Saturday, December 24, 2011

இன்றைய செய்திகள்.

கொழும்பு மெனிங் சந்தையும் பேலியகொடைக்கு இடமாற்றம்!- அரசாங்கம்..
கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மொத்த விற்பனை நிலையம் ஆகியவற்றை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. என அமைச்ரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்தாவது:
தற்போதைய நிலைமையில் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மொத்த விற்பனை நிலையம் ஆகியவை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
தற்போது மெனிங் சந்தை அமைந்துள்ள இடம் உள்ளடக்கப்படும் வகையில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை விஸ்தரிப்பதற்கும் நடை பாதை வியாபாரிகளுக்கு விசேட வர்த்தக கட்டடம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள பழைய மீன் சந்தை காணப்பட்ட மத்திய சந்தை கட்டடம் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
அத்துடன் புளும்பீல்ட் மைதானம் மற்றும் விற்பனைத் திணைக்களம் ஆகியவற்றை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை பேர வாவியை பாதுகாத்தல் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் அருகில் உள்ள வளாகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக பிரதேசம் ஒன்றை அமைத்தல், சுதந்திர சதுக்க வளாகத்தை மறுசீரமைத்தல் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளன.
முன்னுரிமை வேலைத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை இலங்கை இராணுவ பொறியியல் சேவை ரெஜிமன்ட் மற்றும் இலங்கை கடற்படை விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
லஞ்சம் கொடு! அல்லது நீதிமன்றம் செல்! பிரித்தானிய சாரதிப்பத்திரம் வைத்திருந்த பெண்ணுக்கு பொலிஸ்காரர் எச்சரிக்கை.
லஞ்சம் தராவிட்டால், நீதிமன்றம் செல்லவேண்டி ஏற்படும் என்று  பிரித்தானிய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த பொலிஸ்காரர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த கல்லூரிக்கு முன்னால் உள்ள காலிவீதியில் வீதிச்சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது ஜனாதிபதி வசிக்கும் அலரிமாளிகைக்கு 100 மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது.
கடந்த வாரம், ‘எல்’ (பயிற்சி) என்ற பெயர் பொறிக்கப்பட்ட கார் ஒன்றில் பிரித்தானிய சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்ட பெண் ஒருவர் தமது தாயாருக்கு கொழும்பின் வீதிகளை பரீட்சியமாக்குவதற்காக அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது கொள்ளுப்பிட்டிய சோதனை சாவடியில் இருந்த பொலிஸ்காரர் காரை மறித்து விசாரித்துவிட்டு, எல் என்ற பெயருடன் காரை வீதியில் செலுத்தவேண்டுமானால் அதற்கு அனுமதி பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே இது குற்றம் என்றும் இதற்காக தண்டம் செலுத்தவேண்டும் என்றும் பொலிஸ்காரர் தெரிவித்துள்ளார். இதன்போது தமது பிரித்தானிய சாரதி அனுமதிப் பத்திரத்தை காரை செலுத்தி சென்ற பெண் பொலிஸ்காரரிடம் காட்ட, வெளிநாட்டு சாரதிகளுக்கு தண்டம் விதிக்க முடியாது.
எனவே இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப் போவதாக பொலிஸ்காரர் கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றத்துக்கு செல்லாமலிருக்கவேண்டுமானால், லஞ்சம் தருமாறும் அந்த பொலிஸ்காரர் கோரியுள்ளார்.
எனினும் இதனை மறுத்த தாயும் மகளும் பொலிஸ்காரருக்கு எதிராக கொள்ளுப்பிட்டிய பொலிஸில் முறைப்பாட்டை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரையில் 32 விபத்து! 300 பேருக்கு வழக்கு.
தெற்கு அதிவேக நெடுஞசாலை திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 32 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 300 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிவேகம் மற்றும் கவனமின்றி வாகனம் செலுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடபுறமாகவே வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும், மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்லும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே வலப் பக்கத்தில் வாகனத்தை செலுத்த வேண்டுமெனவும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பண்டிகை காலத்தில் மதுபோதையில் மற்றும் அதிவேகத்தில் இந்நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றினூடாக நாளொன்றுக்கு ஆறாயிரம் வாகனங்கள் பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவிற்கு ஒரு கையும் ஒரு காலும் செயற்படாது: மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு.
முல்லேரியா துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஒரு கையும் ஒரு காலும் நிரந்தரமாக முடங்கியிருக்கும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக, குற்றப் புலனாய்வுப் பணியகம் (சி.ஐ.டி.) நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தினால் துமிந்த சில்வாவின் மூளையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் துமிந்த சில்வாவுக்கு மூளை சத்திரசிகிச்சை செய்த டாக்டர் மஹேசி விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டமை தொடர்பான இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, சாட்சியங்களின்படி இப்படுகொலைச் சம்பவத்தில் முதலாவது துப்பாக்கிப் பிரயோகம் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரின் ஆயுதத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகியோரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 3 உத்தியோகஸ்தர்களும் இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சி.ஐ.டி. தெரிவித்தது. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புளியங்குளத்தில் குண்டுவெடிப்பு ஆறு பேர் காயம்.
புளியங்குளம் மணியமேடு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியிலுள்ள சின்னப்பரந்தன் ஆற்றிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட குண்டொன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் அது வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புளியங்குளம் மணியமடு பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சின்னபரந்தன் ஓயாவிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை பரீட்சித்து பார்க்க முற்பட்ட வேளையிலேயே அறுவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் பாலம் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்தோர் எனவும் அவர் தெரிவித்தார்.
வீட்டு வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ எங்காயிருந்தாலும் சந்தேகத்திற்கிடமான அல்லது மர்ம பொருள்கள் காணப்பட்டால் அதனை பொதுமக்கள் பரீட்சித்து பார்க்க முற்படக்கூடாது. அவ்வாறான பொருட்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அவசர பிரிவான 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இவ் வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரணில், சரத் பொன்சேகாவை பார்வையிட வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இன்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பார்வையிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோரும் ரணிலுடன் சென்றிருந்தனர்.
இதேவேளை, ரணில் சிறைச்சாலைக்கு சென்றமை தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் தடை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
தடைகளை மீறி செய்தியாளர்கள், தகவல்களை திரட்டியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பில் தொடர்ந்து கனமழை மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் வழமைக்கு மாறாக கன மழையும் காற்றும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில் எடுத்து மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கிழக்கில் பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டு நான்கு அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளதுடன் உறுகாமம் குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
அதே போன்று வாகனேரி குளம் வடமுனைக்குளம் வெலிக்காகண்டி குளம் என்பவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன குளங்களின் நீர் நிலைகளை நீர்ப்பாசன அதிகாரிகள் அவதானித்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழை காரணமாக. கோறளைப்பற்று கோறளைப்பற்று வடக்கு வாகரை கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதேச பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ள நிலைமையினால், சுங்கான்கேணி, கண்ணகிபுரம், விநாயகபுரம், கல்மடு, கிண்ணையடி, யூனியன்கொலனி, மீராவோடை, நாசிவன்தீவு, வட்டவான் மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை, கட்டுமுறிவு, கதிரவெளி, தட்டுமுனை, மாங்கேணி, பனிச்சங்கேணி, கிரான் பிரதேச செயலர் பிரிவில் , சித்தாண்டி, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மற்றும் சில இடங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் காரணமாக சில குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
வீதிகள் புனரமைப்பு இன்மை, வீதிகளுக்கு அருகில் கான்கள் புனரமைக்கப்படாமை காரணமாகவே இவ்வாறான நிலைமை தோன்றுகின்றது.
அடைமழை தொடருமாயின் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்வு ஏற்படும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பில் தொடர்ந்து கனமழை மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் கடந்த கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர்ந்து கனமழை மொழிகின்றது. மட்டக்களப்பில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக நகரை அண்டிய பகுதிகளான இருதயபுரம் ஜயந்திபுரம் கல்லடி வேலூர் போன்ற பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை பொது மகக்ள் எவரும் இடம்பெயரவில்லை.
இன்று இரவும் தொடர்ந்து மழை பெய்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயரலாம் என அஞ்சப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரத்தை கோரி காலத்தை வீணாக்குவது ஏன்!- தமிழ் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கேள்வி.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட விவகாரத்தில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதனை வழங்குமாறு கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலத்தை வீணடிப்பதேன் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார்.
பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாமைக்கான நியாயமான காரணங்களையும் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் ஏன் அதனைக்கேட்டு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது? எனவும் கேட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்  சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் திருத்தங்களை கொண்டுவந்து விரைவில் நீக்கிவிடுவோம் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கூறியதாவது:
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நோக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அரசாங்கம் நியமித்தது. அதற்கு உறுப்பினர்களாக 19 உறுப்பினர்களின் பெயர்கள் அரசாங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ளன.
ஆனால் தெரிவுக்குழு விடயத்தில் எந்த விடயத்தையும் கூறாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. கூட்டமைப்பு பதில் ஒன்றை வழங்கும் வரையிலும் உறுப்பினர்களின் பெயர்களை முன்மொழியும் வரையிலும் அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கின்றது.
எனினும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. இன்று கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்று கூறுகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பினர் யாருக்கு சேவையாற்றுகின்றனர்?
யுத்தம் முடியும்வரை பிரபாகரனுக்கு சேவை செய்தனர். தற்போது வெளியில் உள்ள சிலருக்காக சேவை செய்கின்றனர். அதாவது புலம்பெயர் மக்களுடன் தொடர்புபட்ட வகையில் இவ்வாறு செயற்படுகின்றனர்.
அண்மையில் நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. க்கள் இருவரை சந்தித்து பேச்சு நடத்தினேன். அப்போது கூட அவர்கள் உறுதியான பதில் ஒன்றை எமக்கு வழங்கவில்லை.
கேள்வி: குறித்த எம்.பி. க்களுடன் என்ன விடயங்களை பேசினீர்கள்?
பதில்:  அவர்கள் அரசியல் தீர்வில் பொலிஸ் அதிகாரம் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட விவகாரத்தில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதனை வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது? ஒரு விடயத்தை வழங்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்த பின்னர் அது தொடர்பில் ஏன் தொடர்ந்தும் வலியுறுத்தவேண்டும்? அதனைப் பற்றி தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை.
கேள்வி: அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதே?
பதில்:  அதில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துவிட்டது. மேலும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாமைக்கான நியாயமான காரணங்களையும் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதனைக் கேட்டு காலத்தை வீணடிப்பதேன். இவ்வாறு காலத்தை வீணடிப்பதில் பயனில்லை. பொலிஸ் அதிகாரங்களை தர முடியாது என்று நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.
உதாரணத்துக்கு இந்திய முறைமையை பாருங்கள். அங்கு சோனியா காந்தி ஒரு மாநிலத்துக்கு செல்வதாயின் அனுமதி பெற வேண்டும். முன்னாள் முதல்வரை அடித்து இழுத்து செல்லும் நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறான நிலைமைகள் இங்கு ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
இவ்வாறு யதார்த்தமான நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனின் அவர்களின் நோக்கம் நிகழ்ச்சிநிரல் மனநிலை என்ன என்ற கேள்வி எழுகின்றது.
யுத்தத்தின் பின்னர் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. ஆயுதப் போராட்டம் முடிந்தது. மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. பொருளாதார அபிவிருத்திகள் ஏற்பட்டன. இவ்வாறு பல வழிகளில் தமிழ் மக்கள் நன்மையடைந்தனர். ஆனால் இவற்றை புறந்தள்ளி விட்டு யுத்தத்தை விட மிகவும் பாரதூரமான நிலைமையில் தமிழ் மக்கள் இப்போது வாழ்வதாக ஏன் காட்டவேண்டும்?
கேள்வி: அப்படியாயின் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து 13 ஆம் திருத்தத்திலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அகற்றுவீர்களா?
பதில்: ஆம். அவ்வாறு செய்வோம்.
எல்லைப்பகுதியில் கோவில் சர்ச்சை: சமரசம் செய்து கொள்ள தாய்லாந்து - கம்போடியா முடிவு.
எல்லைப்பகுதியில் சர்ச்சைக்குள்ளான இந்து ‌கோயிலை உரிமை கொண்டாடும் விவகாரம் குறித்து தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளும் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளன.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் போனோபென் நகரில் பரேக்விஹீர் என்ற பகுதியில் மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது.
இக்கோயிலை கடந்த 2008ம் ஆண்டு உலக கலாச்சார சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்தது. அன்றிலிருந்து பிரச்னை உருவானது.
தாய்லாந்தும்,கம்போடியாவும் சிவன் கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடின. இதனால் இருநாடுகளிடையே போர் ஏற்பட்டது, கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த சண்டையினால் 10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐ.சி.சி) வரை சென்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் இரு தரப்பினரும் தங்களது இராணுவத்தினை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகள் சமரசம் செய்து கொள்ள முன்வந்துள்ளன. அதன்படி இரு நாட்டு இராணுவ அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாய்லாந்து இராணுவ அமைச்சர் யூதாஸாக் சசிபரேபா, கம்போடியா இராணுவ அமைச்சர் டீபன்னாக் ஆகியோர் போனோபென் நகரில் சந்தித்து பேசினர்.
அப்போது இந்தோனோஷியா மத்தியஸ்தர் முன்னிலையில் சமரச ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் இரு தரப்பிலும் இராணுவத்தினை விலக்கி கொள்வது, இருநாட்டு இராணுவ உயரதிகாரிகளை ‌கொண்ட செயல்குழுவை அமைப்பது எனவும் கம்போடியாவிற்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கலாச்சார ‌கோவில்கள் எதனையும் தாய்லாந்து உரிமை கொண்டாடாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முன்னர் இருந்த நிலைமை தொடரும் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
சீனாவில் அனல் மின் சக்தி ஆலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.
சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் அமைந்திருக்கும் அனல் மின் சக்தி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் அங்குள்ள அரசு கட்டிடங்களையும் தாக்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு மட்டுமல்லாமல் அவர்களை தாக்கவும் செய்தனர்.
இதனால் நாட்டில் வன்முறை வெடிக்கும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.
மனிதர்களிடையே பறவை காய்ச்சல் வைரசை பரப்ப தீவிரவாதிகள் சதி.
பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு இடையே பரவுவது கிடையாது. எனினும் கடந்த 1997ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அந்த நோய் பரவியதில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில் பறவை காய்ச்சல் வைரஸ்(H5N1) மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எனவே பறவை காய்ச்சல் தொடர்பான புதிய ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம். அவ்வப்போது வெளியாகும் அவற்றை பிரதி எடுத்து புதிய ஆய்வுகளை தீவிரவாதிகள் மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு முக்கிய அறிவியல் ஆய்வு பத்திரிகைகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே ஹாங்காங்கில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஹாங்காக் நகரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இறந்த கோழியின் உடலில் H5N1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே கோழிப்பண்ணையில் உள்ள 17 ஆயிரம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவிட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் இருந்து உயிருடன் கோழிகளை இறக்குமதி செய்வதை 21 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஹாங்காங் அறிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்தின் ரகசியங்களை சீனாவுக்கு விற்ற நபர் கைது.
அமெரிக்‌க நிறுவனத்தில் உளவு வேலை பார்த்ததாக சீன நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த விவசாய நிறுவனம் ஒன்றில் சீனாவை சேர்ந்த ஹூவாங்ஹெச்யூ(46) என்பவர் பணிபரிந்து வந்தார்.இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கால கட்டத்தில் அந்நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளித்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் ஜேர்மன் நாட்டிற்கும் ரகசியங்களை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.இது குறித்து விசாரணை நடத்திய இண்டியானா பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லியம் லாரன்ஸ் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹூவாங் ஏற்கனவே இது போன்ற வழக்கு ஒன்றிற்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே ஆண்‌டில் சீன பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவின் போர்டு நிறுவனத்தின் ரகசியங்களை சீனாவை சேர்ந்த கார் தயாரிப்பாளர் ஒருவருக்கு கடத்தியதாகவும், 2010ம் ஆண்டில் அமெரிக்‌காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரகசியங்களை கடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம் மீதான தாக்குதல் நேட்டோ படையின் தற்காப்பு நடவடிக்கையே: நேட்டோ அறிக்கை.
பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடி மீது நேட்டோ படைகள் நடத்திய விமானத் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கையே என்று நேட்டோ தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடியை நோக்கி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ விமானப் படை கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி தாக்குதல் நடத்தியது.இதில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேட்டோ சார்பில் நவம்பர் மாத சம்பவம் குறித்து நடந்த விசாரணையின் முடிவில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சோதனைச் சாவடி மீது நடந்த தாக்குதல் நேட்டோ படையினரின் தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம். உடல் உறுப்பு இழந்தவர்களுக்கும் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நியூசிலாந்தில் நிலநடுக்கம்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று(23.12.2011) 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.கிரிஸ்ட்சர்ச் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாகக் குலுங்கின. இருப்பினும் சேத விபரங்கள் குறித்து உடனடித் தகவல் ஏதுமில்லை.சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், மின்சாரம், தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 181 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும்: அமெரிக்கா.
பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ரசா கிலானி பேசுகையில், பாகிஸ்தானில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவியில் இருந்து நீக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
இந்நிலையில் வாஷிங்டனில் இதுகுறித்து பேட்டியளித்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளபடி பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றார்.மேலும் அவர் நேட்டோ படையினருக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படும் பாதையை பாகிஸ்தான் விரைவில் திறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டலாம் என்ற அச்சம்: சட்டத்தரனிகளுடன் முஷாரப் ஆலோசனை.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.பாகிஸ்தானுக்குத் திரும்பினால் தான் கைதுசெய்யப்படக் கூடும் என்பதால், அதைத் தவிர்க்க சட்டத்தரனிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
துபாயில் உள்ள சட்டத்தரனிகளுடன் தொடர்பு கொண்டு, தான் பாகிஸ்தான் திரும்பும் போது கைது செய்யப்படுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இம்மாதம் 26ம் திகதி விவாதம் நடத்த உள்ளார்.கடந்த 2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு முஷாரப் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் ராவல்பிண்டியில் உள்ள விசாரணை நீதிமன்றம், முஷாரப் மீது பிணையில் வெளிவர முடியாத படி கைது வாரண்டைப் பிறப்பித்துள்ளது.நீண்ட காலமாக அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், அவரது சொத்துகளை முடக்கும்படியும், வங்கிக் கணக்கை முடக்கும்படியும் உத்தரவிட்டது.
முஷாரப் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் தொடர்பாக பலமுறை அவரது சட்டத்தரனிகள் குழு நீதிமன்றத்தில் வாதாடியுள்ளனர். பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது ஒரு வழிமுறையாகும்.கைது நடவடிக்கையைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று முஷாரபின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு கிராமி விருது.
பிரபல ஆப்பிள் கணணி நிறுவனர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த அக்டோபர் மாதம் 5ம் திகதி புற்றுநோயால் மரணம் அடைந்தார்.இசை உலகில் சாதனை படைத்து மரணம் அடைந்தவர்களை கௌரவிக்க வழங்கப்படும் விருதான “போஸ்துமஸ் கிராமி விருது” ஸ்டீவ் ஜாப்சுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ரெக்கார்டிங் அகாடமி வெளியிட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் தனது உயரிய கணணி கண்டுபிடிப்புகளான ஐபாட், ஐடியூன் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அதற்காக அவருக்கு இந்த கிராமி விருது வழங்கப்படுகிறது.இதற்கான சிறப்பு விழா எதிர்வரும் பிப்ரவரி மாதம் 11ந் திகதி நடைபெறவுள்ளது. இவர் தவிர கிலின் காம்பெல், ஆல்மன் பிரதர்ஸ் பாண்ட், ஜார்ஜ் ஜோன்ஸ், டயனா ஆகியோருக்கும் வாழ்நான் சாதனையாளர் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்பு.
ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக மரியானோ ரஜோய் நேற்று(22.12.2011) பதவியேற்றார். அந்நாட்டு அரசர் ஜூவான் கார்லோஸ் முன்னிலையில் பிரதமர் உட்பட 12 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ரஜோய் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கடந்த நவம்பர் 20ம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.ஸ்பெயினில் நிலவும் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி காரணமாகவே இவரது கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது.ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிக அளவு வேலையில்லாத் திண்டாட்டம் ஸ்பெயினில் நிலவுகிறது. இங்கு 21.5 சதவிகித வேலையில்லாத் திண்டாட்டமும், கடுமையான நிதிப் பற்றாக்குறையும் நிலவுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய கடுமையான பின்னடைவும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைக்கு முக்கியக் காரணமாகும்.நாட்டின் பொருளாதார அமைச்சராக லூயிஸ் டி குயின்டோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோய் மானுவெல் கார்சியா மார்கெலோ, நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை அமைச்சராக மாட்ரிட் மேயர் ஆல்பர்டோ ரூயிஸ் கலாடோனும், பாதுகாப்புத் துறை அமைச்சராக பெட்ரோ மோரென்ஸீம் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஸீபட்ரோ, இந்தத் தேர்தலில் கடும் தோல்வியைச் சந்தித்தார். நாட்டில் நெருக்கடி ஏற்பட ஸீபட்ரோ தான் காரணம் எனக் கருதிய மக்கள் அவரது கட்சியைத் தோற்கடித்தனர்.
நாட்டின் நிதி நிலையைச் சமாளிக்க அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசு சிக்கனத்தைக் கடைப்பிடித்த அதேசமயம், பல்வேறு சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது.பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாட்டின் கடன் வாங்கும் திறன் சரிந்துள்ளதால் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுக்கல் உட்பட நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி போன்ற சூழல் ஸ்பெயினிலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லாக்கர்பை குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளியின் கடைசிப் பேட்டி.
லாக்கர்பை(Lockerbie) விமானக் குண்டுவெடிப்பில் 270 பேர் உயிரிழக்கக் காரணமாயிருந்த அப்டெல்பேஸெட் அல் மெக்ராஹி கடைசியாக பேட்டியொன்றை அளித்துள்ளார்.கடந்த 1988 ஆம் ஆண்டில் விமானத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உட்பட விமான ஓட்டுநர், உதவியாளர், தொழில்நுட்பப் பொறியாளர் ஆகியோர் இறந்தனர்.
வெடித்த இந்த விமானம் ஊருக்குள் விழுந்ததால் அங்கிருந்த சிலரும் உயிரிழந்தனர். இந்தக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒருவர் அப்டெல்பேஸெட் அல் மெக்ராஹி ஆவார்.இவரை கடந்த 2009ஆம் ஆண்டில் கருணை அடிப்படையில் விடுதலை செய்து சொந்த ஊரான லிபியாவுக்கு அனுப்பினர். இவருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜார்ஜ் தாம்சன் லிபியாவுக்குச் சென்று மெக்ராஹியிடம் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் மெக்ராஹி தனக்கும் அந்த விமானத்தில் குண்டு வெடித்ததற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.இந்த வாரத்தின் தொடக்கத்தில் FBI இயக்குநரான ராபர்ட் மியூலெரும் அமெரிக்காவின் மத்திய அரசு வழக்கறிஞர் எரிக் ஹோல்டெரும் லிபியாவிற்கு சென்று இந்தக் குண்டுவெடிப்பு குறித்து மேலும் ஆராய வேண்டும் என்றனர்.
அல்கொய்தா பற்றி தகவல் கொடுத்தால் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபரான யாசின் அல் சூரியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50 கோடி(இந்திய ரூபாய்) பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.சிரியாவை சேர்ந்தவர் யாசின் அல் சூரி. இவருக்கு எசடின் அப்துல் அசீஷ் கலில் என்ற பெயரும் உண்டு. அல்கொய்தா தீவிரவாதியான இவர் ஈரான் நாட்டின் உதவியுடன் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி மற்றும் அதற்கு நபர்களை தெரிவு செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.அவர்களின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறார்.எனவே இவரை கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
அதையடுத்து இவர் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி ராபர்ட் ஹார்டஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 1984-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா சன்மானம் வழங்கி வருகிறது. இதுவரை 70 பேருக்கு ரூ.500 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹார்டஸ் தெரிவித்தார்.
ஈகோலி நோய் தொடர்பாக தவறான குற்றச்சாட்டு: ஜேர்மனி மீது ஸ்பெயின் நிறுவனம் வழக்கு.
ஜேர்மனி நாட்டின் சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மீது ஸ்பெயின் நாட்டு புரூனெட் நிறுவனம் 2 மில்லியன் யூரோ இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள இந்த நிறுவனம் மரக்கறிகளை இயற்கை உரமிட்டு வளர்த்து விற்பனை செய்கிறது. அவ்வாறு விளைவித்த வெள்ளரிக்காய் ஈ-கோலி என்ற நோயைப் பரப்பியதாகக் ஜேர்மனியின் அமைப்பு குற்றம் சுமத்தியது.இதனால் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளும் வாங்க மறுத்து விட்டன. இவ்வாறு தவறான குற்றச்சாட்டை சுமத்திய ஜேர்மனியின் சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மீது புரூனெட் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கருத்து தெரிவிக்கையில், வெள்ளரிக்காய் குறித்த தனது அறிவிப்பு நியாயமானது, மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனத்தின் பொருளாதார லாபத்தை விட மக்களின் சுகாதாரமே மிகவும் முக்கியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த ஈகோலி நோயால் ஜேர்மனியில் ஐம்பது பேரும், ஸ்வீடனில் ஒருவரும் மரணமடைந்தனர். ஈகோலி நோய் பற்றிய அச்சம் பரவியதும் மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.
இதனால் சந்தையிலிருந்த தக்காளி, வெள்ளரிக்காய், லெட்யூஸ், கீரை போன்றவற்றை மக்கள் வாங்க மறுத்து விட்டனர். ஐரோப்பிய ஒன்றியம் தனது 27 நாடுகளைச் சேர்ந்த காய், கனி விவசாயிகளுக்கு 227 மில்லியன் யூரோவை இழப்பீடாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நாட்டுக்கு எதிரான மசோதாவின் எதிரொலி: பிரான்ஸ் நாட்டு தூதர் தாய்நாடு திரும்பினார்.
முதலாம் உலகப்போரில் ஒட்டோமன் பேரரசு நடத்திய போரை இனப்படுகொலை என்று கூறி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேறப் போகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துருக்கி தனது பிரான்ஸ் நாட்டுத் தூதுவரிடம் தாய்நாடு திரும்புமாறு கூறிவிட்டது.அன்று படுகொலை செய்யப்பட்ட ஆர்மீனியர்களில் ஏராளமான துருக்கியர்களும் உண்டு என்பதால் துருக்கி இந்தப் போரை இனப்படுகொலை என்று பிரான்ஸ் தெரிவிப்பதை ஏற்க மறுக்கின்றது.
ஒட்டோமன் பேரரசு முதலாம் உலகப்போரின் போது ஆர்மீனியர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது. இந்த பேரரசு மறைந்தாலும் அது ஆட்சி செய்த துருக்கியும் அதன் அரசாங்கமும் ஆர்மீனியப் படுகொலையை இனப்படுகொலை என்று உலக நாடுகள் அழைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது.இந்நிலையில் இந்த மசோதாவை பிரான்ஸ் நாட்டின் அனைத்துக் கட்சிகளிலும் இருந்த 50 சட்ட அறிஞர்கள் ஆதரித்தனர், 6 பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அடுத்து செனட்டிலும் நாடாளுமன்றக் குழுகு்களிலும் இந்தச் சட்ட மசோதா விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். இந்தச் சட்டப்படி பிரான்சில் வாழ்பவர், ஆர்மீனியப் படுகொலையை இனப்படுகொலை என்று அழைக்க மறுத்தால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 45,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும்.துருக்கியருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் பொருளாதார நல்லுறவுகள் வளர்ந்துவரும் நிலையில் துருக்கியர்(ஒட்டோமன் பேரரசு) உலக வரலாற்றில் முதன் முதலில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் என்ற கருத்தைத் திரும்பவும் எடுத்துக் கூறுவதும் துருக்கியருக்கு கோபத்தை வரவழைக்கின்றது.
ஆனால் ஆர்மீனியா நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர், தங்கள் இனம் ஒட்டோமன் பேரரசின் தாக்குதலுக்கு அஞ்சி உலகம் முழுக்க சிதறிப் போனதை நினைத்து வருந்திய நிலையில் இப்போது பிரான்ஸ் துருக்கி மீது தொடுத்திருக்கும் அழுத்தமான குற்றச்சாட்டைப் பாராட்டி இருக்கிறார்.உலகளாவிய மனித மாண்பை மதிக்க பிரான்ஸ் நாடு எப்போதுமே தவறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் தற்கொலைப் படையினர் இரண்டு இடங்களில் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டமாஸ்கஸ் மாவட்டத்தில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த உளவுத்துறை கட்டிடத்தில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிரியா தலைவர் பஷார் ஆசாத் வெளியேற்றத்துக்குப் பிறகு போராட்டக்காரர்களின் பிடியில் உள்ள சிரியாவின் வாக்குறுதியை கண்காணிக்கும் அரபுக்குழு, அங்கே வருகை தந்த இரண்டாவது நாளில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை: கயானி.
பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப் போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று அந்நாட்டின் இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி கூறியுள்ளார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியை விட்டு நீக்குவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று(22.12.2011) கூறியிருந்தார்.
இதுகுறித்து கயானி கூறுகையில், இப்படி சொல்வது உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இராணுவம் தொடர்ந்தும் ஜனநாயகத்துக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும், இராணுவ புரட்சி குறித்த செய்திகள் வெறும் தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கான திட்டம் எதுவும் இராணுவத்திடம் கிடையாது என்றும், அரசாங்கத்துக்குள்ளேயே அதனை அதிகாரம் செய்யும் இன்னுமொரு அரசாக இராணுவம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானிய இராணுவத்தை பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தானிய அரசாங்கம் நாடுவதாக கூறப்படும் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான இந்தச் சர்ச்சை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF