Sunday, December 25, 2011

இன்றைய செய்திகள்.

கொஸ்கம வைத்தியசாலையில் உயிரிழந்த நபர், அவிசாவளையில் உயிர்த்தெழுந்தார்?
கொஸ்கம, தலாவ வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவிசாவளையில் உயிர்த்தெழுந்ததாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதயத்துடிப்பை கணிக்கும் ஈ.சீ.ஜீ, இயந்திரத்தின் மூலம் பரிசோதனை செய்து குறித்த பொதுமகன், உயிரிழந்து விட்டதாக கொஸ்கம மருத்துவமனை வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மரணம் தொடர்பில் சந்தேகம் எழுப்பிய குறித்த நபரின் உறவினர்கள் உடனடியாக அவிசாவளை வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் சென்றனர்.அவிசாவளை வைத்தியசாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் சில மணித்தியாலங்களில் அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதானவரே இவ்வாறு மரணமாகி உயிர் பிழைத்துள்ளார்.இந்தநிலையில் நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புக்களினால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டதாக அவிசாவளை வைத்தியசாலையின் பணிப்பாளர் சுமேத பனாகொட தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க தலைவர் தெரிவு வாக்கெடுப்பில் முறைகேடுகள் இடம்பெற்றன- தயாசிறி.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடைபெற்றதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.செயற்குழு உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுக்கள் தொடர்பிலும் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அடுத்த படியாக லட்சத்திற்கும் அதிகமான விருப்ப வாக்குகளைப் பெற்று குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தெரிவானதை தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் செயற்குழுவினால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தாம் தோல்வியடையக் கூடிய சாத்தியமில்லை.எனவே இந்த வாக்கெடுப்பு சுயாதீனமானதும், நேர்மையானதுமான வகையில் நடைபெறவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்கெடுப்பி;ல் முறைகேடுகள் இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டால் பதவியை இராஜினாமா செய்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தலில் போட்டியி;ட்ட ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே ஆகியோர் முறைகேடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கவில்லை.
தயாசிறி ஜயசேகர மட்டுமே முறைகேடு பற்றி குற்றம் சுமத்துகின்றார்.எனவே ஆதாரங்களுடன் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார், அவ்வாறு ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாவிட்டால் தயாசிறி ஜயசேகர பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் அபிவிருத்தியைப் போன்றே கட்சியிலும் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதன்போது கிளைக் காரியாலயங்கள், மகளிர், இளைஞர் மற்றும் விவசாய அணிகள் தொடர்புpல் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற விடுமுறை காலத்தில் முடிந்தளவு தமது பிரதேசத்தில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
சில சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றன- பசில்.
சில சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மக்களை பிழையாக வழிநடத்த முயற்சி செய்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் சில சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் என்னதான் முயற்சி செய்தாலும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்க முடியாது.மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மற்றும் படைவீரர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சில சக்திகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.
இவ்வாறான அழுத்தங்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனுக்கு வேலைப்பழு! நல்லிணக்க அறிக்கையை ஆராய நேரம் ஏது?!- பாலித கோஹன்ன! பரிசீலனையில் உள்ளது என்கிறார் மார்டின் நெசர்கி.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதை விட முக்கியமான வேலைப்பழு ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கின்றன. முதலில் அந்தக் கடமைகளை முடித்துவிட்டு அவர்கள் இதனை ஆராயட்டும். இவ்வாறு  ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன்ன நேற்று சூடாகப் பதிலளித்தார்நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. சபை ஆராய்கிறதா? முழுமையான ஆராய்வுக்குப் பின்னர் அது பற்றி இலங்கை அரசுடன் பேசுவதற்கு எதுவும் அவர்கள் தரப்பிலிருந்து சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்
அவர் மேலும் கூறியதாவது:
வடகொரியாவில் ஒரு தலைவர் இறந்திருக்கிறார். அந்தத் தீபகற்பம் குறித்து பார்க்க வேண்டும்.ஈரான் அணுவாயுதப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. அதுபற்றி ஆராயப்பட வேண்டும்.ஐரோப்பாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.இன்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாலுள்ள பிரச்சினைகள் இவைதான்.இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு பற்றி அவர்கள் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. ஆறுதலாக ஆராய்ந்து கூறுவார்கள். நீங்களும் அவசரப்படாதீர்கள். என்றார் பாலித கோஹன்ன
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பான் கீ மூனின் பரிசீலனையில் உள்ளது
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்காமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னர் சிட்டி பிரஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இதன்போது கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அறிக்கையை தாம் கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்தக்கருத்துக் கூறப்பட்டு ஒரு வாரகாலமாகியும், பான் கீ மூனிடம் இருந்து எவ்வித கருத்துக்களும் வெளியாகவில்லை.இதற்கிடையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிழையான விமர்சனங்களை வெளியிட்டு வரும் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு எதிராக. தாம் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில் நேந்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சந்திப்பின்போது, இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளர் இது மௌனம் குறித்து பேச்சாளர் மார்டின் நெசர்கியிடம் கேள்வி எழுப்பினார்.இதன்போது பதிலளித்த மார்டின் நெசர்கி, குறித்த  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பான் கீ மூனின் அதிகாரிகள் கவனமாக பரிசீலிப்பதாகவும் கருத்து கிடைத்ததும் அது அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டையில் பொலிஸார் - ஆயுதக்குழுவினர் மோதலில் இருவர் பலி.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொலிஸாருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் ஆயுதக் குழுவினரைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 5.10 அளவில் பொலிஸாருக்கும், ஆயுதக் குழுவினருக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் குழுவொன்று சஞ்சரிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் குறித்த பிரதேசத்தை சுற்றி வளைத்ததாகத் தெரிவித்துள்ளார்.இதன் போது பொலிஸார் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பொலிஸார் பதில் தாக்குதல் நடத்திய போது ஆயுதக் குழுவினரைச் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ரீ56 ரக ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரஜையின் வயிற்றிலிருந்து ஒருகோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக போதைப் பொருளை கடத்த முயன்ற பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாகிஸ்தான் பிரஜை ஹெரோயின் போதைப் பொருளை நூதமான முறையில் சிறிய பொதிகளாக உருவாக்கி அவற்றை விழுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பாகிஸ்தான் பிரஜை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் போதைப் பொருள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 861 கிராம் எடையுடைய சுமார் 120 பொதிகளை குறித்த நபர் விழுங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வயிற்றுக்குள் பாரியளவு தொகை போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
தலிபான்களுடன் அமெரிக்கா சமரச ஒப்பந்தம்: கர்சாய் கடும் எதிர்ப்பு.
தலிபான் தீவிரவாதிகளுடன் தற்காலிக சமரச ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆப்கானில் தாக்குதல் நடத்தி வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதத்தை கைவிட்டு அமைதி வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதற்காக கவுதமாலா சிறையில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ள 5 ஆப்கானிஸ்தானியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறியது.இதுதொடர்பாக தலிபான்களுடன் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி கர்சாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தொலைந்து போன சிறுமி மீண்டும் குடும்பத்துடன் இணைந்த அதிசயம்.
இந்தோனேசியாவில் கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது காணாமல் போன சிறுமி ஏழாண்டுகள் கழித்து மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் தெற்காசியாவில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாயினர். இந்தோனேசியாவின் யுஜோங் பரோ என்ற கிராமத்தைச் சேர்ந்த யூசுப் மற்றும் யுஸ்னியார் தம்பதிகளின் மூன்று பெண் குழந்தைகளும் இந்த சுனாமியில் காணாமல் போயினர்.
இந்நிலையில் இந்தோனேசியாவின் அட்சய் மாகாணத்தின் மெலாபோ நகரில் அத்தம்பதியரின் ஒரு மகளான வதி என்பவள் ஒரு உணவு விடுதியில் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். அவளது தாத்தா அவளை அடையாளம் கண்டு கொண்டு பெற்றோருக்குத் தகவல் சொல்லி அனுப்பினார்.அதன் பின்பு பெற்றோர் வந்து அவளைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். விசாரணையில் வதி பிச்சையெடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
துருக்கிக்கு எதிரான சட்டம்: பிரான்சிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.
ஆர்மினிய மக்களுக்கு எதிரான சட்டத்தை பிரான்ஸ் நிறைவேற்ற உள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டிற்கான துருக்கி தூதர் தஷின் பர்கோவ்குலு சொந்த நாட்டிற்கு திரும்பினார்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆர்மினிய மக்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனையாக ஒரு ஆண்டு சிறை மற்றும் 45 ஆயிரம் யூ‌ரோவும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தன்னுடைய தூதர‌ை திரும்ப அழைத்து கொண்டது.இதுகுறித்து கருத்து தெரிவித்த துருக்கி நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சகம் பிரான்ஸ் நாடு வரலாற்று தவறை செய்கிறது என குற்றம் சுமத்தியது.
கடந்த 2006ம் ஆண்டு இது போன்ற சட்டம் ஒன்றை பிரான்ஸ் நாட்டின் சோசலிஸக்கட்சி கொண்டு வந்தது. கீழ்சப‌ை உறுப்பினர்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த போதிலும் செனட் சபை இந்த சட்டத்தை ஒதுக்கி தள்ளியது.எதிர்வரும் 2012ல் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள நிகோலஸ் சர்கோஸி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதிப் பற்றாக்குறை: பூங்காவை வாடகைக்கு விட இங்கிலாந்து அரசி முடிவு.
அரச குடும்ப பராமரிப்புகளுக்கான செலவுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்டும் நோக்கில், கென்ஸிங்டன் அரண்மனையின் பூங்காவை ரஷ்யாவின் ஒலிம்பிக் அமைப்புக்கு வாடகைக்கு விடவுள்ளார் இங்கிலாந்து அரசி.இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியில் 14 சதவிகிதத்தை 2013ம் ஆண்டிலிருந்து குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
குறையும் நிதி ஆதாரத்தை இங்கிலாந்து அரச குடும்பம் தனது ஆதாரவளங்களிலிருந்து தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் கென்ஸிங்டன் அரண்மனையின் பூங்காவை ரஷியாவின் ஒலிம்பிக் அமைப்புக்கு வாடகைக்கு விடவுள்ளார் அரசி இரண்டாம் எலிசபெத்.எதிர்வரும் 2012ம் ஆண்டு ஜூலை மாதம் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி இந்தப் பூங்காவிலேயே நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.20 கோடிக்கும்(இந்திய ரூபாய்) மேல் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா ரஷ்ய கலாசார திருவிழாவைக் கொண்டாடும் வகையிலும் மாற்றியமைக்கப்படும்.மேடைகள், பூங்காக்கள், தங்குமிடங்கள் ஆகியவை இங்கு அமைக்கப்படும். முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்வதற்கான நுழைவாயிலும் அமைக்கப்படும்.
அமெரிக்காவில் வருமான வரி குறைப்பு: ஒபாமாவின் முடிவுக்கு குடியரசு கட்சி ஒப்புதல்.
அமெரிக்காவில் இரண்டு மாதத்திற்கு வருமான வரி குறைப்பு செய்யும் ஜனாதிபதி ஒபாமாவின் முடிவுக்கு குடியரசு கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் இருந்த போதிலும், ஜனாதிபதியின் முடிவுக்கு அக்கட்சி ஒப்புதல் அளித்துள்ளது அரசியல் நோக்கர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இத்தகைய முடிவு ஜனாதிபதியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்று கருதப்படுகிறது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் வெற்றி பெற்றதை ஜனாதிபதி ஒபாமா வரவேற்றுள்ளார். இந்த வரி குறைப்பு நடவடிக்கை மூலம் பெரும்பாலான குடும்பங்கள் பயனடையும், பொருளாதாரம் வளர்ச்சியடையும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று ஜனாதிபதி ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகை அளிக்க சம்மதித்ததாக செனட் உறுப்பினர் ஹாரி ரீட் தெரிவித்தார். ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் திகதி புதிதாக வரி விதிக்கப்படுவதை எந்த ஒரு அமெரிக்கரும் விரும்பமாட்டார்.எனவேதான் இரண்டு மாதங்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் முடிவை ஏற்றுக் கொண்டதாக மற்றொரு உறுப்பினர் போஹ்னர் கூறினார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பதென முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஜப்பான் மன்னரின் 78வது பிறந்த தினக் கொண்டாட்டம்.
ஜப்பான் மன்னர் அகிஹிடோ தனது 78வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு கூறிய வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, 2011ம் ஆண்டு நமக்கு வேதனையளிக்கக் கூடியதாக இருந்தது.
பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் நாம் மிகுந்த துன்பத்துக்கு ஆளானோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் ஜப்பான் மக்கள் உதவி புரிந்ததன் மூலம் நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம்.ஜப்பான் மக்கள் என்றும் சோர்வடைய மாட்டார்கள் என்று தெரியும் என்றார்.
தேர்தலில் போட்டியிட முறையாக பதிவு செய்தது ஆங் சான் சூச்சி கட்சி.
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூச்சியின் கட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து, தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்தது.இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர்களை சூச்சி சந்தித்துப் பேசினார். சூச்சி நாடாளுமன்றம் வருவது இதுவே முதல் முறையாகும். இரு அவைகளின் தலைவர்களும் சூச்சியின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி போட்டியிடவில்லை. தேர்தலில் கட்சித் தலைவி சூச்சி போட்டியிட முடியாதது உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டதால் தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது.இதனால் அந்த கட்சியை மியான்மர் அரசு தகுதியிழக்கச் செய்தது. இந்நிலையில் இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாக ஜனநாயக தேசிய லீக் கடந்த மாதம் முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து கட்சியின் முக்கியத் தலைவர் டின் ஓ உள்ளிட்ட உறுப்பினர்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு சென்று தனது கட்சியை முறைப்படி பதிவு செய்தார் சூச்சி.நடைபெற உள்ள அனைத்து இடைத் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. எனினும் இடைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மியான்மரை தற்போது ஆண்டுவரும் இராணுவத்தின் ஆதரவு பெற்ற அரசு, சூச்சி கட்சி மீண்டும் அரசியல் தளத்தில் செயல்பட அனுமதி அளித்துள்ளது.அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சூச்சியை சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வான்கூவர் தீவுகளில் புயல், காற்று வீசும் அபாயம்.
கனடாவின் வான்கூவர் தீவுகளின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பசிபிக் ரிம் பகுதியில் புயல், காற்று வீசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் 29ம் திகதி வரையிலான நாட்களில் கடலில் அதிகக் காற்றும், உயரமான அலைகளும் இருக்கும் என்பதால் உக்லுலெட் மற்றும் டொஃபினோ பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நாட்களில் மணிக்கு 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும், அலைகள் ஆறு மீற்றர் உயரத்திற்கு எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் அதீத உயரமான அலைகள் இந்தக் காலக்கட்டத்தில் தான் தோன்றுகின்றன. படுவேகத்தில் வீசும் புயல் கடற்கரைக்கு சேதம் விளைவிக்கும், கரையில் நிறுத்தப்பட்ட சுற்றுலாப் படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை தாக்குவதை உடனே நிறுத்துங்கள்: சிரியாவுக்கு ஜேர்மனி எச்சரிப்பு.
ஜேர்மனி சிரியாவின் தூதரை அழைத்து இராணுவ எதிர்ப்பாளரை தாக்கும் வன்முறைச் செயல்களை உடனே நிறுத்திவிடுமாறு எச்சரித்துள்ளது.இத்தகவலை வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களைக் கவனிக்கும் போரிஸ் ரூக் கூறுகையில், அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி சிரியா செயல்பட வேண்டும்.
இராணுவத்தின் கொடூரத் தாக்குதல்களை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்றார்.சிரிய ஜனாதிபதி சர்வதேச விதிமுறைகளோடு ஒத்துப் போக வேண்டும் என்பதை ஜேர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வரும் வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஒரு குழுவினரை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த இரண்டு நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கில் அப்பாவிகளைக் கொன்று குவித்ததற்கு எழுந்த எதிர்ப்பை அடுத்தே இத்தகைய நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ராணியின் கணவருக்கு மாரடைப்பு.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்(90). இவர்கள் பக்கிங்காம் அரண்மனையில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் பிலிப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை கேம்பிரிட்ஜ்சரில் உள்ள பாப்வொர்த் வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு சிகிச்சை அளித்து வைத்தியர்கள் குணப்படுத்தினர்.
தற்போது அவர் வைத்தியசாலையில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
உலக அளவில் ஆயுத விற்பனை: ரஷ்யா இரண்டாம் இடம்.
உலக அளவில் ஆயுத விற்பனையில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளாதாக உலக ஆயுத வர்த்தக மையத்தின் தலைவர் கோரோட்சென்‌‌கோ தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு(2011) ரஷ்யா ஆயுதங்களை விற்பனை செய்ததன் மூலம் 11.29 பில்லியன் டொலரை பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் 16.1 சதவீதமாகும்.
எதிர்வரும் 2012ம் ஆண்டில் 17.3 சுதவீதமாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌அதேசமயம் அமெரிக்கா 28.76 பில்லியன் டொலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இது 40 சதவீத அளவாகும்.
இந்த இரு நாடுகளுக்‌கு அடுத்த படியாக பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், ஸ்பெயின், சுவீடன், சீனா ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன.அதேபோல் ரஷ்யா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அவைகளில் இந்தியா, அல்ஜீரியா, சீனா, வெனிசுலா, மலேசியா, சிரியா, வியட்நாம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
துருக்கி நாட்டுக்கு எதிரான மசோதாவின் எதிரொலி: பிரான்ஸ் நாட்டு தூதர் தாய்நாடு திரும்பினார்.
முதலாம் உலகப்போரில் ஒட்டோமன் பேரரசு நடத்திய போரை இனப்படுகொலை என்று கூறி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேறப் போகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துருக்கி தனது பிரான்ஸ் நாட்டுத் தூதுவரிடம் தாய்நாடு திரும்புமாறு கூறிவிட்டது.
அன்று படுகொலை செய்யப்பட்ட ஆர்மீனியர்களில் ஏராளமான துருக்கியர்களும் உண்டு என்பதால் துருக்கி இந்தப் போரை இனப்படுகொலை என்று பிரான்ஸ் தெரிவிப்பதை ஏற்க மறுக்கின்றது.ஒட்டோமன் பேரரசு முதலாம் உலகப்போரின் போது ஆர்மீனியர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது. இந்த பேரரசு மறைந்தாலும் அது ஆட்சி செய்த துருக்கியும் அதன் அரசாங்கமும் ஆர்மீனியப் படுகொலையை இனப்படுகொலை என்று உலக நாடுகள் அழைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது.இந்நிலையில் இந்த மசோதாவை பிரான்ஸ் நாட்டின் அனைத்துக் கட்சிகளிலும் இருந்த 50 சட்ட அறிஞர்கள் ஆதரித்தனர், 6 பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அடுத்து செனட்டிலும் நாடாளுமன்றக் குழுகு்களிலும் இந்தச் சட்ட மசோதா விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். இந்தச் சட்டப்படி பிரான்சில் வாழ்பவர், ஆர்மீனியப் படுகொலையை இனப்படுகொலை என்று அழைக்க மறுத்தால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 45,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும்.துருக்கியருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் பொருளாதார நல்லுறவுகள் வளர்ந்துவரும் நிலையில் துருக்கியர்(ஒட்டோமன் பேரரசு) உலக வரலாற்றில் முதன் முதலில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் என்ற கருத்தைத் திரும்பவும் எடுத்துக் கூறுவதும் துருக்கியருக்கு கோபத்தை வரவழைக்கின்றது.
ஆனால் ஆர்மீனியா நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர், தங்கள் இனம் ஒட்டோமன் பேரரசின் தாக்குதலுக்கு அஞ்சி உலகம் முழுக்க சிதறிப் போனதை நினைத்து வருந்திய நிலையில் இப்போது பிரான்ஸ் துருக்கி மீது தொடுத்திருக்கும் அழுத்தமான குற்றச்சாட்டைப் பாராட்டி இருக்கிறார்.
உலகளாவிய மனித மாண்பை மதிக்க பிரான்ஸ் நாடு எப்போதுமே தவறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் தற்கொலைப் படையினர் இரண்டு இடங்களில் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டமாஸ்கஸ் மாவட்டத்தில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த உளவுத்துறை கட்டிடத்தில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிரியா தலைவர் பஷார் ஆசாத் வெளியேற்றத்துக்குப் பிறகு போராட்டக்காரர்களின் பிடியில் உள்ள சிரியாவின் வாக்குறுதியை கண்காணிக்கும் அரபுக்குழு, அங்கே வருகை தந்த இரண்டாவது நாளில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை: கயானி.
பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப் போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று அந்நாட்டின் இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி கூறியுள்ளார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியை விட்டு நீக்குவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று(22.12.2011) கூறியிருந்தார்.
இதுகுறித்து கயானி கூறுகையில், இப்படி சொல்வது உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று கூறியுள்ளார்.பாகிஸ்தானின் இராணுவம் தொடர்ந்தும் ஜனநாயகத்துக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும், இராணுவ புரட்சி குறித்த செய்திகள் வெறும் தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கான திட்டம் எதுவும் இராணுவத்திடம் கிடையாது என்றும், அரசாங்கத்துக்குள்ளேயே அதனை அதிகாரம் செய்யும் இன்னுமொரு அரசாக இராணுவம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.பாகிஸ்தானிய இராணுவத்தை பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தானிய அரசாங்கம் நாடுவதாக கூறப்படும் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான இந்தச் சர்ச்சை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அறிக்கை: பாகிஸ்தான் இராணுவம் நிராகரிப்பு.
பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீதான நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் ஆய்வறிக்கையை பாகிஸ்தான் இராணுவம் நிராகரித்து விட்டது.
இதனால் இருதரப்பு உறவுகள் மீண்டும் சீர் குலையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி இரு பாகிஸ்தான் சாவடிகள் மீது நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்தது. மேலும் விசாரணைக் குழுத் தலைவர் ஸ்டீபன் க்ளார்க் அமெரிக்க இராணுவ மையமான பென்டகனுக்கு அளித்த விசாரணை அறிக்கையில், இரு தரப்பிலும் தவறான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதால் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்ததாகவும், அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறித்து பாகிஸ்தான் இராணுவம் நேற்று(23.12.2011) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் பல உண்மைகள் விடுபட்டுப் போயுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கை அதிகாரிகளின் கைகளுக்கு வந்தவுடன் பாகிஸ்தான் இராணுவம் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தரப்புத் தான் முதலில் நேட்டோ படைகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேட்டோ தரப்பில் பலி எதுவும் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் தரப்பிற்கு நேட்டோ தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்ட பின்னும் தாக்குதல் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடிப் பேட்டியால் நேட்டோ விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் எனவும், அமெரிக்கா, பாகிஸ்தான் தரப்பு உறவு சீர் குலையலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF