எடை மற்றும் அளவு குறைவாக வடிவமைக்கப்பட்டு பெர்சனல் கணணியின் இடத்தை மடிக்கணணி, நோட்புக் கணணிகள் பிடித்தன.
மடிக்கணணிகள் தயாரித்த நிறுவனங்கள் அவற்றின் தடிமனை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து இந்த போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
சென்ற மே மாதம் நடைபெற்ற கணணி தொழில்நுட்பக் கண்காட்சியில் இன்டெல் நிறுவனம் மிக மிக எடை குறைந்த ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனில் இனி கணணிகள் வடிவமைக்கப்படும் என்று அறிவித்தது.
இது அதிக நேரத்திற்கு மின்சக்தி வழங்கும் பற்றரியைக் கொண்டு உடனடியாக புரோகிராம்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தது. இதனை அல்ட்ராபுக் கணணி என்றும் பெயரிட்டது.
இப்போது மிக மிக குறைந்த தடிமனில் அல்ட்ராபுக் கணணி என்ற பெயரில், புதியதாக கணணிகளை வடிவமைப்பதில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப் (Ultra Portable Laptop) எனவும் அழைக்கின்றனர்.
இவை தற்போது வேகமாக வளர்ந்து வரும் நோட்பேட் கணணிக்குப் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முதலில் ஆப்பிள் நிறுவனம் சென்ற ஏப்ரல் மாதத்தில் தன் ஐபேட் கணணியை வெளியிட்ட போது அதன் மெல்லிய வடிவமைப்பிலும், குறையாத பயன்பாட்டிலும் மயங்கிய மக்கள் பெரும் அளவில் அவற்றை வாங்கிப் பயன்படுத்தினர். இதனால் கணணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் நோட்பேட் கணணியைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தன.
இப்போது டேப்ளட் கணணியைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட தாகவும், அழகாகவும் இந்த அல்ட்ராபுக் கணணிகள் வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் அசூஸ்(Azus) நிறுவனம் இந்த அல்ட்ராபுக் கணணியை முதன் முதலில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது. ASUS UX21 என்ற பெயருடன் வரும் 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது கிடைக்கலாம். அநேகமாக இது ரூ.95,000 முதல் ரூ.120,000 வரையில் விலையிடப்படும்.
இதனைத் தொடர்ந்து ஏசர்(Acer) நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. அடுத்ததாக ஏசர்(Acer) நிறுவனம் Acer Aspire 3951 என்ற பெயரில் அல்ட்ராபுக் கணணி ஒன்றை விரைவில் கொண்டு வரும் எனவும் உறுதியாகத் தெரிகிறது.
அல்ட்ராபுக் கணணி வடிவமைப்பின் பின்னணியில் இன்டெல் நிறுவனத்தின் முயற்சி அதிகமாக இருக்கிறது. இதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கென 30 கோடி டொலர் நிதியகம் ஒன்றை இன்டெல் ஏற்படுத்தி ஆய்வினை மேற்கொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
2012 இறுதிக்குள் தற்போது மடிக்கணணி பயன்படுத்தி வருபவர்களில் 40% பேரை அல்ட்ராபுக் கணணிக்கு மாற்ற இன்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒரு அல்ட்ராபுக் கணணியின் தடிமன் ஒரு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும். உலோகக் கலப்பிலான வெளிப்பக்கங்கள் கொண்ட இதன் எடை ஒரு கிலோ அளவில் இருக்கலாம். 11 முதல் 13 அங்குல டிஸ்பிளே திரை கிடைக்கும். பின்புற ஒளியுடன் கூடிய கீ போர்டு, யு.எஸ்.பி. 2 அல்லது 3 வசதி கொடுக்கப்படும். இதில் டிவிடி ட்ரைவ் இருக்காது.
இந்த அல்ட்ராபுக் கணணிக்குப் போட்டியாக இப்போதே ஒன்று போர்ட்டபிள் கணணி சந்தையில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் பெயர் அல்ட்ராபுக் கணணி இல்லை என்றாலும், அதன் அனைத்து அம்சங்களும் இதில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்னும் கணணியாகும். நெடுநேரம் மின்சக்தி தக்க வைத்து தரும் பற்றரி, குறைவான தடிமன் என இந்த கணணிக்கும் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் 9 என்ற வகைக் கணணியும் இதே போன்றதே என்று எண்ணப்படுகிறது.
மேக்புக் ஏர்.சாம்சங் 9.