Sunday, September 25, 2011

இன்றைய செய்திகள்.

இந்திய பிரதமர் மன்மோகனுடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்'கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைவரம் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் : கோத்தபாய தெரிவிப்பு.
முஸ்லிம் மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை.
முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட எவரும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள், மாறாக நகரத்தினரும் மக்களினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பத்தாயிரம் கோடி ரூபா செலவில் சேரி மக்களுக்கு 35000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதுடன், இதில் ஒரு வீட்டுக்காக 30 லட்ச ரூபா செலவிடப்பட உள்ளது.சேரி வாழ்க்கை என்ற எண்ணக்கருவினை முற்று முழுதாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகங்களை அண்டிய பிரதேசங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்.
இலங்கையின் துறைமுகங்களை அண்டிய பிரதேசங்களில் தொடர்ந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நடைமுறையிலுள்ளன.அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு வழிசெய்த அவசர காலச்சட்ட விதிகள் அண்மையில் அரசாங்கத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதன்பின் நாட்டின் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டிருந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளும் தானாகவே வழக்கொழிந்து போயின.ஆயினும் நாட்டின் பல துறைமுகங்களை அண்டிய பகுதிகளில் கடற்படையினரால் அமைக்கப்பட்டிருந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, காலி, திருகோணமலை, காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்களை அண்டிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலய நடைமுறைகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத காரணத்தால் அப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இந்திய வியாபாரிகள் இருவர் கைது.
மட்டக்களப்பில் இந்திய வியாபாரிகள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியே அவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் அவர்கள் துணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே விசேட அதிரடிப்படையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இந்திய வியாபாரிகளிடம் இருந்த துணிகளும், ஒரு தொகைப் பணமும் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிக்குடி பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒபாமாவுடன் தனியாக உரையாடும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வி.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் தனியாக உரையாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சி தோல்வியுற்றுள்ளது. 
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அவருக்கு அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மஹிந்தவை அமெரிக்க அரசின் சார்பில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலhளர் றொபேட் ஓ பிளேக் மட்டுமே சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் சந்திப்பதற்கான வாய்ப்புக் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் தொடர்புகளை மேற்கொண்ட போதும் அதற்கான வாய்ப்பு இல்லை என்று பதிலளிக்கப்பட்டு அம்முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை நேற்று முன்தினம் அரச தலைவர்களுக்கான மதிய விருந்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் ஒரு சில நிமிடங்கள் மட்டும் உரையாடியுள்ளார். ஏனைய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் நடந்த இந்தச் சந்திப்பையே அமெரிக்க ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு என்ற வகையில் ஜனாதிபதி சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு நிழற்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதி மஹிந்தவை ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பங்கெடுத்துள்ள முக்கியமான நாடுகளின் தலைவர்கள்- குறிப்பாக மேற்கு நாடுகளின் தலைவர்கள் எவரும் இதுவரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அவரை சந்தித்துக் கலந்துரையாடிய நாடுகளின் தலைவர்களpல் இந்தியப் பிரதமர் தவிர ஏனையவர்கள் யாரும் அரசியல், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்லர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ள வந்துள்ள நேபாளப் பிரதமரையும், கம்போடிய அதிபரையும், ஈரானிய ஜனாதிபதி ஆகியோரை மட்டுமே இதுவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ச மீதான குற்றச்சாட்டை ஐ.நா. விவாதிக்காது!- ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி.
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கை அதிபர் ராஜபக்சவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல அதிபர் ராஜபக்சவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் நியூயோர்க் வந்திருக்கிறார்கள்.
ஐ.நா. சபையின் கூட்டத்தில் இந்திய நிலைப்பாடு பற்றியும், பொதுக்குழு விவாதிக்க உள்ள பிரச்சினைகள் பற்றியும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி.
ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு, ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு வேறு. ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும் அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவுகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை.
பெருவாரியான உறுப்புரிமை நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும்கூட முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வு பற்றியோ பிரச்சினை எதுவும் எழுப்பப்படும் சாத்தியமே கிடையாது என்று ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச பேசும்போது 95 சதவிகிதம் தமிழர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருப்பதாலும், இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் சாதிப்பதாலும் ஈழத் தமிழர் பிரச்னையோ, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியோ தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என்று தெரிகிறது. என மேலும் தெரிவித்தார் பூரி.
அரசியல் அதிகாரம் சுயலாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது : சஜித் பிரேமதாச.
அரிசயல் அதிகாரத்தை சுயலாப நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களையும், கட்சி ஆதரவாளர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
சாதாரண பொதுமக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய முடியும்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கங்களின் ஊடாக கட்சியை வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.அநேகமானவர்கள் அரசியல் அதிகாரத்தை தங்களது சுயலாப இலக்குகளைப் பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டள்ளார்.
அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல்.
6 டன் எடை கொண்ட அமெரிக்க செயற்கைக் கோள் யு.ஏ.ஆர்.எஸ் கனடாவில் விழுந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை(யு.ஏ.ஆர்.எஸ்) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.
அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும்.இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது என்று நாசா வி்ஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த செயற்கைக் கோள் கனடாவில் வந்து விழுந்து கொண்டிருப்பதாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன. பல துண்டுகளாக உடைந்து பெரும் குப்பை போல இந்த செயற்கை கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்துள்ளன.இதுதொடர்பாக ட்வீட்டர் மூலம் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. மேற்கு கனடாவில் உள்ள கல்காரியின் தெற்கில் உள்ள ஓகோடோக்ஸ் என்ற பகுதியில் இந்த செயற்கைக் கோள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது நினைவிருக்கலாம்.
அதேபோல 2001ம் ஆண்டு ரஷ்யாவின் 135 டன் எடை கொண்ட மிர் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை ரஷ்ய விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் கொண்டு போய் விழ வைத்தனர்.ஆனால் தற்போது விழுந்துள்ள அமெரிக்க செயற்கைக்கோள் எரிபொருள் தீர்ந்து போய் விட்ட காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்து அதுவாகவே விழுந்துள்ளது.


இறந்தவர்களின் மூளைகளை திருடியதாக ஆராய்ச்சி நிறுவனம் மீது குற்றச்சாட்டு.
மரணமடைந்த பின்னர் உடலுறுப்புக்களை தானம் செய்பவர்களின் மூளைகளை திருடியுள்ளதாக மேரிலாண்டிலுள்ள முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் மாதிரிகளை மாத்திரமே தாங்கள் எடுத்ததாக அந்நிறுவனம் கூறுகின்றது. தனது உடலுறுப்பை தானம் செய்த ஒருவரது மனைவியான Anne Mozing, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதில் வழக்கில் 2000 ஆம் ஆண்டு இறந்த தனது கணவருடைய உடல் சிதைக்கப்பட்டிருப்பது குறித்து மனவேதனை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.அவருடைய மூளை, கல்லீரல் மற்றும் மூளைசுரப்பிகள் என்பன தனது அனுமதியின்றி அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உணர்ச்சியற்ற வரை துன்புறுத்தியமை, மோசடி, அலட்சியமாக நடந்தமை தொடர்பில் அவ் ஆராய்ச்சி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதேவேளை நாகரீகத்தின் சாத்தியமான அனைத்து எல்லைகளுக்கும் அப்பால் செயற்பட்டதாகவும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனை மறுத்துள்ள அந்நிறுவனம் யாருடைய மூளையையும் தாம் அறிந்து பலவந்தமாக பெறவில்லை என கூறியுள்ளது.ஆராய்ச்சிகளில் பயன்படுத்துவதற்கென மூளைகளை சேகரிக்கும் வலையமைப்பொன்றை தாம் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவை கண்காணிப்பதற்காக செயற்கைகோளை ஏவிய ஜப்பான்.
ஜப்பானுக்கு அருகே வடகொரியா உள்ளது. ஏவுகணை தயாரிப்பு, அணு ஆயுதங்கள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளால் இந்த நாடு ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஆனால் இதை வடகொரியா மறுத்து வருகிறது. இருந்தும் அந்த நாடு கூறுவதை ஜப்பான் முழுமையாக நம்பவில்லை.எனவே வடகொரியாவின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.2050 கோடி செலவில் புதிய செயற்கை கோளை தயாரித்துள்ளது.இந்த செயற்கை கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ந் திகதி அதாவது 4 வாரத்துக்கு முன்பே அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் மழை காரணமாக விண்ணில் செலுத்துவது தாமதமானது.
இந்நிலையில் நேற்று அந்த செயற்கைகோள் எச்.2ஏ என்ற ராக்கெட் மூலம் தானேஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளை ஜப்பான் விண் வெளி ஆய்வு நிறுவனமும், மீட்சுபிஷி கனரக தொழிற்சாலையும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த செயற்கை கோளில் சக்தி வாய்ந்த கமெரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் புகைப்படங்கள் மூலம் தெரியவரும். இது தவிர 2 ரேடார் செயற்கை கோள்களையும் ஜப்பான் தயாரித்துள்ளது. அவை இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
நாசாவின் செயற்கைகோள் இன்று பூமியில் விழும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் துண்டு, துண்டாக நேற்றி பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன் வீழ்ச்சி வேகம் குறைந்துவிட்டதால் இன்று விழவுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை(யு.ஏ.ஆர்.எஸ்) விண்ணில் செலுத்தியது.
அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது.
இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும்.
இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் பாகங்கள் நேற்று பிற்பகல் முதல் இன்று வரை வந்து விழும் வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஏற்கனவே தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.
இதுவரை செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல் ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது. செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால் காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோளின் துண்டுகள் 3,200 பேரில் 1 நபர் மீது விழ வாய்ப்புள்ளது. அப்படி விழும் துண்டுகள் மின்னலை விட வேகமாக மேலே வந்து விழும் என தெரிகிறது. பூமியில் வந்து விழும் செயற்கைக்கோளின் துண்டுகளையும் யாரும் தொட வேண்டாம்.
செயற்கைக்கோள்களின் துண்டுகள், ராக்கெட்கள், மற்ற பொருட்கள் என இதுவரை 22,000க்கும் மேலான வஸ்துக்களை பூமி தன்னிடம் ஈர்த்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் விழும் மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுதான்.
தற்போது விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பினால் அவற்றை கட்டுப்படுத்த எரிப்பொருள் மீதம் வைக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பூமிக்குத் திரும்பும் செயற்கைக்கோள்களின் அசைவுகளை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த டிடு மொல்சன் என்பவர் கூறுகையில்,"கடந்த 2004ல் பூமிக்கு திரும்பிய ரஷ்ய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பெரியளவில் பார்த்திருக்கிறேன். அது மிகப் பெரிய வால்நட்சத்திரம் போல இருந்தது" என்றார்.
பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும்: சீனா.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று சீனா ஆதரவு குரல் கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதன்பின் அமெரிக்கர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க அதிகாரிகள், வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ உதவி வருவதாக அமெரிக்க ராணுவ தளபதி மைக் முல்லன் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தானில் அமெரிக்கா அத்துமீறி நடக்க கூடாது.பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகளவில் பாகிஸ்தான் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளது. அதை மறந்து விடக் கூடாது.
எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் மற்ற நாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றார். சீனாவின் இந்த கருத்து பாகிஸ்தானுடனான நெருக்கத்தையும் அமெரிக்காவுக்கு எதிரான போக்கையும் காட்டுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஏமன் அதிபர் சலே நாடு திரும்பியதால் பரபரப்பு.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே நேற்று நாடு திரும்பியதை உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஏமன் நாட்டில் 33 ஆண்டாக பதவியில் உள்ள அதிபர் சலே ராஜினாமா செய்ய கோரி உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரக்காரர்களை ஒடுக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சலேவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்களும் களத்தில் இறங்கினர். இந்நிலையில் கடந்த ஜூன் 3ம் திகதி தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை மீது நடந்த தாக்குதலில் சலேவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அதன்பின் சிகிச்சைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
ஏமனில் கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் திடீரென அவர் நேற்று நாடு திரும்பினார். இது பல நாட்டு தலைவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிபர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,"அதிபர் சலே உடனடியாக பதவி விலகும் திட்டம் இல்லை. நாடு திரும்பியவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இப்போதுள்ள பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி என்று அவர் தெரிவித்துள்ளார்" என்றனர்.
ஏமனில் அதிபர் சலேவிடம் இருந்து அதிகாரத்தை மாற்ற அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் சலே நாடு திரும்பியது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் சனாவில் தொடர்ந்து கலவரக்காரர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. சலேவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதனால் மோதல் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக ஆபத்தான நிலையில் உலக பொருளாதாரம்: உலக வங்கி தலைவர் தகவல்.
உலக பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்து மீண்டெழுவது, அதற்கான நடவடிக்கை எடுப்பது பற்றிய மாநாடு வாஷிங்டனில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் பேசுகையில், நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி மிகவும் சிக்கலாகவே உள்ளது. அதனால் தற்போது உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடி சிக்கலை தீர்க்கல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று ராபர்ட் எச்சரித்தார். மேலும் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே பேசுகையில், இதே கருத்தை வலியுறுத்தினார்.
ஹக்கானி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கை.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஹக்கானி பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தலைமை அட்மிரல் மைக் முல்லன், "ஹக்கானி பயங்கரவாத வலையமைப்பு, பாகிஸ்தான் ராணுவ உளவு நிறுவனத்தின் கரங்களாக செயல்படுகிறது" என்றார்.முல்லனின் இந்தக் கூற்றையடுத்து பாகிஸ்தான் மீதும் ஹக்கானி அமைப்பு மீதும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சராமாரியாக குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து பாதுகாப்புப் பணிகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் தலைவர், செனட்டர் காரல் லெவின் தெரிவித்ததாவது: ஹக்கானி அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகிறேன்.ஆனால் அதை செய்ய நீண்டதொரு தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களால் அமெரிக்கர்களை தாக்க முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமியாக உள்ளது.
குறிப்பாக அந்நாட்டில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான் ஹக்கானிகளின் தளமாக உள்ளது. இது ஆப்கானுக்கும் அங்குள்ள நேட்டோ படையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் அந்த பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. எனவே அமெரிக்கர்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பொறுப்பேற்க வேண்டும்.பாகிஸ்தானுடன் சுமுக உறவு நிலவ வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் தனது மண்ணை தளமாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று லெவின் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருப்பதை ஏற்க முடியாது. ஹக்கானிகள் அமெரிக்கர்களைக் கொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு உள்ளது.எனவே இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். கொள்கை அளவில் மட்டுமல்ல. அந்நாட்டுக்கான நிதி உதவியிலும் மாற்றம் வேண்டும் என்று மூத்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் தெரிவித்தார்.
பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஹக்கானி அமைப்புக்கு இருக்கிறது. எனவே உடனடியாக அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று உளவு விவகாரங்களுக்கான செனட் கமிட்டியின் தலைவி டையானே பின்ஸ்டெய்ன் தெரிவித்தார்.
அந்நாடு நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஒத்துழைக்கிறது என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று மூத்த செனட் உறுப்பினர் சூசன் கொலின்ஸ் தெரிவித்தார்.சூசன் தலைவராக உள்ள செனட் ஒதுக்கீடு கொமிட்டி பாகிஸ்தானுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகள் மசோதாவைக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசு.
அவுஸ்திரேலிய அரசு புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர்.இந்திய மாணவர்கள் மீது நடந்த இனவெறித் தாக்குதலாலும், அவுஸ்திரேலிய அரசின் விசா கெடுபிடிகளாலும் இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா வருவோர் அங்கேயே தங்கி ஓட்டல், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் பகுதி நேர வேலையில் சேர்ந்து விடுகின்றனர்.நள்ளிரவில் வேலை முடித்து வரும் இவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தை பறித்துச் செல்வது கடந்த ஆண்டுகளில் அதிகமாகக் காணப்பட்டது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியா வரும் இளைஞர்கள் கணிசமான பணத்தை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கைச்செலவுக்காக பல்வேறு இடங்களில் வேலை செய்வதைத் தவிர்க்கும் நோக்குடன் புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.அவுஸ்திரேலியாவில் படிக்க வரும் மாணவர்களின் வங்கி சேமிப்பில் 18 லட்ச ரூபாய் இருப்பதாக நிரூபித்தால் தான் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் இந்த நடைமுறையால் வசதி குறைந்த மாணவர்கள் அவுஸ்திரேலியா செல்வது தடுக்கப்பட்டு விட்டது. எனவே விசா கெடுபிடிகளைத் தளர்த்தும் படி பல்கலைக்கழகங்கள் அந்நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டன. இதையடுத்து அரசு விசா நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் முன்னாள் அமைச்சர் மைக்கேல் நைட் குறிப்பிடுகையில்,"அவுஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பின் மேற்படிப்புக்காக கூடுதலாகத் தங்கிக் கொள்ள தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் வங்கிக் கையிருப்பு கணிசமான அளவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியா வரும் மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமே வருகிறோம். வேலை செய்வதற்கு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, சீனா அபார வளர்ச்சி பெறும்: அமெரிக்க நிதி அமைச்சர்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என அமெரிக்காவின் நிதி அமைச்சர் திமோதி கெய்த்னர் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமெரிக்க நிதி அமைச்சர் திமோதி கெய்த்னர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 10 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் வியத்தகு வளர்ச்சியை காணும் என்றார். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.வரும் 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இருமடங்காக அதிகரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் திமோதி கெய்த்னர் கூறினார்.
ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளதோ, அதற்கேற்ப அமெரிக்காவின் ஏற்றுமதி வளர்ச்சியும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.அமெரிக்காவில் விவசாயம், தயாரிப்புத் துறை, உயர் தொழில் நுட்பம், சேவைதுறை போன்ற அனைத்தும் நன்கு செயல்பட்டு வருகின்றன.
நிதி நெருக்கடி, பொருளாதார தேக்க நிலை போன்றவற்றால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றிலிருந்து எளிதாக மீள முடிந்ததற்கு அமெரிக்கா நிதி நிர்வாக முறைகள்தான் காரணம் என்று திமோதி கெய்த்னர் குறிப்பிட்டார்.
ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை சேதப்படுத்திய ஆசாமி.
போதையில் மீன்பிடி படகு ஓட்டி வந்தவர் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மீது மோதினார்.
அதிர்ஷ்டவசமாக கப்பல் தப்பியது. இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாஸ்கி-கம்சட்கா கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய செயின்ட் ஜார்ஜ் தி விக்டர் என்ற நீர்மூழ்கி கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது மீன்பிடி படகு ஒன்று நீர்மூழ்கி கப்பல் மீது திடீரென மோதியது.
வேறு ஒரு படகு மீது மோதுவதை தவிர்க்க திடீரென திருப்பியதால் இந்த விபத்து நடந்தது. மீன்பிடி படகை ஓட்டி வந்தவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக நீர்மூழ்கி கப்பல் லேசான சேதத்துடன் தப்பியது.
அதனால் கதிர்வீச்சும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. சேதம் அடைந்த நீர்மூழ்கி கப்பலின் வெளிப் பகுதியை பழுதுபார்க்க அனுப்பப்பட்டுள்ளது.இந்த கப்பல் கடந்த 80ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து கடந்த 20ம் திகதி நடந்தாலும் இப்போது தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளை சாடும் ஈரான் அதிபர்: அமெரிக்கா வெளிநடப்பு.
ஐ.நா பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக் கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்க முடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதே நேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.
தன்னுடைய உரையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்தாமல் அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.
தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன.
தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.
நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
அவரது உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி மார்க் கோர்ன்பிளெப் தன்னுடைய மக்கள் பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை நிஜாத் கோட்டை விட்டு விட்டார். இழிவான சதிக் கோட்பாடுகளை ஐ.நா பொதுச் சபையில் அவர் அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜான் போல்டன்,"ஈரான் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதையும் கொல்லப்படுவதையும் தடுக்க அமெரிக்கா தவறி விட்டது" என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF