Saturday, December 10, 2011

இன்றைய செய்திகள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உட்பட 15 அமைச்சர்களுக்கு கிரிக்கெட் போட்டி.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டொரிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 15 பேர் அமைச்சர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், சனத் ஜயசூரிய, நாமல் ராஜபக்ஸ, புத்திக பத்திரண உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியில் இடம்பெறவுள்ளனர்.இப்போட்டிக்கு ´சபாநாயகர் சவால் கிண்ணம்´ என பெயரிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரச தரப்பிலிருந்து 19பேர் நியமனம்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்படவுள்ள அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றத்தெரிவில் அரசாங்கத்தரப்பில் இருந்து 19பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கையிட்டுக் கையொப்பமிட்டவர்களும் இந்த 19 பேரில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேற்படி 19பேரின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி ஒரு வியாபார பண்டம்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.
இலங்கையின் உயர் கல்வி அமைச்சானது, அரசாங்க உயர் கல்வி அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துமெனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உயர் கல்வி அமைச்சு தனியார் கல்வி நிறுவனங்களின் ஊது குழலாகி விட்டது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று வியாழக்கிழமை(08.12.2011) தெரிவித்துள்ளது.அரசாங்க கல்வித்துறையை விட தனியார் கல்வித் துறைக்கே உயர்கல்வி அமைச்சு முன்னுரிமை வழங்குகின்றது எனவும் இது உயர் கல்வித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை தேற்றுவிக்கலாம் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் நிர்மல் தேவசிறி தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களை, பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்மேளனனம் எதிர்க்கவில்லை. ஆனால், அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் உதாசீனம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க செலவினத்தில் உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை 1.9 சதவீதத்திலிருந்து 6 சதவிதமாக அதிகரிக்கும்படி நாம் கூறினோம். ஆனால் உயர் கல்வியமைச்சு எவ்வித நடவடிக்கையும் செய்யவில்லை.
அரசாங்க கல்வி முறைமைக்கு, தனியார் கல்வி முறைமை அச்சுறுத்தலாக அமையும். பிரிட்டன் பான்ற நாடுகளில் இதுதான் நடந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.கல்வி ஒரு வியாபார பண்டமாகும் போது அரசாங்க கல்வி முறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.உள்ளங்களைப் பண்படுத்தும் கலைத்துறைப் பாடங்கள் இலாபமற்றவை எனக்கருதப்பட்டு கைவிடப்படும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள் ஏன் தமிழ்மொழியில் வழங்கப்படவில்லை! ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் கெஹலிய.
அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து அவை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமுன்னர் அமைச்சரவை தீர்மான விபரங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனையடுத்து அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் கேள்விகள் இருப்பின் கேட்குமாறு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அப்போது அமைச்சரவை தீர்மான விடயங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் ஏன் தமிழ் மொழியில் வழங்கப்படுவதில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தொடர்பில் உங்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன். உண்மையில் இந்த விடயம் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
மும்மொழி வேலைத்திட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கத்தின் கொள்கை அவ்வாறு இருக்கையில், இவ்வாறு அமைச்ரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தவறான விடயமாகும்.எனவே இது தொடர்பில் கவலையடைகின்றேன் என்பதுடன் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஊடக அறிக்கைகள் தமிழில் வழங்கப்படும் என்பதனை உறுதியுடன் தெவிக்கின்றேன் என்றார். 
மக்களை நெருங்குவதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் - ஜனாதிபதி.
அரசாங்கம் மக்களை நெருங்குவதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் என இந்தோனேசியாவின் பாலித் தீவூகளில் நடைபெற்று வரும் ஜனநாயக ஒன்றிய அமர்வுகளில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்தள்ளார்.
ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக உருவாக்க, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஜனநாயக கட்டமைப்புக்கள் மக்களுக்கு அந்நியமானதாக அமையக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக அமைய வேண்டும் எனவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறைமை கிராமிய மட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவ்வமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்தினால் மாணவர்களின் கோரிக்கைகளை நாம் கவனத்தில் எடுக்கமாட்டோம்! அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க.
பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரின் கோரிக்கைகளை நாம் இனி கவனத்தில் கொள்ளப் போவதில்லை என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளதாக அமைச்சின் செயலாளர் நவரத்ன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பினால் அவர்கள் அது தொடர்பில் எமக்கு எழுதலாம். அல்லது தொலைபேசி மூலம் அறிவிக்கலாம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் மேற்படி நடவடிக்கையினை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி நடத்திய பெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இனிமேல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமாயின் மாணவர்களின் குறைபாடுகளைப்பற்றி பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களுடன், மாணவர்களின் உயர் கல்வியைப் பற்றி பேச மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம் ,களனி பல்கலைக்கழகம் மற்றும் றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானிய குழுவின் முன் நேற்று வியாழக்கிழமை(08.12.2011) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீ ஜயவர்த்னபுர உபவேந்தர் துஸ்பிரயோகம், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, அவரை பதவியிலிருந்து அகற்றமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெறுங்கள்! இந்திய படைவீரர்களுக்கு அழைப்பு- இராணுவத் தளபதி ஜகத்.
இலங்கை இராணுவத்திடம் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு இந்திய படையினருக்கு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் கணிசமான அளவு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்த தந்திரோபாயங்கள், யுத்த பொறிமுறைமை போன்றன தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிபிட்டுள்ளார்.
இந்திய இராணுவ பயிற்சி முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
படை அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பயிற்சி அளிக்கும் சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இராணுவத்தினர் இந்திய படையினரிடம் கோரியுள்ளனர்.
இலங்கை வங்கியின் தன்னியக்க இயந்திரத்திலிருந்து 6.6 மில்லியன் ரூபாய் கொள்ளை.
இலங்கை வங்கியின் தன்னியக்க கடனட்டை இயந்திரத்தை (ATM) உடைத்த இனந்தெரியாத நபர்கள் சுமார் 6.6 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8 மணி தொடக்கம் இன்று காலை 8 மணிவரையான காலப்பகுதியில் வான் ஒன்றில் வந்த குழுவொன்றே இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விசேட இரு பொலிஸ் குழுக்கள் இவ்விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வயோதிபப் பெண்கள் தொடர்ச்சியாக கொலை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்- பொலிஸார்.
வீட்டில் தனித்திருக்கும் வயோதிபப் பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று(09.12.2011) தெரிவித்துள்ளனர்.
 மதவாச்சி, வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் அண்மையில் ஒரே மாதிரியான கொலைச் சம்பவங்களில் வயோதிப பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
களவுக்காக நுழையும் இனம்தெரியாத நபர்களினால் இக்கொலைகள் செய்யப்படுவதாகவும் சில கொலைகள் தனியொருவரால் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு சில இரண்டு மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இக்கொலைகள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டே மேற்கொள்ளப்படுவதாகவும் வல்லுறவுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்த பிக்குமார் மூவருக்கு பிடியாணை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சாகும் வரை உண்ணா விரதத்தில் ஈடுபட்ட பிக்குகள் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
இதன்போது, தமது கடமையைச் செய்யவிடாது தடுத்ததாக பொலிஸார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வராத மூன்று பிக்குமாருக்கு கொழும்பு கோட்டே நீதவான் இன்று (09.12.2011) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 12 பிக்குகள் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். பின்னர் இவர்கள் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இது பற்றிய வழக்கு விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை கொழும்பு நீதவான் சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தார்.இவ் வழக்குத் தொடர்பான விசாரணை அடுத்த வருடம் ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை எச்சரிக்கும் மேர்வின் சில்வா.
பாகிஸ்தான் மக்களுக்கு ஏதேனும் மனக் கஸ்டம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வெள்ளைக்காரர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டும் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
நேட்டோ கூட்டுப்படையினர் பாகிஸ்தானில் நடத்திய குண்டுத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நேட்டோ படையினரின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாகிஸ்தான் மக்களுக்கு ஏதேனும் மனக் கஸ்டம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வெள்ளைக்காரர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டும்.
உலகின் பெரும்பான்மையான மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் மீது வெள்ளையின மக்கள் அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடாது, அவ்வாறான நடவடிக்கைகளை நானும், இலங்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் மற்றுமொரு ஆசிய நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் ஆசிய மற்றும் அரபு நாடுகள் ஒன்றிணைந்து போராடும்.
லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போன்று வெள்ளையர்களினால் ஈரானுடன் மோத முடியாது.வெள்ளையின மக்கள் இந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கப்பலில் ஏறி வேறு ஓர் நாட்டை கண்டு பிடிக்கும் பயணத்தை தொடர நேரிடும் என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொன்சேகாவின் விடுதலை குறித்து மன்னிப்பு கோரினால் ஜனாதிபதி பரிசீலனை செய்வார் : ரவூப் ஹக்கீம்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை தொடர்பில் மன்னிப்பு கோரினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அது குறித்து கவனம் செலுத்துவார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகாவின் நெருங்கிய உறவினர்கள் எவரேனும் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை குறித்து  ஜனாதிபதி பரிசீலனை செய்வார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நீதி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவுத் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் காணப்படுகின்றன. அந்த விதிமுறைகளை சரத் பொன்சேகாவின் நெருங்கிய உறவினர்களும் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சரத் பொன்சேகாவின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால், அது குறித்து ஜனாதிபதி பரிசீலனை செய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தொழில்களை பாதுகாக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் : சரத் பொன்சேகா.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தொழில்களை பாதுகாக்க ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைகோர்ப் வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு சிறைச்சாலை திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகாரிகளை விரட்டியடிக்க இணையத்தில் மகஜருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இணையத்தில் இந்த மகஜர் கையொப்பமிடப்படுகின்றது.உலகம் முழுவதிலும் சர்வாதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்டனர் அதே நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உளவு விமானம் ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?
ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானமொன்றினை கடந்த 4ம் திகதி ஈரான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன RQ-170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் தம்முடையது தான் என்ற உண்மையை 6ம் திகதி அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். சி.ஐ.ஏ உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.இந்த விமானம் வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ.வால் இரகசியமாக உபயோகிக்கப்பட்ட விமானம் ஆகும்.
பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த வீட்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.சி.ஐ.ஏ.க்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதை சி.ஐ.ஏ அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். RQ-170 விமானம் சி.ஐ.ஏ.-க்கு மிக முக்கியமானது என்ற வகையில் அதன் இருப்பு பற்றியே சி.ஐ.ஏ. ரகசியம் காத்து வந்தது.
நீண்டகாலமாக இந்த விமானத்தின் ஒளிப்படங்கள்கூட வெளியே செல்லாதபடி பார்த்துக் கொண்டது. RQ-170 தமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்தபோது கைப்பற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
விமானம் தம்முடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானம் ஈரானிய வான்பரப்பில் பறந்ததா என்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.தமது நாட்டு அணு உலைகளை உளவு பார்க்கவே விமானம் பறந்ததாக ஈரான் கூறுகின்றது. இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சமிஞ்கைகளை சி.ஐ.ஏ ஏற்படுத்தியதாகவும், அதன்படியே விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க இராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
அதன்படி விமானம் ஆப்கானுக்கு மேலாக இருப்பதாக ஏனையவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, உண்மையான விமானம் ஈரானிய வான்பரப்பில் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப்(International Security Assistance Force) இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த RQ-170, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது.விமானம் ஈரானிடம் இழக்கப்பட்டதையோ, அது ஈரானிய வான்பரப்பில் பறக்க விடப்பட்டதையோ மறைக்கவே, ஐ.எஸ்.ஏ.எஃப் செய்திக் குறிப்பில் இந்த செய்தி இணைக்கப்பட்டதாக இப்போது அதிகாரிகள் ஊகிக்கிறார்கள்.
இதற்கு காரணம் RQ-170 ஆபரேஷன்கள் ரகசியமானவை. அவை பற்றிய விபரங்கள் இராணுவ செய்திக் குறிப்புகளில் வெளியாவதில்லை.இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம் வரை மர்மமாகவே உள்ளது.
பயங்கரவாதிகளால் இராணுவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்கா எச்சரிக்கை.
அமெரிக்காவில் வசிக்கும் பயங்கரவாதிகளால் அமெரிக்க இராணுவத்தினருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் வாழும் பயங்கரவாதிகள் அமெரிக்க இராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி நியூயோர்க் நகரில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரும் பயங்கரவாத தாக்குதலுடன் 3 தனித்தனியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.இதில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகவல் புதன்கிழமை கூட்டு செனட் குழுவிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராணுவ நிலைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் இதுவரை 54 முறை விடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக சதித் திட்டம் தீட்டப்பட்டு அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அமெரிக்காவில் வசிக்கும் பயங்கரவாதிகள் தான் திட்டமிட்டுள்ளனர். இவற்றில் 33 சதிச் செயல்கள் இராணுவத்தை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டவையாகும்.இந்த சதிச் செயலில் தனது சகோதர, சகோதரிகளையும் ஆயுதமேந்தி போராட்ட களத்தில் இறக்கியுள்ளனர்.குடியரசு கட்சியின் பிரதிநிதி பீட்டர் கிங், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான குழுவின் தலைவராக உள்ளார். இவர் பல சமயங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்தும், அவர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.அமெரிக்காவில் வாழும் தங்களது உறவினர்கள் மூலம் இத்தகைய பயங்கரவாதிகள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற துணிந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவில் வாழும் இதுபோன்ற பழமைவாத முஸ்லிம்கள் மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களில் பலர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களின் முக்கிய இலக்கு பாதுகாப்புத் துறையாக உள்ளதும் என்றும் அவர் தெரிவித்தார்.
அல்கொய்தா அமைப்பின் துணை அமைப்புகளால் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டிலிருந்துதான் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று நினைத்துவிட வேண்டாம். உள்நாட்டில் வாழும் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், இங்குள்ள சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, நாட்டுக்காக பாடுபடும் இராணுவத்தினரை தாக்க திட்டமிட்டு முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டமானது என்று நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர் ஜோசப் லிபர்மான் தெரிவித்தார்.
ஸர்தாரியின் உடல்நிலை சீராக உள்ளது: அதிகாரிகள் தகவல்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரிக்கு மூளையில் ரத்தம் உறைந்துள்ளதா என்பதை கண்டறிய ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது, மற்றபடி அவருக்கு இருதயம் தொடர்பான எந்த பிரச்னையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி மாரடைப்பு காரணமாக துபாய் மருத்துவமனையில் நேற்று முன்தினம்(07.12.2011) சேர்க்கப்பட்டார். இதனால் பாகிஸ்தானில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.இது குறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி மார்க் டோனர் குறிப்பிடுகையில், ஸர்தாரி துபாய் சென்றதற்கு அரசியல் பின்னணி ஏதும் இல்லை. அவர் மருத்துவ ரீதியாக தான் அங்கு சென்றுள்ளார். எனவே இராணுவ புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் நடப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றார்.
துபாயில் உள்ள பாகிஸ்தானுக்கான தூதர் ஜமீல் அகமது கான் குறிப்பிடுகையில், தற்போது மருத்துவமனையில் உள்ள ஸர்தாரி நல்ல நிலையில் உள்ளார். மாரடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை.மூளையில் ரத்த உறைவு ஏதும் உள்ளதா என்பதை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பரிசோதிக்கவே அவர் துபாய்க்கு வந்துள்ளார். எனினும் அவரது உடல் நிலை குறித்து ஆராய ஒரு சில நாட்கள் வைத்தியசாலையில் தங்க வேண்டியுள்ளது என்றார்.
அமெரிக்காவின் முன்னாள் ஆளுநருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ராட் பிளாகோஜெவிசுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இல்லினாய்ஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த போது ஊழல் செய்ததாக பிளாகோஜெவிச் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வகித்த செனட் பதவியை ஏலம் விட்டு அதை பிரசார செலவுக்கும், சொந்த நலனுக்கும் பயன்படுத்த முயற்சித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமெரிக்க ஆளுநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஜார்ஜ் ரியான் என்ற ஆளுநருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசி தாக்குதல்: 25 பேர் காயம்.
பாலஸ்தீனத்தின் காஷா திட்டுப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அங்கிருந்தபடியே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில் தெற்கு காஷாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் நேற்று(08.12.2011) 3 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
அதில் ஒருவர் கூட பலியாகவில்லை. அதே நேரத்தில் ஒரு ஏவுகணை மட்டும் மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து தாக்கியதில் ஒரு வீடு மட்டும் தீப் பிடித்து எரிந்தது.அதில் 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் பலியானார். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தகவலை பாலஸ்தீனத்தின் சுகாதார துறை அதிகாரி ஆதம் அபு சல்மியா தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் காஷா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதில் 2 தீவிரவாதிகள் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரிக்கு பக்கவாதம்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரிக்கு(Asif Al Zardari) முதலில் வலிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸர்தாரிக்கு முதலில் சிறிய அளவில் வலிப்பு ஏற்பட்டது. அதன் பின் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் துபாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாகிஸ்தானுக்கான தூதர் ஜமீல் அகமது கான் கூறுகையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என்றும், பேச்சு, பயிற்சி உட்பட சில சிறப்பு பயிற்சிகளை அவர் மேற்கொள்வதன் மூலம் மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பி விடுவார் என்றும், மேல் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்ல உள்ளதாக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யாவில் வன்முறையை அமெரிக்கா தூண்டி விடுகிறது: புடின் குற்றச்சாட்டு.
ரஷ்யாவில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி எதிர்க்கட்சிகளை அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்(Hillary Clinton) தூண்டி விட்டுள்ளார் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. எனினும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
அத்துடன் தேர்தலில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன, முறைகேடுகள் நடந்துள்ளன, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.புடினை எதிர்த்து மாஸ்கோவில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தான் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடின் கூறியுள்ளார்.
இதுகுறித்து புடின் நேற்று(08.12.2011) கூறியதாவது: அமெரிக்காவுக்கு நிகராக அணுசக்தி கொண்ட பலத்துடன் ரஷ்யா இருக்கிறது. அதை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ரஷ்ய தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய எதிர்க்கட்சிகளை வன்முறையில் ஈடுபட  தூண்டிவிட்டுள்ளார்.
அத்துடன் வன்முறையை தூண்டிவிட கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் அமெரிக்கா செலவிட்டு வருகிறது என்று புடின் ஆவேசமாக கூறியுள்ளார்.இதற்கிடையில் நாளை(10.12.2011) மாஸ்கோவில் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி நடத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க 50 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நேட்டோ லொறிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் நேட்டோ படைகளின் 20 டேங்கர் லொறிகள் வெடித்து சிதறின.பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
சமீபத்தில் நடந்த தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதில் ஆவேசம் அடைந்த பிரதமர் கிலானி, ஜனாதிபதி ஜர்தாரி ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற உத்தரவிட்டனர். இதையடுத்து இருநாட்டு உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நேட்டோ படைகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் பணிமனை உள்ளது.இங்கிருந்து தான் பாகிஸ்தானின் மற்ற நகரங்களுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கும் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று(08.12.2011) நேட்டோ பணிமனை மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 20 டேங்கர் லொறிகள் வெடித்து சிதறின.இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி மாலிக் அர்ஷத் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
கனடாவின் போர்க்கைதிகளிடம் ஜப்பான் மன்னிப்புக் கேட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது கனடா நாட்டவர்களை ஜப்பான் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. அவர்களை 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் நாளன்று விடுதலை செய்தது.இந்தப் போரில் 290 போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். 493 பேர் காயமுற்றனர். பிழைத்தவர்கள் மட்டும் ஹோங்கொங் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எழுபது ஆண்டுகள் கழித்து ஜப்பான் இவர்களை தன் நாட்டுக்கு அழைத்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தோஷியுகி மூலமாக மன்னிப்பு கேட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மெக்டோனெல் என்ற 90 வயது முன்னாள் இராணுவ வீரர் எழுபது ஆண்டுகளாகக் கேட்கப்படாத மன்னிப்பு இப்போது கேட்கப்பட்டதற்கு உயிரோடு இருக்கும் போர்க்கைதிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இந்த மன்னிப்பை ஜப்பான் மற்ற நாடுகளிடமும் கேட்க வேண்டும் என்றார்.
மெக்டோனெல் கனடாவின் எட்மண்ட்டனில் பிறந்தவர் ஆவார், கப்பல் துறைமுகத்தில் கொத்தடிமையாக இருந்தார். ஜப்பானியர் இவரைக் கைது செய்த பின்பு பாதாளச் சுரங்கங்களில் வேலை செய்தார். அரைப்பட்னியும், சத்துணவுக் குறைவாலும் இவருடன் அடைக்கப்பட்டிருந்த 267 கைதிகள் உயிரிழந்தனர். இவர் தனது வாழ்க்கை வரலாறை “The Solder’s Story” என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் கனடா நாட்டுக் கைதிகள் ஜப்பான் சிறையில் இருக்கும் போது எந்தத் தருணத்திலும் தங்களது தன்மானத்தை இழக்கவில்லை என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் பலத்த சூறை காற்று: மக்கள் கடும் அவதி.
ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட புயல் காரணமாக 60,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மின்சாரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.வடக்கு வேல்ஸ் பகுதியில் மணிக்கு 130 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயல் ஸ்வான் ஸீ பகுதியில் மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது.
கேன்கோம் பகுதியில் 165 கிலோ மீற்றர் வேகத்திலும், டுல்லோக் பாலத்தில் 105 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசியது. இதுவே ஸ்காட்லாந்தில் இப்போது வீசிய புயலின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வேகமாகும்.
ஸ்காட்லாந்தின் மத்திய பகுதி மட்டுமே புயலால் குறைவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(09.12.2011) அதிகாலையில் புயல் கொடூரமாகும் என்ற முன்னறிவிப்பு கிடைத்த போதும் கூட ஹைலாண்ட், மோரே மற்றும் அபெர்டீன்ஷயரின் வடபகுதி போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.வியாழக்கிழமை(08.12.2011) இரவு முதல் மின்சாரம் இல்லாத காரணத்தால் ஸ்காட்லாந்தில் 50,000 பேருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, இங்கிலாந்தின் தென்பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட நூறு மின்பொறியாளர்கள் கூடுதலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளச் சேதச் சீரமைப்புக் குழுவின் தலைவரான துணை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில், இந்தப் புயலால் நாட்டின் மத்திய பகுதியில் பாதிப்பு குறைவு என்றாலும் மற்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.மேலும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் சாலைகளைச் செப்பனிட்டு வருகின்றனர். பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் பயண அதிகாரிகளின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும். இரவும், பகலும் சீரமைப்புப் பணிகள் தகுந்த கண்காணிப்புடன் நடைபெறுகின்றன. சிலருக்கு அடுத்த வாரம் தான் மின்சார வசதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அபராதம்.
மெக் டொனால்டு நிறுவனத்தின் “ஹேப்பி மீல்” உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் நீதிமன்றம் ரூ.9.18 கோடி(இந்திய ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த நிறுவனம்.இந்நிறுவனம் ஹேப்பி மீல் என்ற பெயரில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை 1979ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
ஹம்பர்கர், சீஸ் பர்கர், சிக்கன் மெக் நகட்ஸ், சாஸ், குளிர்பானம் ஆகியவை மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை ஒன்றும் அதில் இருக்கும்.உலகின் பல நாடுகளிலும் இதை மெக் டொனால்டு விற்பனை செய்து வருகிறது. உணவுகள்கூட சில நேரம் பொம்மை வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில் ஹேப்பி மீல் உணவுகள் குழந்தைகளின் உடல்நலனை கெடுப்பதாக பிரேசிலில் முறைப்பாடு எழுந்தது. தொடர்ச்சியாக ஹேப்பி மீல் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.வீட்டு உணவுகளில் இருந்து அவர்களை அகற்றி அடிமையாக்குகிறது என்று கூறப்பட்டது. இதையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சாபாலோ நீதிமன்றம் மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவிடம் ஆயுத தளவாடங்கள் வாங்கும் நாடுகளின் பட்டியல்: ஆப்கான் முதலிடம்.
அமெரிக்காவிடம் இருந்து ஆயுத தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகளின் பட்டியலை இராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள் முறைப்படி அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் மேற்பார்வையில், இராணுவப் பாதுகாப்பு கூட்டுறவு நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்கப்படும்.இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆப்கான் இராணுவம் 540 கோடி அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள தைவான் 490 கோடி அமெரிக்க டொலர்களுக்கும், மூன்றாவதாக இந்தியா 450 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன.அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன.
யூரோவைக் காப்பாற்ற கடைசி வாய்ப்பு: சர்கோசி.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, ஐரோப்பாவின் பழமைவாதிகள் அனைவரும் பிராங்கோ ஜேர்மனின்(Franco-German) திட்ட முன்மொழிவுகளை ஆதரிப்பதே யூரோவைக் காப்பாற்ற இறுதியான வழியாகும் என்று கூறினார்.
மார்ஸெய்லி நகரத்தில் நடைபெற்ற ஐரோப்பிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் பேசும்போது சர்கோசி இக்கருத்தைத் தெரிவித்தார். இந்த ஐரோப்பிய மக்கள் கட்சியுடன் பிரிட்டனின் ஆளுங்காட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சேர்வதில்லை.
பல போர்களில் பிரான்சும், ஜேர்மனியும் இதற்கு முன்பு மோதிக்கொண்ட போதும், இப்போது காலத்தின் தேவை கருதி இணைந்து சிந்திக்கத் தொடங்கியுள்ளது. பல வேதனையான விட்டுக் கொடுத்தல்களோடு தான் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தயாரித்துள்ளன என்றார் சர்கோசி.
இன்றைய யூரோ மண்டலப் பிரச்னைக்கான காரணங்களை விளக்கிய சர்கோசி, யூரோவை உருவாக்கியபோது நடந்த இரு தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அவை ஒன்று, மற்ற நாடுகளின் பொருளாதார நிலையை உறுதி செய்யாதது, அடுத்தது தயாராக இல்லாத நாடுகளையும் யூரோ மண்டலத்தில் இணைத்தது.இப்போது இந்த யூரோ பிரச்னையைத் தீர்க்க யூரோ மண்டலத்தில் இணைந்துள்ள நாடுகள் யாவும் ஒருமுகமாகச் சிந்தித்து, ஓர் ஒழுங்குமுறையுடன் தீர்வுகளை செயல்படுத்த முன்வரவேண்டும் என கூறினார்.
அணு கதிர் வீச்சு பாதிக்கப்பட்ட நீரை கடலில் கலக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்து வைக்க இடம் இல்லாததால் குறிப்பிட்ட அளவு நீரை கடலில் கலக்க திட்டமிடப்பட்டது.ஆனால் அந்நாட்டு மீன் பிடி கூட்டுறவு நிறுவனங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இத்திட்டமானது கைவிடப்பட்டது.
இதுகுறித்து டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் (Tokyo Electic Power) பொது மேலாளர் கூறுகையில், கூடுதல் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு அந்த தண்ணீர் மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டு குளிரூட்ட உபயோகிக்கப்படும் என்றார்.கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமாவின் டச்சி அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் காகிதங்களுக்கு கட்டுப்பாடு.
ஸ்பெயினில் பள்ளி மாணவர்கள் கழிவறைகளுக்கு பயன்படுத்தும் காகிதங்களை அரசே வழங்கி வருகிறது. தற்போது அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கழிவறைகளுக்கு உபயோகப்படுத்தும் காகிதங்களையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காகிதங்களிலும் சிக்கன நடவடிக்கை அவசியம் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பயன்பாட்டை கணிசமாக குறைக்குமாறு பள்ளி நிர்வாகங்களை அரசு கேட்டுள்ளது. ஒரு மாணவனுக்கு மாதம் ஒன்றுக்கு 25 மீற்றர் மட்டுமே வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.இத்தகைய சிக்கன நடவடிக்கைகளால் நலிவடைந்துள்ள பொருளாதாராம் விரைவில் சீரடையும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது.
யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு வழியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளில் 23 நாடுகள் மட்டுமே இத்தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளன.பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று மற்றும் இன்று(08.12.2011, 09.12.2011) ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூடி யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர்.
முதல் நாள் மாநாட்டில் குறிப்பிடத்தக்க முடிவு எட்டப்படவில்லை. ஆனால் பிரிட்டன் சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் ஜேர்மனியும், பிரான்சும் தெரிவித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என அந்நாட்டின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.ஆனால் இன்று நடந்த மாநாட்டில் அதை எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அப்பாற்பட்டு நாடுகளுக்கிடையிலான மற்றொரு ஒப்பந்தமாக அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி,
1. ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்கள் ஆண்டு வரவு செலவு திட்டம் மற்றும் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. பொதுக் கடன் ஜி.டி.பி.யில் 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால் தன்னிச்சையாகப் பொருளாதாரத் தடைகள் அந்நாடுகளின் மீது விதிக்கப்படும்.
3. இந்த விதிகள் அந்தந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில் திருத்தங்கள் மூலம் சேர்க்கப்பட வேண்டும்.
4. யூரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம்(European stability Mechanism) 2012 ஜூலை மாதம் முதல் செயல்படத் துவங்கும்.
5. தற்போதைய அதன் 500 பில்லியன் யூரோ நிதி அதிகரிக்கப்படும்.
6. கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் யூரோ மண்டல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு(ஐ.எம்.எப்) கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கும்.
இந்த பரிந்துரைகளை ஐரோப்பிய கூட்டமைப்பின் 23 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன் இதில் இருந்து விலகி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.ஹங்கேரி, செசன்யா, சுவீடன் நாடுகள் தங்கள் நாடாளுமன்றத்தில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF