Sunday, September 18, 2011

இன்றைய செய்திகள்.

யாழ்ப்பாணத்தில் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் மூன்று திரையரங்குகளுடன் பாரிய பொழுதுபோக்கு வணிகவளாகம்.

யாழ்ப்பாணத்தில் பாரிய பொழுதுபோக்கு வணிகவளாகம் ஒன்றை அமைக்க சிறிலங்காவின் காகில்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1200 ஆசனங்களைக் கொண்ட மூன்று திரையரங்குகளை உள்ளடக்கியதாக இந்த வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளதாக காகில்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இம்தியாஸ் வாஹிட் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் சில்லறை வணிக வளாகங்கள் அதிகளவில் இல்லை என்றும் அங்கு பொழுதுபோக்கு வணிகவளாகம் ஒன்று அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்.நகரின் மத்தியில் மருத்துவமனை வீதியில் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த பொழுதுபோக்கு வணிவளாகத்தை அமைக்கும் பணிகள் இந்தவாரம் தொடங்கப்பட்டுள்ளன. 

நேற்றுமுன்தினம் இந்த பொழுதுபோக்கு வணிக வளாகத்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், 16 மாதங்களில் இதன்கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் காகில்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். காகில்ஸ் நவீன சந்தையுடன், மேலும் 20- 25 வணிக நிலையங்களும், உணவகம் ஒன்றும், மூன்று திரைகளுடன் கூடிய திரையங்கத் தொகுதி இந்தப் பொழுதுபோக்கு வணிகவளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.

இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கையின் வாழ்நாள் குறைந்து விடும்!- சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை பின்பற்றுமாறு தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கையின் வாழ்நாள் குறைந்து விடும்.
அமெரிக்காவில் உள்ள  சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த வலியுறுத்தலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று குறித்த இரண்டு அமைப்புகளும் கேட்டுள்ளன.
பொது அமைப்புகளும் இந்த விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தவேண்டும்.
அண்மையில் லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பொதுமக்களின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தின என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு உதவிப்பணிப்பாளர் எலின் பேர்சன் Elaine Pearson தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற உயிரிழப்புகளை தடுக்க சர்வதேசம் அன்று தவறிவிட்டது. எனினும் இன்றாவது அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று Elaine Pearson கோரியுள்ளார்.
நிரந்தர சமாதானத்தின் போது இந்த குற்றங்கள் கணக்கெடுக்கப்படாவிட்டால் இது எதிர்கால முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகள் இதற்கு உதாரணங்களாகும்.
இலங்கையின் உள்நாட்டு போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் தமிழ்மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அது இலங்கையின் குறுகிய வாழ்வு ஒன்றுக்கு வழியேற்படுத்தி விடும் என்றும் Elaine Pearson  ஐபிஎஸ் இணைத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
முன்னர் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை இனங்காணாமை காரணமாகவே இன்றும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இன்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் Elaine Pearson கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஊடக தொடர்பு பணிப்பாளர் சாரொன் சிங் (Sharon Singh)  தமது கருத்தில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமைகள் தொடர்பிலான உண்மை விசாரணைகளில் நீதி வழங்குவதில் இருந்து தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐவர் நீக்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட ஐவர் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்ரூப் மற்றும் நான்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்களே கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
மஹ்ருப் அரசாங்கத்தில் இணைந்துள்ள நிலையில் ஏனைய நால்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி குழுத் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கு சார்பாக சுயேட்சையாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது!– கரு ஜயசூரிய.
நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஜனநாயகமான ஓர் நாட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
போர் நிறைவடைந்துள்ள நாடொன்றில் ஏன் இத்தனை இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன?
சர்வாதிகார ஆட்சியுடைய நாடுகளிலேயே அதிகளவில் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.
வடக்கிற்கும் கிழக்கிற்கும் காவல்துறையினரின் சேவை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்து விட்டோம் – ஜெனிவா சென்ற சிறிலங்கா அமைச்சர்கள் பெருமிதம்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி விட்டதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா சென்ற சிறிலங்கா குழுவில் இடமபெற்றிருந்த நிமால் சிறிபால டி சில்வா நேற்று கொழும்பு திரும்பிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழுவின் அறிக்கைய ஐ.நா வோ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையோ விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று உறுப்புநாடுகளின் பிரநிதிநிதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்ததன் மூலம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை ஐ.நா.வில் ஆராயும் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.நிபுணர்குழு அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியானதுமான நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு பல நாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கை குறித்து ஜெனிவாவில் ஆராயப்படாது என்றே முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிராக, பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக சிறிலங்கா குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால்,ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்படாது என்ற பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த அறிக்கையை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் பின்கதவால் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க அவை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான நாடுகள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நவநீதம்பிள்ளை எல்லா நாடுகளையும் சமமாக நடத்தாமல், குரோத மனப்பான்மையுடன் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள மகிந்த சமரசிங்க, அவர் தொடர்ந்தும் ஒரு தலைப்பட்சமாக நடந்தால், அவருக்கு எதிராக பகிரங்கமாக விமர்சிக்கப் போவதாக எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் மீளாய்வு அறிக்கை வெளிவந்ததும் பிடியாணை பிறப்பிக்கப்படும்! அமைச்சர் வீரவன்ச தெரிவிப்பு!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் ஐ.நா.வின் பணிகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொரயா ஒபேட்டின் அறிக்கை வெளிவந்ததும் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்  மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது.
லிபியாவில் இடம்பெற்றதைப் போன்றதொரு நடவடிக்கையை இலங்கையில் மேற்கொள்ளவே சர்வதேச சமூகம் முயற்சிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளின் ஒரு கட்டமாகவே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளேக்கின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது.
எனவே லிபியாவை போன்று இலங்கையை மாற்றியமைக்கும் சர்வதேச சமூகத்தின் சதி முயற்சியை தோற்கடிக்க தேசிய மட்டத்தில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற இறுதிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கான முறையில் செயற்படவில்லை என்று தருஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறேவேற்றுப் பணிப்பாளரான தொரயா ஒபேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ. மூன் இந்த நியமனத்தை உத்தியோகபூர்வமான முறையிலேயே மேற்கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் தருஸ்மன் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்தபோது இலங்கை மற்றும் எமக்கு ஆதரவான நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டன. அப்போது குறித்த குழுவானது தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ. மூன் தெரிவித்திருந்தார்.
ஆனால் தருஸ்மன் குழுவின் அறிக்கையானது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சென்றுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தித்தின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொரயா ஒபேட் இன்னும் மூன்று மாத காலத்தில் தனது விசாரணை அறிக்கையை தயாரிப்பார். அதற்கு உள்நாட்டிலும் ஒரு சிலரிடம் உதவிகளை பெற்றுக்கொள்வார்.
அந்த அறிக்கையின் இறுதிப் பந்தியில் இடம்பெறும் விடயம் தற்போதே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதாவது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்றும் அதனை தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்களினால் எதனையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டதாகவும் இறுதிப் பந்தியில் குறிப்பிடப்படும். அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் எதனையும் செய்ய முடியாத அப்பாவி நிலையாக இருந்ததாக குறிப்பிடப்படும்.
இந்நிலையில் குறித்த விசாரணை அதிகாரியின் அறிக்கையானது தருஸ்மன் அறிக்கை போலன்றி உத்தியோகபூர்வமானதாக அமையும். இந்நிலையில் தொராயா ஒபேட்டின் அறிக்கை வெளிவந்ததும் அதனை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடருக்கு சமர்ப்பிப்பார்கள்.
மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அங்கு அந்த அறிக்கை ஆராயப்படும். அதன்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த அறிக்கைக்கு அங்கீகாரத்தை வழங்கும். அதன் பின்னர் இது தொடர்பான விடயம் சர்வதேச யுத்தக்குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படும்.
இறுதியில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சியின் இறுதிக்கட்ட அரங்கேற்றமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். இதற்கான சதி முயற்சியிலேயே சர்வதேச சமூகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான முயற்சிகளின் ஒரு கட்டமாகவே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளேக்கின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குவதற்கு அமெரிக்கா முயற்சி! ஹெல உறுமய.
அமெரிக்கா இலங்கையில் மீண்டும் இனங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கின்றது. எனவே நாட்டின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் ஊடக செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில்,
வடக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாகவும் அங்கு தமிழ் பொலிசாரை ஈடுபடுத்துமாறும் தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.
இதனை ஜாதிக ஹெல உறுமய மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் தவறான தகவல்களினாலேயே மேற்படி பிரச்சினைகளும் குற்றச்சாட்டுக்களும் வெளிப்படுகின்றன.
அமெரிக்காவிற்கு இலங்கை தொடர்பாக ஒன்றுமே தெரியாது. போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாட்டில் பிளவுகளை ஏற்படுத்துவதே நோக்கமாக உள்ளது. எவ்வாறாயினும் வடக்கு உட்பட நாட்டில் எப்பிரதேசத்திலும் இராணுவம்பொலிஸாரை தவிர வேறு எந்த ஆயுதக்குழுக்களும் இல்லை.

இன்று சர்வதேசம் இலங்கையை போர்க் குற்றச்சாட்டு பொறிக்குள் சிக்க வைக்க முயற்சிக்கின்றது. போலிக் குற்றச்சாட்டுக்களின் ஊடாக நாட்டை அபகீர்த்திக்குள் உள்ளாக்க முயற்சிக்கின்றது.
இதேவேளை, சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்குள்ளது.  
இந்த விடயத்தில் இந்தியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அயல் நாடு என்ற வகையிலும் நீண்ட கால உறவு என்ற ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகவே அமைகின்றது.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்தியா தனது நோக்கங்களை சாதித்துக் கொள்ள நினைத்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை உள் நோக்கங்களுடன் செயற்பட்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு துணை போனால் இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்க நேரிடும் என்றார்.
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் : சரத் பொன்சேகா.
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த பெற்றோல் தரம் குறைந்த சிமேந்து போன்றவற்றை இறக்குமதி செய்து இந்த நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.
இந்த விடயங்களை மக்கள் புரிந்துகொள்ளத் தவறினால் எதிர்காலத்தில் இலங்கை வறிய நாடாக மாற்றமடையும் என குறிப்பிட்டுள்ளார்.
சுவாசப்பை பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாள்தோறும் 25 ஊழல் மோசடி குற்றச்சாட்டு.
அரசாங்கத்திற்கு எதிராக நாள்தோறும் 25 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்யப்படுவதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழு இயங்காமல் இருந்த காலப்பகுதியில் கிடைக்கப் பெற்ற 3700 முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சீன ஹொட்டலில் வெடி விபத்து: 29 பேர் படுகாயம்.
சீனாவின் தெற்கு பகுதியை சேர்ந்த சாங்கிங் மாநகராட்சியில் உள்ள ஹொட்டல் ஒ‌ன்றில் ஏற்பட்ட வெடி குண்டு விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெடி குண்டு வெடிக்கச் செய்ததற்‌கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒபாமாவைவிட செல்வாக்கு மிக்க ஹிலாரி: கருத்துக்கணிப்பில் தகவல்.
அமெரிக்க மக்கள் இடையே அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், அதே நேரம் ஹிலாரி கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
ஒபாமாவின் மக்கள் செல்வாக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னரே சரிந்திருந்த நிலையில் சரிந்த செல்வாக்கை மீட்டெடுக்க ஒபாமா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம்தான் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை குறைத்தார்.
இது தவிர மேலும் பல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டபோதிலும், அவரது செல்வாக்கு பெரிய அளவில் மக்களிடையே அதிகரித்துவிடவில்லை.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் மட்டும் ஒபாமாவின் செல்வாக்கு ஓரளவு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் அவரது செல்வாக்கு மீண்டும் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமாக சென்றுகொண்டிருப்பதாக 43 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் இறுதியில் 31 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதேப்போன்று ஒபாமாவின் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் மீதான அதிருப்தி 50 விழுக்காடாக உள்ளது.43 விழுக்காட்டினரே அவரது செயல்பாடுகளை ஆதரிக்கின்றனர்.
அதே சமயம் கடந்த கால அதிபர்களான ரொனால்டு ரீகன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் பதவிக்கு வந்த பின்னர் தற்போது எடுக்கப்பட்டது போன்று 3 ஆண்டு காலம் கழித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அவர்களது செயல்பாடுகளுக்கு முறையே 46 மற்றும் 70 விழுக்காடு மக்கள் ஆதரவு காணப்பட்டது.
மேலும் ஹிலாரி கிளின்டன் தற்போது அதிபராக இருந்தால் அமெரிக்கா நல்ல நிலைமையில் இருந்திருக்கும் என்று நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள், ஹிலாரி கிளின்டனை மிகவும் செல்வாக்குள்ள அரசியல்வாதியாக கருதுவதாக அந்த கருத்து கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
கைத்தொலைபேசிகளை விட அதிகளவு பயன்படுத்தப்படும் பேஸ்புக்: ஆய்வில் தகவல்.
ஐந்து பிரிட்டன் வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் கைத்தொலைபேசிகளை விட பேஸ்புக் வலைத்தளத்தை அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அகன்ற அலைவரிசை இணையதள சேவை நிறுவனமான "டாக்டாக்" சமீபத்தில் பிரிட்டனில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வீட்டுத் தொலைபேசி, கைத்தொலைபேசிகள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அவர்கள் அளித்த பதிலில் இருந்து பிரிட்டனில் வீட்டுத் தொலைபேசிகளின் இடத்தை கைத்தொலைபேசிகள் பிடித்துக் கொண்டது தெரியவந்தது. ஆய்வில் கலந்து கொண்டோரில் 40 சதவீதம் பேர் கைத்தொலைபேசிகள் மூலமே தொடர்பு கொள்வதாகவும், 22 சதவீதம் பேர் வீட்டுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தனர்.
மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள தங்கள் பிள்ளைகளைத் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே பெற்றோர் வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்.
கைத்தொலைபேசிகளில் இருந்து வீட்டுத் தொலைபேசிகளில் இருந்து அழைத்தால் அதிகமாக செலவாகிறது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். அதேபோல் தங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் பேசுவதற்கு வாரத்திற்கு 2.7 முறை ஸ்மார்ட் போன்கள் எனப்படும் சகலவசதிகளும் கொண்ட போன்களை பயன்படுத்துகின்றனர்.
தங்கள் நண்பர்களுடன் பேச 2.6 முறை அந்தப் போன்களைப் பயன்படுத்துகின்றனர். 20 பேரில் ஒருவர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை தங்களுடன் பணிபுரிபவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் பெரும்பான்மையானோரில் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரில் தொடர்பு கொள்வதற்கே முன்னுரிமை அளித்துள்ளனர்.
தோல்வியில் முடிந்த மீட்புப் பணிகள்: பொலிசார் வருத்தம்.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் Gleision கோல்லியரியில் அமைந்துள்ள நிலத்தடி சுரங்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளினால் சுரங்கத் தொழிலாளர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.
300 அடி ஆழமான நிலத்தடி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட இடிபாடுகளில் 7 தொழிலாளர்கள் சிக்குண்டனர், அதில் மூவர் காப்பாற்றப்பட்டனர்.
சுரங்கத்தினுள் சிக்குண்டவர்களுடன் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை, சுரங்கத்தினுள் குப்பைகள் மற்றும் வெள்ளம் காரணமாக மீட்புப்பணிகள் தாமதமடைந்தன.
சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக சுரங்கத்தினுள் ஓட்சிசன் செலுத்தப்பட்டதாகவும், எனினும் சிக்குண்டவர்களை உயிருடன் மீட்க முடியாமை கவலையளிப்பதாகவும் சவுத் வேல்ஸ் தலைமை காவலர் பீட்டர் வாகன் தெரிவித்துள்ளார்.
33 மணிநேர முயற்சிகளின் பின்னர் நான்காவதும் இறுதியுமான சுரங்கத்தொளிலாளி மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் இந்த செய்தி தமக்கு மிகவும் வேதனையளிப்பதாகவும் மீட்புப்பனியாளர்கள் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் எட்மிலிபண்ட்டும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: 10 லட்சம் வீடுகள் சேதம்.
தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 45 லட்சம் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
குலாம் ஜாட் என்ற சிறிய கிராமத்தில் 25 குடிசை வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் ரேஷன் முறையில் பொருட்கள் தரப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பாதிப்பு இந்த பகுதியில் ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் பரிதாபமாகிறது.
கனமழை காரணமாக பிராந்திய தலைநகர் கராச்சியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்த வெள்ளத்தின் போது 2000 பேர் உயிரிழந்தனர். அதே போன்ற பரிதாப நிலை தற்போதும் நிகழ்கிறது.
20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 1991ம் ஆண்டில் செயற்கை கோள் ஒன்றை அனுப்பியது.
கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய பணியை வெற்றிகரமாக முடித்த இந்த செயற்கை கோள் வரும் 23ம்  திகதி பூமிக்கு திரும்ப உள்ளது.
இந்நிலையில் செயற்கை‌கோளினால் எவ்வித பயனும் இல்லை என கருதிய நாசா விண்வெளி நிலையம் அத‌னை அளி்‌க்க முடிவு செய்துள்ளது.
மக்‌‌களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வன்முறை: குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்கு பதிவு.
இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கடுமையான வன்முறை போராட்டம் வெடித்தது.
ஆப்ரிக்க வம்சாவழியை சேர்ந்த ஒரு இளைஞர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த போராட்டம் பல இடங்களுக்கும் பரவியது.
தலைநகர் லண்டன், மான்செஸ்டர், பிர்மிங்காம் ஆகிய இடங்களில் இந்த வன்முறை தீவிரமாக பரவியது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் பிரிட்டனில் பதட்ட நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை நிகழ்வு நடைபெற்ற போது விடுமுறை சுற்றுலாவுக்காக சென்றிருந்த பிரதமர் கமரூன் தமது விடுமுறையை பாதியிலே ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்.
அவர் இரண்டு முறை பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பியது.
பிரிட்டனில் வரலாறு காணாத வன்முறை நிகழ்வுகளில் பிடிபட்ட குற்றவாளிகளில் பலர் ஏற்கனவே பல்வேறு குற்றங்களை செய்தவர்களாக உள்ளனர்.
பிடிபட்டவர்களில் நான்கில் ஒருவர் ஏற்கனவே பத்து முதல் பதினைந்து குற்ற நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
சீன - வங்கதேச நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம்.
சீனா - வங்கதேச நாடுகள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.
வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் முகமது அப்துல் முபீன், சீன தலைநகர் பீஜிங்குக்கு நேற்று வந்தார்.
சீன ராணுவ துறை அமைச்சர் லியாங் குவாங்லியை முபீன் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து லியாங் கூறுகையில்,"வங்கதேச நாட்டுடன் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா தயாராக இருக்கிறது. ஆசிய பகுதிகளில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தப்படும்" என்றார்.
முபீன் கூறுகையில்,"சீன ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற வங்கதேசம் விரும்புகிறது. ராணுவ ஒத்துழைப்பு மூலம் இருநாட்டு உறவு பலப்படுத்தப்படும். அத்துடன் பல துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
கனடாவில் பள்ளியின் மீது முட்டை எறிந்த மாணவன் சஸ்பெண்ட்.
கனடாவின் ஒட்டாவோவில் உள்ள நேப்பான் உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஒரு மாணவன் பள்ளியின் பெயர்ப்பலகை மீது முட்டைகளை வீசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
மாணவனின் இடைநீக்கத்தை கண்டித்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தினார்கள்.
பள்ளியின் மீது முட்டையை எறிந்த மாணவன் மைக்கேல் பால்டாயுக் கூறுகையில்,"என்னை இடைநீக்கம் செய்ததால் என் பெற்றோர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர் என்று" கூறினார். இதே தவறை மீண்டும் செய்வாயா? என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
பள்ளியின் நிர்வாகி இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,"தவறு செய்த மாணவனை டிஸ்மிஸ் செய்யவில்லை. இடைநீக்கம்தான் செய்யப்பட்டார். அவர் வரும் 20 நாட்களுக்கு வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமது அளிக்கப்படுகிறது. 20 நாட்கள் கழித்து மீண்டும் இதே நேப்பான் பள்ளியில் சேர அவருக்கு விண்ணப்பம் வழங்கப்படும்" என்றார்.
சிர்தேவில் கடாபி ஆதரவாளர்களுடன் புரட்சிப்படையினர் மோதல்.
லிபியாவில் 42 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த கர்னல் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது.
தற்போது கடாபியின் சொந்த இடமான சிர்தே நகரில் அவரது ஆதரவாளர்கள் புரட்சிப் படையை எதிர்த்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பை மீறி புரட்சிப் படையினர் முன்னேறி வருகிறார்கள்.
சிர்தேவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காணப்பட்ட கடுமையான தடையை மீறி புரட்சி படையினர் முன்னேறி வருகிறார்கள். இதே போன்று மிஸ்ரட்டா நகரில் கடாபி ஆதரவாளர்களுக்கும், புரட்சிப் படையினருக்கும் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர் என்று மிஸ்ரட்டா ராணுவ கவுன்சில் தெரிவித்தது. மிஸ்ரட்டா நகரம் தலைநகரிலிருந்து மேற்கு பகுதியில் 200 கி.மீ. தொலைவில்(120மைல்) உள்ள பகுதியாகும்.
இதற்கிடையே கர்னல் கடாபியின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் சிரியா நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். இடைக்கால நிர்வாகத்தின் பிடியிலிருந்து லிபியாவை விடுவிப்போம். பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்தார்.
கிறிஸ்துவ தலைவர் போப் பெனடிக்ட் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு.
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பெனடிக்ட் XVI மற்றும் 3 வாடிக்கன் கர்டினால்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பெனடிக்ட் XVI உள்ளார். அவர் வாடிகன் நகரில் வசித்து வருகிறார்.
அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் மையம் சார்பில் போப் பெனிடிக்ட் XVI மற்றும் வாடிகன் நகரின் செயலரான கார்டினல் டர்சிஸியோ பேர்டோன், கார்டினல் கல்லூரியின் டீன் கார்டினல் ஏஞ்சிலோ சோடனோ, விசுவாச உபதேச சபையின் தலைவர் கார்டினல் வில்லியம் லிவாடா ஆகிய 4 பேர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் பாதிரிமார்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த குற்றசாட்டுகள் மீது போப் பெனிடிக் XVI மற்றும் 3 கார்டினல்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலர் கூறியதாவது: மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது.
வாடிகன் தலைவர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் முன் அந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கட்டுபாட்டிற்குள் வருகிறதா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.
உலகளவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை விசாரிப்பது அவ்வளவு எளிதல்ல. சர்வதேச அளவில் சர்வதேச நீதிமன்றத்தின் எல்லைக்குள் பல உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் வாடிகன் நகரம் வருவதில்லை என்றனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மோதல்: இருவர் பலி.
அமெரிக்காவின் ரெனோ நகரில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு இதை ரசித்து பார்த்தனர்.
2 போர் விமானங்கள் விண்ணில் பாய்ந்து ஒரே நேரத்தில் சாகசத்தில் ஈடுபட்டது. அப்போது 2 விமானங்களும் திடீர் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
இதைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றனர். அவர்கள் மீது விமானங்கள் விழுந்து நொறுங்கியது.
இதில் ஒரு விமானத்தில் இருந்த 74 வயது பைலட்டும், மற்றொருவரும் பலியானார்கள். 54 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார் பாகிஸ்தான் பிரதமர்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசூல் கிலானி தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.
தெற்கு பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக அவர் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கெர் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பார். அவர் இப்போது துபை சுற்றுப் பயணத்தில் உள்ளார்.
பிரதமர் கிலானி சனிக்கிழமை முதல் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை பார்வையிட உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் உயரிழந்துள்ளனர். வெள்ள நிவாரண உதவிகளுக்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் மலேசியாவில் ரத்து.
கோலாலம்பூரில் உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் கைது செய்ய முடியும்.
அவர்களை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சிறையில் அடைக்க முடியும். அத்துடன் மலேசியாவில் இயங்கி வரும் இந்து அமைப்புகளுக்கு எதிராகவும் இச்சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 51 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சட்டத்தை விலக்கி கொள்வதாக பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அறிவித்தார். இதுகுறித்து டிவியில் அவர் கூறுகையில், மலேசியாவில் மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
அதன்படி 51 ஆண்டு அமலில் இருந்த உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் அவசரநிலை பிரகடனமும் வாபஸ் பெறப்படுகிறது. நவீன மலேசியாவை உருவாக்க, முதிர்ந்த, நவீன, சிறந்த ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
மக்கள் சுதந்திரத்துக்கு எந்த தடையும் இருக்க கூடாது. மலேசியாவில் பல்வேறு இனத்தவர்களுக்குள் ஒற்றுமை நிலவ வேண்டும். மத நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் கடுமையான சட்டத்தை ரத்து செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு இந்தமத அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது 37 பேர் விசாரணை எதுவும் இன்றி இன்னும் சிறையில் உள்ளனர்.
அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இப்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மாற்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பொலிசின் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படும். யாரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய கூடாது. காரணங்களை சொல்ல வேண்டும்.
ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
ஜப்பானில் சில மாதங்களுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இந்த பேரழிவுக்குப் பின்னர் தொடர்ந்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இன்று காலை மீண்டும் ஜப்பானில் ஹோன்ஷீ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியது.
மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து 5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவுப்பகுதி தலைநகர் டோக்கியோவில் இருந்து 574 கி.மீ தொலைவில் உள்ளது.இது லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு அமெரிக்காவில் தடை.
இந்தியாவில் தோன்றி செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கமான இந்தியன் முஜாஹிதீனை அன்னிய நாட்டு பயங்கரவாத இயக்கம் என்று குறிப்பிட்டு அமெரிக்கா தடை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கும், அமெரிக்கப் பிரஜைகளுக்கும் இவ்வியக்கத்தினரால் ஆபத்து வரலாம் எனும் அனுமானத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோன்றி இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களில் இது போல தடையுத்தரவுகளைப் பெறுவதில் இதுவே முதலாவதாகும்.
தடையுத்தரவில் கூறப்பட்டிருப்பது: முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக செயல்பட்டு, இறுதியாக தெற்காசியாவில் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவும் நோக்கம் கொண்டுள்ளது இந்த இயக்கம். இந்தியாவில் 2005லிருந்து பல பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டுச் செய்து நூற்றுக்கணக்கான பொதுமக்களின் சாவுக்குக் காரணமாகியுள்ளது.
இப்போது அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் நெருங்கிய தோழமை நாடான இந்தியாவுக்கு இவ்வியக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்தியன் முஜாஹிதீனின் வன்முறைச் செயல்களால் இந்திய மக்கள் அவதியுற்றுள்ளார்கள். இப்போது எடுத்துள்ள நடவடிக்கையால் இந்திய அரசுடன் உள்ள ஒத்த நிலையை அமெரிக்கா காட்டியுள்ளது என்று அந்நாட்டு அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியது: இந்த இயக்கத்தினரால் இந்தியாதான் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்திய எல்லைக்குள் அப்பாவி பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை இவர்கள் நடத்தியுள்ளனர்.
இதுவரை ஊர்ஜிதமாகவில்லையென்றாலும் மும்பையில் ஜூலை 13ம் திகதி நடந்த தாக்குதலை நடத்தியது இந்த இயக்கம்தான் என்று நம்பப்படுகிறது என்றார் அவர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF