Thursday, December 22, 2011

இன்றைய செய்திகள்.

கார் பந்தயங்களை நடத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – சரத் பொன்சேகா.
இலங்கையில் கார் பந்தயங்களை நடாத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இவ்வாறு செய்பவர்கள் எப்போது நாட்டு மக்களின் கஸ்டங்களை உணர்ந்து கொள்வார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை(20.12.2011) தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டில் இளைஞர் ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையோ அல்லது சைக்கிள் ஒன்றையோ கொள்வனவு செய்ய முடியாத நிலையில், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவு நேர கார் பந்தயங்களை நடத்துகின்றனர் இதைத்தான் அபிவிருத்தி என்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மஹாராஜா ஊடக நிறுவன செய்திகளை பார்க்க வேண்டாம்- ரணில்.
மஹாராஜா ஊடக நிறுவன செய்திகளை பார்க்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எம்.ரீ.வீ மற்றும் சிரச தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளில் ஒளி, ஒலிபரப்புச் செய்திகளை தயவு செய்து பார்க்கவோ கேட்கவோ வேண்டாம். என்று நேற்று செவ்வாய்கிழமை(20.12.2011) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் ஒளிபரப்புச் செய்யப்படும் நேரத்தில் வேறும் அலைவரிசைகளை பார்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
மஹாராஜா தம்மை இல்லாதொழிப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றார் எனவும் இதன் காரணமாக தமது உயிருக்கும் கட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம்(19.12.2011) கட்சித் தலைமையகம் சிறிகொத்த மீது வீசப்பட்ட கல் ஒன்றை செய்தியாளர் சந்திப்பிற்கு ரணில் எடுத்துச் சென்றிருந்தார்.
குறித்த கல்லை செய்தியாளார் சந்திப்புக்கு வந்திருந்த சிரச ஊடகவியலாளரிடம் கொடுத்து, அதனை கிலி மாஹாராஜவிடம் ஒப்படைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
சில ஊடக நிறுவனங்கள் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இந்த சதித் திட்டத்திற்கு கட்சியின் சில உறுப்பினர்களும் உடந்தையாக செயற்படுகின்றனர் என்றும் ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
2012 வரவுசெலவுத்திட்டம் 98 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்.
2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட பிரேரணை 98 மேலதிக  வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பிரேரணை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையில் வரவு செலவு திட்ட இரண்டாம் குழு நிலை விவாதம் இடம்பெற்றது.
இதனிடையே, கடந்த 30 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது அது அன்றைய தினம் மேலதிக 91 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம், வரவு செலவு திட்ட பிரேரணையின் குழுநிலை விவாதம் ஆரம்பமானது.
இதற்கான விவாதம் கடந்த 17 நாட்களாக இடம்பெற்றது.
இதன்போது, அமைச்சுக்கள் மற்றும் 90 அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ள அனைத்து கூட்டு கட்சிகளும் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக தேசியக் கூட்டணி என்பன திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன.
மண்டைதீவில் இருந்து ஏவிய எறிகணை வேலணையில் வீழ்ந்தது! உண்மையை ஒத்துக்கொண்ட படையினர்.
மண்டைதீவுப் பகுதி சிறிலங்காக் கடற்படைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட எறிகணையே வேலணைப் பகுதியில் நேற்று மாலை வீழ்ந்து வெடித்துள்ளது. இன்று காலை எறிகணை வீழ்ந்த வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர்.
நேற்று மாலை வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததில் பெரிய குழி ஒன்று உருவாகியிருந்தது. இது குறித்து ஊர்காவற்றுறைப் பிரதேச  காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அங்கு சென்ற காவற்றுறையினர் அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கலாம் எனவும், அந்தக் குழி அருகே செல்ல வேண்டாம் எனவும், இன்று காலை அதை வந்து மீட்பதாகவும் கூறி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குறித்த வீட்டுக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும் சென்றனர். அதன்போது மண்டைதீவுக் கடற்படைத்தளத்தில் இருந்து பயிற்சியின் போது ஏவப்பட்ட பிளாஸ்ரிக் எறிகணையே தவறுதலாக வந்து வீழ்ந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன், குழியினுள் நீர் நிறைந்திருந்ததால், நீர் வற்றிய பின்னரே குழியினுள் இருக்கும் எறிகணையை மீட்க முடியும் என்றும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் ஊடகங்களுக்குத்  தெரிவிக்காமல் தங்களுக்கே தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
சரத் பொன்சேகாவின் விடுதலை செய்தி வதந்தியாகும்- அனோமா பொன்சேகா.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக ஜனாதிபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸூம் பேச்சு நடத்தியமை தொடர்பில், தாம் தமது கணவரிடம் பேசவுள்ளதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமது கணவர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவார் என வதந்திகளே பரப்பப்பட்டுள்ளன அதில் உண்மையில்லை என்றும் இது தொடர்பில் எவரிடம் இருந்து எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அனோமா சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக வெளியான தகவல் குறித்தே அனோமா இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பொன்சேகாவின் குடும்பத்தார் என்னுடன் கலந்தாலோசித்தால் விடுதலை பற்றி சிந்திக்கலாம்!- ஜனாதிபதி.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக மில்லியன் கணக்கில் கையெழுத்திட்டு பராக் ஒபாமாவுக்கோ அல்லது வேறு எவருக்குமோ முறையிட்டாலும் இறுதி முடிவு என்னுடையதாகவே இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பத்திரிகையாசிரியர்களை சந்தித்து உரையாடும்போதே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக வெளிவந்த தகவல்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே ஜனாதிபதி மேற்படி பதிலளித்துள்ளார்.
பொன்சேகாவின் விடுதலை தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. இவ்விடயம் தொடர்பில் டிரான் அலஸ் மட்டும் என்னுடன் பேசவில்லை. பலர் பேசிவருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொன்சேகாவின் குடும்பத்தார் இவ்விடயம் தொடர்பில் என்னுடன் கலந்தாலோசித்தால் அவரது விடுதலை தொடர்பில் என்னால் சிந்திக்க முடியும். அதைவிடுத்து மில்லியன் கணக்கில் கையெழுத்துகளை பெற்று பராக் ஒபாமாவுக்கும் ஏனையவர்களுக்கும் அனுப்புவதால் எந்த பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதி முடிவு என்னுடையதாகத்தான் இருக்கும். எங்கு சென்றாலும் இறுதியாக என்னிடத்தில் வந்துதான் ஆகணும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது!- ஜனாதிபதி மகிந்த.
இலங்கையில் தற்போதுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்ற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை(21.12.2011) மாலை வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நிதி அமைச்சர் என்ற முறையில் பதிலளித்துப் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எமது முயற்சிகளை எந்த தரப்பினராலும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், 2012ம் ஆண்டுக்கான அரசின் வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது, 98 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்து சிறுவர்களே நேரடியாக முறைப்பாடு செய்யும் வகையில் புதிய சட்டம் அறிமுகம்.
சிறுவர், சிறுமியர்கள் தமக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தாங்களே நேரடியாக சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு ஒன்றை அங்கீகரித்ததன் மூலம் ஐ.நா பொதுச் சபை இந்த அதிகாரங்களை சிறாருக்கு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய மனித உரிமை மீறல்களான, சிறார்களை விற்றல், சிறார்களை தாக்குதல், சிறார் ஆபாசப்படங்கள் மற்றும் சிறாரை போர்ப்படைக்கு சேர்த்தல் ஆகியவை குறித்து சிறுவர், சிறுமியர் நேரடியாகவே சர்வதேச அமைப்புக்களுக்கு முறையிட முடியும்.
தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து சிறார்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வழி செய்யும் இந்த புதிய சட்டத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவி பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் புதிய சட்டத்துக்கான பிரேரணை கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இத்தகைய முறைப்பாடுகள் சிறாரிடம் இருந்து நேரடியாகவே கிடைக்கும் பட்சத்தில் குறித்த குற்றங்கள் சிறார் உரிமைகளுக்கான சாசனத்தை மீறுகிறதா என்பதை ஐ.நா.வின் சிறார் உரிமைக்கான குழு ஆராயும் என்றும், அதில் இருக்கக்கூடிய சிறாரை பாதிக்கக்கூடிய சிக்கலான விடயங்களை அது கவனமாகக் கையாழும் என்றும் அதன் மூலம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார்.
இத்தகைய முறைப்பாடுகளை விசாரிக்கும் அதேவேளையில், அந்தக் காலகட்டத்தில் அந்த சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ திருத்த முடியாத பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய நாட்டின் அரசாங்கத்தை ஐநா கேட்கும்.
இந்த புதிய சட்டத்தை நாடுகள் ஏற்பதற்காக 2012ஆம் ஆண்டு முதல் அது அவற்றின் பார்வைக்கு விடப்படும்.
தாய்லாந்து பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் ஆங்சான் சூக்கி.
மியான்மர் நாட்டுக்கு வருகை தரவுள்ள தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங்சான் சூக்கி முதன் முறையாக சந்தித்து பேசவுள்ளார்.
மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலத்தில், ஆங்சான் சூச்சி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். எனினும் சர்வதேச நெருக்கடி ஏற்படவே இராணுவ ஆட்சி அகற்றப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எனினும் ஆங்சான் சூச்சி கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர்.
தாய்லாந்து நாட்டின் யூங்கிளிக் ஷினவந்த்ரா என்ற பெண் பிரதமராக உள்ளார். மியான்மரில் மண்டல அரசியல் தலைவர்களின் இரு நாள் மாநாடு நடக்கிறது.
இதில் தாய்லாந்து பிரதமர் யூங்கிளிக் ஷினவந்த்ரா பங்கேற்க உள்ளார். அவரை ஆங்சான் சூச்சி சந்தித்து பேச உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவரான நெய்ப்பிடோவ் செய்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்றப்பின் யூங்கிளிக் ஷினவந்த்ரா முதன்முறையாக சூச்சியை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான உறவு மிக முக்கியமானது: அமெரிக்கா..
பாகிஸ்தான் நாட்டுடனான அமெரிக்காவின் உறவு சிக்கலானது, ஆனால் மிகவும் முக்கியமானது என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இந்தாண்டின் இறுதிக்கான பத்திரிகையாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, இரு நாடுகளும் இணைந்து சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டு வருகிறோம், அதில் வெற்றியும் கண்டு வருகிறோம்.
பயங்கரவாதிகளால் அமெரிக்க மக்களும், பாகிஸ்தான் மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
வட கொரிய தலைவர் மறைவு: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி.
வட கொரிய தலைவர் இரண்டாம் கிம் ஜோங்குக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தலைநகர் பியோங்யாங்கின் வீதிகளில் மக்கள் திரண்டு ஜோங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பேழையின் முன் மலர்களால் அஞ்சலி செலுத்தினர்.
மற்ற நகரங்களில் அவரது உருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். கிம் ஜோங்கின் மறைவையொட்டி வட கொரிய அரசு 11 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அவரது இறுதிச் சடங்கு வருகிற 28ம் திகதி நடைபெறவுள்ளது. ஜோங்கின் உடல் அவரது தந்தை கிம் சுங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள கல்லறைப் பகுதியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் நடைபெற்ற பேரணிக்கு ஜோங்கின் மகனும், அவரது அரசியல் வாரிசுமான கிம் ஜோங் உன் தலைமையேற்றார்.
பாகிஸ்தானின் அரசியல் சூழல் குறித்து ஜனாதிபதி, பிரதமர் பேச்சுவார்த்தை.
பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரியும், பிரதமர் யூசுப் ரஸீல் கிலானியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கராச்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான அவாமி தேசிய கட்சியின் தலைவர் அஸ்ஃபாந்த்யர் வாலிகன், சிந்து மாகாண முதல்வர் காயிம் அலி ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டம் சில மணி நேரம் நடைபெற்றது. இதில் முழுக்க முழுக்க நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் ஃபர்கதுல்லா பாபர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை அழைத்து ஸர்தாரி விவாதித்தார். அப்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஸர்தாரியிடம் ரெஹ்மான் மாலிக் விளக்கினார்.
AAA தரநிலையை இழக்கும் பிரிட்டன்.
பிரிட்டன் தனது AAA தரநிலையை இனியும் தக்கவைப்பது கடினம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் பிரிட்டன் சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் அதன் AAA தகுதியை மாற்றக்கூடும். இதற்கு அடிப்படைக் காரணங்களாக தொடர்ந்து இருந்து வரும் யூரோவின் நெருக்கடியும், பிரிட்டனின் பொதுக்கடன் அதிகரிப்பதும் ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குப்படி பிரிட்டனின் பொதுத்துறைக் கடன் 1.27 பில்லியன் பவுண்டாகும், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவிகிதம் ஆகும்.
சென்ற வாரம் பிரான்சின் மத்திய வங்கி ஆளுநரும், மூத்த அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் பொருளாதார நிலையைக் கடுமையாக விமர்சித்தனர். பிரிட்டனின் தகுதி கணிப்பு நிறுவனங்கள் குழப்பமான தகவலை வெளியிடுகின்றன என்று தாக்கிப் பேசினர்.
பிரிட்டனின் தேசிய செலவாணியும், மத்திய வங்கியும் பிரிட்டனை பொருளாதார நிதிப்பற்றாக்குறையிலிருந்து வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்று மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பிரிட்டிஷ் அரசு தொடர்ந்து தனது பொதுத்துறைச் செலவுகளைக் குறைத்துக் கொண்டே வந்தால் வீழ்ச்சியிலிருந்து மீளலாம் என்றும் மூடிஸ் நிறுவன அறிக்கை கூறியுள்ளது.
விமானநிலைய பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்த முடிவு.
பிரான்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினரை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பாரிஸ் நகரத்தின் சார்லஸ் டி கால் விமானநிலையத்திலும், லியோன் விமானநிலையத்திலும் பாதுகாப்பு பணியில் இருப்போர் ஐந்து நாட்களாக சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர்.
இதனால் விடுமுறைக்கு வெளியிடங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பெருமளவு சிரமப்படுகின்றனர்.
உள்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளரான பியர் ஹென்றி பிராண்டெட் கூறுகையில், பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு விமானநிலைய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பதிலாக காவல்துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
வட கொரிய தலைவருக்கு சீன பிரதமர் அஞ்சலி.
வட கொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜாங்க்கு பெய்ஜிங்கில் உள்ள வட கொரிய தூதரகத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் அஞ்சலி செலுத்தினார்.
சீனப் பிரதமரின் இந்நடவடிக்கை இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி நிகழ்ச்சிக்கு வென் ஜியாபாவ்- வின் வருகையையொட்டி பெய்ஜிங்கில் உள்ள வடகொரிய தூதரகப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.அதேநேரத்தில் வடகொரிய உடனான தனது எல்லையில் சீனா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
சிரியா இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 100 வீரர்கள் பலி.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டக்காரர்களை இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. அந்த போராட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
ஆசாத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவிக்க இராணுவத்தில் பணிபுரியும் சில வீரர்கள் விரும்பவில்லை.எனவே அவர்கள் இராணுவத்தில் இருந்து வெளியேறி, போராட்டக்காரர்களுடன் இணைந்து அரசின் ஆதரவு இராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு கலவரம் தீவிரம் அடைந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள இட்லிப் மாகாணத்தில் இராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது.அதில் ஜபால் அல்-ஷாலியா மாவட்டத்தில் உள்ள காப்பிராவேடு மற்றும் அல்பாட்ரியா ஆகிய கிராமங்களில் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த 100 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தவிர பொதுமக்களில் 47 பேர் பலியாகினர்.
இதற்கிடையே காப்பிராவேடு கிராமத்தில் சிரியா இராணுவ வீரர்களை பொதுமக்களும், இராணுவத்தில் இருந்து தப்பி வந்த வீரர்களும் சுற்றி வளைத்ததில், 70 இராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.
இரகசிய திருமணம் செய்து கொண்ட துபாய் நாட்டு இளவரசர்.
துபாய் நாட்டின் இளவரசர் ஷேக் அகமது பின் சயீத் இல்- மக்காம்(53) ஆவார். கோடீசுவரரான இவர் எமிரேட் ஏர்லைன்சின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
இவர் லண்டனை சேர்ந்த நவின் எல். காமல்(35) என்ற பெண்ணை கடந்த 2007ம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமல் உள்கட்டமைப்பு அலங்கார வடிவமைப்பாளராகவும், முன்னாள் மாடல் அழகியாகவும் இருந்தார். இவருடன் குடும்பம் நடத்திய இளவரசர் மக்காம் ஒரு ஆண் குழந்தையும் பெற்று கொண்டார். பின்னர் காமலை விட்டு பிரிந்து விட்டார்.
அதை தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் காமல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இரகசிய திருமணத்தை முறித்து கொள்வதற்காக அவர் ஆண்டுக்கு ரூ.7 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவருடன் இரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விசாரணைக்கு இளவரசர் மக்காம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல: துணை ஜனாதிபதி.
தலிபான்கள் விடயத்தில் அமெரிக்கா தற்போது மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அதற்கு சான்றாக நேற்று(20.12.2011) அந்நாட்டின் துணை ஜனாதிபதி அளித்த பேட்டியில், தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் முக்கிய கட்டம் எட்டப்பட்டு விட்டதாகவும், நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் அளித்த பேட்டியில் தலிபான்கள் குறித்துக் கூறியதாவது: தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல. அமெரிக்காவின் நலன்களுக்கு அவர்கள் பாதகமாக இருப்பதால் அவர்கள் நமது எதிரி என்று ஜனாதிபதி இதுவரை ஓர் அறிக்கை கூட விட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை நம்மோடு ஒத்துழைப்பு தரும் ஆப்கான் அரசைக் கவிழ்த்து விட்டு நமக்கு கெடுதல் செய்ய முற்படுவார்களானால் அப்போது தான் நமக்கு பிரச்னை.
இவ்விவகாரத்தில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று அல்கொய்தாவை ஒழிக்க வேண்டும். இரண்டாவது ஆப்கான் அரசு தலிபான்களால் கவிழ்க்கப்பட முடியாத அளவிற்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இரு தரப்புக்கிடையிலான பேச்சு நடக்கும் என்று தெரிவித்தார். 
வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே கார்னே பிடனின் பேட்டியை ஆதரித்து நேற்று விடுத்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுக்கவில்லை. தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது அமெரிக்கா அங்கு படைகளை அனுப்பவில்லை. அல்கொய்தா அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகத் தான் அமெரிக்கா படைகளை அனுப்பியது என்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு.
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தேவாலயங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தேவாலயங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறுபான்மை தலைவர்களுடன் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதால் தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக “எக்ஸ்பிரஸ் டிரிபியூன்” நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள 20 தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 433 தேவாலயங்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
டிசம்பர் மாதம் 24ம் திகதி இரவு மற்றும் டிசம்பர் மாதம் 25ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிக எண்ணிக்கையில் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் கூடுவர். அப்போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் 20 தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.இந்த நாட்டில் உள்ள 433 தேவாலயங்களைக் காக்க 2,000 காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக டிஐஜி குலாம் மெஹ்மூத் டோகர் தெரிவித்தார். இவர்கள் நாளை(22.12.2011) முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
காவல்துறையினரின் கணிப்பின்படி லாகூரில் உள்ள 38 தேவாலயங்கள் அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேற்கூரையிலிருந்து கண்காணிப்பது மற்றும் தேவாலயங்களின் வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவியை நிறுவி சோதனை செய்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் போர் நடைபெறுவது போன்ற சூழல் நிலவுவதாக லாகூர் கதீட்ரல் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு தந்தை ஷாகித் மெஹ்ராஜ் தெரிவித்தார். பாதுகாப்பு குறைபாடுகள் எப்போதும் இங்கு நிலவுகின்றன.
இதற்கு அரசை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. இத்தகைய செயலில் இறங்கும் பயங்கரவாத அமைப்புகளும் தான் காரணம். இதில் பொதுமக்களுக்கும் ஓரளவு பங்கு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மிகவும் பதற்றம் வாய்ந்த பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் அதிக பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லாகூர் காவல்துறை தலைவர் அகமது ரஸீல் தாஹிர் கூறினார்.தேவாலயங்களை சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார். மேலும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் அதிக பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.தேவாலயங்களில் வழிபாடு நடைபெறும் சமயங்களில் கூடுதல் காவல்துறையினர் பணிக்கு நியமிக்கப்படுவர் என்று தாஹிர் கூறினார்.
எகிப்தில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்.
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த கலவரம் நேற்று(20.12.2011) ஐந்தாவது நாளாக தொடர்ந்தது.தாரிர் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
எகிப்தில் இராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி முதல் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் சிலர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 17ம் திகதி திடீரென தாரிர் சதுக்கத்தில் இருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி அவர்களை சதுக்கத்தில் இருந்து விரட்டினர். அன்று முதல் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது.
இதுகுறித்து நேற்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு எதிராக பெண்கள் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிய அதே வீதியில் இன்று அவர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.கடந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு பெண்கள் கணிசமான பங்களித்துள்ளனர். அதேநேரம் இன்று அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுகின்றனர். இந்த நிலைமை புரட்சியை இழிவுபடுத்தியுள்ளது.
இது அந்நாட்டிற்கு உகந்ததல்ல என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என இராணுவ சபை கூறியுள்ளது.இந்நிலையில் நேற்று(20.12.2011) காலையில் தாரிர் சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் சாலையில் காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தற்காலிக சுவரை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போது, காவல்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர்.
சம்பவ இடத்தருகில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் சிலர் துப்பாக்கிச் சத்தத்தால் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
பில்லியன் கணக்கில் பாக்கி: அமெரிக்காவிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவிப்பு.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி பில்லியன் கணக்கில் பாக்கி இருப்பதால் இனி அந்நாட்டிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் “கூட்டணி ஆதரவு நிதி”(சி.எஸ்.எப்) என்ற பெயரில் அமெரிக்கா மாதம் தோறும் பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன் டொலர் அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது மாதம்தோறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செலவு செய்து விட்டு அதற்கான கணக்கு வழக்குகளை அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் இராணுவம் 187 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான 495.2 பில்லியன் டொலரில் 38 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது பல்வேறு காரணங்கள் கூறி நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா. அவ்வகையில் பாகிஸ்தானின் கணக்கில் 35 முதல் 40 சதவிகிதத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்த விடயமாகும்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பாகிஸ்தான் கேட்ட நிதியான 12 பில்லியன் டொலருக்குப் பதிலாக அமெரிக்கா 8.6 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.
அதற்குப் பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும் 900 மில்லியன் டொலரில் இருந்து 2.5 பில்லியன் டொலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 600 மில்லியன் டொலர் பாக்கி உள்ளது. இதையடுத்து இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதேநேரம் பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என ஆலோசித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை.
ஆசிய-பசிபிக் பகுதியில் சீனா தனது இராணுவத்தை  பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் முறையாக நேற்று(20.12.2011) பேச்சுவார்த்தை நடத்தின.
சீனாவுக்கும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே கடல் எல்லை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா சார்பில் வெளிவிவகார இணை அமைச்சர்கள் ராபர்ட் பிளேக் மற்றும் குர்ட் கேம்ப்பெல், இந்தியா சார்பில் இணை செயலாளர்கள் ஜவேத் அஷ்ரப், கவுதம் பம்ப்வாலே, ஜப்பான் சார்பில் வெளிவிவகார அமைச்சர் கொய்ச்சிரோ கெம்பா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் இவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளின் நலன் பற்றி விவாதிக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடக்கமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
ஆளில்லா விமானத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது அமெரிக்கா.
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது.
உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்து: 5 பேர் பலி.
நியூயார்க் நகரை சேர்ந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சாவ்லா(36). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.இவரும், அதே நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குனர் ஜெப்ரி புக்காலேவும்(45) நேற்று(20.12.2011) காலை சிறிய விமானத்தில் நியூஜெர்சியில் இருந்து அட்லான்டா புறப்பட்டனர்.
இது ஜெப்ரிக்கு சொந்தமான விமானம். அதில் அவர்கள் தவிர ஜெப்ரியின் மனைவி, 2 குழந்தைகளும் சென்றனர். விமானத்தை ஜெப்ரி ஓட்டினார்.
நியூஜெர்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில், விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக பறந்து நியூஜெர்சி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் அழைத்து வந்திருந்த நாயும் இறந்தது. விமானம் விழுந்த போது ஏற்பட்ட சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டது.விமானத்தின் பாகங்கள், சாலையில் ஒரு மைல் தூரம் வரை சிதறிக் கிடந்தன. சாலையில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி தப்பினர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரிக்கு எதிராக செயல்பட்ட அந்நாட்டு உளவுத்துறை தலைவரை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மொமோகேட் விவகாரத்தினால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலையீடு காரணமாக அதன் கண்டிக்குமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி வலியுறுத்தியுள்ளார். இந்த விகாரம் பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்தியது.
இதனால் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவால் ஜனாதிபதி ஸர்தாரி துபாய் சென்று சிகிச்சை பெற்று நேற்று முன்தினம்(19.12.2011) நாடு திரும்பினார்.இந்நிலையில் அந்நாட்டு பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜமீல் அகமது என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவராக உள்ள அகமது சுஜாபாஷா, ஜனாதிபதி ஸர்தாரியை பதவியை விட்டு நீக்க சதி செய்துள்ளார்.
இதற்காக அவர் அரேபிய நாட்டு தலைவர்களின் ஆதரவுடன் நாட்டின் ஆட்சியை பிடிக்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விடயம் வெளிவந்த பின்னரும் சுஜாபாஷா, மற்றும் ஐ.எஸ்.ஐ மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே அவர் இந்த பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அரசியலமைப்பு சட்டம் 244 பிரிவின் படியும், அரசும் இவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருக்கிறார்.
வட கொரியாவை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டு வர வேண்டும்: கனடா பிரதமர்.
வட கொரியத் தலைவரான கிம் ஜாங்கின் மரணத்தை அடுத்து, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அந்நாட்டை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார்.கிம் ஜாங்(69) மாரடைப்பால் காலமானார். இவர் வட கொரியாவின் முடிசூடா மன்னனாக 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வட கொரியாவின் படை பலத்தை குறிப்பாக அணு ஆயுத பலத்தைப் அதிகப்படுத்தினார்.
இவருடைய திடீர் மரணம் இந்நாட்டின் வரலாற்றில் அவலம் நிறைந்த அத்தியாயம் ஆகும். புதிய வாய்ப்புகளுக்கு ஏற்றதொரு காலம் தற்போது தான் அமைந்துள்ளது. இதனைத் தவறவிட்டால் மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகிவிடும் என்று ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் புதிய தலைமை உலக மக்களுடன் வட கொரியாவை நட்பு கொள்ள வழிவகுக்க வேண்டும் என்றார். இதுவரை தெற்கே உள்ள தன் சகோதர நாட்டிடம் மட்டுமே பகைமை பாராட்டிய வட கொரியா, உலக நாடுகளிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஜான் பெயர்டு கூறுகையில், இனி வட கொரியா தன் வழிகளை மாற்றியமைத்து அந்நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்ற முயல வேண்டும் என்றார்.
ஜேர்மன் ஜனாதிபதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு.
ஜேர்மனியின் ஜனாதிபதியான கிறிஸ்ட்டியன் உல்ப் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கு கார்ஸ்ட்டன் மேஸ்க்மெயர் என்ற பெரும் பணக்காரர் 43000 யூரோக்களைச் செலவழித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே வீட்டுக்கடனால் தன் பழைய குடும்ப நண்பரான எகான் கீர்கென்ஸின் மனைவியிடமிருந்து 500,000 யூரோ வாங்கியதை இவர் மறைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு கடந்த 2008ஆம் ஆண்டில் உல்ப் எழுதிய “Better tell the Truth” என்ற புத்தகம் தொடர்பானது.
விடுதலைக் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எர்வின் லாட்டர் கூறுகையில், தன் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக உல்ப் ஜனாதிபதி பதிவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜனாதிபதியும், பிரதமரும் நல்ல புரிதலோடு கடமையாற்றுவதாகக் குறிப்பிட்டார்.பொதுமக்களிடம் ARD தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் 70 சதவிகிதம் பேர் உல்ப் பதவி விலக வேண்டாம் என்றனர். ஆனால் 51 சதவிகிதம் பேர் மட்டுமே இவர் நம்பகமானவர் என்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF