கணணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை(Keyboard) பல வகைகளில் வெளிவருகிறது. அதில் நிறுவனம் தயாரித்தபடி குறிப்பிட்ட அமைப்பில் தான் விசைகள் அமைந்திருக்கும்.
நிறைய பேர் கணணியைப் புதியதாக பயன்படுத்தும் போது விசைப்பலகையின் அமைப்பு அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறதென தேடிப்பிடித்து அழுத்திக் கொண்டிருப்பார்கள்.
நமக்குப் பிடித்த இடத்தில் குறிப்பிட்ட விசைகள் இருந்தால் தட்டச்சிட எளிமையாக இருக்குமே என்று நினைப்பீர்கள். உங்களிடம் ஒரு விசைப்பலகையை பிடித்தமாதிரி வடிவமைக்கக் கொடுத்தால் சந்தோசமாக இருக்குமல்லவா? அதைத்தான் செய்கிறது KeyTweak என்ற இலவச மென்பொருள்.
இதன் மூலம் நம்மிடம் இருக்கும் விசைப்பலகையில் எந்தெந்த விசைகள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று மாற்றிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் Scan Code Map ரெஜிஸ்ட்ரி செட்டிங்க்ஸ்களை மாற்றியமைத்து அதன் மூலம் நமக்குப் பிடித்தவாறு விசைப்பலகையை அமைக்க உதவுகிறது. இதனால் குறிப்பிட்ட விசையைத் தேடிக் கொண்டிருக்காமல் எளிதாகவும் வேகமாகவும் தட்டச்சிட முடியும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு விசையை Disable/Enable செய்யலாம். தேவையில்லாத பட்டன்களை அழுத்தினால் ஒன்றுமே விழாத மாதிரி செய்து விடலாம். இவை எதுவே வேண்டாம் எனில் ஒரே கிளிக்கில் எல்லாவற்றையும் Reset செய்யலாம்.
இந்த மென்பொருளில் பலவிதமான விசைப்பலகை அமைப்புகளுக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக மல்டிமீடியா விசைப்பலகையில்(Multimedia keyboards) மேல்பகுதியில் இருக்கும் மல்டிமீடியா பட்டன்களையும் விரும்பிய வேலைகளுக்கு மாற்ற முடியும்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இதில் விசைப்பலகை அமைப்பு காட்டப்படும். அதில் தேவையான விசையைத் தேர்வு செய்து Choose New Remapping என்பதில் பிடித்தமான புதிய விசையைத் தேர்வு செய்து Remap key பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் Apply பட்டனைக் கிளிக் செய்து கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்தால் விசைப்பலகையில் நீங்கள் மாற்றிய அமைப்பு வேலை செய்யும்.