Thursday, December 1, 2011
நம்பிக்கைதானே வாழ்க்கை!
அனுமானம், அனுபவம் என்கிற இரண்டு தண்டவாளங்களில் அழகாக நகர்கிறது எம் வாழ்க்கையெனும் புகையிரதம். கடந்து விட்ட கணப் பொழுதுகள் அனுபவங்களாகவும், கடக்க வேண்டிய மணித்துளிகள் அனுமானங்களாகவும் விரிய, தொடர்கிறது எம் வாழ்க்கைப் பயணம், நின்று விசாரிக்க நேரமில்லை.
நன்கு ரசிக்க மனமுமில்லை. கால இயந்திரச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில் நம்பிக்கை என்ற அந்த ஒற்றை ஒளிக்கற்றையை மாத்திரம் பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.நாளைப் பொழுதில் நாமிருப்பது உண்மையில்லை. வேளைக்கு வேளை விளையாடு சிறு மனமே!" என்றார் கவியரசர் கண்ணதாசன். அப்பட்டமான உண்மை அது. ஆனால் நாளைப் பொழுதில் இருப்போம் என்ற நம்பிக்கையை மட்டும் நாம் இன்னும் இழக்கவில்லை.நம்பிக்கைதானே வாழ்க்கை!
கருவிலே சிதையாமல் உருவிலே குறையாமல் பிறக்கும் என் குழந்தை என்ற உலகத்துத் தாய்மார்களின் நம்பிக்கை தானே நாம்! அந்த நம்பிக்கையை நாம் இழந்து விடுவோமா? அதை எம்மால் இழக்கத் தான் முடியுமா? முடியாது! அதற்காக எம்மால் எல்லாவற்றையும் நம்பமுடியாது.நட்சத்திரங்கள் மின்னுகின்ற அந்தப் பரந்த வானம் இடிந்து எம் தலை மீது விழுமென்று எம்மால் நம்ப முடியாது. ஆனால் நாமும் ஒரு நட்சத்திரமாக உலகில் மின்ன முடியும் என்று நம்ப முடியும். திடீரென்று அற்புதம் ஒன்று நிகழும் என்பதை எம்மால் நம்ப முடியாது.ஆனால் நிகழ்ந்த அற்புதங்களை நம்ப முடியும்.
உலகின் சகல விடயங்களும் நம்பிக்கையின் பெயரிலேயே நடைபெறுகின்றன. நாம் அறிந்தோ அறியாமலோ எமது சகல காரியங்களையும் நம்பிக்கையின் பேரிலேயே செய்கிறோம், கொடுத்த பணத்திற்கு மீதிப்பணம் தருவான் என்று இடைப்பட்ட நேரத்தில் சில்லைறைக் கடைக்காரன் மீது வைக்கும் நம்பிக்கை முதல், இறுதிக்கடன் செய்வான் என்று வாழ்க்கை முழுவதும் மகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வரை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கை யோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் பலவற்றில் நம்பிக்கை வைக்கிறோம். பலரில் நம்பிக்கை வைக்கிறோம். சில சமயங்களில் ஏமாந்து போகிறோம். ஏமாற்றப்படுகிறோம்.
"வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை: ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது."
எல்லாவற்றையும் நம்புபவன் ஆபத்தானவன். எதையுமே நம்பாதவன் அதைவிட ஆபத்தானவன். நம்பிக்கை முதலில் நம்மிடத்தில் இருக்க வேண்டும். ஆனால் நாம் முதலில் எம்மில் நம்பிக்கை வைக்கிறோமா? அந்த தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறோமா? இந்த உலகின் வரலாறு, தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் வரலாறு என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை.தன்னம்பிக்கையிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது. அந்த ஆற்றல் தான் நடக்க முடியாது என நாம் நினைத்திருந்த பல காரியங்களை நடக்கச் செய்திருக்கிறது. உலக வரலாற்றுப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கனவு கூட கண்டிருக்க முடியாத அறிவியல் யுகத்தில் இன்று நாம் நிற்கின்றோம். விஞ்ஞானிகளின் தன்னம்பிக்கை விண்வெளி வரை தன் ஆற்றலை வெளிப்படுத்தி யிருக்கிறது. ஆனால் தனிமனிதகளாகிய எமது தன்னம்பிக்கை எதுவரை இருக்கிறது? உலகின் எட்டாவது அதிசயத்தை அறிந்த பின்னும் நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்போமா?அந்த எட்டாவது உலக அதிசயம்! அது என்ன பொருளா? இல்லை! இல்லை' தன்னம்பிக்கையின் மொத்த வடிவாய் உருவெடுத்த ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சரித்திரம்! ஆம் அவள் தான் ஹெலன் கெல்லா. அவளது வாழ்க்கையைப் படிக்கும் போது உச்சி முதல் உள்ளங்கால் வரை மயிர்சிலிர்க்கும். எம் உயிர் சிலிர்க்கும்.அவளது வாழ்க்கையை உணரும் போது எம்மை நினைத்து எமக்கு வெட்கம் தான் வரும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்! அவளது கண்கள் இரண்டும் பார்க்காது. காதுகள் இரண்டும் கேட்காது, வாய் பேசாது, இறைவனின் படைப்பில் இளவயதிலேயே அவளில் மனிதம் செத்துவிட்டிருந்தது. ஜீவன் மட்டும் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க, தனது உணர்வுகளை மற்றவர்களுக்கு எவ்வளவும் புரிய வைக்க முடியாத ஒரு இருண்ட உலகத்தில் தனியாக அவள் மட்டும்.அப்போதுதான் ஸல்லிவன் என்ற ஆசிரியை அவளுக்கு கிடைத்தார். மூன்று புலன்களற்ற ஹெலனுக்கு தன்னால் கற்பிக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை ஸல்லிவனுக்கு இருந்தது. வார்த்தை வார்த்தையாக ஹெலனின் கையில் எழுதிக் காட்டித்தான் தன் கற்பித்தலைத் தொடங்கினார். ஸல்லிவனின் சலிக்காத தன்னம்பிக்கை ஹெலன் என்னும் சாதனையாளரை உலகிற்குக் காட்டியது. அவர் மட்டும் ஹெலனுக்கு ஆசிரியையாகக் கிடைக்காதிருந்தால் ஹெலன் என்ற அற்புத சாதனையாளரை உலகம் இழந்து போயிருக்கும்.எழுத்தாளராய், பேச்சாளராய் அரிய சாதனைகள் நிகழ்த்தி, அரிய வழிகாட்டும் நூல்கள் பல எழுதி, எண்பத்தெட்டு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்த உலகின் எட்டாவது அதிசயம் என்று பாராட்டப் பெற்றார் ஹெலன்.
'வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது" என்று சொன்ன ஹெலன், உலகெங்கும் பார்வையற்றோர், செவிப்புலனற்றோர் பள்ளிகள் திறக்கவும் அவர்களுக்கு உதவவும் ஒன்றரைக் கோடி ரூபாய் நிதியுடன் 'ஹெலன் கெல்லர் நிதி' என்று தொடங்கி, அதிலிருந்து கிடைத்த தொகைகளை மேற்படி பள்ளிகளுக்கு வாரி வழங்கினார்.பார்வை யற்றவர்களுக்கென்று தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி, உலகம் முழுவதும் அதற்கு நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். இப்படித் தன் இறுதிநாள் வரை தைரியமூட்டி, அவர்களும் தன்னைப் போல் மீட்சி பெற உழைத்தார்.பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்திகளில் ஒன்றை இழந்தாலும் மனமுடைந்து மூலையில் முடங்கிப் போகும் எம்மில் பலருக்கு மத்தியில் ஹெலன் கெல்லர் மூன்றையுமே இழந்தும் அவள் படைத்த சாதனைதானே தன்னம்பிக்கையின் வித்து, அதன் ஆதர்ஷ சக்தி! உடல் ஊனமுற்றிருந்தாலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது அவளது ஆத்மா, நினைக்கவே உடல் புல்லரிக்க வில்லையா? உயிர் துடிக்கவில்லையா? எல்லாவற்றிற்கும் என்ன காரணம்? ஒரு சொல்லில் சொல்வதென்றால்.
தன்னம்பிக்கை!
அவள் பட்டபாட்டை நினைக்கும் போது எமது துன்பங்கள் அவளது கால் தூசியும் பெறாது என்பது புரியும். ஆனால் அவளுக்குள் ஜீவசக்தியாக ஒளிர்ந்து கொண்டிருந்தது வாழ வேண்டும் என்ற நம்பிக்கை! சாதிப்பேன் என்கின்ற நம்பிக்கை! மொத்தத்தில் தன்னம்பிக்கை!!'வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணர வேண்டும் அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாகச் செய்ய முடியும்' என்று எழுதினார் அவர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF