இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் ஒரு முறை ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையே பிரேரணைகளை சமர்ப்பிக்கும் இறுதி திகதி என்பதன் காரணமாகவே இலங்கை இந்த நம்பிக்கையை கொண்டிருந்தது.
எனினும் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றுக்கு கனடா இறுதிநேரத்தில் முயலக்கூடும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகும் நிலையில் அதனை எதிர்வரும் 19 வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற யோசனையை கொண்டு வர கனேடிய குழு முயற்சித்து வருகிறது.
அதனை தற்போது நடைபெற்று வரும் 18 வது அமர்வின் எதிர்க்கால அட்டவணையில் சேர்க்க கனடா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் இதனைத் தடுப்பதற்காக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் மீண்டும் ஜெனீவாவுக்கு சென்று கலந்தாலோசனைகளை நடத்தி வருவதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பாதுகாப்பு சட்டம் அமுல்.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 19 வது மனித உரிமைகள் பேரவை கூட்டத்துக்கு முன்னர் இதனை மேற்கொள்ள அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் காட்டிவரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த சட்டத்தை கொண்டு வரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக், இலங்கையில் அவசரக்கால சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
சட்டமா அதிபர் ஈவா வணசுந்தரவும், இலங்கை அரசாங்கம், அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ளமை போன்ற பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர விரும்புவதாக குறி;ப்பிட்டுள்ளார்.இது தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ளது.
வடமராட்சியில் தங்கப் புதையல் கொள்ளை?
கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு அண்மையில் நிலத்தை அகழ்ந்து கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட மூன்று கூலித் தொழிலாளர்கள், பாரிய பித்தளைக் கிடாரம் போன்ற கொள்கலன;; ஒன்றை மீட்டதாகவும் அதனை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வேடிக்கை பார்க்க முற்பட்ட சமயம் அடித்து விரட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பின்னர் அவர்கள் அதனை அங்கு நின்ற உழவு இயந்திரத்தில் கல்லுடன் சேர்த்து ஏற்றிச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட சிறுவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கல்லுடைக்கும் தொழிலாளர்களிடம் இது பற்றி விசாரிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் மழுப்பலான பதில்களையே அளித்துள்ளனர். மேலும் அதுகுறித்து விசாரித்த நபரொருவரைத் தாக்கவும் முற்பட்டுள்ளார்கள்.
அது மாத்திரமன்றி பிரஸ்தாப பித்தளை கொள்கலன் கிடைக்கப் பெற்றதன் பின்பு அத் தொழிலாளர்கள் அப் பகுதியில் கல்லுடைப்பில் ஈடுபடவில்லை என்றும் அவர்களது குடிசைகளில் அவர்களைக் காணவில்லை என்றும் தெரிய வருகின்றது.
அவர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளனர். அதன் காரணமாக அத்தொழிலாளார்கள் பாரிய தங்கப் புதையல் ஒன்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் மத்தியில் பலமான சந்தேகம் ஒன்று பரவியுள்ளது.
அம்பாறையில் எஸ்.எஸ்.பி.தர பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றார் சார்ஜன்ட்!
துப்பாக்கிப் பிரயோகம் செய்த சார்ஜன்ட் பின்னர் தனக்குத் தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் தற்போது, அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்திருந்தால் வெளிநாடுகள் ஏன் தலையிடுகின்றன? : மஹிந்தவிடம் மன்மோகன் கேள்வி.
இலங்கை தமிழர் பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக கையாளுமாக இருந்தால், வெளிநாட்டு தலையீடுகள் அவசியம் இல்லை என்று மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து சந்தித்தனர்.
இதன்போது வெளிநாட்டு தலையீட்டை தடுக்க இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்க வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறியதாக இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற உரையின்போது இலங்கையின் பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாகவே மன்மோகன்சிங் தமது கருத்தை கூறியதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தாருஸ்மான் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூனிடம் மஹிந்த பிரஸ்தாபம்.
இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது இலங்கையில் இடம்பெற்றதாக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அல்லாது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே தருஸ்மன் நிபுணர் குழு நிமிக்கப்படுவதாக அன்றைய காலகட்டத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறுதியளித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையே தற்போது ஜனாதிபதி நினைவுபபடுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்றைய தினம் பான் கீ மூனைச் சந்தித்தபோது இதனை ஜனாதிபதி நினைவுபடுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அங்குள்ள பாதுகாப்பு படைப்பிரிவினரில் பலர் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் பாதுகாப்பு நடவடடிக்கைகளிலேயே பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் அதிக முக்கியத்துவம் வழங்குவதாக ஜனாதிபதி பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்த நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பணத்திற்கு அடிமையான ஓர் ஆட்சியே நிலவுகின்றது – ரணில்.
சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை.பணத்தை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கோ நகரங்களுக்கோ சேவை கிடைக்கப் போவதில்லை.
தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா தான்: ரப்பானி குற்றச்சாட்டு.
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா தான் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத இயக்க தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது.அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்து பேச அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் இஸ்லாமாபாத் வந்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.
ஆனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்து இருந்த போது முஜாகிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா தான்.
அவர்களுக்கு பல ஆண்டுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவித்தது அமெரிக்கா. இப்போது தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானை பலிகடா ஆக்க நினைப்பது தவறு.
பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை இருநாடுகளும் பின்பற்றுவது நல்லது. பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி.
ஈராக்கின் கர்பாலா நகரில் நிகழ்ந்த தொடர் கார் குண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈராக்கின் தலைநகர் பாக்தாத் நகரில் 90 கி.மீ தொலைவில் உள்ள கர்பாலா நகரில் அரசு கட்டடம் ஒன்று உள்ளது.
இங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள பொலிஸ் ஸ்டேஷனிலும் இரு முறை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதலில் 12 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சோமாலிய தலைநகரில் ஐ.நா அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு.
சோமாலியா தலைநகர் மொகாடிசு நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான சுரங்க நடவடிக்கை அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சின்னா பின்னாமானது. இதில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.
நியூயார்க் நகரில் ஐ.நா சபை பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் வேளையில் சோமாலியாவில் ஐ.நா வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
பிணையக் கைதிகளை விடுவிப்பதற்காக லஞ்சம் கொடுத்த கனடா: விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்.
மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள பிணையக்கைதிகளை விடுவிக்க கனடா தீவிரவாதிகளுக்குக் கையூட்டுக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அது முக்கியமான நேசநாடுகளின் பாதுகாப்பை உடைத்துவிட்டது என்றும் இது அப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கலாமென்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது ஆப்ரிக்காவின் பகுதிகளில் மேற்கத்தியர்களை இலக்குவைப்பதைத் தொடரச்செய்வதை ஊக்குவிக்கும் என்ற அச்சத்தை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்கர்களுக்கெதிராக தற்கொலைக் கார்க்குண்டுத் தாக்குதல்களையும் இது மேற்கொள்ள வைக்கலாமென்றும் கூறினர்.
கனேடிய அதிகாரிகளான றொபேட் பவுலரும் லூயிஸ் கேயும் புதிரான முறையில் விடுவிக்கப்பட்டு 2½ வருடங்களாகியிருந்தது. எவ்வாறு இவர்கள் விடுவிக்கப்பட்டனரென பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பரிடம் ஊடகங்கள் அப்போது வினவியபோது தாம் கையூட்டு எதையும் கொடுக்கவில்லை என்று அவர் மறுத்திருந்தார்.
ஆனால் மேற்கு ஆபிரிக்காவிலிருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வேறுவிதமான தோற்றத்தை இது கொடுத்திருந்தது. ஒட்டாவா தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுத்துத்தான் பணயக்கைதிகளை விடுவித்ததாக மாலி நாட்டிற்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளில் கனடாவும் ஒஸ்ரியாவுமே செயற்படுவதாகவும் இது ஏனைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைப் பாதிக்குமெனவும் எச்சரித்தனர்.
பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் கனடா வருகையினால் இரு நாடுகளும் ஆபிரிக்காவில் இயங்கும் அல்கைதா அமைப்புகளை நிதிநிலைமைகளால் முடமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.எனினும் திரு.ஹாப்பரின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்ட இத்தகவல்பற்றி அரசு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காது என்றார்.
அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக லைலா மீது குற்றச்சாட்டு.
பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கோலா நாட்டு அழகி லைலா லோபஸ் போட்டியில் கலந்துகொள்ள போலிச் சான்றிதழ் சமர்பித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
அண்மையில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் அங்கோலாவைச் சேர்ந்த லைலா லோபஸ்(25) பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் இங்கிலாந்தில் நடந்த தகுதிச் சுற்றில் கலந்து கொள்வதற்காக போலியான கல்விச் சான்றிதழ் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
லைலா அங்கோலாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் வாழும் அங்கோலா நாட்டவருக்கான அழகிப் போட்டியில் லைலா கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்று அர்ஜென்டினா நாளிதழில் செய்தி வெளியானது.
சார்லஸ் முகானோ என்பவர் தான் லைலா இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாக போலிச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் இங்கிலாந்தில் நடந்த தகுதிச் சுற்றில் லைலாவை தேர்ந்தெடுப்பதற்காக முகானோ லஞ்சம் கொடுத்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரபஞ்ச அழகி போட்டி நடத்தும் அதிகாரிகளும், லைலாவும் மறுத்துள்ளனர்.
அங்கோலாவில் இருந்து முதன்முதலாக பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லைலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் மாற்று அரசு அமைவதில் கருத்து வேறுபாடு.
லிபியாவில் கடந்த 42 ஆண்டாக சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சி நடந்தது.
இதையடுத்து அங்கு தேசிய மாற்று கவுன்சில் உருவானது. இந்த கவுன்சிலை சேர்ந்தவர்கள் கடாபியின் ராணுவத்தை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தினர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் குடும்பத்துடன் கடாபி தலைமறைவானார்.
இந்நிலையில் கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல் கூறியதாவது: லிபியாவின் சில பகுதிகள் கடாபியின் ராணுவத்தினர் ஆதிக்கத்தில் உள்ளன.
எல்லா பகுதிகளையும் கடாபி ஆதரவாளர்களிடம் இருந்து விடுவித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இதற்கிடையில் மாற்று அரசு அமைக்கும் விஷயத்தில் கவுன்சில் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.எனவே புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய அரசில் மலைவாழ் மக்கள் உட்பட அனைத்து பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள்.
ஏமன் அதிபர் நாடு திரும்பியதால் பரபரப்பு: ஒரே நாளில் 78 பேர் பலி.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே நாடு திரும்பிய நிலையில் உள்நாட்டு கலவரம் அதிகரித்தது. இதில் 40 பேர் நேற்று பலியாயினர்.ஏமனில் கடந்த 32 ஆண்டாக சர்வாதிகார ஆட்சி நடத்தும் அதிபர் சலே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது.
அவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் அதிபர் மாளிகை சேதம் அடைந்தது.இதில் தீக்காயம் அடைந்த சலே சவுதி அரேபியாவில் 3 மாதம் சிகிச்சை பெற்றார். இவர் நேற்று முன்தினம் நாடு திரும்பியதால் கலவரக்காரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
தலைநகர் சனாவில் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சலேவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் நடந்த மோதலில் நூற்று 40 பேர் கொல்லப்பட்டனர்.நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சலே நாடு திரும்பியவுடன், சண்டை நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஒரே நாளில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் மற்றொரு செயற்கைகோள்.
பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1991ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005ம் ஆண்டு செயல் இழந்தது.
விண்வெளியில் செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை நெருங்கியது. 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் நேற்று கனடாவில் ஓகோடோக்ஸ் என்ற இடத்தில் விழுந்தது.இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த மற்றொரு செயற்கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. "ரொசாத்" என அழைக்கப்படும் இந்த செயற்கைகோள் கடந்த 1999ம் ஆண்டிலேயே செயல் இழந்து விட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக இது விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் எடையுள்ள அந்த செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனவே அது இன்னும் 5 வாரத்தில் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை நெருங்கும் போது தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்.
ரஷ்ய அதிபராக 2008ம் ஆண்டு வரை இருந்தவர் புடின். ரஷ்ய அரசியல் சட்டப்படி அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 4 ஆண்டுகள்.அதுவும் ஒருவரே தொடர்ந்து 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். 2000 முதல் 2008 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் அதிபராக புடின் இருந்தார். எனவே அவர் 2008ல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி சார்பில் மெத்வதேவ் அதிபர் பதவியேற்றார். பிரதமராக புடின் நியமிக்கப்பட்டார். புடினுக்கு ரஷ்யர்கள் இடையே தொடரும் அமோக ஆதரவையடுத்து அவரை மீண்டும் அதிபராக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் மெத்வதேவ் அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.அதில் புடின் பெயரை கட்சி பொதுக்குழு பரிந்துரைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை நேற்று ஆமோதித்த அதிபர் மெத்வதேவ்,"புடின் பெயரை கட்சி பரிந்துரைத்தால் அதை மனதார ஒப்புக் கொள்வேன்" என்றார்.
என் தந்தை நலமுடன் உள்ளார்: கடாபி மகள் தகவல்.
புரட்சியாளர்களால் விரட்டப்பட்ட லிபிய அதிபர் கடாபி நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஆயிஷா கடாபி தெரிவித்துள்ளார்.லிபிய நாட்டின் அதிபராக பல ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் கடாபி. கடந்த சில மாதங்களாக கடாபிக்கு எதிராக அந்த நாட்டில் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர்.அரசுக்கு எதிராக நடந்த புரட்சியில் கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். இதையடுத்து நாட்டிலிருந்து தலைமறைவானார் கடாபி.
இப்போது அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. கடாபி இப்போது எங்கு மறைந்து வாழ்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் தந்தை கடாபி நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஆயிஷா தெரிவித்துள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த அராய் என்னும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தொலைபேசியில் வெள்ளிக்கிழமை தொடர்புகொண்ட ஆயிஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவரது தொலைபேசிக் குரலை அராய் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
தொலைபேசி செய்தியில் ஆயிஷா கூறியுள்ளதாவது: கடாபி போன்ற தலைவரைப் பெறுவதற்கு லிபிய மக்கள் பெருமைப்பட வேண்டும். தந்தை நலமுடன் இருக்கிறார். அவர் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்.
கடாபிக்கு எதிராக புரட்சி செய்த தலைவர்களை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பொங்கியெழுந்து அவர்களை நசுக்க வேண்டும். புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் தேசத் துரோகிகள் என்றார் அவர்.லிபியாவில் புரட்சியாளர்கள் முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் ஆயிஷா கடாபி தனது தாய் சபியா, 2 சகோதரர்கள் முகமது, ஹனிபால் ஆகியோருடன் அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். மனித நேயத்துடன் அவர்களுக்கு அல்ஜீரியா நாடு அடைக்கலம் தந்துள்ளது.
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி கைது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி குலாம் ரசூல் ஷா பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பஞ்சாப் மாகாணத்தில் இனரீதியான மோதலை தவிர்க்கும் பொருட்டு லஷ்கர் இ ஜங்வி அமைப்பின் முக்கியத் தளபதியான ரசூல் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
அவர் 30 நாள் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னி முஸ்லிம் பிரிவான லஷ்கர் இ ஜங்வி அமைப்பு பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த 26 ஷியா முஸ்லிம்களை சுட்டுக் கொன்றது.இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் மாலிக் இசாக் கைது செய்யப்பட்டார்
அமெரிக்காவுடனான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாகிஸ்தான் முடிவு.
அமெரிக்காவுடனான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் சுட்டுக் கொன்றன.
தங்களுக்கு தெரிவிக்காமல் தங்கள் மண்ணில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது என பாகிஸ்தான் கருத்து தெரிவித்தது. ஒசாமாவை பாதுகாப்புடன் தங்க வைத்திருந்ததாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.இந்நிலையில் ஹக்கானி பயங்கரவாதிகளுடனான உறவை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ துண்டித்து கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக் முல்லனின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பாகிஸ்தானின் ராணுவ தளபதி கயானி கடந்த வெள்ளிக்கிழமை பதில் அளித்திருந்தார்.இந்நிலையில் பிரதமரின் யூசுப் ராஸ கிலானியின் அறிவுரைப்படி அமெரிக்காவுடனான உறவு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டம் அக்டோபர் 3ம் திகதி தொடங்கும் என பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் இப்போதைய சூழ்நிலை குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன் பிரதமர் கூறியிருந்தார். ஹக்கானி பயங்கரவாத அமைப்புடனான உறவை துண்டித்துக் கொள்ளவிட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அமெரிக்கா எச்சரித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த கிலானி, பாகிஸ்தானின் பாதுகாப்பு வலுவாக உள்ளது என்றார். நாட்டின் எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் திறன் அவற்றுக்கு உள்ளது என்றும் மக்களின் ஆதரவுடன் அவற்றை முறியடிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி.
நேபாள் நாட்டில் பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த 18 பேர் பலியாயினர்.நேபாள் நாட்டிற்கு சொந்தமான புத்தா விமான போக்குவரத்து விமானம் ஒன்று 3 விமான பைலட்டுகள், 18 பயணிகளுடன் எவரெஸ்ட் சிகரப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றது.
சுற்றுலாவை முடித்து விட்டு தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் நோக்கி சென்றது. அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் விமானக்கட்டுப்பாட்டு ரேடாரிலிருந்து மறைந்தது.
பின்னர் விமானம் மலையில் மோதி நொறுங்கி விழுந்தது. அதில் பயணம் செய்த 18 பேரும் பலியாகினர். விபத்திற்குள்ளான பகுதிக்கு மீட்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.எவரெஸ்ட் சிகரப்பகுதியில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு காத்மாண்டு திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.
2011ம் ஆண்டின் இறுதிக்குள் அணுமின் நிலைய திட்டத்தை துவக்க சீனா திட்டம்.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கதிர்வீச்சுக்குப் பின் 20க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களின் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ள சீனா இந்தாண்டின் இறுதிக்குள் மீண்டும் அந்தக் கட்டுமானத்தை துவக்க முடிவு செய்துள்ளது.
சீனாவில் தற்போது 14 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும் தனது மின் தேவைக்கு சீனா அனல்மின் நிலையங்களை நம்பித்தான் உள்ளது. இதனால் சீனா வெளியிடும் கார்பனின் அளவு அதிகளவில் இருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு அது பெரும் கேடு விளைவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
27 அணுமின் நிலையங்கள்: அதனால் 2020க்குள் 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உற்பத்தி மூலம் தயாரிக்க சீனா முடிவு செய்தது. இதையடுத்து 27 அணுமின் நிலையங்களை அமைப்பதில் சீன அரசு தீவிரம் கொண்டது.
இவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கடற்கரையோரம் அமைந்தவை. ஒவ்வொரு நிலையமும் ஆயிரம் மெகாவாட் திறனை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டவை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படுபவை.
அமெரிக்காவை விஞ்சும் தொழில்நுட்பம்: அதேநேரம் தனது சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தாண்டின் இறுதிக்குள் ஒரு அணுமின் நிலையத்தை செயல்படுத்துவதிலும் சீனா முனைப்பு காட்டி வருகிறது.
சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான சி.ஏ.பி 1400 அணு உலை அமெரிக்காவின் ஏ.பி. 1000 அணு உலையை விட அதிகளவில் மின் உற்பத்தியில் ஈடுபடும் திறன் கொண்டது. சி.ஏ.பி.யை வடிவமைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது உள்நாட்டு அணுமின் நிலையங்களை அமைக்கும் கையோடு பாகிஸ்தானுக்கும் ஒரு கிகாவாட் அணுமின் நிலையத்தை அமைத்துத் தருவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
பீதியூட்டிய புகுஷிமா: இந்நிலையில் கடந்த மார்ச்சில் ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டதும் அதன் நீண்ட கால விளைவுகள் பற்றிய ஆய்வுகளும் உலகளவில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கின.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களின் அணுமின் நிலையங்களில் துவக்க காலகட்டத்தைச் சேர்ந்தவற்றை இழுத்து மூடின. சீனா 27 நிலையங்களின் கட்டுமானத்தையும் நிறுத்தி விட்டதாக அறிவித்தது.
மீண்டும் துவக்கம்: ஆனால் நாட்டின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில் சீனாவின் சுற்றுச் சூழல் துறையின் உயர் அதிகாரி அளித்த பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது.
தேசிய மேம்பாடு மற்றம் சீர்திருத்த கமிஷனின் துணைத் தலைவர் ஷீ ஷென்ஹூவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,"மின் சேமிப்பில் குறைந்த செலவு மின் திறன் அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேம்படுத்தல், பசுமை வாயுக்களை வெளியிடுவதில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன் கூடிய அணுமின் சக்தியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கார்பன் குறைப்பில் ஈடுபாடு: கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் தொழில்நுட்பமான கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு(சி.சி.யு.எஸ்.இ) குறித்த ஆய்விலும் சீனா தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. இந்தாண்டில் மட்டும் சி.சி.யு.எஸ்.இ ஆய்வுக்காக சீனா 62.7 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
அதேநேரம் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் கட்டுமானத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் சீனா பாதுகாப்பு மற்றும் பேரிடர் தாங்கும் வலிமை குறித்த பரிசோதனைகளை இந்தாண்டின் இறுதிக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதனால் இந்தியாவில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களைப் போல சீனாவிலும் நடந்து விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு தெளிவாகவே உள்ளது.
பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை.
உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ.நா தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேற்று முன்தினம் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி பாலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தாண்டுக்கான ஐ.நா பொதுச் சபை கூட்டம் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியதாவது: கடந்த 1967க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை பாதுகாப்புக் கவுன்சில் அங்கீகரிக்க வேண்டும்.
இதுவரை பாலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் இனிமேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும். பல ஆண்டுகளாக நாடோடிகளாகத் திரிந்து காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள் பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இஸ்ரேல் பிடிவாதம்: இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ,”இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ.நா.வில் தீர்மானம் போடுவதால் அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார்.
பாலஸ்தீன கோரிக்கை குறித்து இருநாட்கள் முன்னர் ஐ.நா பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,”பாலஸ்தீன விடுதலைக்கு குறுக்குவழி எதுவும் கிடையாது. பேச்சுவார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டுக்குள் இறுதித் தீர்வு: பாலஸ்தீன அதிபர் மற்றம் இஸ்ரேல் பிரதமர் பேச்சுகளுக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில்,"இன்னும் ஒரு மாதத்திற்குள் இருதரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை துவங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளன.
கோரிக்கை தோற்கும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும் அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் தங்கள் மறுப்பாணையை(வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஆனால் பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிவிட்டார்.
அதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன கோரிக்கை தோற்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரம் ஐ.நா.வில் தற்போது பார்வையாளர் அந்தஸ்தில் இருக்கும் பாலஸ்தீனம் பாதுகாப்பு கவுன்சிலில் தன் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் பொதுச் சபையில் விண்ணப்பிக்கும்.
அதில் இடம் பெற்றுள்ள 193 நாடுகளில் 127 நாடுகளின் ஆதரவை பாலஸ்தீனம் பெற்றிருப்பதால் “நாடு அல்லாத பார்வையாளர்” என்ற அடுத்த நிலை அந்தஸ்தை பெற முடியும்.
வீட்டோ அதிகாரம்.
ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள்பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா,ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது.