று விட்டார்.
அவரது மனைவி ரபிகுல் ஹவா அக்தர் ஜுய்(21) அதிகம் படிக்கவில்லை, கணவர் வெளிநாடு சென்ற நிலையில் ஹவா அக்தர் கல்லூரிக்கு சென்று படித்தார். இதை இஸ்லாம் விரும்பாததால், படிப்பை நிறுத்த சொன்னார்.
அதை ஹவா அக்தர் கேட்காமல் தொடர்ந்து படித்தார். இந்த நிலையில் திடீரென இஸ்லாம் வங்காளதேசத்துக்கு திரும்பினார். தனது மனைவியிடம் உனக்கு அதிசயமான பரிசு பொருள் கொண்டு வந்து இருக்கிறேன் என கூறிய இஸ்லாம் அவரது கண்களையும், கைகளையும் கயிற்றால் கட்டியதோடு வாயில் பிளாஸ்திரியால் ஒட்டினார்.
பின்னர் தனது மனைவி ஹவா அக்தரின் வலது கையில் உள்ள 5 விரல்களையும் வெட்டினார். தனது பேச்சை கேட்காமல் கல்லூரிக்கு சென்று படித்ததற்காக இந்த தண்டனை வழங்கியதாக கூறினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர்.
வேதனையால் துடித்த ஹவா அக்தர் அதன்பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெட்டப்பட்ட அவரது விரல்களை ஒட்டி வைக்க முடியாது என வைத்தியர்கள் கூறிவிட்டனர். ஏனெனில் விரல் துண்டான 6 மணி நேரத்துக்குள் தான் சத்திரசிகிச்சை செய்து மீண்டும் சேர்த்து வைக்க முடியும்.
இதற்கிடையே இஸ்லாம் கைது செய்யப்பட்டார். தற்போது ஹவா அக்தர் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார். இனி தனது கணவருடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டார். அதே நேரத்தில் இடது கையால் எழுதி பழகி வரும் அவர் மீண்டும் கல்லூரி படிப்பை தொடருவேன் என தெரிவித்துள்ளார்.
நிதியுதவி ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்.
பாகிஸ்தானுக்கு ரூ.35 ஆயிரம் கோடி(இந்திய ரூபாய்) நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி மற்றும் இராணுவ உதவிகள் வழங்கி வருகிறது.
ஆனால் தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகள் ஒழிப்பில் பாகிஸ்தான் சரிவர செயல்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும் பாகிஸ்தான் அமோனியம் நைட்ரேட் மூலம் தயாரிக்கப்படும் ஐஇடி எனப்படும் வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த உறுதிமொழியும் அளிக்காததால், ரூ.35 ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்தது. இதற்கான சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம்(14.12.2011) நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பஷித் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் உண்மை அறியாமல், குறுகிய மனப்பான்மையுடன் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
உண்மை என்னவென்றே அறியாமல், ஒட்டுமொத்த நிலவரத்தை வைத்து பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் அணுகு முறையால் தவறான முடிவு எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது.
எனினும் பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலை பேச்சு மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
கடாபி கொலையில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு: விளாடிமிர் புடின்.
ரஷ்யாவில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் விளாடிமிர் புடினின் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் குறைந்த அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுபற்றி அமெரிக்காவின் செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஜான் மெக்கெய்ன் புடினை கேலி செய்தும் பேசினார்.
இதுகுறித்து புடின் பேசுகையில், லிபிய ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டதில் பெரும் பங்கு அமெரிக்காவையே சாரும், அமெரிக்காவே அதற்கு அதிக அளவு பங்கு வகிக்கிறது என்றும், இதில் கடாபியை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இன்றி கொன்று விட்டனர் என்றும் புடின் குற்றம் சாட்டினார்.
மேலும் கடாபி கொல்லப்பட்ட சம்பவம் கேலிக்கூத்தான செயல் என்றும் புடின் குற்றம் சாட்டினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF