Thursday, December 8, 2011

இன்றைய செய்திகள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தோனேசியா பயணம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவுக்கு பயணமானதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்தோனேசியா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு தலைமை ஜனநாயக ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள சமூகங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்! ரவூப் ஹக்கீம்.
இலங்கை அரசு பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்த காரணத்தினால் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக முறியடிக்க சகல இன சமூகங்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரான சிங்கள சமூகங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தின் மூலமே, நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதனை தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் சமூகம் ஒரு அரசியல் கட்சி நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு பெரும்பான்மை இன சமூகத்தின் சிறந்த வரவேற்பு காணப்படுவதாகவும் இதனால் தமிழ் முஸ்லிம் இன சமூகங்கள் நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ரஸ்யாவின் ஆயுதப் பராமரிப்பு நிலையங்கள்- வொய்ஸ் ஒப் ரஸ்யா.
இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை வொய்ஸ் ஒப் ரஸ்யா வெளியிட்டுள்ளது
இந்த பராமரிப்பு நிலையங்களில் ரஸ்யாவில் அல்லது சோவியத்தில் தயாரிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களை பராமரிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.
மலேசியாவில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சியின் போது இந்த தகவலை Rosoboronexport என்ற ரஸ்யாவின் ஆயுத ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உதவிப் பணிப்பாளர் விக்டோர் கொமார்டின் வெளியிட்டுள்ளார்.
ரஸ்யா இலங்கைக்கு எம் ஐ ரக நான்கு ஹெலிகொப்டர்களையும் 2 ஆயுத வாகனங்களையும் இராணுவ வீரர்களை காவிச்செல்லும் 19 வாகனங்களையும் வழங்கியுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வற்காக இலங்கை 300 மில்லியன் டொலர்களை ரஸ்யாவிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் வொய்ஸ் ஒப் ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி கையெழுத்து வேட்டை ஆரம்பம்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம், முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக கையெழுத்து பெறும் திட்டம் எதிர்வரும் 10ம் திகதி கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலை 10மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (07.12.2011) இடம் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில், இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக 10லட்சம் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளிக்க உள்ளதாகவும் இதன்படி அனைத்து கட்சிகள் மற்றும் நிறுவனங்களை இணைத்து கையெழுத்து  பெற  இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மாகாண, மாவட்ட, தேர்தல் தொகுதி மட்டங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ குறிப்பிட்டார்.
இந்த கையெழுத்து பெறும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
ஐ.தே.க செயற்குழுவிற்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உறுப்பினர்கள் நியமனம்!- திஸ்ஸ.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு கட்சியின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின்  பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
செயற்குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் செயற்குழுவில் உள்வாங்குவதற்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்த கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சி யாப்பிற்கமைய உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பில் செயற்குழுவிற்கு அடுத்து வரும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் எனக் கூறியதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
அதேபோன்று கட்சி செயற்குழுவிற்கு பல்வேறு துறைசார்ந்தவர்களை உள்ளடக்கி, குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒன்பது பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நியமனங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய கொழும்பு மாநகர மேயர் அல்லது எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படுகின்ற குழுத் தலைவர் இந்த செயற்குழு கூட்டத்திற்கு உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதியாக நிச்சயமாக உள்ளடக்கப்படுவதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
பதவி உயர்த்தப்பட்டுள்ள நீதவான் தீபாலி விஜேசுந்தரவிற்கு சரத் பொன்சேகா வாழ்த்து.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ள தீபாலி விஜேசுந்தரவிற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வந்த தீபாலி விஜேசுந்தர தற்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தீபாலி விஜேசுந்தரவிற்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்பதனை தாம் எதிர்பார்த்தாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் சென்றிருந்த போது, சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி நிலைநாட்டப்படாத சந்தர்ப்பங்களில் சர்வதேசத்தின் உதவியை நாட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளுள் தீபாலியும் ஒருவராவார்.
பாண் விலையை முடிந்தவரை உயர்த்த வேண்டும்! அப்போது தான் மக்களால் வாங்க முடியாமல் போகும்- பிரதமர் ஜயரட்ன.
பாணின் விலையை முடிந்தவரையில் உயர்த்த வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க முடியாமல் போகும் என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோதுமை மா மற்றும் பழங்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டுமெனவும் இதன் மூலம் அரிசிமா நுகர்வை மக்கள் நோக்கித் திருப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோதுமை மாவுக்கான சிறந்த மாற்றீடாக அரிசிமா விளங்கும் என குறிப்பிட்ட அவர், பாணுக்குப் பதிலாக ரொட்டி மற்றும் ஏனைய பொருட்களைத் தயாரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டுப் பழங்கள் உற்பத்தியை முற்றாக தடைசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள 20 வர்த்தக நிறுவனங்களிற்கு விரைவாக பிரிட்டன் வீசா வழங்கும் திட்டம்.
பிரிட்டனில் முதலீடு செய்து வர்த்தக நோக்கத்தில் அடிக்கடி பயணத்தினை மேற்கொள்ளும் இலங்கை நிறுவனங்களுக்கு விரைவாக விசா வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தொடர்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 20 நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தில் அங்கத்தவர்களாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனங்களுக்கான விசா ஏற்பாடுகளை விரைவாக வழங்கும் நடவடிக்கையினை பிரித்தானிய எல்லை முகவரகம் மேற்கொள்ளும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.
கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பிரதேசங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த உத்தேசித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சீருடையிலும் சிவிலியன் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதனால் மக்கள் தங்களது உடமைகள் குறித்து கூடிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரத் பொன்சேகாவை என்னிடம் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்!- மேர்வின் சில்வா அரசிடம் சவால்.
வெள்ளைக் கொடி வழக்கில் மூன்று வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகிறார் என்றால் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுசன உறவுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தனகல பிரதேசத்தில் இன்று செவ்வாய்யகிழமை காலை (06.12.2011) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சரத் பொன்சேகா நீதிமன்றத்திலும் வைத்தியசாலையிலும் அரசாங்கத்திற்கெதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிடின் அந்தப் பொறுப்பை தன்னிடம் விடுமாறும் தான் அதனை நிறுத்திக் காட்டுவதாகவும் மேர்வின் சில்வா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேகவை விடுதலை செய்யக் கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி எந்த பிரயோசனமும் இல்லை எனவும்,  வௌ்ளைக்காரரால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய முடியாது. இலங்கை அரசாங்கமே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை ஒடுக்க ரணில் அமெரிக்காவை நம்பியிருந்தார்: விக்கிலீக்ஸ்.
 சிறிலங்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியவருகிறது.
உள்நாட்டில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் உதவியை அவர் வெகுவாக நம்பியிருந்ததாகவும், அமெரிக்காவின் அனுசரணையுடனேயே விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் நம்பியிருந்ததாகவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்காக அமெரிக்காவின் உதவிகளை அவர் நாடுவதில் அக்கறை கொண்டிருந்தது மட்டுமல்லாது, அவர் ஒரு அமெரிக்க விசுவாசி எனவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரம்பரைச் செல்வந்தர்கள் என்பதால், இடதுசாரிச் சிந்தனைகள் மீது அவருக்கு நாட்டமில்லை எனவும் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஆஷ்லி வில்ஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மேலும் அறிய வருகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த போது அரச தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒப்பந்தத்தின் பின் சமாதான நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளில் இழுத்தடிப்புச் செய்தார் என பின்னர் விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியில் இணைந்த ஐ.தே.கட்சியின் உறுப்பினர் இடைநிறுத்தம்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரோவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட மொஹான் லால் கிரேரோவின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க கட்சியின் செயலாளருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து செயலாளர் அது தொடர்பில் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிருடன் இருந்த தந்தைக்கு மரண சான்றிதழ் காட்டி வீசா பெற விண்ணப்பித்த மகன் கைது.
இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல வீசா பெறுவதற்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த இலங்கையரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கடமையாற்றும் தாயுடன் இணைவதற்காக தனது இளைய சகோதரனுடன் குறித்த விண்ணப்பதாரி பிரித்தானிய தூதுவராலயத்தில்  விண்ணப்பித்திருக்கிறார்.
போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ள இவர் உயிருடன் உள்ள தந்தையை இறந்ததாக போலி மரண சான்றிதழையும் வழங்கியுள்ளனார்.
மேலும்,18 வயதிற்கு மேற்பட்ட குறித்த விண்ணப்பதாரி போலி பிறப்புச் சான்றிதழ் மூலம் வயது குறைந்தவர் என காட்ட முனைந்துள்ளார்.
இவை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதுடன், குறித்த இருவரின் வீசா நிராகரிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர் 10 வருடங்களுக்கு பிரித்தானியா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா குடியகல்வு விதிகளை மீறி போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என பிரித்தானிய எல்லை முகவர் நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஐ.நா. உரையை எழுதியதாக பிரிட்டனின் பெல் பொட்டின்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஆற்றிய உரையை எழுதியதாக பிரிட்டனின் பெல் பொட்டின்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமர்வுகளில் ஆற்றிய உரையை எழுதும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சினாலும் உரையொன்று தயார்படுத்தப்பட்டதாகவும், இறுதியில் தமது நிறுவனத்தினால் எழுதிய உரையையே ஜனாதிபதி ஆற்றியதாகவும் பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, இறுதிக்கட்ட போர், மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் இந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உரையை தயாரிப்பதற்கு விசேட குழுவொன்றை தமது நிறுவனம் நியமித்திருந்ததாக நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார் என இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் முக்கிய மக்கள் தொடர்பு நிறுவனமான பெல் பொட்டின்கர் நிறுவனமே இவ்வாறு ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் உரையை எழுதியதாக அறிவித்துள்ளது.
நமீபியாவில் ஏ.ரீ.எம் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையர்கள் உள்ளிட்ட அறுவர் கைது.
நமீபியாவில் ஏ.ரீ.எம். அட்டைகள் மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நமீபியப் பிரஜை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த சதீஸ்குமார் துளசிதாஸ், சுரேஸ் குமார், பிரிட்டனைச் சேர்ந்த பரராஜசிங்கம் சாரங்கன், சிங்கப்பூரைச் சேர்ந்த அப்துல் கதிர் ஜமால் முஹமட் ஆகியோருக்கு எதிராகவே அந்த நாட்டின் காவல்துறையினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இவர்கள் நமீபியா வங்கிகளில் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து போலி ஏ.ரீ.எம் அட்டைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அடுத்த இலக்கு இலங்கையர் என்ற கோட்பாட்டில் அனைத்து பிரஜைகளை ஒன்றிணைப்பதே- பிரதமர் டி.எம்.ஜயரத்ன.
நாம் அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைப்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அடுத்த இலக்கு. அதைவிடுத்து, மதங்களையும் இனங்களையும் கலாசாரங்களையும் ஒன்று சேர்ப்பதல்ல என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி மகளிர் உயர் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (06.12.2011) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் கையளிக்கும் வைபவத்திலே பிரதம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் இவ்வாறு பெருந்தொகைப் புத்தகங்களை இலவசமாக வழங்கும் ஒரே நாடு இலங்கை யாகத்தான் இருக்கும் என குறிப்பிட்ட அவர்,
இன்று ஒழுக்க விழுமியங்கள் படிப்படியாக மறைந்து வருகின்றன. இதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அமைதியின்மை போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. இவர்களை நல்வழிப்படுத்துவதில் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பாரிய பொறுப்பு உண்டு எனவும் சுட்டிக் காட்டினார்.
37 மில்லியன் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நான் இறப்பதற்கு முன் நாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு கொண்டு வருவேன்!- கரு ஜயசூரிய.
இறப்பதற்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியினை இந்தநாட்டில் உறுதிப்படுத்துவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை( 06.12.2011) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் படுமோசமான முறையில் ஜனநாயக விரோத ஆட்சியும் ஊழல் மோசடிகளும் மேலோங்கியுள்ளதாகவும் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை மிகவும் ஆபத்தாகவே அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் ஐ.தே.கவின் ஆட்சி இலங்கைக்கு அவசியமாகும். இதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்க்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கக் கூடாது – ஜனாதிபதி மகிந்த.
மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் முயற்சிக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறந்த உள்ளுராட்சி மன்றத்துக்கு விருது வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.12.2011) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாட்டில் தற்போது சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
விருப்பு வாக்கு பிரச்சினையால் சில உள்ளுராட்சி மன்றங்களில் ஆளும் கட்சி உறுப்பினர்களே அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இது ஒரு பிழையான நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும்என தெரிவித்துள்ளார்.
மேலும், விருப்பு வாக்கு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு சேவையாற்றுவதனை நிராகரிக்க முடியாது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சர்களின் நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அதிருப்தி.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் ரூபாவின் பெறுமதி குறைப்பு தொடர்பில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இவ்வாறான அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டாக ஆதரவளிக்க வேண்டும். கூட்டாக எடுக்கப்படும் தீர்மானங்களை பகிரங்கமாக விமர்சனம் செய்வது பொருத்தமாக அமையாது எனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிட்ட ரோஹித போகொல்லாகம,  அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
தலைவர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கே கூடுதல் ஆதரவு!– தினமின.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கே கட்சிக்குள் கூடுதலான ஆதரவு உள்ளது என தினமின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைவர் பதவிக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரணில் இலகு வெற்றியீட்டுவார் என அந்த பத்திரிகை நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு, கரு ஜயசூரிய உள்ளிட்ட தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். எனினும், பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கட்சித் தலைமைப் பொறுப்பு தொடர்பில் இன்றைய கூட்டத்தில் பேசப்பட மாட்டாது என்றும் தினமின தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தலைவர் தெரிவின்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 46 பேரும், கரு ஜயசூரியவிற்கு ஆதரவாக 8 பேரும் வாக்களிப்பார்கள்.
ஒரு குழுவினர் சுயாதீனமாக செயற்பட உள்ளதாகவும் தினமின குறிப்பிட்டுள்ளது.
கரு ஜயசூரியவின் இணைய தள அங்குரார்ப்பண நிகழ்வின் இடைநடுவில் ரணில் வெளியேறினார்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இணைய தள அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அங்குரார்ப்பண வைபவம் நடைபெறுவதற்கு முன்னரே சபையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கை நிகழ்வில் குழுமியிருந்தவர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
முன் வரிசை ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்கவுடன், கரு ஜயசூரிய நட்புறவாக பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இணைய தள அங்குரார்ப்பண நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே ரணில் வெளியேறிச் சென்றுள்ளார்.
கரு ஜயசூரியவை புகழும் வகையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பத்திலேயே ரணில் வெளியேறிச் சென்றுள்ளார்.
மோகன்லால் கிரேரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கம்
ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்புரிமையில் இருந்து மோகன் லால் கிரேரு அகற்றப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் அரசாங்க கட்சியில் இணைந்துக்கொண்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
மோகன் லால் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையை அடுத்து பலர் அரசாங்கத்துடன் இணைய காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மோகன்லால் கட்சியில் இருந்து வெளியேறியமை கட்சியை பொறுத்தவரையில் நன்மையான விடயமே என்று ஐக்கிய தேசியக்கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமது கருத்தை வெளியிட்ட தினேஸ் குணவர்தன, ரணில் விக்கிரமசிங்க தமது வயிறு சுத்தமானது என்று திருப்திப்பட்டு கொள்வதாகவே இதனை கருதவேண்டியுள்ளதாக கூறினார்.
ஹைகோப் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் நிதி மோசடி தொடர்பில் வழக்கு மீதான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 9ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று(06.12.2011) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, இவ்வழக்கை 01ம் இலக்க மேல் நீதிமன்ற கட்டடத்தில் விவாதிக்க அரச மற்றும் எதிர்தரப்பிற்கு ஆட்சேபனை உண்டா என மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் வினவினார்.
இதற்கு பதிலளித்த இரு தரப்பு சட்டத்தரணிகளும் எதிர்ப்பு இல்லை என தெரிவித்ததற்கிணங்க, இதன்படி எதிர்வரும் 9ம் திகதி 01ம் இலக்க மேல் நீதிமன்ற கட்டடத்தில் ஹைகோப் நிதி மோசடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறி சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஹைகோப் நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினி கூட்டுத்தாபன சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன! லங்கா ருத் இணையத்தளம் குற்றச்சாட்டு.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவப்பிரிய அபேசிங்க  கூட்டுத்தாபன சொத்துக்களை விற்பனை செய்யவுள்ளதாக லங்கா ருத் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
கூட்டுத்தாபனத்தில் உள்ள பழைய திரைப்படங்கள் மற்றும் அரிய பொருட்களை ஒதுக்கி விடும் நடவடிக்கைகளில் புதிய தலைவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பயிற்சியற்ற பலர் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் அவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் புதிய தலைவரின் முன்னிலையிலேயே இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 -2004 ஆண்டுக்காலப்பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியின் போது, கூட்டுதாபனத்தின் சொத்துக்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், பின்னர் அது கைவிடப்பட்டது.
இந்தநிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவப்பிரிய அபேசிங்க ஜனாதிபதியின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கார்ல்டன் விளையாட்டு வலைப்பின்னலுக்கு கூட்டுத்தாபத்தின் சொத்துக்களை விற்பனை செய்யவுள்ளதாக லங்கா ருத் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோரும் அளவுக்கு எனது கணவர் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை! அனோமா பொன்சேகா.
எனது கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதியை நாம் நாடுகின்றோமே தவிர, மன்னிப்புக்கோரி மன்றாடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியாரான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் எனது கணவரின் விடுதலைக்காக நீதியைத் தேடி நாம் சர்வதேசத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அனோமா பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அவரது குடும்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடமே செல்ல வேண்டுமே தவிர சர்வதேசத்தை நாடிப் பயனில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்த கருத்துக்கே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது கணவரான ஜெனரல் பொன்சேகா எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. குற்றம் இழைத்து தண்டனை அனுபவிக்கின்றவர்கள்தான் மன்னிப்பு கோரவேண்டும். அடிப்படையே இல்லாமல் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கும் எனது கணவருக்கு நீதியே தேவைப்படுகின்றது.
எனது கணவரை எவ்வாறான வழிமுறைகளைக் கையாண்டு கைதுசெய்தனர் என்று உங்களுக்குத் தெரியும்.
இலங்கையில் நீதி கிடைக்கும் என்று நான் கருதவில்லை.
ஆட்சிப்பீடத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் அதனையே உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
சுற்றுலா விசாவில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று இந்திய பிரஜைகள் கைது.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று இந்திய பிரஜைகள் -மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை - மல்வத்தை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (06.12.2011) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இருவரிடமிருந்து 2000 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டதோடு கல்முனை பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மானெல் வீதியில் வைத்து நேற்று செவ்வாய்கிழமை மற்றுமொரு இந்திய பிரஜை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இன்று அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது: கிலானி.
அமெரிக்கா உடனான உறவை மீண்டும் வலுப்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது.
நேட்டோ தாக்குதல் விவகாரத்தில் இரு தரப்புக்கிடையிலான உறவுகள் சீர்குலைந்தன. எனினும் நிலவரம் மேலும் மோசமாகாமல் தடுக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம்(5.12.2011) பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி அளித்த பேட்டியில், அமெரிக்கா உடனான பாகிஸ்தான் நல்லுறவு மீண்டும் தொடர வேண்டும் என தான் விரும்புவதாகவும், அதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நேற்று பதிலளித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், கிலானியின் விருப்பத்தை வரவேற்கிறோம். இந்த உறவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. பாகிஸ்தானின் நலனுக்கும் உகந்தது என்றார்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 28 பேர் பலி, 70 பேர் படுகாயம்.
ஈராக்கில் நேற்று(6.12.2011) தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகளில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மொஹரம் பண்டிகையையொட்டி புனிதத் தலங்களுக்குச் சென்று கொண்டிருந்த ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களே குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
தலைநகர் பாக்தாதுக்கு அருகேயுள்ள ஹில்லா நகரில் பொதுமக்கள் குழுமியிருந்த இடத்தில் காரினுள் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.
இந்நகரின் மற்றொரு இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர். இதுபோலவே பாக்தாத் நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தால் பால் மாவில் கதிரியக்க பாதிப்பு.
குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் ஜப்பானை சேர்ந்த மெய்ஜி(Meiji) நிறுவனத்தால் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி பயங்கர நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.
இதனால் புகுஷிமா நகரில் உள்ள டச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அணு உலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால் கதிரியக்க தனிமங்கள் உருகின, கதிரியக்கமும் வெளியேறியது.
பசிபிக் பெருங்கடல் வழியாக இந்த கதிரியக்க பாதிப்பு பரவுவதாக கூறப்பட்டது. மீன், நண்டு உட்பட பல கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், டீ, பால் ஆகியவற்றில் கதிரியக்க பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கதிரியக்க தன்மை இருந்தாலும் அபாயகரமான அளவுக்கு இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில் மெய்ஜி என்ற நிறுவனத்தின் பால் மாவில் கதிரியக்க பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெய்ஜி பால் மாவில் கதிரியக்க சீசியம் தனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஒரு கிலோ பால் மாவில் 200 பெக்கரல் என்ற அளவுக்கு சீசியம் இருக்கலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது. அதைவிட பல மடங்கு குறைவாக 30.8 பெக்கரல் அளவுக்கே எங்கள் பால் மாவில் சீசியம் உள்ளது.
ஆனாலும் 4 லட்சம் டின்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். பால் மாவு தயாரிக்கும் போது அதை காயவைப்பதற்கு வெப்ப காற்று பயன்படுத்தப்படும்.
புகுஷிமா அணு உலையில் இருந்து பரவிய கதிரியக்கம் காற்று மூலம் பால் மாவில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என மெய்ஜி நிறுவன அதிகாரிகள் கூறினர்.
மெய்ஜி பால் மாவு ஜப்பானில் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
சீன முன்னாள் ஜனாதிபதி இறந்ததாக வதந்தியை கிளப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு.
சீனா முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின்(Jiang Zemin) இறந்ததாக வதந்தியை பரப்பிய ஹோங்கொங் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.19 இலட்சம்(இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனா முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் மரணமடைந்து விட்டதாக ஹோங்கொங்கில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று கடந்த ஜூலை மாதம் 6ந் திகதி செய்தி வெளியிட்டது.
இதனிடையில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறாக வதந்தியை பரப்பிய ஹோங்கொங் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அபராதம் விதித்து ஹோங்கொங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் நியமனம்.
இந்தியாவிற்கான புதிய பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் நியமிக்‌கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் பிரதமர் கிலானி அளித்துள்ளார்.
தற்போதைய தூதராக பணியாற்றி வரும் ஷாகித் மாலிக்கின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு காரணமாக அவர் தொடர்ந்து தூதராக பணியாற்றி வந்தார்.
இம்மாத இறுதியில் அவரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி சல்மான் பஷீர் புதிய தூதராக நியமிக்‌கப்பட உள்ளார்.
மேலும் பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத வகையில் தற்போது ரஷ்யா, எகிப்து, அல்ஜீரியா, கியூபா, நேபாளம், சிலி, கென்யா, துனிசியா, ஜேர்மனி, பிரேசில், நெதர்லாந்து, ஏமன், செர்பியா உட்பட 15 நாடுகளுக்கான புதிய தூதர்களை நியமித்து பிரதமர் கிலானி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சிட்டி குழுமம் முடிவு.
உலகளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதால் செலவை குறைக்க இனி வரும் காலங்களில் 4,500 பேரை பணிநீக்கம் செய்ய சிட்டி குழுமம் திட்டமிட்டுள்ளதாக சிட்டி குழும தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது கடும் சரிவை சந்தித்த சிட்டி குழுமம் இன்னும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் உலகெங்கும் 4,500 பேரை பணியிலிருந்து நீக்கப் போவதாக அந்த குழுமம் அறிவித்துள்ளது.
உலகெங்கும் இந்த வங்கியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வங்கியின் செலவுகளைக் கட்டுப்படுத்த, இதில் 2 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த காலாண்டு முதல்  தொடங்கும் இந்த பணிநீக்க நடவடிக்கை சில காலாண்டுகள் வரை தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் செலவு அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் 3-5 சதவீதம் வரை இலக்கின் அளவு குறைந்து வருவதாகவும், 2011ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐபோனுக்கு தடை.
சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி ஆசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் ஐபோன்(iPhone) உபயோகிப்பதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அங்கு இடம்பெறும் கலவரங்கள் பற்றிய விவரங்கள் மக்களிடையே சென்றடைவதை தடுக்கவே ஐபோனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்ட போது அங்கு கலவரம் பரவுவதற்கு பிளாக்பெரி கைபேசி காரணமாக இருந்ததால் பிளாக்பெரி கைபேசிக்கு தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அணு மின் நிலையத்தை எதிர்த்து பிரான்சில் போராட்டம்.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் பாரீஸ் நகரத்துக்கு தென்கிழக்கே 95 கி.மீ தொலைவில் உள்ள கோஜண்ட் சுர் செய்னே(Nogent-sur-Seine)என்ற அணு மின் நிலையத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு பலமற்று இருப்பதை உணர்த்தவே உள்ளே நுழைந்து போராடியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அணு மின் சக்தி நிலையத்துக்குள் அத்து மீறி நுழைந்த ஒன்பது பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அணு ஆராய்ச்சி நிபுணரான சோபியா மஜ்னோனி கூறுகையில், 15 நிமிடத்தில் போராட்டக்காரர்கள் அணு சக்தி நிலையத்தின் மையப்பகுதியை அடைந்து விட்டனர். அங்கு தான் அணு சக்தி உற்பத்திக்கான எரிபொருளும், அணு சக்தி உற்பத்தி மையமும் உள்ளன. அந்த இடம் வரை எளிதாக மக்கள் சென்றதால் அணு சக்தி நிலையத்தின் பாதுகாப்பு பலமானதாக இல்லை என்பது எளிதாக புரிந்துவிட்டது என்றார்.
உலகிலேயே பிரான்ஸ் நாட்டில் அதிகமான அணு சக்தி நிலையங்கள் உள்ளன. ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலைய விபத்திற்கு பின் ஏற்பட்டுள்ள அச்சத்தாலும், எதிர்ப்பாலும் ஜேர்மனி எதிர்வரும் 2022ம் ஆண்டுக்குள் தமது நாட்டின் அனைத்து அணு சக்தி நிலையங்களையும் மூடி விடப் போவதாக அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் சோசலிசக் கட்சியின் தலைவராக இருக்கும் ஃபிராங்கோய்ஸ் ஹோலாண்டே வெற்றி பெற்றால் எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் 24 அணு மின் நிலையங்களை மூடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மொத்த அணு மின் நிலையத்தில் ஜம்பது சதவீதம் ஆகும்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கனடாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அதற்கான எதிர்விளைவும் எதிர்மறையாக இருப்பதை IRPP என்ற ஆய்வு உணர்த்துகிறது.
ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோரை வரவேற்றவர்கள் தற்பொழுது எதிர்க்கின்றனர் என்ற ஒரு கருத்தும், 1970 ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை புலம்பெயர்ந்தோரை வெறுத்தவர்கள் கூட பொருளாதார நன்மைகளைக் கருதி கடந்த பத்தாண்டுகளாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்ற ஒரு கருத்துமாக இருவேறு கருத்துகள் கனடாவில் நிலவி வருகின்றன.
ஊடகங்கள் புலம்பெயர்ந்தோருக்கான ஆதரவும் வெறுப்பும் குறித்து பல விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளை விட கனடாவில் புலம் பெயர்ந்தோருக்கு ஆதரவு அதிகமாகவே உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் 2,80,000 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். 1980ம் ஆண்டில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை விடக்குறைவாகும்.
ஆப்கானில் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு துவங்கியது.
ஜேர்மனியின் பான் நகரில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு நேற்று(5.12.2011) நடந்தது. அமெரிக்கா, ஜேர்மனி உட்பட நூறு நாடுகளின் ஆயிரம் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆப்கான் எதிர்காலம் குறித்த மாநாடு நேற்று பான் நகரில் துவங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜேர்மனி வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே, சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான ஆப்கானை உருவாக்குவது தான் இம்மாநாட்டின் நோக்கம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பின் ஆப்கான் எல்லா துறைகளிலும் மேம்படுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. நாட்டின் பாதுகாப்பைக் கையளிப்பதற்கான உறுதியாக இம்மாநாட்டை ஆப்கான் மக்கள் பார்க்கின்றனர் என்றார்.
சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்) மற்றும் அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை விரைவில் ஆப்கானுக்கு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மாநாட்டில் அறிவித்தார். மேலும் அவர் ஆப்கானின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(3.12.2011) பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேட்டோ தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து மாநாட்டின் அடுத்த நாட்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் நேற்று லாகூரில் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, நேட்டோ தாக்குதலுக்குப் பின் சீர் குலைந்த அமெரிக்கா, பாகிஸ்தான் உறவை மீண்டும் புதுப்பிக்க நீண்ட காலம் ஆகாது என நினைக்கிறேன் என்றார்.
அமெரிக்காவும், பாகிஸ்தான் உடனான உறவை மீண்டும் புதுப்பிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தானும் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வருகிறது.
சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளதன் எதிரொலி: ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடப் போவதாக சிரியா அறிவிப்பு.
சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளதன் காரணமாக அரபு கூட்டமைப்பு நாடுகளின் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட உள்ளதாக சிரியா அறிவித்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு(Bashar al-Assad) எதிராக மக்கள் தொடர்ந்து பத்தாவது மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் இராணுவ வன்முறையில் 4,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, அரபு கூட்டமைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து சிரியாவின் நட்பு நாடான துருக்கியும், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும் சிரியா நாட்டின் தெருக்களில் இருந்து இராணுவம் விலக்கு பெறப்பட்டதை தொடர்ந்து அரபு கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட சிரியா அனுமதிக்க வேண்டும் எனவும், அதற்கு அனுமதியளிக்க நேற்று முன்தினம் வரை காலக் கெடு தருவதாகவும் அரபு கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் துருக்கியின் தடை மற்றும் அரபு கூட்டமைப்பின் கெடு ஆகியவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சிரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜிகாத் அல் மக்தேசி(Jihad Maqdesi), அரபு கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவோம். அரபு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வருவது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
அரபு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வருகை சிரியாவின் இறையாண்மையைக் குறைப்பதாக அந்நாடு கருதுகிறது. அதேநேரம் கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள் சிரியாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இதற்கிடையில் நேற்று(5.12.2011) சிரியா நாட்டு இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலர் ஏவுகணைகள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமெரிக்காவில் 104 பேர் கைது.
அமெரிக்காவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இதுவரை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பாதிப் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பேக்கர் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜான் நெகஸ் ஸ்சான் என்பவர் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தாண்டு ஏப்ரல் வர மொத்தம் 104 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
22 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். 7 சதவீதம் பேர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். 5 சதவீதம் பேர் விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.
இவர்களில் 66 சதவீதம் பேர் மத்திய கிழக்கு, சோமாலியா, தெற்காசியா அல்லது பால்கன் பகுதி ஆகியவற்றிற்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் 70 சதவீதம் பேர் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா மற்றும் அதன் கிளைகளோடு தொடர்புடையவர்கள். மூன்றில் இரண்டு பங்கு பேர் 34 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர்.
வியட்நாம் போரின் போது நிலக்கண்ணி வெடியால் சிக்கி 1 லட்சம் பேர் பாதிப்பு: பிரதமர் தகவல்.
வியட்நாமில் நடந்த போரின் போது நிலக்கண்ணிவெடியால் சிக்கி 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் எனவும், மேலும் அத்த‌கைய நிலக்கண்ணிகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகளானது எனவும் அந்நாட்டு பிரதமர்(Nguyen Tan Dung) தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக ஆண்டுகள் நடந்த போர்களில் வியட்நாமில் நடந்த போரும் ஒன்று. இந்த போரானது கடந்த 1955ம் ஆண்டு தொடங்கி 1975ம் ஆண்டு முடிந்தது.
இப்போரின் போது 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஐ.நா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் வியட்நாம் பிரதமர் நெளகூயன்டாங்டூன் கூறுகையில், வியட்நாம் போரின் போது நாட்டில் நிலக்கண்ணி வெடியால் சிக்கி 1 லட்சம் ‌பேர் இறந்தனர்.
62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலக்கண்ணிவெடிகளை முற்றிலும் அகற்ற 10 ஆண்டுகள் ஆனது.
போருக்கு முன்னர் தெற்கு வியட்நாம், வடக்கு வியட்நாம் என இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்தது. இதில் தெற்கு வியட்நாமிற்கு ஆதரவாக அமெரிக்க 18 மில்லியன் டன் வெடிகுண்டினை பயன்படுத்தியது. போருக்கு பின்னர் அமெரிக்க 63 மில்லியன் டொலரை இழப்பீடாக வழங்கியது என தெரிவித்தார்.
இதுகுறித்து தொழிலாளர் அமைச்சர் ஒருவர் கூறுகையில், நாட்டில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நிலம் நிலக்கண்ணி வெடிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் 7 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன என்றார்.
ஆப்கானில் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி.
ஆப்கான் தலைநகர் காபூலில் வழிபாட்டு தளம் அருகே இன்று(6.12.2011) தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 34 பேர் வரை பலியாகியிருக்கலாம் என AFP பத்திரிக்கையின் புகைப்பட நிருபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
காபூலின் வடக்கு மாகாணமாக ஷெரீப் நகரத்தில் ஷியைட் மூஸ்லீம் இனத்தவர்கள் தங்களது புனித நாளை கொண்டாட வழிபாட்டு தளத்தில் கூடியிருந்த வேளையில் தற்கொலை படையை சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அதே நகரைச் சேர்ந்த மற்றொரு வழிபாட்டுத் தளத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழிபாட்டு தளங்களில் அவர்களது பழமை வாய்ந்த சின்னங்களும், கொடிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என காபூல் நகர பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை: சீனாவில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக சீனத் தலைநகர் பீஜிங்கில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று 100க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 207 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தரை இறங்க வேண்டிய விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே தரையிறங்குவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று இருந்ததை விட கடுமையான பனி மூட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீஜிங்கில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் தரைவழிப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை: பராக் ஒபாமா.
அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை என ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அவர், அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த மாதம் குறைந்த போதும் நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாகக் கருத முடியாது என்றார்.
ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமைப் பிரச்னை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வேலையில்லாதவர்களுக்கு காப்பீடு வழங்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் ஒத்துழைப்பையும் பாரக் ஒபாமா கோரியுள்ளார்.
பாகிஸ்தானிற்கு யுரேனியம் விநியோகம் செய்ய இயலாது: அவுஸ்திரேலிய அமைச்சர் தகவல்.
இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கு அவுஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தங்களுக்கும் யுரேனியம் விநியோகம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்தியா வரவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் கூறுகையில், பாகிஸ்தானுக்கும் யுரேனியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு விதிவிலக்கு உண்டு. இந்தியா சர்வதேச அணுசக்தி சட்டங்களுக்கும், அணுசக்தி முகமை மற்றும் அணுசக்தி வழங்குவோர் குழுவிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதில் எதற்கும் ஒத்துப்போவில்லை எனக் கூறியுள்ளார்.
ஜப்பானில் கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து: ரூ.20 கோடிக்கு மேல் சேதம்.
ஜப்பானில் அதிவேக சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நிகழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் ரூ.20 கோடி(இந்திய ரூபாய்) மதிப்புடைய கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரில் பிரபலமான ஆட்டோ கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் சிலர் தங்களது ஸ்போர்ட்ஸ் கார்களில் ஹிரோஷிமா நகருக்கு சென்றனர்.
அதிவேக சாலையில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஃபெராரி காரின் ஒட்டுநர் ஒருவர் திடீரென சாலையின் அடுத்த பக்கத்தில் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் நிலை தடுமாறி சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த கார்களும் கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 8 பெராரி கார்கள், 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மற்றும் லம்போர்கினி, டொயோட்டோ பிரையஸ் உள்ளிட்ட பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஏராளமான கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ரூ.20 கோடிக்கு(இந்திய ரூபாய்) சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உலகிலேயே அதிக சேதம் ஏற்பட்ட கார் விபத்தாக இந்த விபத்து கூறப்படுகிறது.
கனடாவில் ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு.
கனடாவில் ஏழைக்கும், செல்வருக்கும் இடையிலான வருமான வேறுபாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகவலை OECD என்ற பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் பத்துச் சதவிகித செல்வர்களின் ஆண்டு வருமானம் 103,500 டொலராகும். அப்போது கடைசி பத்துச் சதவிகித ஏழைகளின் ஆண்டு வருமானம் 10,260 டொலராகும். அதாவது பத்து மடங்கு வித்தியாசம் உள்ளது.
கடந்த 1990ம ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்த வித்தியாசம் கனடாவில் எட்டு மடங்காக இருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கனடா வருமான ஏற்றத்தாழ்வில் 12 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
அதிகபட்ச வேறுபாடு வகிக்கும் நாடுகளாக முதலில் சிலியும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், இத்தாலி, போர்ச்சுக்கல், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் உள்ளது.
குறைந்த பட்ச வேறுபாடு உள்ள நாடுகளாக முதலில் சுவிட்சர்லாந்தும் அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, சுலோவோக்கியா குடியரசு மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் உள்ளன.
நல்ல பொருளாதார கொள்கைகளை கனடா வகுக்காததால் இந்த ஏழை –பணக்கார வேறுபாடு விரிவடைந்து கொண்டே போகிறது என OECDயின் பொதுச் செயலர் ஏஞ்செல் குரியா தெரிவித்துள்ளார்.
குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது பிரிட்டனின் பொருளாதார உதவி எங்களுக்கு தேவை: கர்சாய்.
பிரிட்டன் தனது படைகளை ஆப்கானிஸ்தானை விட்டு திரும்ப அழைத்துக் கொண்ட பின்பும் கூட பொருளாதார உதவிகளை தொடர்ந்து இன்னும் பத்தாண்டுகளுக்கு செய்யும் என்று பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
தலிபான் என்ற தீவிரவாத இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற நேட்டோ நாடுகள் தனது படைகளை அனுப்பி உதவின. இப்போது இந்நாடுகள் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் தனது இராணுவத்தை திரும்ப பெறுகின்றன.
உலக வங்கியானது 130,000 படைவீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்தால் பெரியவில் நிதிநிலை பாதிக்கப்படும் என அறிவித்ததும் நேட்டோ நாடுகள் படைகளை திரும்ப அழைத்துக் கொள்ள முடிவு செய்தன.
2014ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் படைகள் எதுவும் ஆப்கானிஸ்தானில் இருக்காது என்றாலும் பொருளாதார ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்ள பிரிட்டன் விரும்பவில்லை.
ஆப்கானிஸ்தான் தன்னளவில் பொருளாதார நிலைப்பாட்டை அடையும் வரை பிரிட்டன் தொடர்ந்து உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது என்று ஹேக் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் பிரிட்டனுடான நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்த வாரம் பிரிட்டனுக்கு வருகை தருகிறார்.
பத்தாண்டு காலமாக தலிபான்களை எதிர்த்து போராடியதால் தாங்கள் இழந்து விட்ட பொருளாதார நிலைமைகளை மீட்டெடுக்க வெளிநாடுகளின் ஆதரவு தமக்கு தொடர்ந்து தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
குறைந்தபட்சமாக இன்னும் பத்து ஆண்டுளுக்காவது பிரிட்டனின் உதவி தமக்கு தேவை என அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள்: புடினுக்கு எதிராக மக்கள் போராட்டம்.
ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடத்தியே விளாடிமிர் புடின் வெற்றி பெற்றார் எனக்கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ரஷ்யாவில் கீழவைக்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த 4ம் திகதி நடந்தது. அதில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி உட்பட 7 கட்சிகள் போட்டியிட்டன. அதில் புடின் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு 50 சதவிகித வாக்குளே கிடைத்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே புடின் தேர்தலில் வெற்றி பெற்றார் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று(5.12.2011) மாஸ்கோ நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்று “புரட்சி ஓங்குக”, “புடின் இல்லாத ரஷ்யா வேண்டும்” என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போன்று இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்ததாக ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி தெரிவித்துள்ளது.
ஜேர்மனி அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் ஒத்துப் போக வேண்டும்: முன்னாள் பிரதமர்.
ஜேர்மனியின் முன்னாள் பிரதமரான ஹெல்முட் சிமித்(Helmut Schmidt) ஐரோப்பிய ஒன்றிய பிரச்சனைகளில் இன்றைய அரசு சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பிரச்சனைகளை கையாள இந்த அரசு இன்னும் உணர்வு பூர்வமாகச் செயல்படவேண்டும் என்றார்.
சமூகக்குடியரசு கட்சியின் நாடாளுமன்ற தலைவரான ஃபிராங்க் வால்ட்டெர் ஸ்டீன் மேர்(Frank-Walter Steinmeier) கூறுகையில், ஐரோப்பா இந்த நிதி நெருக்கடிப் பிரச்சனையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், மேலும் 27 நாடுகளும் இணைந்து ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய சிமித் யூரோ மண்டலப் பிரச்சனையிலிருந்து விலகி ஜேர்மனி தன்னே தானே தனிமைப்படுத்திக் கொள்வது சரியல்ல. ஜேர்மனியக்கென்று தனி வரலாறும், சாதனைகளும் இருப்பதால் அதன் அண்டைநாடுகளோடும் ஐரோப்பியப் பங்கு தாரரோடும் உணர்வு பூர்வமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
முற்காலத்தில் ஜேர்மனியின் இராணுவம் மற்றும் அரசியல் அதிகாரத்தை கண்டு ஐரோப்பா அஞ்சியது. இப்போது ஜேர்மனியின் பொருளாதார பலம் மற்ற நாடுகளுக்கு அச்சத்தை தருகிறது.
இந்நிலையில் வங்கி மற்றும் சந்தைகளில் மீது கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அனைத்து ஐரோப்பிய உறுப்பினர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமூகக் குடியரசுக் கட்சியினர் 480 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் வலதுசாரித் தீவிரவாதத்தை எதிர்த்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. வலதுசாரி ஆதரவுடைய தேசிய குடியரசுக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
யூரோ மண்டலத்தின் 15 நாடுகளின் கடன் தரம் எங்கள் கண்காணிப்பில் உள்ளது: எஸ் அண்டு பி நிறுவனம் அதிரடி.
யூரோ மண்டல பொருளாதார நெருக்கடிக்குப் புதிய தீர்வுகளை ஜேர்மனி பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இருவரும் வெளியிட்ட சில மணி நேரங்களில் யூரோ மண்டலத்தின் 15 நாடுகளின் கடன் தரத்தைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக எஸ் அண்டு பி நிறுவனம் அறிவித்துள்ளது.
யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி குறித்து நேற்று முன்தினம்(5.12.2011) பாரிசில் சந்தித்துப் பேசிய ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லும்(Angela Merkel), பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியும்(Nicolas Sarkozy) சில தீர்வுகளை வெளியிட்டனர்.
இந்த அறிக்கைக்குப் பின் சில மணி நேரம் கழித்து கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு பூர்(எஸ் அண்டு பி) ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி யூரோ மண்டலத்தின் 17 நாடுகளில் சைப்ரஸ், கிரீஸ் நாடுகளை தவிர்த்து ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட ஏனைய 15 நாடுகளின் கடன் தரத்தை கண்காணிப்பில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு இந்த நாடுகளின் நிதிப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதே இந்த நடவடிக்கை எடுப்பதற்கு அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
யூரோ மண்டலத்தில் தற்போது ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகள் உயர் கடன் மதிப்பீடான ஏஏஏ தர குறியீட்டில் உள்ளன.
தற்போதைய எஸ் அண்டு பி அறிக்கை இன்னும் 90 நாட்களில் இந்நாடுகளின் ஏஏஏ மதிப்பு ஒரு புள்ளி குறைந்து ஏஏ ஆக பாதிக்குப் பாதியாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஐரோப்பிய வங்கிகள் தற்போது பெரும் நிதிச் சுமையில் தத்தளிப்பதால் இந்த அறிக்கை சரியானது தான் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் யூரோ நெருக்கடிக்கான தீர்வை நோக்கிய ஐரோப்பிய நாடுகளின் பயணத்தில் இது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என பலர் நினைக்கின்றனர்.
இந்நிலையில் எஸ் அண்டு பி.யின் அறிக்கை குறித்து பேட்டியளித்த ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், அந்நிறுவனம் ஒரு கடன் மதிப்பீட்டு நிறுவனத்துக்குரிய கடமையைச் செய்திருக்கிறது. இது ஒரு நீண்ட செயல்முறை என ஏற்கனவே நான் கூறி வருகிறேன். அதற்கான தீர்வைத் தான் சமீபத்தில் பிரான்சுடன் இணைந்து அறிவித்துள்ளேன் என்றார்.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி எஸ் அண்டு பி அறிக்கையை அறிந்து கொண்டதாக மட்டும் கூறினார்.
பிரான்ஸ் நிதியமைச்சர் பிரான்காயிஸ் பெரோயின் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளைத் தவிர மேற்கொண்டு எவ்வித சிக்கன நடவடிக்கையும் அறிவிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.
தனியார் துறைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவையே: ஜேர்மனி.
அரசாங்கத்தால் பிரச்னை ஏற்பட்டு அதனால் தொழில் நஷ்டம் ஏற்பட்டால் அதன் முதலீட்டாளர் மீது அந்த நஷ்டத்தை சுமத்த வேண்டாம் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்ததாக பிரான்ஸ் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இக்கருத்தை ஏஞ்சலா மார்க்கெலின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
எந்தவொரு தனியார் தொழில் துறையும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்பது ஜேர்மனியின் கருத்தாகும்.
பிரான்சின் பாரிஸ் மாநகரில் டிசம்பர் 5ம் திகதி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சர்கோசியும், மெர்கெலும் யூரோ புழங்கும் நாடுகளில் அரசு மீள்கட்டமைப்பில் தனியார் துறையினர் தொழில் நடத்த விரும்பினால், சர்வதேச நாணய நிதியத்தின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம் என்று ஒப்புதல் அளித்தனர்.
கிரீஸ் நாட்டில் நிதிப் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் கட்டாயமாக ஜம்பது சதவீத இழப்பிற்கு முன்வர வேண்டும். ஆனால் இனிவரும் காலங்களில் இந்த மாதிரியான இழப்பு ஏற்படாது என்றும் இவர்கள் எடுத்துக்கூறினர்.
குவைத் நாட்டில் விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்: மன்னர் அறிவிப்பு.
குவைத் நாட்டில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும், அமைச்சர்களும் பதவி விலகினர்.
பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் சபாஹ்(Sheikh Nasser Al-Mohammad Al-Ahmad Al-Sabah) மீது ஊழல் முறைப்பாடுகளை தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர்.
இதனையடுத்து குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை ராஜினாமாவை குவைத் மன்னர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள குவைத் மன்னர் விரைவில் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் திகதியை அவர் இன்னும் குறிப்பிடவில்லை. எனினும் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மாரடைப்பு: பதவியிலிருந்து விலக முடிவு.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரிக்கு(Asif Ali Zardari) சிறிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகக்கூடும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜர்தாரி நேற்று(6.12.2011) மாலை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். குழந்தைகளைப் பார்ப்பதற்காகவும், சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர் துபாய் சென்றதாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படலாம் என்று ஜர்தாரி அஞ்சியதாகவும், இதனால் உதவிகேட்டு அவர் அமெரிக்காவுக்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் துபாய் சென்றுள்ளதாகவும், ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஒசாமாவின் குடும்பத்தாரை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் முடிவு.
காலஞ் சென்ற அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பாகிஸ்தான் தனிவிமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன.
அதன் பிறகு அவருடைய 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் பாகிஸ்தானிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணை முடிந்துள்ளாதாகவும், அவர்களை தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில நாட்களில் அவர்கள் சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட விருப்பதாகவும், அந்த திகதியை பாகிஸ்தான் அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளதாகவும் அல் ஹயாத் என்ற அரபு பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனக்கு எந்தவித அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை என்று பாகிஸ்தானுக்கான சவூதி தூதர் அப்துல் அஜீஸ் இப்ராகிம் அல் காதீர் தெரிவித்துள்ளார்.
ஒசாமாவின் மூத்த சகோதரர் பக்ர் பின்லேடன் தனது தம்பி குடும்பத்தாரை திருப்பி அழைத்துக் கொள்ள அனுமதி தருமாறு சவூதி மன்னர் அப்துல்லாவை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மன்னரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஒசாமா குடும்பத்தாரின் சவூதி குடியுரிமை கடந்த 1994ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஐரோப்பிய ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ஆதரவு தருமா?
யூரோவை கடன்நெருக்கடியிலிருந்து மீட்க வடிவமைக்கப்பட்ட புதிய ஜரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் இலண்டனின் பொருளாதாரத் தேவைகளைக் காப்பாற்றத் தவறினால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் டேவின் கமரூன் கூறியுள்ளார்.
பிரிட்டனின் மிகப்பெரிய பொருளாதார மையமும் ஒற்றைச் சந்தையுமான இலண்டனை இந்தப் புதிய ஒப்பந்தம் பாதுகாக்கத் தவறினால் இதனை பிரிட்டன் ஏற்றுக்கொள்ளாது என்று கமரூன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஒப்பந்ததில் கமரூன் கையெழுத்திட மறுப்பதற்கு பழமைவாதக் கட்சியினர் தோற்றுவித்த எதிர்ப்பே முக்கிய காரணம் ஆகும்.
ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடாக பிரிட்டன் விளங்குகிறது. உறுப்பினராக இருந்து நன்மை பெறவேண்டும் என்றால் அதற்கு ஒற்றைச் சந்தை முறையை ஆதரிப்பது தான் ஒரே வழி என்று கமரூன் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்வு.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று(6.12.2011) நடந்த ஷியா முஸ்லிம்கள் ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 54 பேர் பலியாயினர்.
தொடர்ந்து மஜார் இ ஷரீப் என்ற இடத்திலும், கந்தஹாரிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஜேர்மனியின் பான் நகரில் ஆப்கான் எதிர்காலம் குறித்த மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில் காபூலில் உள்ள அபு உல் பசல் என்ற மசூதியில் நேற்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் திரண்டிருந்தனர்.
வழிபாடுகளின் இறுதியாக ஆன்மிகப் பாடல்களைப் பாடியபடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தின் நடுவில் இருந்த மனித வெடிகுண்டு நபர், தன் உடலில் கட்டியிருந்த குண்டை இயக்கினார். இதையடுத்து பெரும் சத்தத்தோடு குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 54 பேர் பலியாயினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு நகரமான மஜார் இ ஷரீப்பில் ஷியா மசூதி அருகில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் யாரும் பலியானார்களா என்பது தெரியவில்லை.
தொடர்ந்து கந்தஹாரில் இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த மூன்று தாக்குதல்களையும் நடத்தியது யார் எனத் தெரியவில்லை.
ஆப்கானில் சன்னி பிரிவைச் சேர்ந்த தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது ஷியா முஸ்லிம்கள் மீது கடும் ஒடுக்குமுறையைக் கையாண்டனர். மொகரம் பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்தனர்.
கடந்த 2001ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி முடிந்தபின் கடந்த 11 ஆண்டுகளில் இன ரீதியிலான தாக்குதல் எதுவும் நிகழவில்லை. எனினும் இத்தாக்குதல் இன மோதல் அடிப்படையில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதேநேரம் தலிபான்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காபூல் மற்றும் மஜார் இ ஷரீப் குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலிபான் தீவிராவதிகளுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி வருகிறது என்று சர்வதேச நாடுகள் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தலிபான் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொஹரம் பண்டிகை நேற்று(6.12.2011) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 63க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஷியா முஸ்லீம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தலிபான் தலைமையிலான பயங்கரவாத அமைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகை சிறப்பாகவும், அதேசமயம் அமைதியாகவும் நடைபெற்றது. இதற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளும், மதச் சடங்குகளை கடைப்பிடித்து வருவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அவர்கள்(பயங்கரவாதிகள்) தீவிரவாத செயலை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முன்வரவேண்டும் என்று அவர் பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடு‌த்துள்ளார்.
ஆப்கான் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பு.
ஆப்கானில் நேற்று(6.12.2011) நடந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி(Lashkar-e-Jhangvi) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அபுல்பசல் மசூதியில் நேற்று மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மசூதி வாயிலில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதே போல மசார் இ ஷெரீப் நகரில் உள்ள மசூதியிலும் நேற்று குண்டு வெடித்தது. இந்த இரண்டு தாக்குதல்களும் தற்கொலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் ஆகும். மூன்றாவதாக காந்தகார் நகரிலும் குண்டு வெடித்தது.
காபூல் மசூதி குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் பலியாயினர். 130 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மசார் இ ஷெரீப் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காந்தகாரில் மோட்டார் வண்டிகளில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீவிரவாத அமைப்பு அல்கய்தா மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். சன்னி பிரிவினரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்கான் குண்டுவெடிப்புக்கு ஜனாதிபதி ஹமீத் கர்சாய், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஐநா பொதுசெயலாளர் பான் கி மூன் உட்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF